பண்ருட்டியில் விவசாயி குடும்பத்தோடு தீக்குளித்து தற்கொலை.

தனியார் மயம் தாரளமயக் கொள்கைகளின் பின்விளைவுகளை மக்கள் நேரடியாகவே அனுபவிக்கத் தொடங்கி விட்டனர். விவசாய நிலங்கள் பறி போய் கூலித் தொழில்களும் பாதிக்கபட்ட நிலையில் மக்கள் கிராமங்களை விட்டு பெருந்தொகையாக வெளியேறி உதிரிப்பாட்டாளிகளாக மாறி வருகின்றன. சென்னை போன்ற பெரு நகரங்களில் வீட்டுக்காவல், ஹோட்டல் வேலை என்று மரபார்ந்த தொழில்லுக்கு தொடர்பில்லாத வேலைகளில் அன்றாடக் கூலிகளாக அவஸ்தைப்பட்டு வருகின்றன. இது கீழ் மத்திய தரவர்க்கத்திலும், ஏழை எளிய மக்களிடமும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகமெங்கிலும் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. அதிகமான அந்நிய முதலீடுகளைக் கவரும் மாநிலமாக இந்தியாவின் டெட்ராய்ட் மாநிலமாக தமிழகம் உருவாகியிருக்கிறது என்று சொல்கிற கருணாநிதியும் அவருடைய குடும்பமும் ஆளும் வர்க்கத்தினரும் மேல் மத்திய தரவர்க்கத்தினருமே இதனால் பலன் அடையும் நிலையில் ஏழைகளும் விவசாயிகளும் தற்கொலையில் விழிம்பில் தள்ளப்படுகிறார்கள்.

பண்ருட்டி தற்கொலை

பண்ருட்டியை அடுத்த திருவதிகை வால்கார தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜாங்கம், அவரது மனைவி மல்லிகா மகள்கள் திவ்யா , தீபிகா தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர்.ராஜாங்கம் சிறிது காலமாகவே உடல் நலம் குன்றீ இருந்திருக்கிறார் அரசு உதவி கோரியும் எவ்வித உதவிகளும் கிடைக்காத நிலையில் கடுமையான வறுமைச் சூழலில் இரண்டு பெண் குழந்தைகளையும் வளக்க மிகவும் சிரமப்பட்டார். எதிர்காலம் குறித்த அச்ச உணர்வில் இன்று அதிகாலையில் தூங்கி கொண்டிருந்த 2 மகள்களையும் எழுப்பி, அறை கதவை பூட்டிக் கொண்டு 4 பேர் மீதும் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி காப்பாற்ற முயன்றனர். எனினும் முயற்சி பலனின்றி ராஜாங்கம், மல்லிகா, திவ்யா, தீபிகா ஆகியோர் தீயில் கருகி பலியானார்கள்.