பார்வதியம்மாள் இந்தியாவுக்கு வரும் எண்ணம் இல்லையாம்- இந்தியா தெரிவிப்பு.

ஆறு மாதகால விசா பெற்று சிகிச்சைக்காக சென்னை வந்த பார்வதிய்ம்மாளை கருணாநிதியின் வேண்டுகோளுக்கிணங்க மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் உதவியோடு திருப்பி அனுப்பினார்கள் சென்னை விமானநிலைய அதிகாரிகள். இது தொடர்பாக பல நாடகங்களை அரங்கேற்றி வந்தார் கருணாநிதி. பார்வதியம்மாள் கருணாநிதியிடம் சிகிச்சைக்காக கெஞ்சுவது போன்ற கடிதத்தையும் கருணாநிதியின் போலீசாரே தயாரித்து நாடகங்களை அரங்கேற்றி வந்தனர். இந்நிலையில் நோயாளியான பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியது மனிதாபிமானமற்ற செயல் என்றும், அவரை தனி விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வந்து மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞர் கருப்பன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி எலிப் தர்மாராவ், நீதிபதி கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியாவில் சிகிச்சைப் பெறுவது குறித்த பார்வதி அம்மாளின் கருத்து என்ன என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய வெளியுறவுத் துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனு விவரம்: கொழும்பில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த பார்வதி அம்மாளிடம் இந்தியாவில் தங்கி சிகிச்சை பெறவும், அவருக்கு மருத்துவ விசா வழங்கவும் உதவி செய்ய தயாராக இருப்பதாக தூதரக அதிகாரிகள் மே 11-ம் தேதி தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது விழித்திருந்த பார்வதி அம்மாள் அதிகாரிகளின் கருத்துக்கு பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன், பார்வதி அம்மாளின் சார்பில் எங்களிடம் பேசினார். இந்தியாவுக்கு தற்போது வரும் எண்ணம் பார்வதி அம்மாளுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். வழக்கு விசாரணை புதன்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.