பிரிட்டனில் இலங்கையர் கைது : சட்டவிரோதக் குடியேற்றம்.

பிரிட்டனில் உணவு விடுதியொன்றில் பணியாற்றிய இலங்கையர் நால்வர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டதுடன் இவர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டன் எல்லைக் காவல் அமைப்பின் அதிகாரிகளே ஹாம்ஸ்பையர் பகுதியில் தேடுதல் நடத்தி இவர்கள் சட்டவிரோதமாக வேலை செய்கிறார்களென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். போர்ட்ஸ்மௌத் பகுதியைச் சேர்ந்த புலனாய்வுப் பிரிவின் தகவலின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 இலங்கையரும், 4 இந்தியர்களும் அடங்குவதாகவும் போலி ஆவணங்களுடன் பிரிட்டனில் வசித்து வந்த இவர்கள் பேசிங்ஸ்ரோக் லெய்சர் பார்க்கிலுள்ள கே.எவ்.சி.யில் பணி புரிந்து வந்ததாகவும் தெரிவிக்கபபட்டுள்ளது. இதேவேளை, பிளீற், யாட்டலே பகுதிகளிலுமுள்ள கே.எவ்.சி. உணவு விடுதிகளில் தேடுதல் நடத்தப்பட்டு இலங்கை, இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்போரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பிரிட்டனின் எல்லைக் காவல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை பணிக்கமர்த்தும் நிறுவனங்கள் 10 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண் பணத்தை அபராதமாக (ஒவ்வொரு பணியாளருக்கும்) செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.