பாண்டிச்சேரியைப் பரபப்பாக்கிய மேதினப் போராட்டம் (படங்கள்)

மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் துணை அமைப்புக்களும் பாண்டிச்சேரியில் நடத்திய மேதின ஆர்ப்பாட்டம் பெரும் பரபப்பு நிகழ்வாக நிறைவடைந்துள்ளது. சுமார் நான்காயிரம் பொதுமக்களும் போராளிகளும் தமிழகம் முழுவதிலுமிருந்து கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பாண்டிச்சேரிப் பொலீசார் அனுமதி மறுத்திருந்னர். பின்னர் நீதிமன்றத்தினூடாக அனுமதி கோரப்பட்ட போதிலும் நீதிபதி பொலீசாரிடமே மறுபடி விண்ணப்பிக்குமாறு தீர்ப்பளித்தமையால் அனுமதியின்றியே மேதின ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. துல்லியமாகத் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டம் பாண்டிச் சேரி பஸ் நிலையத்தில் ஆரம்பமானது. பாண்டிச்சேரி பஸ் நிலையத்தில் பரவலாக நின்றிருந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள், சரியாக நான்கு மணியளவில் விசில்களை ஊதி ஒலியெழுப்பி சடுதியாகச் சிவப்பு அங்கிகளை அணிந்து ஒருங்கிணைது கொண்டனர்.

காவற்துறையினர் எதிர்பாராத விதமாக இணைந்துகொண்ட பெருந்திரளான போராட்டக் குழுவினரைக் கட்டுப்படுத்த முடியாமல் காவற்துறையினர் திணறிப் போயினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையினர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்க மற்றுமொரு விடயம். சுமார் 20 நிமிடங்கள் பாண்டிச்சேரி பிரதான சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக நடந்த சிலமணி நேரப் போராட்டங்களின் பின்னர் அனுமதியின்றி நிகழ்ந்த போராட்டம் என்ற குற்றச்சாட்டில் திரளான வாகனங்களில் அனைவரையும் ஏற்றிச்சென்ற காவல்துறையினர் பொலீஸ் பயிற்சி மைதானத்தில் தடுத்து வைத்தனர். போலீஸ் பயிற்சி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளையும் புரட்சிகர மேதின உரை நிகழ்ச்சிகளையும் நடத்திய மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் துணை அமைப்புக்களும் தடுத்துவைப்பதற்கு இட வசதியின்மையால் பொலீசாரால் விடுதலை செய்யப்பட்டனர். இன்றைய பாண்டிச்சேரி நாளித்ழ்களில் இச்செய்தி பரபப்புச் செய்தியாக வெளியானது.

சுற்றியிருந்த மக்களில் பலரும் நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கு கொண்டமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. பிரஞ்சுக் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலையடைந்த பின்னர் நடைபெற்ற முக்கிய போராட்டமாக இம் மேதின ஆர்ப்பாட்டம் கருதப்படுகிறது.