பற்றி எரியும் முஸ்லிம் தேசமும்;பலாப்பழம் பார்க்கும் நீரோக்களும்:மப்ரூக்

12.10.2008.

எரிதல் – 01: தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மூக்கில் பட்ட காயத்துக்கு முழங்காலில் ஒருவன் கட்டுப்போட்டால், அவனை நாம் என்ன என்று சொல்வோம்? மடையன் என்போம்.

அதையே, கொஞ்சம் நாகரிகமாகச் சொல்வதென்றால் புத்திசாலித்தனமற்றவர் எனலாம்! அதுபோலவே, மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவனொருவன் சுடப்பட்டதற்கு, ஒலுவிலிலுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் காவல் போட்டு வைத்திருக்கிறது அரசாங்கம்! இதை நாம் என்னவென்று சொல்வது? ஒரு உதவிப் பொலிஸ் அத்தியட்சரின் தலைமையில், இரண்டு பிரதான பொலிஸ் பரிசோதகர்கள், ஆறு உதவிப் பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 40 பொலிஸார் என்று காக்கிகளால் நிரம்பி வழிகிறது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சூழல்! இவர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக்கென பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டவர்கள்.

இதுபோக – ஏற்கனவே, ஒலுவில் உப பொலிஸ் நிலையத்தாரின் வீதிச்சோதனைச் சாவடியொன்றும் பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலுக்கு சற்றே முன்னால் இருக்கின்றது. அதற்கு ஒரு 500 மீற்றர் தூரத்தில்தான் ஒலுவில் உப பொலிஸ் நிலையமும் அமைந்துள்ளது! இவைகளையெல்லாம் தாண்டி ஒவ்வொரு நாளும் வளாகத்துக்குள் சென்றுவரும் போது தான் அதியுயர் பாதுகாப்பு வலயமொன்றுக்குள் வசிக்கும் இம்சையை உணர்வதாகக் கூறுகிறார் விரிவுரையாளரொருவர்! ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 1600 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

விரிவுரையாளர்கள், கல்விசார் மற்றும் சாரா ஊழியர்களின் எண்ணிக்கை வேறு தொகை! இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பொலிஸாரின் பரிசோதனைக்குப் பிறகே, வளாகத்தினுள் செல்ல முடியும். ஆரம்பத்தில், இந்தப் பரிசோதனைக் கெடுபிடி மிகக் கடுமையாக இருந்ததாகக் கூறும் பல்கலைக்கழகத்தின் முக்கிய அதிகாரியொருவர், தற்போது பரவாயில்லை என்கிறார்! இது தவிர, இரவில் ராணுவத்தினரும் வளாகத்தினுள் காவலில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பாதுகாப்புத் தடல்புடல்களெல்லாம் யாருக்காக? அங்கு கல்வி பயிலும் பௌத்த மாணவர்களுக்காகத்தான் என்கின்றன செய்திகள்! கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி இரவு – பசன் சமரசிங்ஹ எனும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீட இறுதியாண்டு மாணவரொருவர் வளாகத்தினுள் வைத்து, ஆயுதம் தரித்த நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட செய்தி நாமெல்லோரும் அறிந்ததே! அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, கிழக்கு வளாகத்திலிருந்த பௌத்த மாணவர்கள், வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாற்றப்பட்டார்கள். அதேவேளை, சிங்கள மாணவர்கள் பயிலுகின்ற வளாகங்களில், அவர்களின் பாதுகாப்புக்காக எனக் கூறப்பட்டு, பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

அதில் ஒரு அங்கம்தான் தென்கிழக்கு வளாகத்தில் நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும், இவ்வாறான பாதுகாப்பு எல்லாப் பல்கலைக்கழகங்களுக்கும், எல்லா மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதா என்றால், இல்லை! இந்து மற்றும் முஸ்லிம் பகுதிகளில் அமையப்பெற்ற பல்கலைக்கழகங்களில் கற்கின்ற பௌத்த மாணவர்களுக்கு மட்டும்தான் இந்த ராஜ மரியாதை என்கிறார் சிரேஷ்ட விரிவுரையாளரொருவர்!

இனரீதியில் மாணவர்கள் பாகுபடுத்தப்பட்டு, குறித்ததொரு மதத்தைச் சார்ந்தோர் மட்டும் அரசினால் இவ்வாறு போஷிக்கப்படுவதானது ஆரோக்கியமானதல்ல என்கிறார் தென்கிழக்குப் பிரதேசத்திலுள்ள சமூக நலன்; விரும்பியொருவர்! அவர் மேலும் கூறுகையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது போன்ற உயிர்ப் படுகொலைகள் எவையும், இதுவரை தென்கிழக்கு வளாகத்தில் இடம்பெறவில்லை.

அமைதியான சூழ்நிலையொன்றில் இதுவரைகாலமும் இருந்து வந்த இந்தப் பல்கலைக் கழகத்தை, இவ்வாறு – ஆயுதம் தரித்த பொலிஸாரால் நிரப்பியிருப்பதானது, வலிந்ததொரு பதற்றத்தையே தோற்றுவித்திருக்கின்றது எனத் தெரிவித்தார்.

பல்கலைக்கழகமொன்றின் சூழலானது – இப்படி, ஆயுதமேந்திய பொலிஸ் மற்றும் ராணுவத்தினரின் பிடிக்கும் கொண்டுவரப்பட்டிருக்கின்றமை குறித்து, பல்வேறு தரப்புகளிலிருந்தும் இவ்வாறு கடுமையான விமர்சனங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர், இதுகுறித்து மிகவும் காரசாரமான தொனியில் துண்டுப் பிரசுரமொன்றும் இப்பிரதேசத்திலிருந்து வெளியாகியிருக்கிறது.

பல்கலைக்கழகமா, காவல் நிலையமா? பற்றியெரியும் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்! பல்கலைக்கழகத்துக்குள் அரச பயங்கரவாதம். தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: ஆக்கிரமிக்கப்படும் கல்வியின் பூமி! என்கின்ற நீண்ட தலைப்போடு விநியோகிக்கப்பட்டிருக்கும் அந்தப் பிரசுரமானது – ஒலுவில் பல்கலைக்கழகத்தில் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் தற்போதைய நிலையை, பேரினவாதத்தினால் முன்னெடுக்கப்படும் சிங்களமயமாக்கத்தின் கொடூர முகங்களில் ஒன்று என சாடியிருக்கின்றது! இந்த நிலைமை குறித்து தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவியொருவர் நம்மிடம் பேசும்போது தெரிவித்த கருத்தானது கவனத்துக்குரிது.

சுதந்திரமான மன உணர்வோடு மேற்கொள்ளப்படும் கற்றல் செயற்பாடுகள் மட்டுமே மனதில் பதியக் கூடியன. ஆனால், இவ்வாறான பாதுகாப்பு நெருக்குவாரங்களுக்கு மத்தியில், இனி எவ்வாறு சுதந்திரமானதொரு மனநிலையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது கேள்விக் குறிதான். மட்டுமன்றி, ஒரு தரப்பு மாணவர்களை மட்டும் முன்னிலைப்படுத்தி இவ்வாறு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளால், ஏனைய மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதே அந்த மாணவியின் கருத்தாகும்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாவட்டத்தில், முஸ்லிம் மாணவர்கள் மிக அதிகளவில் கல்வி கற்கும் ஒரு பல்கலைக்கழகத்தில், இப்படி – கடுமையான பிரச்சினையொன்று பற்றியெரிந்து கொண்டிருக்கையில், அவைகளைப்பற்றிய சூடு சொரணைகள் எதுவுமற்று, தெருச்சண்டைக்காரர்கள் மாதிரி – உங்கள் அரசியல் எதிராளிகளை வசைபாடிக்கொண்டிருக்கும் முஸ்லிம் தலைவர்களே நீங்கள் நீடூழி வாழ்க!

எரிதல் – 02: பொத்துவில் விறகுவெட்டிகளின் கதை விறகு வெட்டிப் பிழைக்கும் பொத்துவிலைச் சேர்ந்த அப்பாவிகள் சிலர் படையினரால் கைதுசெய்யப்பட்ட கதை தெரியுமா உங்களுக்கு? கடந்த ஆகஸ்ட் 17 ஆம் திகதியன்று பொத்துவிலைச் சேர்ந்த முஸ்லிம் விறகு வெட்டிகள் சிலர், பக்கத்திலுள்ள காட்டுப்பகுதிக்கு விறகு வெட்டச் சென்றபோது, படையினரால் பிடிக்கப்பட்டு இன்று வரை சிறையடைக்கப்பட்டிருக்கிறார்கள். சலவைத் துணிக்கணக்கு மாதிரி, பிடிபட்டோர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றப்பட்டியல் மிக நீளமானது.

புலிகளுக்கு உணவுப்பொருட்கள் கொடுத்து உதவியமை சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் முக்கியமானது! காட்டுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை சுமார் 30 என்று தெரியவருகிறது. அவர்கள் 20க்கும் மேற்பட்ட கரத்தைகளையும் எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

இவர்களில் 26 பேர்தான் படையினரால் பிடிக்கப்பட்டனர். ஏனையோர் எப்படியோ தப்பிச் சென்று விட்டார்கள். இவ்விடயம் குறித்து பொத்துவிலைச் சேர்ந்த நண்பரொருவருடன் பேசினேன். புலிகளுக்கு உணவு கொடுக்கச் செல்பவர்கள் கரத்தை மாடுகளையெல்லாம் கட்டிக் கொண்டு திருவிழாவுக்குச் செல்வது போல இப்படியா போவார்கள்? ஒரு விடயத்தைச் சொல்லும் போது, பொய்யென்றாலும் கூட அதை நம்பக் கூடிய மாதிரி இருக்க வேண்டும்.

ஆனால், இது கோமாளித்தனமான குற்றச்சாட்டாக இருக்கிறதே என்கிறார் அந்த நண்பர்! கைது செய்யப்பட்டவர்கள் 26 பேர். இவர்களில் சலீம் என்பவர் சிறைக்குள்ளேயே இறந்து போய்விட்டார்.

மாரடைப்பு என்று காரணம் சொல்லப்படுகிறது! ஏனைய 25 பேரும் இன்னும் விடுவிக்கப்படவேயில்லை. சுமார் இரண்டு மாதங்களாக சிறையிலேயே கழிகிறது இவர்களின் வாழ்க்கை! நமது அரசியல் பிரதிநிதிகளோ இவர்களுடைய விடுதலைக்காய் காத்திரமாக இதுவரை என்னதான் செய்தார்கள் என்று வருத்தத்துடன் கேட்கிறார் சமூக அக்கறையாளர் ஒருவர். சிறைச்சாலைக்குள் இறந்துபோன சலீமுக்கு மூன்று பிள்ளைகள். மனைவி இப்போது இத்தாலியில் இருக்கின்றார்.

அவர்களைக் கவனிக்க இன்று எவருமேயில்லை. நமது தலைவர்களும் அந்தக் குடும்பத்துக்கு உருப்படியாய் எதுவும் செய்ததாயும் தெரியவில்லை! சமூகத்தைச் சேர்ந்த சீவன்கள் சில – சிறையில் இப்படி அழுந்திக்கொண்டிருக்கும் நிலையில், விடுதலை பற்றியும், விடுவித்தமை பற்றியும் தொண்டைத் தண்ணி வற்ற வற்றப் பேசிக்கொண்டிருக்கும் நமது தலைவர்களே நீங்கள் நீடூழி வாழ்க!

எரிதல் – 03: களவு போகும் தீகவாபி மிக நீண்ட காலமாகப் பேசப்பட்டுவரும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளிலொன்று பேரினவாதத்தால் களவாடப்படும் காணிகள் பற்றியது! அதிலும் மிக முக்கியமானது தீகவாபிப் பிரச்சினை. அந்தப் பகுதியிலிருக்கும் ஒரு பௌத்த கோவிலை வைத்துக்கொண்டு, அதைச் சுற்றிச் சுற்றி புனித பூமி எனும் பெயரில் முஸ்லிம் மக்களின் காணிகளை அபகரித்து வந்த பேரினவாதம், இப்போது தீகவாபியை மையமாக வைத்து பிரதேச செயலாளர் பிரிவொன்றை உருவாக்கிக் கொள்ளப்போவதாக பலமான கதையொன்று அந்தப் பகுதியிலே உலாவுகிறது! தீகவாபி என்பது அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டதொரு சிங்களக் குக்கிராமமாகும்.

அங்குள்ள மொத்தச் சனத்தொகையே 1954 பேர் மட்டும்தான். அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவில்; தீகவாபி தவிர அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் என்கின்ற கிராம சேவகர் பிரிவுகள் இருக்கின்றன. இவைகளில் பெரும்பான்மையாக முஸ்லிம்களே வாழ்கின்றனர். பாலமுனைக் கிராமசேவையாளர் பிரிவில் திராய்க்கேணி எனும் கிராமமொன்று இருக்கிறது.

இங்கு சுமார் ஆயிரம் பேரளவில் வசிக்கின்றார்கள். அந்தவகையில் கூட்டிக்கழித்துப் பார்த்தால், அட்டாளைச்சேனைப் பரதேசத்தில் கிட்டத்தட்ட 37 ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றார்கள். ஆக, இவ்வாறானதொரு பிரதேசத்திலிருந்து பிரித்துத்தான், தீகவாபியைத் தனிப் பிரதேச செயலகமாய் உருவாக்கப் போவதாக கிளம்பியிருக்கிறது கதை! அம்பாறை மாவட்டத்திலேயே விஸ்தீரணம் குறைந்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் இரண்டாவது நிலையிலுள்ளது அட்டாளைச்சேனைப் பிரதேசம்! இதன் மொத்தப் பரப்பளவே 52.50 சதுர கிலோ மீற்றர்தான். (மிகக்குறைந்தது காரைதீவு பிரதேசம். இதன் பரப்பளவு 31.25 சதுர கி.மீற்றராகும்) ஆக, இந்த லட்சணத்தில் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைப் பிரித்து தீகவாபி செயலாளர் பிரிவை உருவாக்குவதானது, கோணவனத்தைக் கிழித்தெடுத்த கதை போல ஆகிவிடும் என்று கவலைப்படுகிறார் நிருவாக சேவையிலுள்ள அதிகாரியொருவர்.

பிரதேச செயலாளர் பிரிவொன்றை உருவாக்குவதென்றால், அதற்குக் குறிப்பிட்டளவு நிலமும், மக்கள் தொகையும் தேவையல்லவா? அப்படியென்றால், தீகவாபியிலிருக்கும் 1954 பேரையும் வைத்துக் கொண்டு, செயலாளர் பிரிவொன்றை அமைப்பது எங்ஙனம் சாத்தியம் என்று நமது விரிவுரையாளரிடம் ஒரு சந்தேகத்தை முன்வைத்தோம்! அதற்கு அவர் ஏற்கனவே போதுமென்றளவுக்கு தீகவாபி பிரதேசத்தை அண்டியிருந்த முஸ்லிம் மக்களின் காணிகளையெல்லாம் அபகரித்து வைத்திருப்பதால், அவர்களிடம் இப்போது விஸ்தீரணமானதொரு நிலப்பரப்பொன்று இருக்கிறது. மக்கள் தொகைதான் ஒரு பிரச்சினையாக வரும். இதனால், பாலமுனை மற்றும் ஒலுவில் போன்ற முஸ்லிம் கிராமங்களை தீகவாபியுடன் அவர்கள் இணைக்கலாம். அப்படிச் செய்தால், கணிசமானதொரு மக்கள் தொகையை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள் என்று பதிலளித்தார்.

இதுவரைக்கும் முஸ்லிம்களுக்கென்றிருந்த ஒரேயொரு பெரும்பான்மை மாவட்டம் அம்பாறை மட்டும்தான். அதுவும் இப்போது அபகரிப்புக்குள்ளாகி வருகிறது. இந்த நிலையில் மேற்கூறப்பட்டது போல, தீகவாபியும் கை நழுவிப் போனால் முஸ்லிம்கள் நிலை பரிதாபம்தான்! இது இப்படியிருக்க – இவர் சொல்வது போல் தீகவாபி தொடர்பில், இன்னும் எதுவுமே நடக்கவில்லை.

இவராக ஒரு கற்பனையில் சும்மா இப்படியெல்லாம் எழுதுகின்றார் என்று நமது தலைவர்களில் யாராவது இந்தக் கட்டுரையைப் படித்து விட்டுக் கொமன்ற் கொடுக்கலாம். ஆனால், இவ்வாறு எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காகவும், நடப்பதற்கு முன்னால் நமது தலைமைகளையெல்லாம் கொஞ்சம் உலுப்ப உஷாராக்க வேண்டுமென்கின்றதற்காகவுமே இதை நாம் எழுதுகின்றோம்! ரோம் எரியும் போது நீரோ, பிடிலாவது வாசித்துக்கொண்டிருந்தான்!

முஸ்லிம் தேசம் எரிகிறது. நமது தலைவர்களோ பலாப்பழம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்!!