பால் சக்காரியா, லீனா மணிமேகலை மீதான எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான கூட்டம். (சிபிஎம் தோழர்களிடம் வருத்தம் தெரிவிக்கிறோம்!)

பால் சக்காரியா, லீனா மணிமேகலை மீதான எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான கூட்டம்  (சிபிஎம் தோழர்களிடம் வருத்தம் தெரிவிக்கிறோம்!.)

 என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை*

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது நேரடித் தாக்குதல், போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வுகளாக கேரளாவில் – பாலியல் உரிமை தொடர்பாக கருத்து தெரிவித்த பால் சக்காரியாவின் மீது சிபிஎம் கட்சியினர் தாக்குதல் நடத்தியதும், லீனாமணிமேகலையின் ‘உலகின் அழகிய முதல் பெண்’ கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு ‘இந்து மக்கள் கட்சி’ சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்ததையும் பார்க்கலாம். கருத்து சுதந்திரம், பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதை எளிமைப்படுத்தி பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்து மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்:

இடம் : ICSA அரங்கம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர் – 8

(எழும்பூர் மியூசியம் எதிரில்)

நாள் : 15.4.2010 வியாழக்கிழமை, மாலை 5 மணி

பங்கேற்பாளர்கள் :

அ. மார்க்ஸ், ச. தமிழ்ச்செல்வன், தேவபேரின்பன், வெளி ரங்கராஜன், சி. மோகன், கே.ஏ. குணசேகரன், கோ. சுகுமாரன், வ.ஐ.ச. ஜெயபாலன், ராஜன்குறை, இந்திரன், சமயவேல், இராமாநுஜம், ஆதவன் தீட்சண்யா, அன்பாதவன், யவனிகா ஸ்ரீராம், லதா ராமகிருஷ்ணன், பிரளயன், பா. வெங்கடேசன், ஓவியா, ரஜினி, அஜிதா, சங்கர்ராம சுப்ரமணியன், என்.டி. ராஜ்குமார், பசுமைக்குமார், கரிகாலன், மணிமுடி, லீனா மணிமேகலை, கம்பீரன், மு. சிவகுருநாதன், மணல்வீடு ஹரிக்கிருஷ்ணன், மோனிகா, மணிவண்ணன், கே.டி. காந்திராஜன், அய்யப்பமாதவன், பீர் முகம்மது, சிராஜுதீன், அசதா, அஜயன்பாலா, செல்மா பிரியதர்சன், நீலகண்டன், இசை, இளங்கோ கிருஷ்ணன், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன், பொன் வாசுதேவன், விசுவநாதன் கணேசன், யாழனி முனுசாமி, விஜய் மகேந்திரன், சந்திரா, பாக்யம் சங்கர், வசுமித்ரா, சிநேகிதன், சுபஸ்ரீ, மீனா, அமுதா, கவின்மலர், நிர்மலா கொற்றவை.

எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அனைவரும் வாருங்கள்.

தொடர்புக்கு :

கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்

3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை – 20

பேசி : 94441 20582

*கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. 

 லீனா மணிமேகலை மீதான எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான கூட்டம்!.

வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் ‘கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்’ என்ற பெயரில் வந்த மின்னஞ்சல் செய்தியை கீற்றில் பிரசுரித்திருந்தோம். இந்தப் பெயரில் கூட்டத்தை நடத்துபவர்கள் யார் என்பது வெளியே தெரியாத நிலையில், அதை வசதியாகப் பயன்படுத்திக் கொண்ட யாரோ ஒரு நலம் விரும்பி(!), கேரளாவில் சிபிஎம் கட்சியினரால் பால் சக்காரியா தாக்கப்பட்ட செய்தியையும் சேர்த்து ‘பால் சக்காரியா, லீனா மணிமேகலை மீதான எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான கூட்டம்’ என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தலைப்புக்குப் பொருத்தமான செய்தியாக இருந்ததால் நாங்களும் விசாரிக்காமல் பிரசுரித்துவிட்டோம்.அது முற்றிலும் தவறான தகவல் என்பதையும், இந்தக் கூட்டத்திற்கும் பால் சக்காரியாவிற்கும் தொடர்பு இல்லை என்பதையும், இது லீனா மணிமேகலைக்காக அ.மார்க்ஸ் நடத்தும் கூட்டம் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம். தவறான செய்தியால் சங்கடத்திற்குள்ளான சிபிஎம் தோழர்களிடம் வருத்தம் தெரிவிக்கிறோம்.  தகவலை சரிப்படுத்த உதவிய தோழர் கவின்மலர், சுகுணா திவாகருக்கு நன்றி.

கீற்று நந்தன்

 

எனது கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை*

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் ‘உலகின் அழகிய முதல் பெண்’ கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு ‘இந்து மக்கள் கட்சி’ சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதைப் பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்:

இடம் : ICSA அரங்கம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர் – 8(எழும்பூர் மியூசியம் எதிரில்)நாள் : 15.4.2010 வியாழக்கிழமை, மாலை 5

அ. மார்க்ஸ், ச. தமிழ்ச்செல்வன், தேவபேரின்பன், வெளி ரங்கராஜன், சி. மோகன், கே.ஏ. குணசேகரன், கோ. சுகுமாரன், வ.ஐ.ச. ஜெயபாலன், ராஜன்குறை, இந்திரன், சமயவேல், இராமாநுஜம், ஆதவன் தீட்சண்யா, அன்பாதவன், யவனிகா ஸ்ரீராம், லதா ராமகிருஷ்ணன், பிரளயன், பா. வெங்கடேசன், ஓவியா, ரஜினி, அஜிதா, சங்கர்ராம சுப்ரமணியன், என்.டி. ராஜ்குமார், பசுமைக்குமார், கரிகாலன், மணிமுடி, லீனா மணிமேகலை, கம்பீரன், மு. சிவகுருநாதன், மணல்வீடு ஹரிக்கிருஷ்ணன், மோனிகா, மணிவண்ணன், கே.டி. காந்திராஜன், அய்யப்பமாதவன், பீர் முகம்மது, சிராஜுதீன், அசதா, அஜயன்பாலா, செல்மா பிரியதர்சன், நீலகண்டன், இசை, இளங்கோ கிருஷ்ணன், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன், பொன் வாசுதேவன், விசுவநாதன் கணேசன், யாழனி முனுசாமி, விஜய் மகேந்திரன், சந்திரா, பாக்யம் சங்கர், வசுமித்ரா, சிநேகிதன், சுபஸ்ரீ, மீனா, அமுதா, கவின் மலர், நிர்மலா கொற்றவை.எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அனைவரும் வாருங்கள்.

தொடர்புக்கு :கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்

3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை – 20

பேசி : 94441 20582

*கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5509:2010-04-12-02-50-45&catid=902:2009-08-16-17-58-44&Itemid=268

3 thoughts on “பால் சக்காரியா, லீனா மணிமேகலை மீதான எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான கூட்டம். (சிபிஎம் தோழர்களிடம் வருத்தம் தெரிவிக்கிறோம்!)”

 1. பழைய நடிகை லீனாவும் புது ப்ரொட்யூசர் அ.மார்க்சும்

  அ.அமுதன் செவ்வாய், 13 ஏப்ரல் 2010 16:20

  தமிழ்த் திரைப்படங்களின் அசத்தலான ஃபார்முலாக்களில் ஒன்று ஒரே பாடல் காட்சியில் கதாநாயகன் பேப்பர் போடுவதில் ஆரம்பித்து ஊறுகாய் கம்பெனி தொடங்கி, வியர்வை சிந்தி கடுமையாக உழைத்து பெரும் பணக்காரனாகிவிடுவது. இந்த ஃபார்முலா விளம்பரங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. “நான் வளர்கிறேனே ம்ம்மி” காம்ப்ளான் விளம்பரம், “குடிக்க வேணாம், அப்படியே சாப்பிடுவேன்” ஹார்லிக்ஸ் விளம்பரம் இரண்டும் வெற்றிகரமான உதாரணங்கள்.

  தமிழ் இலக்கிய உலகத்திலும் இந்த ஃபார்முலா வெற்றி பெற்றிருப்பதைக் கவனிக்கும்போது, தமிழ் நாட்டிற்கே உரிய இந்த ஸ்பெஷாலிட்டியை பாராட்டியே ஆகவேண்டும் என்ற பரவசம் ஏற்படுகிறது. இன்று பெரிய இலக்கியவாதிகளாக பெயர் பெற்றிருக்கும் பலர் சினிமாப் பாட்டைப் போட்டு அந்த கேப்பில் இலக்கியத்தில் முன்னுக்கு வந்தவர்கள். அவர்களை எல்லாம் ஏப்பம் விட்டு ஒரு சில விளம்பரப் படங்களால் முன்னுக்கு வந்தவர் என்ற பெருமை லீனா மணிமேகலையையே சேரும்.

  “பறை” பட சர்ச்சை, லயோலா கல்லூரி துப்பட்டா தகராறு, தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த யாரோ ஏற்பாடு செய்திருந்த இரண்டு ரயில் பெட்டிகளை கடத்திச் சென்ற The Great Train Robbery துணிகரக் கொள்ளை, யோனியில் மசிர் கவிதை, கூலி கேட்ட தொழிலாளியை கடல் கடந்து வந்த எழுத்தாளரை அடியாளாக ஏவி விட்டு அடித்த “செங்கடல்” படம் என்று அடுத்து அடுத்து வெற்றிகரமான சுயவிளம்பரப் படங்களைத் தந்த லீனா மணிமேகலையின் அடுத்த விளம்பரப் படமான இந்துத்துவா எதிர்ப்புப் படமும் ஒரு வாரம் வெற்றிகரமாக “ஏ” சென்டர்களில் ஓடும் என்று நம்பலாம். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  வெற்றிகரமான விளம்பரப் பட நடிகை லீனாவின் சளைக்காத இந்த படைப்பு முயற்சிகளில் ஏப்ரல் – 15 அன்று ரிலீசாக இருக்கும் இந்துத்துவா எதிர்ப்பு, கலாச்சார அடிப்படைவாதிகளின் தாக்குதலுக்கு எதிரான கருத்துச் சுதந்திர போர்ப் பிரகடனப் படம் இரண்டு வகையில் முக்கியமான மைல் கல்.

  வருடத்திற்கு ஒருமுறை தமிழ் நாட்டின் கேந்திர மையங்கள் எங்கும் “கலை இலக்கிய இரவு” விழாக்கள் நடத்தி தமிழ் கலாச்சாரப் பரப்பில் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சிபிஎம் – மின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ச. தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, பிரளயன் போன்ற மூத்த ஃபிகர்களையும், தமிழ் அறிவுப் பரப்பின் சீனியர் அறிவாளிகள், கவிஞர்கள், எழுத்தாளர்களையும் வைத்து 5 மணி நேரத்தில் எடுத்து அன்றே ரிலீசாகப் போகும் படம் என்பது ஒரு சாதனை. தமிழ்நாட்டின் மிகப் பெரிய அறிவாளியாகவும், மனித உரிமைப் போராளியாகவும் மட்டுமே அறியப்பட்டிருந்த அ. மார்க்ஸ் அவர்களை, இந்த மெகா விளம்பரப் படத்தின் மூலம் ப்ரொட்யூசர் அந்தஸ்திற்கு உயர்த்தியிருப்பது அதைவிட பெரிய சாதனை. ஒரே படத்தில் இரண்டு மைல் கல்கள்.

  லீனா மணிமேகலையின் இந்த விளம்பரப் படத்தின் கதைக் கருவும் திரைக்கதை அம்சங்களும் மணிரத்தினத்தின் பாணியில் மிக மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருப்பதும் கடந்த இரண்டு வாரங்களாக இலக்கிய வட்டாரங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

  பாடாவதி ஜர்னலிசத்திற்கு வாழ்க்கைப்பட்டுவிட்டால் எதையாவது எழுதித் தொலைக்க வேண்டும் என்பது விதி. மணிரத்தினத்தின் வாரிசு லீனா மணிமேகலை வாயில் இருந்து ஒரு தகவலும் கசியப் போவதில்லை. மணிரத்தினம் மேதை, அதனால் பேசுவதில்லை என்று சொல்கிறார்கள். லீனா மேதையா மக்கா என்ற கேள்வியும் எரிச்சலும் பொத்துக் கொண்டு வந்தது. மக்கு என்கிறார்கள் பலர். நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை. யோசனைக்கு நடுவே எடிட்டரின் ஏகவசனங்கள் பத்தி பத்தியாக மூளைக்குள் ஓட, மேசை முன்னே மல்லுக்கட்டி உட்கார்ந்ததும் பேனா வழியாக சிந்தனைகள் தானாக வழிய ஆரம்பித்துவிட்டது.

  ஃபோக்கஸ் லீனா இல்லை. புதுப்பட ப்ரொட்யூசர் அ. மார்க்ஸ். இரண்டு விமர்சனக் கணைகள்.

  விமர்சனக் கணை ஒன்று. லீனா மணிமேகலையை வைத்து அ. மார்க்ஸ் எடுக்கும் இந்த முதல் படத்தில், சிபிஎம் – மின் மூத்த மூன்று ஃபிகர்கள் ச. தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, பிரளயன் கட்டாயம் நடிக்க வேண்டும் என்று அ. மார்க்ஸ் ஒற்றைக் காலில் நின்றதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் சொல்கின்றன. கலாச்சார அடிப்படைவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக போராடுவதற்கும் சிபிஎம் – க்கும் ஏழாம் பொருத்தம். இந்த சிபிஎம் கட்சிதானே அவர்களுடைய சொந்த கட்சித் தலைவர் W. R. வரதராஜன் மீது ஒழுக்கக் குற்றச்சாட்டு வைத்து, கட்சியில் இருந்து ஒதுக்கி, தற்கொலை செய்து கொள்ள வைத்தது? W. R. வரதராஜன் தற்கொலைச் செய்தி தினசரிகளில் ஒரு வாரம் பரபரப்பாக பேசப்பட்டு, சிபிஎம் – மின் மானம் கப்பலேறிய பிறகு, எந்த கூச்சநாச்சமும் இல்லாமல் தோழர். வரதராஜனுக்கு செவ்வணக்கம் செலுத்தி பிரச்சினையை குழிதோண்டிப் புதைத்ததும் இதே சிபிஎம் தானே? W. R. வரதராஜன் மரணம் கொலையாக இருக்கலாம் என்று செய்தி வெளியிட்ட பாமக அலுவலகத்தை சூறையாடிய சிபிஎம் காம்ரேடுகள் கருத்துச் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? அதே சிபிஎம் – மின் லீடிங் ஃபிகர்கள் கலாச்சார அடிப்படைவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் எந்த முகத்தோடு கலந்து கொள்கிறார்கள்? அவர்களை புதுப் ப்ரொட்யூசர் அ. மார்க்ஸ் இந்த விளம்பரப் படத்தில் நடிக்க வைப்பதன் மர்மம் என்ன?

  கணை இரண்டு. கேரளாவின் மூத்த எழுத்தாளர் பால் சக்காரியா கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி கேரளாவின் காஸர்கோடு என்ற மாவட்டம் பையனூரில் சிபிஎம் – மின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) உறுப்பினர்களால் தாக்கப்பட்டார். காரணம்? அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு கேரள காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் உன்னிதன், மல்லாபுரம் மாவட்டம் மஞ்சேரியில் தன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்தபோது, DYFI உறுப்பினர்கள் அவருடைய வீட்டிற்குள் புகுந்து இருவரையும் தாக்கி வீடியோ எடுத்ததை பால் சக்காரியா கண்டித்து அறிக்கை விட்டிருந்தார். அறிக்கை விட்டதற்கு பால் சக்காரியாவுக்கு கிடைத்தது உதை. இது சிபிஎம் கருத்து சுதந்திரத்திற்குத் தரும் ஜனநாயகம். விளம்பர நடிகை லீனோவோ புதுப்பட ப்ரொட்யூசர் அ. மார்க்சோ கேரள சிபிஎம் – மின் இந்த ரவுடித்தனைத்தைக் கண்டித்து ஒரு அறிக்கையாவது விட்டார்களா? கண்டனக் கூட்டம் நடத்தினார்களா? இல்லை இனிமேலாவது நடத்துவார்களா? அப்படி நடத்தினால் அதில் சிபிஎம்-மின் மூத்த மூன்று பிகர்களும் கலந்து கொள்வார்களா?

  அப்படி எல்லாம் முடியாது என்றால், பிறகு என்ன எழவுக்கு இப்போது இந்த ஒப்பாரி விளம்பரப் படத்தை அ.மார்க்ஸ் அவசர அவசரமாக தயாரித்து வெளியிடுகிறார்?

  விளம்பரப் பட நடிகை லீனா மணிமேகலை மீது இந்து மக்கள் கட்சி ஒரு போலீஸ் புகார் கொடுத்துவிட்டதற்காக போராட்டக் களத்தில் குதிக்கும் புதுப் ப்ரொட்யூசர் அ. மார்க்சுக்கு இந்த நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரம் இருக்காது. பெருஞ்சித்திரனார் முதல் மனுஷ்யபுத்திரன் வரை பலபேருடைய கோவணங்களை உருவி சேர்த்து வைக்கவே அவருக்கு நேரம் சரியாக இருக்கும். இப்போதான் தெரிகிறது, அடுத்து யார் கோவணத்தை உருவலாம் என்ற அவரசத்தில் இருந்த அ. மார்க்சின் கோவணத்தை யாரோ உருவி விட்டிருக்காங்க என்று.

  – அ.அமுதன் ( amuthan70@yahoo.com இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

  http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5739:2010-04-13-10-52-39&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

 2. தமாசு!

  தீவிர அறிவு விவாதம், மற்றும் களப்பணிகள் செய்து அயர்ந்துவிட்ட தமிழ் அறிஞர் கூட்டம், சற்றே இளைப்பாற சில வெட்டி வேலைகளில் ஜாலியாக ஈடுபடுவதாக தோன்றுகிறது. இந்து மக்கள் கட்சி லீலாமணிமேகலையின் கவிதை தொகுப்பையும், இணையதளத்தையும் தடை செய்ய கோரி போலிஸில் புகார் கொடுத்திருக்கிறதாம். இது குறித்து பத்திரிகைகளில் செய்தி வந்தது; சிலர் பத்திரிகைகளில், இணையத்தில் கருத்து சொன்னார்கள்; கண்டித்தார்கள்; எல்லாம் நல்ல விஷயம்தான். இப்போது அடுத்த கட்டமாக கண்டன ஒன்று கூடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். யாரை கண்டித்து கூட்டம்? இந்து மக்கள் கட்சியையா? அப்படி என்றால் ஒரே ஒரு கூட்டம், ஒரே ஒரு விஷயத்துக்கு எப்படி போதுமானதாகும்? தினமும் ஒரு விஷயத்துக்காக கூட்டம் நடத்துவதுதானே நியாயமாக இருக்கும். ஒருவேளை அடையாள வேலை நிறுத்தம் மாதிரி எல்லாவற்றிற்கும் அடையாளமாக ஒரு நாள் கண்டன ஒன்று கூடல் போலும்.

  ‘ பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதைப் பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. ‘ என்கிறார்கள். தமாசாக இருக்கிறது. இப்படியே ஒரே மாதிரி ஸ்டீரியோடைப் வாக்கியங்களை எவ்வளவு காலத்துக்கு இன்னமும் அமைத்துக் கொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை.

  இந்து மக்கள் கட்சியின் புகாரை ஏற்று போலிஸோ, அரசாங்கமோ தடை செய்வதற்கு முன்நடவடிக்கையாக, முதன் முதல் படியாக, ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் மேலே சொன்ன அச்சுறுத்தல் என்பதற்கு பொருள் இருக்கிறது. இந்து மக்கள் கட்சி -மும்பையில் எண்ணிக்கையிலடங்கா வண்ணம் நடந்திருப்பதுபோல்- ஏதேனும் தாக்குதலில் ஈடுபட்டிருந்தாலும் இந்த அச்சுறுத்தல் என்று சொல்வதற்கு முகாந்திரம் உண்டு. ஒருவேளை அப்படி எதாவது நடக்காதது இவர்களுக்கு ஏமாற்றமும் வருத்தமாகவும் இருந்து, வேறு வழியில்லாமல் புகார் கொடுத்ததையே முகாந்திரம் கொண்டு கண்டன கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்களோ என்னவோ! இப்படி ஏதையாவது கண்டித்து கூட்டம் நடத்தாவிட்டால் ஆழ்மனதில் ஒரு கண்டன ஈகோ நிறைவு கொள்ளாமல் ஆவியாக அலையும் போல.

  அல்லது ஆண்குறி, விந்து பீச்சியடித்தல் போன்றவற்றை கச்சாவாக பயன்படுத்தி எழுதப்பட்ட கவிதைகளை இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்பு வேறு எப்படி எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறார்கள். தமிழகமாக இருக்கும் காரணத்தால் இந்து மக்கள் கட்சி, சட்டத்தையும் அதிகாரத்தையும் கையில் எடுக்காமல், சட்டத்திற்கு உட்பட்டு ஒரு தடையை கோரும் ஜனநாயக தன்மையை காட்டியிருக்கிறார்கள். அப்படி இருப்பது பிரச்சனையோ என்னவோ, அவர்களையும் கூட்டம் கண்டனம் என்று மேற்படி செயலில் இறங்கத் தூண்டும் வகையில் ஒன்று கூடல் நடத்துகிறார்கள். இந்து மக்கள் கட்சியை விடுங்கள் கம்யூனிஸ்டுகளும், பாமகவும், திராவிட இயக்கங்களும் கட்சியின் அதிகாரபூர்வமாக என்ன நிலைபாடு கொண்டிருக்கிறது என்று கவிதைகளை படிக்க சொல்லிவிட்டு பின் கருத்து சொல்ல கேட்டு பார்க்கலாம்.

  எனக்கு லீலாமணிமேகலையின் கவிதைகளில் பிரச்சனை எதுவும் இல்லை – அவைகளை கவிதை என்றவகையில் என்னால் எந்த விதத்திலும் ரசிக்க முடியவில்லை என்பதை தவிர. மிகவும் கச்சாவான மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த கவிதைகளில் கலகமோ, கவித்துவமோ வெளிபட்டதாக நான் தனிப்பட்டு கருதி அதற்கு வக்காலத்து என்னால் வாங்க முடியாது. ஆனால் அதை எழுதுவதற்கு அவருக்கு இருக்கும் உரிமைக்கு என் ஆதரவு குரலை வெளிப்படுத்த முடியும். அதில் எந்த தயக்கமும் இல்லை. அதே நேரம் அந்த கவிதைகளை விமர்சிக்கவும், எதிர்க்கவும், அந்த கவிதைகளில் மொழிரீதியான அத்து மீறல் நடந்துள்ளதாக கருத்து சொல்லவும் மற்றவர்களுக்கும் உரிமை உண்டு.( என் கருத்து அதுவல்ல.) இந்து மக்கள் கட்சி மேலே ஒரு படி போய் சட்டரீதியான தடையை கோரியிருக்கிறது. அதை சட்டரீதியாக எதிர்கொள்வதை தவிர பெரிதுபடுத்த இதில் எதுவும் இல்லை. பாய்ஸ் படத்தை தடை செய்ய பெண்கள் அமைப்புகள் கேட்டது போன்றதுதான் இது. தடைசெய்ய கேட்பது என்பதும் ஒருவித எதிர்ப்பை தெரிவிக்கும் வழிதான். அதற்கு அரசின் அங்கீகாரம் கிடைக்கும் போதுதான் (அல்லது சட்டவிரோதமாக நடவடிக்கைகள்/தாக்குதல்கள் நடந்தாலோ) அது கருத்து சுதந்திரத்திற்கான அச்சுறுத்தலாக முடியும். ஒருவேளை மார்க்சியர்களும், ஃப்ராய்டியர்களும் கூட தங்கள் மனம் புண்பட்டதாக வழக்கு தொடரலாம். ‘குட்டி ரேவதி’ என்று ஒரு சினிமா கதாபாத்திரத்திற்கு பெயர் வைக்கவே எஸ்ராவிற்கு உரிமை இல்லை என்று ஒரு கண்டன கேலிகூத்து நடத்தியவர்கள், இப்படி எதிர்ப்பை தெரிவிக்க உரிமையில்லை என்று நினைப்பது இன்னொரு ‘கருத்து சுதந்திர மனித விடுதலை’ கேலிகூத்து மட்டுமே. (வினவின் பதிவுகளில் வெளிப்பட்ட ஆணாதிக்க மொழியை, வசவுகளை, சமூக மதிப்பிடுகளை தன் வாதத்திற்கு சாதகமாக்கும்தன்மையையும் நான் கண்டிக்கிறேன். கண்டித்தேன். ஆனால் எதிர்ப்பு என்பதே வெளிப்படக்கூடாது என்பது என் கருத்தல்ல.)

  மீண்டும் சொல்வதானால் என்னால் கச்சாவான பாலியல்ரீதியான மொழி(வெளிப்படுவதால் மட்டும் ஒரு பிரதியை இலக்கியமாக கருத முடியாதே தவிர) அதனுடன் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த மாதிரி எண்ணம் கொண்டவர்கள் சமூகத்தில் மிக மிக குறைவாகவே இருப்பார்கள். மிக குறைவாக மட்டுமே எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். இது ஆணாதிக்கம் என்றும் குறுக்க முடியாது. ஆணிடம் இதே போன்ற மொழி வெளிபடும்பொதும் இதை ஒத்த எதிர்ப்பு வெளிபடலாம். கற்பித நெறிகளால் பெண்ணின் தூய்மையை உன்னதப்படுத்தும் ஆணாதிக்க சமூகமாக நம் சமூகம் இருப்பதால் பெண்ணுக்கான எதிர்ப்பு பல மடங்கு அதிகமாக இருக்கலாம். எனினும் பொதுக்களத்தில் இயங்கும் ஒரு கச்சாவான பாலியல் மொழிக்கான எதிர்ப்பு என்பதாக ஒன்று இருப்பதே பாசிசம் என்று நினைப்பதும், பாசிச கூறு கொண்ட குருட்டு பாசிச எதிர்ப்பு என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஆகையால் எந்த வித பொறுப்பும் இல்லாமல் வெளிபடும் பாலியல்ரீதியான மொழிக்கு, எதிர்ப்பு என்பதே இருக்க கூடாது என்று நினைப்பவர்களுடன் பேச எனக்கு எதுவும் இல்லை. (தஸ்லிமா நஸ்ரின், தீபா மெஹ்தா, ஹுசைனுக்கு நிகழ்ந்த எதிர்ப்புகளை இங்கே ஒப்பிடவே முடியாது. அதன் தீவிரமும், அதிகாரமும் வேறு. தஸ்லிமா, தீபா, ஹுசைனிடம் வெளிபட்டதும் எந்தவித பொறுப்புணர்வும் இல்லாத ஒரு கச்சாவான பாலியல் மொழி சார்ந்த வெளிபாடு அல்ல.) மாறாக இவ்வாறான எதிர்ப்பும் இருக்கலாம் என்று ஜனநாயக பூர்வமாக நினைப்பவர்கள் எந்த வகையில் இந்த எதிர்ப்பு வெளிபட வேண்டும் என்பதை விளக்கி சொல்ல வேண்டும். குறிப்பாக சட்டரீதியான நடவடிக்கை என்றல்லாமல் வேறு எந்த ஜனநாயக வழியில் இந்து மக்கள் கட்சி, மார்க்சிஸ்டுகளின் அமைப்புகள் தங்கள் எதிர்ப்பை செய்ய வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்கிறார்கள் என்பதை சொல்லட்டும். மேலே பேசலாம்.

  என்னை பொறுத்தவரை இதை பெரிது படுத்துவது வெட்டிவேலை. தமிழகத்திற்கு வெளியே தேசிய மற்றும் பிராந்திய இந்துத்வ கட்சிகள் அடைந்த நிலையை, இத்தனை ஆண்டுகால முனைப்புக்கு பிறகும் அடையாத நிலையில், குஷ்புவின் முன்மண பாலுறவு குறித்த கருத்தை அங்கீகரித்து தீர்ப்பு வெளிவந்த இந்த உற்சாகமான காலகட்டத்தில், இதெல்லாம் இல்லாத எதிரியை கற்பித்து போராட கம்பு சுத்தும் வேலையாகத்தான் தெரிகிறது. விளம்பரத்திற்காக இதை செய்வதாகவெல்லாம் குற்றம் சாட்ட நான் சில அறிவு சார்ந்த அற காரணங்களால் விரும்பவில்லை.

  இதைவிட இந்த பதிவை என்னை எழுத தூண்டிய ஒரே தீவிர விஷயம் தஸ்லிமா நஸ்ரின் மீதான தொடர்ந்த தாக்குதல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் இவர்கள் என்னவகை எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள் என்கிற யதார்த்தம்தான். கண்டன கூட்டம் எல்லாம் வேண்டாம். எங்காவது ஒரு இடத்தில் தங்களின் தீவிர கண்டன குரலை இவர்கள் பதிவு செய்திருக்கிறார்களா? குறிப்பாக அ.மார்க்ஸ், பிறகு ஷோபாசக்தி, குறைந்த பட்சம் லீலா மணிமேகலையாவது. எல்லா பிரச்சனை குறித்தும் கருத்து சொல்ல இயன்றதில்லை என்றால், இப்போதாவது கருத்து சொல்லும் படி நேரடியாக அறைகூவுகிறேன். இதில் அ.மார்க்ஸ் தஸ்லீமா நஸ்ரின் மீதான தாக்குதலை நியாயப்படுத்துபவர்களுடன் இணைந்து செயல்படுபவர். தமிழ் நாட்டிற்கு வெளியில் நடந்ததை விடுவோம். ஷகீலா பர்தா போடுவதற்கு எதிராக ரத்தம் கொதிக்கும் அறிக்கைகளை விட்டவர்களை எதிர்த்து என்ன செய்திருக்கிறார்கள்? அ.மார்க்ஸின் இந்த நிலைபாடுகளை சரியானதாக நியாயப்படுத்திய ராஜன்குறை இந்த கூட்டத்தில் என்ன பேசுவார் என்று கேட்க ஆவலாக உள்ளது. (பார்க்க: சத்தியகடிதாசியில் ராஜன் குறையின் ஒரு காகமோனா பற்றிய கட்டுரையின் பின்னூட்டத்தில் அ.மார்க்ஸ் குறித்த ரவி ஶ்ரீனிவாசின் கேள்விக்கான ராஜனின் பதில்) என்னை பொறுத்தவரை தஸ்லிமா நஸ்ரினை வாழவிடாமல் இருக்கவிடாமல் இயங்கவிடாமல் இருக்கும் அடிப்படைவாதத்தை அனுமதிக்கும்/அங்கீகரிக்கும் அரசியல்களை விட, எந்த வித முக்கியத்துவம் இல்லாத இந்த விஷயத்திற்கு கூட்டம் நடத்துவது எல்லாம் நோய்கூறுகள் கொண்ட தமாசுகள் மட்டுமே.

  தமிழ் சூழலில் அக்கறை கொண்டதாலும், இவர்கள் மீதும் இவர்களின் அரசியல் மீது நெடுங்காலமாக ஈடுபாடு கொண்டவன் என்ற வகையிலும் இந்த தமாசை பார்க்க போகலாமா வேண்டாமா என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

  http://rozavasanth.blogspot.com/

 3. இவ்வளவு நீளமான பின்னூட்டங்களுள் கட்டுரையே அமிழ்ந்து விடுகிறது.

  பொறுப்பாளர்கள் கவனங்காட்ட வேன்டிய விடயம் இது.

Comments are closed.