பலத்த இராணுவ பாதுகாப்பு மையப்பகுதியில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்.

28.09.2008

இலங்கையின் வடக்கே பலத்த இராணுவ பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள வவுனியா நகரின் மையப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்றில் தற்கொலைக் குண்டுதாரியும் சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

இராணுவத்தினர் பொலிசார் உட்பட 8 படையினரும் 3 சிவிலியனகளும் இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிசார் கூறியிருக்கின்றனர்.

இந்தக் குண்டுத் தாக்குதல் சம்பவம் இராணுவ வாகனங்களும், பொதுப்போக்குவரத்து வாகனங்களும் போய் வருகின்ற ஏ9 வீதியில் வவுனியா நகர தனியார் பேரூந்து நிலையச் சந்தியில் இடம்பெற்றிருக்கின்றது.

சைக்கிளில் வந்த விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத்தாரி, கடமை முடிந்து தமது விடுதிகளுக்குச் செல்வதற்காக 4 பொலிசார் பிரயாணம் செய்வதற்காக ஏறியிருந்த முச்சக்கர வண்டியொன்றின் மீது மோதி குண்டை வெடிக்கச் செய்துள்ளதாக இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.