பின்நவீனத்துவத்தைக் கட்டுடைத்தல்:அஸ்வத்தாமா

 பின்நவீனத்துவத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் சமூகச் சீரழிவுகளை முன்னிறுத்திய ஒரு வரைவு

 1. அறிமுகம்

Postmodernism 10அண்மைக் காலமாக ஈழத்திற் பின்நவீனத்துவம் சற்றுக்  கவனம் பெற்று வருவதை அவதானிக்கலாம். மேற்கிலிருந்து வருகிற சிந்தனைகளை தமிழுக்கு அப்படியே பெயர்த்துத் தருகிற போக்கு ஈழத்து இலக்கியச் சூழலில் முனைப்புற்றுள்ள இக் காலகட்டத்தில் உலகின் புதிய சிந்தனைத் தளமாக முன்வைக்கப்பட்டுச் சிறந்த மாற்றுச் சிந்தனையாகக் காட்டப்பட்டு வரும் பின்நவீனத்துவம் பற்றிய சரியான புரிதலுக்கான தேவை உள்ளது.

பின்நவீனத்துவம் பற்றிய மாயைகள் மலிந்த இக் காலப்பரப்பிற், பின்நவீனத்துவஞ் செயற்படும் அரசியற் தளத்தை நோக்கிய கோட்பாட்டு ரீதியிலான ஆய்வுகள், ஈழத்துத் தமிழ்ச்சூழலிற் தமிழில் வராமை பெருங் குறைபாடாகவே இருந்து வந்துள்ளது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி ஈழத்துப் பின்நவீனத்துவவாதிகள் எனப்படுவோர் பின்நவீனத்துவம் எனும் பேரில் ஒரு புனிதத்தை கட்டமைக்க முயல்கின்றனர். அதனாலும்  பின்நவீனத்துவத்தை முன்நிறுத்திய ஆரோக்கியமான ஒரு விவாதத்திற்கான தேவை எமக்குள்ளது. தோற்றத்திற் புதிதாக எதையும் பேசித் தங்களை ஆய்வறிவாளர்களாகவும் அறிஞர்களாகவும் காட்டிக்கொள்ள முனைகின்ற இப் பின்நவீனத்துவ பிரசாரகர்கள் இது வரை பின்நவீனத்துவம் தொடர்பான ஆரோக்கியமான விவாதத்திற்குக் களம் அமைக்கவில்லை. அவ்வாறான விவாதங்கள் ‘பின்நவீனத்துவம் என்பது புனிதமானது’ என்ற அவர்களது புனைவை அழித்துவிடும் என அவர்கள் அஞ்சுகின்றனர் போலும். அதைவிடப், இப் பின்நவீனத்துவப் பிரசாரகர்களின் புரிதல்கள் அரைகுறையானவை என்பதும் கவனத்துக்குரியது. 

மேற்கத்திய சிந்தனைகளைத் தமிழிற் தருவது தேவையானதாயினும் எதை எவ்வாறு தருவது என்பது பற்றிய தெளிவும் தெரிவு பற்றிய அறிவும் அவசியமானவை. தமிழையும் தமிழினத்தையும் உய்விப்பதென்றால் அயலிலிருந்து பெறக்கூடிய அத்தனையையும் அப்படியே கொண்டு வந்து குவிப்பது தான் வழி என்று எண்ணுவோர் உள்ளனர் என்று சுட்டிக்காட்டுகிற சிவசேகரம் (2007அ), மேலும், அவர்களது தெரிவுகள் பெரும்பாலும் ஐரோப்பிய, வட அமெரிக்க ஊற்றுக் கண்களிலிருந்தே வருவதையும் விலக்காக, ஜப்பானோ சீனாவோ சில சமயங்களிற் கவனிப்பிற்குள்ளாவதையும் பொதுவாக, மூன்றாமுலக நாடுகளின்று இவர்கள் பெறுவதற்கு அதிகம் இருப்பதில்லை என்பதையும் விமர்சிக்கிறார். நுனிப்புல் மேய்கிற இப் பின்நவீனத்துவவாதிகள், இங்கே மீண்டும் கொஞ்சங் கவனிப்புக்கு உள்ளாகியிருக்கும் பின்நவீனத்துவத்தைத் தாங்கள் புதிதாய்க் கண்டறிந்ததுபோல மற்றவர்களுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

 

2. வரலாற்றுப்பின்புலம்

‘மார்க்சியத்தின் போதாமைகளுக்குத் தீர்வு , ‘மார்க்சியத்திலிருந்து விடுதலை’ போன்ற கோஷங்களுடன் ‘நவீனத்துவமும் அதன் தொடர்ச்சியாக பின்நவீனத்துவம்’ என்ற விதமான கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டு ஏகாதிபத்தியவாதிகளால் உலகெங்கும் பரப்பப்பட்டன. ‘பகுத்தறிவே பயங்கரம்’ ‘தருக்கமே வன்முறை’ ‘மொழியே ஆயுதம்’ ‘அறிவியலே ஆபத்து’ ‘அறிவு அதிகாரத்தையே கட்டமைக்கும்’ ‘ஒழுங்கமைவு கருத்தொருமிப்பு என்பது அடிமைத்தனம்;’ போன்ற கருத்துக்களைப் பின்நவீனத்துவம் முன்நிலைப்படுத்தியது. ‘கோட்பாடு என்ற ஒன்றே இல்லை’ என்றது. கவர்ச்சிகரமான சொல்லாடல்களுடன் வந்த  பின்நவீனத்துவத்தைப் பலர் பின்பற்றத் தொடங்கினர். கோட்பாட்டை மறுத்த பின்நவீனத்துவமே ஒரு கோட்பாடாகிவிட்டது. 1970களிலும் 1980களின் தொடக்கத்திலும் ஜரோப்பாவில் பின்நவீனத்துவம் பெருந் தோல்விகளை சந்தித்தது (Atherton 2002 ).

அக் காலத்திற், பல ஐரோப்பிய நாடுகளில் குடும்பக் கட்டமைப்புச் சிதைந்து போனது. ஒரு கட்டத்தில் ஐரோப்பாவிற் சனத்தொகை குறையத் தெடங்கிய நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் மாறியது. பின்நவீனத்துவம் ஊக்குவித்த விழுமியங்களைப் பலர் பின்பற்றியதால் ‘வாழ்ந்துவிட்டுப் போவதே’ வாழ்க்கையானது. பலர் எயிட்ஸ் முதலான பாலியல் நோய்கட்கு உள்ளானர்கள். குழந்தைப் பிறப்பு வீதம் மிகவுங் குறைந்தது. இப் போக்குத் தொடர்ந்தால் பிரான்ஸ் என்ற நாடே இருக்காது என்று புள்ளிவிவரங்கள் கூறின. தனது தேர்தல் கொள்கைப் பிரகடனத்தில், பிரான்ஸ் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட ‘பிரான்ஸ{வா மித்ரோன்’, குடும்பக் கட்டமைப்பைச் சீரமைப்பதையே தனது முதலாவதும், பிரதானதுமான கொள்கையாக  முன்வைத்தார். தேர்தலில் வென்றபின் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு குறிப்பிட்ட தொகை பணத்தை வழங்கும் என்றும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றுஞ் சட்டமாக்கியே பிரான்ஸைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்தார். இவ்வாறு ஐரோப்பாவெங்கும் மார்க்சியத்துக்கு தீர்வாக ஏகாதிபத்தியத்தால்  முன்வைக்கப்பட்ட பின்நவீனத்துவச் சிந்தனை கடுந் தோல்வியைச் சந்தித்தது. இப்போது இந்தியாவிலும், இலங்கையிலும பின்நவீனத்தைப் பரப்பும் முயற்சிகள் அரசுசாரா நிறுவனங்களின் உதவியுடன் தீவிரமாக நடைபெறுகின்றன  என்பது கவனிக்கத்தக்கது.

“இப் பின்னணியிற் பின்நவீனத்துவத்தின் வரலாறு முக்கியம் பெறுகிறது. ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமும் சோஷலிசமும் பல பின்னிடைவுகளைச் சந்தித்த இரண்டு தசாப்த இடைவெளியிற், பல (முன்னாள்) முற்போக்குவாதிகள், தங்களுடைய பழைய, மாக்ஸிய நிலைப்பாட்டிலிருந்து தப்பியோடுவதற்கான பாதைகளைத் தேடினார்கள். எவ்வெப் போக்குகள் அவ்வப்போது வலியனவாய்த் தோன்றினவோ, அவற்றிடையே புகலிடம் தேடினோர் பலர். எதிலும் ஒட்டாத விதமாகச் சுதந்திர சிந்தனையாளராகப் பாவனை செய்தோரும் இருந்தனர். அவர்களில் யாருக்கும் இத்தகைய தப்பித்தலுக்கு தங்களது முன்னைய அரசியற் சித்தாந்தம் (அது தீவிர இடதுசாரி நிலைப்பாடாயினும் வலது சந்தர்ப்பவாதமாயினும்) போதிய வசதி செய்யவில்லை. எனவே புதிய சிந்தனை முறை என்று எதையாவது பயன்படுத்தி வெளியேற முயன்றனர். அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் போன்றவை சிலர் புதிதாக வரித்துக் கொண்ட குறுகிய தேசியவாத, பிரதேசவாத, சாதிய அரசியல் நிலைப்பாடுகளை நியாயப்படுத்த உதவின. இன்னுமொரு சாரார், வெளிவெளியாக மாக்ஸியத்தைக் கைவிட மனமில்லாமலும் நவீன சிந்தனைகளாகக் கருதப்படுகின்றவற்றை அறியாதவர்களாகக் காணப்படுவதையும் விரும்பாமலும், அமைப்பியல், பின் அமைப்பியல், பின்நவீனத்துவக் கலைச் சொற்களை மிக மேலோட்டமாகப் பயன்படுத்துவதை வழமையாக்கி க் கொண்டனர்” என்பது சிவசேகரத்தின்  (2007அ) அவதானிப்பாகும்.

பின்நவீனத்துவம் எப்போதும் போராட்ட உணர்வுகளையும் அதனை நோக்கிய புரட்சிகர வடிவ அமைப்புகளையும் நிராகரித்தே வந்துள்ளது. அது பொது எதிரிக்கு மாறாக ஒன்றுபடும் போக்குக்கு எதிரான செயலைக் கொண்டதாகவே உருப்பெற்றது. அதனாலேயே பின்நவீனத்துவத்தையும் அதன் அரசியற் சார்பையும் ஆய்ந்தவர்கள் பின்நவீனத்துவம் மிகவும் பிற்போக்குத்தன்மையான, ஏகாதிபத்தியச் chomsky10சார்புச் சிந்தனை என்று கூறினார்கள் ( Callinicos 1991, Chomsky 1997). பின்நவீனத்துவத்தின் சந்தர்ப்பவாத அரசியலை ஏகாதிபத்தியத்தின் சுரண்டலையும் கொடுமைகளையும் அப்படியே ஏற்றுக் கொண்டு இவை எல்லாவற்றையும் எவ்வித பிரக்ஞையும் அற்று அல்லது வேடிக்கையாய் விளையாட்டாய் பார்க்கும் மனநிலையே பின்நவீனத்துவ மனநிலையாகும் . இதை என்.ஜீ.ஓக்கள் மிகுந்த அக்கறையுடன் செய்துவருவதை எமது நாட்டில் அவதானிக்க முடியும். தமிழகத்திற் பின்நவீனத்துவம் என்கிற பேரில் நடந்து ஓய்ந்த விவாதங்களிலும் குழப்பமான சிந்தனைகளிலுமிருந்து, எந்தவிதமான விளக்கமுமின்றி, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சொற்றொடர்களைப் பொறுக்கி எடுத்துக், கட்டுடைத்தல், மீள்கட்டமைத்தல், மறுவாசிப்பு என்பன போன்ற வார்த்தைகள் செறிந்த குழப்பமான மொழி நடையில் எழுதுவதற்கு மேலாக இது வரை நமது பின் நவீனத்துவப் பிரசாரகர் எவரும் எதையுஞ் செய்யவில்லை என்பதும் சிவசேகரத்தின் (2007ஆ) மதிப்பீடாகும்.

பின்நவீனத்துவம் என்ன சொல்கிறது? பகுத்தறிவே பயங்கரம், தருக்கமே வன்முறை எனவே இவ்விரண்டின் அத்திவாரத்திலும் கட்டப்படும் அறிவியலே ஆபத்து என அனைத்தையும் நிராகரித்து, இனி அறிவியல் நோக்கிலான அணுகு முறையே வேண்டாம் என்கிறது. விஞ்ஞானத்தின் முரண்களையும் நெருக்கடிகளையும் பழமைவாதம் தனக்கேற்ற விதமாகத் திரித்து விளக்கி வந்துள்ளது. இதைச் சிவசேகரம் (2007ஆ) ஒவ்வொரு விஞ்ஞானக் கொள்கையும் பொய்ப்பிக்கப்படும் போதும் நெருக்கடிக்கு ஆளாகும் போதும் ‘விஞ்ஞானமே பொய்|என்று கூக்குரல் இடுகிற ஒரு கூட்டத்தாரின் நடத்தையுடன் ஒப்பிடுகிறார் .“டாவினின் பரிணாமக் கொள்கையின் குறைபாடுகள் அடையாளங் காணப்படும் ஒவ்வொரு முறையும், மனிதன் கடவுளால் நேரடியாகச் சிருஷ்டிக்கப்பட்டான் என்பதற்கான ஆதாரமாக அவர்கள் அக் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுவார்கள். உண்மை இதற்கு மாறானது. நெருக்கடிகளின் பயனாகப் பரிணாமக் கொள்கை டாவினால் முன்வைக்கப்பட்ட எளிய வடிவில் இல்லாமல் இன்னுஞ் செறிவான முறையில் விருத்தி பெறுகிறதே ஒழிய, டாவின் கண்ட அடிப்படையான உண்மையை மறுக்கும் விதத்திலான நெருக்கடி எதுவும் இல்லை. மேற்குறிப்பிட்ட விடயங்களில், விஞ்ஞானந் தொடர்பாகவே எத்தகைய வலிந்து பொருள் கொள்ளும் வாசிப்புக்கள் நேர்ந்துள்ளன என நாம் காணலாம். எனவே, தகவல்களிற் குறைபாடுந் தெளிவீனமும் கருத்துப்பரிமாறலின் பிரச்சினைகளும் உள்ள இடங்களில் வலிந்து பொருள் கொள்வதற்கான வசதி மிகவும் உண்டு. அவ்வாறு நிகழ்வதால் அது ஏற்புடையதாகி விடுமா என்பதே மீண்டும் இங்கு எழுகிற கேள்வி”.

“ஒருமுகத் தன்மை என்று ஏதும் இல்லை. இருப்பதெல்லாம் பன்மைத்துவமே என்று வலியுறுத்தி அதை மட்டுமே கவனிக்க வேண்டும் என்றும் அதனடிப்படையிலேயே பிரச்சனைகட்கான தீர்வைக் காண வேண்டும் என்றுஞ் சொல்கிறது பின்நவீனத்துவம். பதிக்கப்பட்ட மக்களுக்குள், ஒடுக்கப்படும் மக்களுக்குள் ஒருமுகத்தன்மையே இல்லை என்றால் அவர்கள் ஏன் ஒன்றுபட வேண்டும்? ஏன் அமைப்பாக வேண்டும? ஏன் ஓரணியில் நின்று போராட வேண்டும? இத் தர்க்கத்தின்படி, மூன்றாமுலக நாடுகளில் உலகமயமாக்கலுக்கும் தராளமயமாக்கலுக்கும்  தனியார்மயமாக்கலுக்கும் ஆட்பட்டு அவற்றாற் பாதிக்கப்பட்ட மக்களும், இந்தியாவில் தேசிய இன உரிமைகள் மறுக்கப்பட்டு அதன் விளைவாக ஒடுக்குமுறைக்கு ஆளாகித் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களும் தமிழ்நாட்டில் மொழி ஒடுக்குமுறைக்கும் இன ஒடுக்குமுறைக்கும் ஆளாகி, அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு வாழ்வை சுயாதீனமாகத் தீர்மானித்துக் கொள்ள வழியின்றித் தவிக்கும் மக்களும் தனித் தனியாகவே இருந்து, தனித்தனியாக எதிர்த்துக் கொண்டும் போராடிக் கொண்டுமிருக்க வேண்டியது தான். பின்நவீனத்துவம் அதையே வேண்டுகிறது” எனக் கேசவன் (2007) சுட்டிக்காட்டுகிறார்.

“பின்நவீனத்துவக் காலம், அதாவது எல்லாப் பண்பாடுகளும் பழக்க வழக்கங்களும் ஒன்று கலந்து பன்மைத்தன்மையின் செல்வாக்குக் கோலோச்சும் காலம், எனக் கூறப்படும் இக் காலத்திற் தான் தேசிய இன அடிப்படையில் அதாவது தேசிய இன அடிப்படையிலான ஒருமைத்தன்மையின் அடிப்படையில் மக்கள் ஒன்றுபட்டு உரிமைக்குப் போராடுகிறார்கள். விடுதலையும் பெறுகிறார்கள். ஒவ்வொரு தேசிய இனத்து மக்களுக்கும் தமக்குள் நிலவும் ஒருமைத் தன்மையில் அடிப்படையிற் தான் அவ்வாறு செய்ய முடிகிறது. அந்த ஒருமைத் தன்மையில்லாமல் பன்மைத் தன்மை மட்டுமே நிலவுமானால் அவர்களது ஒற்றுமை சாத்தியமாகுமா? அவர்களது போராட்டம் சாத்தியமாகுமா? நிச்சயமாக இல்லை. ஆனாற் பின்நவீனத்துவம் இந்த ஒருமைத் தன்மையைத் தான் இல்லை என்று மறுக்கிறது. வெறுமனே பன்மைத் தன்மையை மட்டுமே பார்த்து அதற்கு மட்டுமே முக்கியத்துவம் ஈந்து பிறவற்றை மறுத்து நிராகரிக்கிறது. அதன் மூலம் மக்கள் தேசிய இன அடிப்படையில் ஒன்றுபடுவதற்கும் அவர்களது உரிமைகளுக்காகப் போராடுவதற்கும்  எதிராக நிற்கிறது. அவர்களை ஒன்று படுத்துங்  காரணிகளை முன் வைப்பதற்கு மாறாக அவர்கள் வேறுபடுத்துங்  காரணிகளை மட்டுமே முன்னிறுத்துகிறது. அவற்றை மட்டுமே முதன்மைப் படுத்துவதன் மூலம் பின்நவீனத்துவம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் மறைமுகமாகச் சேவை செய்கிறது” எனவுங் கேசவன் மேலும் விளக்குகிறார் .

“சமூகத்தினுட் சமத்துவம், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிற் சமத்துவம், மனிதர்களுக்கிடையிற் சமத்துவம் என்பனவெல்லாம் அபாயகரமானவை என்றும் மனிதர்கள் எல்லோரும் சமத்துவமானவர்களாக இருக்க இயலாது என்றும், நமக்கு இடையில் சமமாகவோ இணையாகவோ பொதுவாகவோ எதுவும் இல்லை என்றும் நீட்சே குறிப்பிடுகின்றார். அதனாலேயே தனது காலத்தில் வளர்முகத்தில் இருந்த சோசலிசக் கருத்துக்களை வெறுப்பவராக நீட்சே இருந்தார். அவர் சோசலிசம் என்பது இயற்கைக்கு மாறானதும் உயிரியற் தன்மைக்கு மாறானதும் என்கிறார். மிகவும் தாழ்ந்த, கீழ்மைப்பட்ட மனிதர்களை மேன்மை பொருந்திய மனிதர்கள் பயன்படுத்துவதாலேயே ஒரு சமூகம் வளர்ச்சி அடைய முடியும். அதாவது சிறிய மீன்களைப் பெரிய மீன்கள் விழுங்குவதுதான் வரலாற்றில் ஒரு நியதியாக இருக்கின்றது என்றும் நீட்சே குறிப்பிடுகின்றார். மேலும், உடைமை என்பது அறிவு படைத்த, மேன்மை தங்கியவர்களிடம் மட்டும் தான் இருக்க வேண்டும் என்கிறார். இந்த கருத்தாக்கங்களுக்கும் இன்றைய பின்நவீனத்துவ சிந்தனைக்கும் இடையில் ஒரு தொடர்ச்சி இருப்பதை நாம் காணலாம”  எனக் கேசவன் (2007) விளக்குகிறார்.

 

3. ஆசிரியன் இறந்துவிட்டான்

பின்நவீனத்துவம் முன்வைக்கும் முக்கிய கருத்தாக்கங்களில் ஒன்று ‘ஆசிரியன் இறந்துவிட்டான்’ என்பது. அதன் மூலம் பின்நவீனத்துவம் பிரதிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து ஏனைய அனைத்தையும் புறக்கணிக்கிறது. ஒரு இலக்கியப் படைப்பானது ஒரு படைப்பாளியினது அனுபவமும் அனுபவங் குறித்த படைப்பாளியினது பார்வையும் படைப்புத்திறனினதும்   கூட்டு உருவாக்கமேயாகும். படைப்பு உருவான பிறகு அது ஒரு பருண்மைத்தன்மை பெற்று அதற்கென்று ஒரு தனித்துவத்தை நிறுவிக் கொள்கிறது.

ஒரு இலக்கியப் படைப்பைப் படிக்கிற வாசகனுக்குப் படைப்பாளியின் அனுபவங்களின் மீதும் பார்வைகளின் மீதும் எதிர்வினை ஏற்படுகிறது. எந்த வாசகனும் என்ன அடிப்படையில் ஒரு படைப்பை எதிர் கொள்ள முடியும்? தனக்குரிய அனுபவத்தினதும் பார்வைகளினதும் அடிப்படையிலேயே எதிர்கொள்ள முடியும். அவ்வாறே படைபபு  எதிர்கொள்ளப் படுகிறது. அப்போது படைப்பாளியின் அனுபவ வழிப் பார்வையும் வாசகனின் அனுபவ வழிப் பார்வையும் சேர்ந்து மூன்றாவது விதமான ஒரு அனுபவ வழிப் பார்வை உருவாகிறது. இது இயல்பாக நிகழ்வது. ஆனாற் பின்நவீனத்துவம் இதில் படைப்பாளியின்; வகிபாகத்தையும் அனுபவத்தையும் பார்வை வெளிப்பாட்டையும் முற்றாக மறுக்கிறது ( Chomsky 199). அதைப் படைப்பாகக் கூட அணுகத் தேவையில்லையென்று அதை வெறுமனே ‘பிரதி’ என அணுகச் சொல்கிறது. படைப்பிற்குரிய தனித்துவத்தையும் வாசகனின் மீது அதன்  தாக்கத்தையுங் கூட நிராகரிக்கிறது. வாசகன் ஒரு படைப்பை வெறும் நிகழ்வாகவே பார்த்து அதைத் தன் விருப்பத்திற்கமைய வாசித்துச் செல்கிறான், எனவே எழுத்தாளன் அங்கு இறந்து விடுகிறான் என்கிறது.

இதன் மூலம் சமூகத்தில் இலக்கியப் படைப்புகளினதும் படைப்பாளிகளிதும்; சிந்தனையாளர்களினதும் விமர்சகர்களினதும் பங்கை அது நிராகரிக்கிறது. அதாவது ஒட்டு மொத்த சமூக இயக்கத்தையும் சமூகச் செயல்பாடுகளையும் அவற்றிற் சிந்தனையாளர்களின் பங்கையும் அர்த்தமற்றதாக்கும் பின் நவீனத்துவம், இலக்கியப் படைப்புகளையும் அவ்வாறே செய்கிறது.

எந்த ஒரு கூற்றும் பல்வேறுபட்ட வாசிப்புகட்கு ஆளாகலாம் என்பது புதிய உண்மையல்ல. ஆயினும்,  “ஆசிரியன் இறந்துவிட்டான் ” என்ற பிரகடனத்தின் மூலம் வெளிவரும் ‘ஒரு படைப்பை வாசித்து விளங்கிக் கொள்வது முற்றாக வாசகனின் கையிலே உள்ளது’ என்ற வாதம் மனிதக் கருத்துப் பரிமாறலின் அனுபவத்தையே மறுப்பதாகும். ஒரு நூலின் மீது (பின்னமைப்பியற் சொல்லாடலில்  பிரதியின்  மீது) ஒரு வாசகன் தனது எண்ணங்களைத் தனக்கு வேண்டிய விதமாக ஏற்றி வாசிக்க முடியும் என்பது சரியா? ஏற்புடையதா? அப்படியானால், ஈசாப்பின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் கதையில் வருகிற ஓநாய், ஆட்டுக்குட்டியின் மறுமொழிகளைத் தனக்கு ஏற்றபடி வாசிப்புக்கு உட்படுத்திய விதமும் நமக்கு நியாயமானதாக இருக்க முடியும்.             எந்த விடயமும் பற்றி முன்கூட்டியே தனது முடிவுகளைத் தீர்மானித்துக் கொண்ட ஒருவர், தனக்குக் கிடைக்கும் தகவல் எதையும் அம் முடிவுகட்கேற்றபடி வாசிக்க முடியும் என்றும் அவ்வாறான வாசிப்பு செல்லுபடியானது என்றுங் கொள்வோமானால், ஜேர்மன் ஃபாசிசமோ வெள்ளை நிறவெறியோ இனவெறியோ தேசிய மேலாதிக்கமோ மதவெறியோ, வரலாற்றைத் தான் விரும்பியவாறு வாசிப்பதில் நாம் தவறு காண இடமில்லை. அத்தகைய வாசிப்பு, ஆசிரியனின் சாவை  மட்டுமல்லாமல் பிரதியின் குரூரமான சிதைப்பையும் உள்ளடக்கியதாகிறது என்று சிவசேகரம் (2007ஆ) விமர்சிக்கிறார்.

 

4. கட்டுடைத்தல்

கட்டுடைத்தல் என்பதன் பேரால் எல்லாவற்றையுங் கலைத்துப் போட்டு மாற்றாக எதையும் உருவாக்காமல் வெறுமையை முன்னிறுத்தும் பின்நவீனத்துவம், உருவாகும் எதையும் அதே ‘கட்டுடைத்தல்’ அணுகுமுறையால் கலைத்துப் போட்டு மாற்று எதுவும் உருவாகவிடாமல் தடுக்கும் காரியத்தை மட்டுமே செய்கிறது. மாற்றுக்களை முன் வைப்பது பின் நவீனத்துவத்தின் வேலையல்ல. கலைத்துப் போடுவது கட்டவிழ்ப்பது மட்டுமே அதன் வேலை ( Eagleton, 1996). மற்றப் பணிகளைப் பிறர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வாதிடுகிறது பின்நவீனத்துவம்.

பின்நவீனத்துவ அணுகுமுறையின் , ஆபத்து என்னவென்றால், வரலாற்றுத் தன்மையோடும், காலச் சூழலோடும் பிரச்சனைகளை அணுகிக் காலத் தேவைக்கேற்ப வரலாற்றுக் கடமையை ஆற்றுவதற்குப் பதிலாக, மக்களையும் சூழலையும் விட்டு விலகிய சுயேச்சையான சார்பற்ற தனி நடவடிக்கையாகக் கட்டுடைத்தல் என்பதை அது முன்வைக்கிறது. அத்தோடு ஒன்றைக் கட்டுடைக்கையில் இன்னொன்று கட்டமைக்கப்படுகிறது என்கிற இயக்கவியற் புரிதலையஞ் செயற்பாட்டையும் புறமொதுக்கிக் கட்டுடைத்தலுக்கு மட்டுமே முக்கியத்துவம் ஈந்து கட்டமைத்தற் செயற்பாட்டை மறுக்கிறது. இதன் மூலம் மனித முயற்சிகட்குச் சமாதி கட்ட முயல்கிறது. மனிதர்களைச் செயலற்றவர்களாக்கி; வெறுமைக்கும் விரக்திக்கும் உட்படுத்துங் காரியத்தையே பின்நவீனத்துவம் செய்து வருகிறது. இதன் பின்னணியில் மறைந்திருக்கும் அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

5. பின்நவீனத்துவ அரசியலின் ஆபத்துக்கள்

பொதுவாகத் தத்துவங்கள் மனிதன் வாழ வழிகாட்டும் என்பார்கள். மாறாகப் பின்நவீனத்துவம்  சாக வழிகாட்டும் தத்துவமாக உள்ளது. இதனால் யாருக்கு நன்மை? இவ்வாறான ஒரு நிலையை உருவாக்கினால் ஆதிக்கத்திற்கு அதிகாரத்திற்கு எதிராக யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அமைப்பாக இயங்க மாட்டார்கள். எதிர்த்துப் போராடமாட்டார்கள். அந்த வேலையைப்  பின்நவீனத்துவங் கவனித்துக் கொள்கிறது. எனவே மூன்றாமுலக நாடுகளிற் பின்நவீனத்துவவாதிகளின் செல்வாக்கு இருக்கும் வரை, ஏகாதிபத்தியங்களுக்கு எந்தக் கவலையுமில்லை.

இதைப் பின்நவீனத்துவம் ‘அரசியல் அதிகாரம் ஆபத்தானது’ என்கிறது. அல்லது ‘எல்லாமே அபத்தம்’ என்கிறது. போராடி என்ன பயன்? போராடுவது தேவையில்லாதது என்று சொல்கிறது. போராடாமல் எப்படி வாழ்வது என்று கேட்டால், பின்நவீனத்துவம், ‘ஏன் வாழப்போகிறீர்கள்? வேண்டாம். செத்துவிடுங்கள், மரணமே விடுதலை, மரணமே சுதந்திரம்’ என்கிறது. இதனாற் பயனெல்லாம் ஆதிக்கச் சக்திகட்குத்தான.  இப்படி ஆதிக்கத்திற்கு சேவை செய்வதே இத் தத்துவம்.

NGO1சாதாரண மக்களின் ஆதிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளை முடமாக்குகிற பணியையே பின்நவீனத்துவம் செய்து வருகிறது. பின்நவீனத்துவம் சாதாரண மக்களை நேரடியாக அணுகி அவர்களை முடமாக்கவில்லை. அதற்கு அது தேவையுமில்லை. மாறாக, மக்களிடையே கருத்துருவாக்கப் பணியைச் செய்கிற முன்னோடிகளையும் மக்களை திரட்டிப் போராடுகிற ஆற்றல் மிக்க ஊழியர்களையும் அப்படிப்பட்ட பிற சக்திகளையும் முடமாக்கிவிட்டாற் போதும், மக்கள் வழிகாட்டல் ஏதுமின்றித் தாமாய் முடமாகிப் போவார்கள் ( Atherton, 2002). எனவே அப்படிப்பட்ட காரியத்தை, அதாவது கருத்து ரீதியிலும் தத்துவார்த்த ரீதியிலும் முடமாக்கும் காரியத்தை அது செய்து வருகிறது. இலங்கையிற் பெருகியுள்ள தன்னார்வ நிறுவனங்களும் அவை பரப்பும் சிந்தனைகளும் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. பின்நவீனத்துவத்தை முன்னின்று பரப்பும் சில என்.ஜி.ஓக்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் அதைத் தெளிவாகக் காட்டும். 

அவை செய்யும் மிக முக்கியமான பணி வரலாற்றை மறுப்பது. அம் மறுப்பை மக்கள் மத்தியிற் பரப்பவும் வரலாறு என்ற ஒன்றே இல்லை என்பதை சொல்லவும் பல சிறுநூல்களை அச்சிட்டு இலவசமாக விநியோகிப்பதன் மூலம் மனித வாழ்வில் வரலாற்றின் பங்கை ஒழிக்க முனைகிறது. வரலாற்றை ஒழித்துவிட்டால் அடக்கி ஒடுக்கப்பட்டோம் என்பதோ மக்கள் புரட்சிகள் செய்து உரிமைகளை வென்றெடுத்திருக்கிறார்கள் என்பதோ புதிய தலைமுறைக்குத் தெரியாது, அதன் மூலம் போராட்ட மனநிலை அழிவதுடன் நவகொலனியாக்கத்தை எதுவித மறுப்புமின்றி ஏற்கச் செய்ய முனைகிறது.

பின் நவீனத்துவத்திற்குக் கடந்த காலமும் இல்லை. எதிர்காலம் பற்றிய சிந்தனையுமில்லை. எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அல்லது கணிப்புகள் யாவற்றையும் ~பெருங்கதையாடல்| என்ற முத்திரை குத்தி நிராகரித்து விடுகின்றனர் பின் நவீனத்துவவாதிகள். இவர்கள் நிகழ்கால வாழ்வில் மட்டுமே கவனம் கொண்டவர்கள். சமூகத்திற்கென்று ஒரு அமைப்பும் கிடையாது வெறும் பகுதிகள் மட்டுந்தான் உள்ளன. சாரம் என்று ஏதுமில்லை. சாரம் என்றாலோ அல்லது சமூக சாரம் என்று எவரும் பேசினாலோ அவர் பெருங்கதையாடலைப் பற்றிதான் பேசுகிறார் என்கின்றனர். சமூகங்களுக்கிடையில், மக்களுக்கிடையில், பல்வேறு அடையாளங்களுக்கு இடையில் அதிகார உறவுகள் உண்டு. ஆனால், பொதுவான அடிப்படை உறவு என்று ஏதுமில்லை. இப்படிக், கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்குமான உறவை மறுப்பதன் மூலம் வரலாற்றை மறுக்கிறார்கள், வரலாற்றுத் தொடர்ச்சியை மறுக்கிறார்கள் வரலாற்றைப் பற்றியான பேச்சுக்கு எதிராக இருக்கின்றனர் பின் நவீனத்துவவாதிகள். (வேணுகோபால் 2007)

பின்நவீனத்துவம் என்பதிற் புதுக்கருத்து எதுவும் இல்லை பெயர்தான் புதிதே ஒழியக் கருத்துக்கள் எல்லாம் பழமையானவைகளே எனவும் கான்ட், ஹெய்டெக்கர், நீட்சே முதலானோர் முன்வைத்து ஏற்கனவே காலத்தால் நிராகரிக்கப்பட்ட கருத்துமுதல்வாத, இருண்மைவாதப், பகுத்தறிவு எதிர்ப்புக் கண்ணோட்டங்களையே பின்நவீனத்துவம் முன் வைக்கிறது எனவுங்  கூறும் கேசவன் (2007) பின்நவீனத்துவம் புதியதாக எந்த கருத்தையும் முன் வைக்கவில்லை என நிறுவுகிறார். பின்நவீனத்துவவாதிகள் இன்றைய உலகளாவிய அரசியல், சமூக நிலைகளைப் பற்றி நிறைய ஆய்வுகளைச் செய்கிறார்கள். ஆனால் அவற்றில் இருக்கும் methodology, method என்பதை மறுக்கின்றார்கள்.  methodology ஒன்று இருக்கின்றது என்று எவருஞ் சொன்னால் அதைப் பின்நவீனத்துவவாதிகள் வன்முறை என்;கின்றனர். இங்கே விவாதத்திற்கு இடம் எங்கே இருக்கின்றது? இவர்களது  methodology  யில் உள்ள சிக்கல் என்னவென்றால் சமூக அமைப்பாக ஒரு சமூகம் ( society as a social system) என்பதையே இவர்கள் நிராகரிக்கிறார்கள் என்பதுதான் எனவுஞ் சுட்டிக்காட்டுகிற கேசவன் உலகம் பற்றி லியோதார்த் எழுதியதை ஆதாரங் காட்டுகிறார்:  தான் எதுவாக இருக்கிறோம் என்று இந்த உலகம் தானே விளக்க முடியாத ஒரு உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது எதுவாக இருக்கின்றது என்பது பற்றி அதனால் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் அது எந்த உலகத்திலிருந்து தற்பொழுது விடுதலை பெற்று வந்திருக்கின்றது என்பதைப் பற்றிதான் அதனால் கூற முடியும். இதுதான் பின்நவீனத்துவம் ஆகும்.  இவர்களிடம் சமுதாயத்தைப் பற்றிய தெளிவான அணுகுமுறை இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.

அறிவைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் அறிவு அர்த்தமற்றதெனவுங் கூறி மனித அறிவைக் கொச்சைப்படுத்தும் பின்நவீனத்துவம் மனித வாழ்வுக்கும் அறிதலுக்குமான தொடர்பை மறுக்கிறது. அறிவு அர்த்தமற்றது என்றால் அந்த அறிவு சார்ந்து நடைபெறும் வாழ்தல் அர்த்தமற்றதாகிவிடாதா? அதாவது, வாழ்வே அர்த்தமற்றதாகிவிடாதா? அதை வாழ்ந்து கொண்டிருப்பதே வீண் என்கிறது பின்நவீனத்துவம். ஆதிக்கத்தினதும் அதிகாரத்தினதும் பிடியிலிருந்து விடுபடமுடியும் என்கிற நம்பிக்கையிலும்  அது சார்ந்த வரலாற்று இயக்கவிதிகளின் அடிப்படையிலும்தான் மனிதன் அமைப்பாகிறான், போராடுகிறான். அதைவிட இந்த ஒடுக்குமுறையிலிருந்து மீள வேறு மாற்று வழி உண்டா? இல்லை. மாற்றுப்பாதை எதையும் பின்நவீனத்துவம் முன் வைக்கவில்லை.

எல்லா முயற்சிகளையுங் கொச்சைப்படுத்தி அர்த்தமற்றதாக்குங் காரியத்தையே பின்நவீனத்துவம் செய்து வருகிறது. அதன் மூலம் மனித குலத்தை எந்தத் தத்துவத்தின் மீதும் பிடிப்பற்றதாக்கி, எதன் மீதும் நம்பிக்கை கொள்ளச் செய்யாது, எல்லாத் தத்துவங்களின் மீதும் அவநம்பிக்கை கொள்ளச் செய்வதுடன் அதன்மூலம் மனிதச் செயற்பாட்டை முடமாக்கி எதன் மீதும் அக்கறையற்றதாக்குகிற காரியத்தையே பின் நவீனத்துவம் செய்து வருகிறது ( (Eagleton 1997). அதன்வழி, தற்போதுள்ள இருப்பை மாற்ற முயலும் மனித முயற்சிக்கு அது முட்டுக்கட்டை போடுகிறது. இருக்கிற நிலையே தொடர்ந்து நீடிக்க அது மறைமுகமாகச் செயலாற்றுகிறது. அதன்மூலம் அது ஆதிக்க சக்திகளுக்கே சேவை புரிவதாக, அமைந்து விடுகிறது.

இன்றைய சமூகத்தில் உற்பத்திக்கு முக்கியத்துவம் கிடையாது என்றும் அதனாற் பாட்டாளி வர்க்கம் முக்கியத்துவமற்றது என்றும் வர்க்கப் போராட்டம் முக்கியத்துவமற்றது என்றும் இப் போக்குக் கூறுகிறதாகச் சொல்பவர்கள் அமெரிக்க-ஐரோப்பிய சிந்தனையாளர்கள எனச் சுட்டிக்காட்டுகிற வேணுகோபால் (2007);   அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், மொத்தப் பொருளாதாரத்தில் அந் நாட்டின் விவசாய-சுரங்கத் தொழில் உற்பத்தியின் பங்கு 6-8 சதவீதந் தான். தொழிற் துறையின் பங்கு 14-20 சதவீதந் தான். அவர்களது பொருளாதாரத்தின் பெரும்பான்மை தகவற் துறையிலிருந்து கிடைப்பது. அதனால் உற்பத்தியைவிட நுகர்வு முக்கியம் என்று அவர்கள் சொல்கிறார்கள். இந்த நுகர்வுக்கான உற்பத்தி எங்கிருந்து வருகிறது? அவர்கள் உணவு, தொழில் உற்பத்தி ஆகியவற்றை உபயோகிக்காமலா வாழ்கிறார்கள்? அவர்கள் பயன்படுத்தும் எல்லாப் பொருட்களும், உணவும் மூன்றாமுலக நாடுகளிலிருந்து வருகின்றன. மூன்றாமுலக நாடுகளைச் சுரண்டிச் சுகபோகமாக வாழும் அமெரிக்காவில் உற்பத்தி 6 சதவீதமாகக்  குறைந்துவிட்டது. இதே நிலைமை ஜெர்மனி,  பிரான்சு இங்கெல்லாம் நிதர்சனமாகியிருக்கலாம். இந்த நிலமையில் தான் உற்பத்தி அவசியமற்றது என்று சொல்லும் துணிவு இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், நுகர்வு தொடர வேண்டுமானால் உற்பத்தி தொடர்ந்தே ஆகவேண்டும். இந்த விஷயத்தில் பின் நவீனத்துவவாதிகள் உலகின் யதார்த்த நிலைமையை பார்க்காமற் கண்களை மூடிய குருடராகி விட்டனர். அல்லது யதார்த்தம் புரியாத அறிவிலிகளாக ஆகிவிட்டனர். இன்றைய சமூகத்திற்கு உற்பத்தியல்ல, நுகர்வுதான் முக்கியம்,  தகவல், ஆய்வு ஆகியவைதான் முக்கியம் என்று ஏன் சொல்கின்றனர்? குருடாக இருப்பதாலோ, அவர்களால் உண்மையை புரிந்து கொள்ள முடியாததாலோ அல்ல. உலகில், இந்தியா, ஆசிய-ஆபிரிக்க நாடுகளில் உற்பத்தி தொடருவது அவர்களுக்குத் தெரியாததல்ல. அவர்களுக்கு வேண்டியது வர்க்கப் போராட்டம் என்பதை மறுதலிக்க வேண்டும். பாட்டாளி வர்க்கம் என்ற ஒரு வர்க்கம் இருப்பதை மறுதலிக்க வேண்டும் என்பது தான். மொத்தத்தில் வர்க்கம் என்ற ஒன்று இருப்பதை மறுக்க வேண்டும” என விளக்குகிறார்.

 

6. நிறைவாக

நவீனத்துவம் என்று கருதக்கூடிய பல சிந்தனைகளும் செயற்பாடுகளும் இன்னுஞ் சரிவர விருத்தி பெறாத ஒரு சூழலில், அரைகுறையான விளக்கத்துடன் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாகப் பின்நவீனத்துவ வியாக்கியானங்கள் செய்வதில் அதிசயம் இல்லை. சிந்தனைத் தேக்கமும் தாழ்வு மனப்பான்மையும், தெரியாததை எல்லாம் தெரிந்தது போல காட்டத் தூண்டுவது இயல்பானதே. மற்றவர்களை விட அதிகம் கற்றது போன்ற பாவனையும் ஏதாவது ஒன்றை எல்லோருக்கும் முதற் தானே கண்டறிந்ததாயும் முதன்முதலாக அறிமுகம் செய்ததாயும் காட்டிக்கொள்ளும் சிறுபிள்ளைத்தனத்தையும் நாம் அறிவோம். தமிழ்ச் சமூகங்கள் மிக நீண்ட காலமாகச் சமூகவியற், பண்பாட்டுத் தேக்கங்கட்கு உள்ளானவை. அதன் விளைவாத் தொன்மை, தூய்மை, தனித்துவம், மரபு, புதுமை, நவீனத்துவம், விருத்தி போன்ற பல விடயங்களில் நம்மிடையே முரண்பாடு மிகுந்த பார்வைகள் உருவாகியுள்ளதை அறிவோம். அயலினின்று வருவனவற்றை நமது தேவைகட்கு ஏற்ப எவ்வாறு உள்வாங்குவது, அவற்றால் நமது சூழலை எவ்வாறு செழுமைப்படுத்துவது, பழையனவற்றிற் பயனுள்ளவற்றை எவ்வாறு அடையாளங் கண்டு பிரயோகிப்பது என்பன பற்றிய நிதானமான பார்வைக்கு என்றுமே தேவை உள்ளது.

அந்நிய மோகம் போன்று அந்நியத் துவேஷமும் வளர்ச்சிக்குப் பாதகமானது. தமிழ் இனம், தமிழ்ப்பற்று, தமிழ்ச் சமூகம் என்று நம்மிடையே எவ்வளவுக்கெவ்வளவு மார்தட்டுகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அதிகமாகவும் வேகமாகவும் நமது சமூகங்கத்தின் ஒவ்வொரு செயற்பாட்டுத் தளமும் அயற் பாதிப்பிற்கும் ஆதிக்கத்திற்கும் உள்ளாகி வருகின்றது. இன்றைய நவ கொலனியச் சூழலில் ஒவ்வொரு தமிழ் அடையாளமும் கொலனிய காலத்துச் சிதைவை விடப் பெரிய சிதைவை எதிர்நோக்குகின்றது.

தமிழர் மீது திணிக்கப்பட்ட கொலனிய விழுமியங்களை விட மோசமான நவகொலனியச் சீரழிவின் விழுமியங்களைத் தமிழ்ச் சமூகங்கள் வலிந்து உள்வாங்கும் ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது என்று சிவசேகரம் (2007) கருதுகிறார்: “நவீனத் தகவல் ஊடகங்களும் பன்னாட்டுக் கம்பனிகளின் நோக்கினாலான  உலகமயமாதலும்|  திறந்த பொருளாதாரமும்|  ‘புதிய உலக ஏற்பாடும்| தமிழ்ச் சமூகங்கள் மீது செலுத்தும் அழுத்தம் பெரியது. அதற்கு முகங்கொடுப்பதை விட்டு அதை மூடிக்கட்டுவதை நோக்கமாகக் கொண்டே தமிழ் சார்ந்த அடையாளங்களின் மேன்மையும் முதன்மையும் சிலரால் மிகுதியாக வலியுறுத்தப்படுகின்றன. இந்தத் தமிழ் அடையாள வலியுறுத்தல் பசப்பானது என்பதை அறிவதில் அதிகஞ் சிரமம் இல்லை”.

பின் நவீனத்துவத்தை விவாதிக்கத் தயங்குகின்ற இவர்கள் பின் நவீனத்துவத்தைப் பற்றிய விமர்சனங்களுக்குப் பதிலளிக்கக் கூட இயலாதுள்ளனர். தமிழகத்தில் ஏற்பட்ட ஒரு சலசலப்பின் விளைவாக உருவான ஒரு “தமிழகப் பின் நவீனத்துவ” மூட்டையை அவிழ்த்துப் பார்க்காமலே தலைமீது சுமந்து திரிகிற இவர்கட்கு அதன் சில சொல்லாடல்களைத்  தவிரப் பின்நவீனத்துவம் பற்றி வேறெதுவுமே தெரியாது. அதைத் தங்களுக்குட்  தாங்களே பேசிக்கொள்வதன் மூலம் புதியவற்றைப் பேசும் இலக்கியவாதிகளாகத் தம்மைக் காட்டிக்கொள்ள முயலும் சிலர் பின் நவீனத்துவம் பற்றிய மயக்கங்களை மக்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறார்கள். ஆரோக்கியமான விவாதத்திற்கான ஒரு தேவை உள்ள நிலையில் அதற்குத் தயாராக இல்லாத பின் நவீனத்துவவாதிகள் நடுவே பின் நவீனத்துவத்தின் உண்மை நிலையை விளக்குவது பாரிய ஒரு சமூகப் பொறுப்பாகும்.

 

நூலடைவு:

கேசவன், கோ. 2007. “பின்நவீனத்துவத்தின் தத்துவமும் அரசியலும்.” தொகுப்பு, பின்நவீனத்துவம்: மாயைகளைக் கட்டுடைத்தல். கொழும்பு: தேசிய கலை இலக்கியப் பேரவை.

சிவசேகரம், சி. 2007(அ). “ஆசிரியனாவது சாவதாவது.” தொகுப்பு, பின்நவீனத்துவம்: மாயைகளைக் கட்டுடைத்தல். கொழும்பு: தேசிய கலை இலக்கியப் பேரவை.

சிவசேகரம், சி. 2007(ஆ). “தமிழ்ச்சூழலில் பின்நவீனத்துவம்.” தொகுப்பு, பின்நவீனத்துவம்: மாயைகளைக் கட்டுடைத்தல். கொழும்பு: தேசிய கலை இலக்கியப் பேரவை.

வேணுகோபால், என். 2007. “பின்நவீனத்துவம்: ஒரு நவீன அத்வைதமே!” தொகுப்பு, பின்நவீனத்துவம்: மாயைகளைக் கட்டுடைத்தல். கொழும்பு: தேசிய கலை இலக்கியப் பேரவை.

 Atherton, C.R. 2002. Postmodernism: A dangerous illusion for social work. International

Journal Social Work, 45(4), 421-433.

Callinicos, Alex. 1991. Against Postmodernism: A Marxist Critique. Cambridge: Polity Press.

Chomsky, Noam. 1997. Post Modernism and Activism. Z-Magazine, Left On-Line Bulletin Board.

Eagleton, Terry. 1996. The Illusions of Postmodernism. Oxford: Blackwell Publishers. 

Eagleton, Terry. 1997. The Contradictions of Postmodernism. New Literary History, 28(1), 1-6. 

Jameson, Fredrick. 1991.  Postmodernism or the Cultural Logic of Late Capitalism. Duke: UP.

*****

 

 

3 thoughts on “பின்நவீனத்துவத்தைக் கட்டுடைத்தல்:அஸ்வத்தாமா”

  1. பயன் உள்ள படைப்பு. நன்றி அஸ்வத்தாமா.

  2. தமிழில் கோட்பாடு -தத்துவம் – என்று(பாமினியில் தட்டுகையில் காற்புள்ளியை எப்படிப் போடுவது என்ற யாராவது சொல்லித்தாருங்கள்) எதுவுமே ஒன்றைத்தவிர இல்லை.

    அதை அடித்துச் சொல்லியிருக்கிறார். யாரேனும் மற்ற மூட்டைகளையம் அவிழத்துப் போட்டால் நல்லது.

Comments are closed.