பிரித்தானியா : வெளிநாட்டு பிரஜைகளுக்கு விசேட அடையாள அட்டைகள்

பிரித்தானியாவில் வசிக்கும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு விசேட அடையாள அட்டைகளை வழங்க அந்நாட்டு குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத நாடுகளின் மாணவர்கள் மற்றும் திருமண வீஸாக்களை கொண்டிருப்போருக்கு முதலில் இந்தப் புதிய வகை அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
 
குறித்த வகை அடையாள அட்டைகளின் மூலம் இலகுவாக வெளிநாட்டு பிரஜைகளை இனங்காண முடியும் என உள்விவகாரச் செயலாளர் ஜெக்யூ ஸ்மித் தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் நவம்பர் முதல் குறித்த வகை விசேட அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
குறித்த வகை அடையாள அட்டைகளில் வீஸா நிலையும் குறிப்பிடப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகளை சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் அனுபவிக்கக் கூடாது என்பதே பிரதான நோக்கம் என உள்விவகாரச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
 
எல்லைப்புற பாதுகாப்பு, மனித கடத்தல்கள், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள், சலுகைகள் துஸ்பிரயோகம் போன்றவற்றை தடுப்பதற்கு இந்தப் புதிய வகை அடையாள அட்டையை பயன்படுத்த முடியும் எனக் குறிப்பிடப்படுகிறது.
 
மாணவர் வீஸா மற்றும் திருமண வீஸா பெற்று பித்தானியாவில் தங்கியிருக்கும் அனைவரும் புதிய உரிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
எதிர்வரும் வருடத்திற்குள் சுமார் 50,000 அடையாள அட்டைகளை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக 311 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்கள் செலவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த செலவீனங்கள் வீஸா கோருவோரது விண்ணப்பங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த வகைத் திட்டத்திற்கு கன்சர்வேட்டிவ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனினும், குடிவரவு குடியகழ்வு ஆவணங்களுக்கு உரிய அடையாளங்கள் பயன்படுத்தப்படுவதனை கட்சி வரவேற்றுள்ளது.
 
இந்த வகை அடையாள அட்டைகளின் மூலம் எந்தவொரு நன்மையும் கிட்டப்போவதில்லை எனவும், இந்த முயற்சி புத்திசாதூரியமான முயற்சியாக கருத முடியாது எனவும் லிபரல் டிமொக்கரடிக் கட்சியின் நிழல் உள்விவகாரச் செயலளார் கிறிஸ் ஹூன் சுட்டிக்காட்டியுள்ளார் என பி.பி.சீ. இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.