பிள்ளையானை கைப்பொம்மையாகப் பயன்படுத்தி தங்களது அரசியல் அபிலாஷைகளைச் சூட்சகமாக நிறைவேற்றிக் கொள்ளும் நிலைமை:ரவூப் ஹக்கீம் .

05.09.2008.

கிழக்கு முதலமைச்சர் பிள்ளையான் அரசியல் அனுபவமற்றவர். எனவே பிள்ளையானை சில அரசியல்வாதிகள் கைப்பொம்மையாகப் பயன்படுத்தி தங்களது அரசியல் அபிலாஷைகளைச் சூட்சகமாக நிறைவேற்றிக் கொள்ளும் ஓர் நிலைமை காணப்படுகின்றது.

காத்தான்குடி நகரசபையின் தலைவரைப் பதவியில் இருந்து நீக்கியமையானது, இதனைப் பறைசாற்றி நிற்கின்றது, ஏனெனில் ஏற்கனவே காத்தான்குடி நகரசபை சிறந்த நிர்வாகத்தைக் கொண்ட சபையாக தெரிவு செய்யப்பட்டுள்ளதை இங்கு சுட்டிக் காட்டலாம் என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தமிழர்களைப் பதிவு செய்யப்படும் நடவடிக்கையானது அவர்களை ஜனநாயக வழியில் இருந்து திசைமாறவே செய்யும் என்றும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம்  கிழக்கை விடுவித்த பின்னர் அங்கு மக்கள் சுதந்திரமாகச் செயற்படுவதாகத் தெரிவிக்கின்ற போதும் அங்கு பெருமளவான தமிழர்கள் இன்னும் பயத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

கிழக்கில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை விரட்டியடித்து விட்டதாக தெரிவிக்கின்ற போதும் அவர்களின் நடமாட்டங்கள் தொடர்ந்தும் இருக்கின்றன என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தமிழ்பேசும் மக்களின் உரிமைகள் இறைமை மீறப்பட்டமை காரணமாக ஏற்பட்டுள்ள  நோயின் அறிகுறியே தமிழீழ விடுதலைப் புலிகளாகும். இந்த அறிகுறிக்கு உரிய மருந்துகள் வழங்கப்படாவிட்டால் அது பாரிய நோயாக மாறக்கூடும்.

இந்தநிலையில்,  போர் என்பது ஒரு முடிவு மாத்திரமே என்பதை அரசாங்கம் உணரவேண்டும். அது நிரந்தர தீர்வாக அமையமாட்டாது என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.