பாகிஸ்தானுக்கு எம்16 ரக போர் விமானங்களை விற்பதற்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு

18.09.2008.

வாஷிங்டன்: பாகிஸ்தானுக்கு எம்16 ரக போர் விமானங்களை விற்பதற்கு அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நட்பு வட்டத்தில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் திடீரென அந்த வட்டத்திலிருந்து நழுவிவிட்டது. ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டியுள்ள பகுதியில் தஞ்சம் புகுந்திருக்கும் தலிபான் தீவிரவாதிகள் எல்லை தாண்டிய வன்முறையில் ஈடுபடுவதால் அவர்களை ஒடுக்கும்படி பாகிஸ்தானை அமெரிக்கா கேட்டுக்கொண்டது. ஆனால், பாகிஸ்தான் அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால், வெறுத்துப்போன அமெரிக்க இராணுவம் தன் போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி, ஏவுகணைகளை வீசி தீவிரவாதிகள் தங்கியிருக்கும் வீடுகள் மீது தாக்குதல் நடத்திவந்தது.

இப்படி தாக்குதல் நடத்தும்போது சில நேரங்களில் அப்பாவிகள் பலியாகின்றனர். கடந்த ஒரு மாதகாலத்தில் நடந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 15 அப்பாவிகள் பலியானார்கள். இதனால், பாகிஸ்தான் மக்கள் ஆத்திரமடைந்தனர்.

அமெரிக்க போர் விமானங்கள் அத்துமீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்தால் சுட்டுவீழ்த்துவோம் என்று அமெரிக்காவை பாகிஸ்தான் எச்சரித்தது. அத்துடன், அமெரிக்காவிடமிருந்து பெற்ற எம்16 ரக போர் விமானங்களையே எல்லை பகுதிக்கு அனுப்பி அமெரிக்க ஹெலிகொப்டர்களை வீழ்த்தும்படியும் உத்தரவிட்டது. இது அமெரிக்காவுக்கு கசப்புணர்வை ஏற்படுத்தியது. இதனால், அமெரிக்க பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் தான் எம்16 ரக போர் விமானங்களை வாங்குவதற்காக அமெரிக்காவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதற்குள் பாகிஸ்தான் அணுகுண்டு சோதனை நடத்தியதால் அந்த விற்பனை நடைமுறைக்கு வருவதற்குள் நிறுத்தி வைக்கப்பட்டது. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் ஒத்துழைத்ததற்காக அந்த போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்பதற்கு அமெரிக்கா இணங்கியது.

போர் விமானங்கள் இன்னும் பாகிஸ்தானுக்கு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் சில அமெரிக்க எம்.பி.க்கள் போர் விமானங்களை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஜனநாயக கட்சி எம்.பி.கேரி ஆக்கர்மென் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக கொடுத்த பணத்தை அதற்கு பயன்படுத்தாமல் இந்தியாவுக்கு எதிரான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக பயன்படுத்தியிருக்கும்போது எப்படி எம்16 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்கலாம் என்று கேள்வியெழுப்பியுள்ளார். அவருடன் இணைந்து சில எம்.பி.க்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த எதிர்ப்பு காரணமாக வெளிநாட்டு விவகாரத்துக்கான பாராளுமன்ற துணைக்குழு கூடி எம்16 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்பது பற்றி ஆய்வுசெய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது.