பயங்கரவாதம் – இந்தியாவின் பலவீனம் : சிதம்பரம்

sithamparamபயங்கரவாதத் தாக்குதலை தடுக்க இயலாத பலவீனமான நாடாகவே இப்போதும் உள்ளோம் என்று கூறியுள்ள உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவிற்கு எதிராக அமைத்துள்ள கூட்டணியே இதற்குக் காரணம் என்று கூறியுள்ளார்.

உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் இன்று நடந்த விவாதத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் சிதம்பரம், “சில மாதங்களுக்கு முன்னர் எப்படி இருந்தோமோ அதே அளவிற்கு பலவீனமாகத்தான் இன்றும் இருக்கிறோம்” என்று கூறினார்.

இதற்குக் காரணமென்ன என்று விளக்கிய அமைச்சர், “லஸ்கர் இ தயீபா போன்ற பயங்கரவாத இயக்கங்கள் தங்கள் நடவடிக்கைகளை மற்ற இயக்கங்களோடு இணைந்து செயல்படுத்துகின்றன. இப்படிப்பட்ட குழுக்களில் ஒன்று இப்போது அல் கய்டாவுடன் கூட்டணி அமைத்துள்ளது” என்று கூறினார்.

மும்பைத் தாக்குதலிற்குப் பிறகு பயங்கரவாதத் தாக்குதல் ஏதும் இல்லையென்றாலும், அதனை முறியடிப்பதற்கான தயார் நிலையை தளர்த்த முடியாது என்று கூறிய அமைச்சர் சிதம்பரம், “(பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல்) நமது எதரி தனது மனப்பான்மையை மாற்றிக் கொள்ளவில்லை” என்று கூறினார்.

பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான்- ஆஃப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ளது என்றும், அதே பகுதியில் உள்ளதால் நாமும் பலவீனமான நிலையில் உள்ளோம் என்று சிதம்பரம் கூறினார்.