நீதிமன்றத்தில் தமிழ்- போராட்டம் வலுக்கிறது கடுப்பில் கருணாநிதி.

கடந்த ஆறு நாட்களுக்கு மேலாக மதுரை வழக்கறிஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.  தமிழை நீதிமன்ற மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த உண்ணாவிரதம் நடந்துவருகிறது. ஆனால் இப்போராட்டத்தை இப்போது எதிர்கட்சிகளும் கையிலெடுக்க தமிழகம் முழுக்க செம்மொழி ஸ்பெஷலாக இந்த போராட்டம் பரவும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா திடீர் ஆதரவு

……………………………………………………..

தேர்தல் நேரத்தில் திடீர் ஈழத்தாயாக மாறிய ஜெயலலிதா இப்போது திடீர் தமிழ் தாயாக மாறியிருக்கிறார். கருணாநிதி நடத்தும் செம்மொழி மாநாட்டை அர்த்தங்களை சீர்குலைக்கும் வகையில் தமிழின் உண்மையான இருத்தலை மக்களுக்கு உணர்த்தும் வழக்கறிஞர்களின் போராட்டத்தில் ஜெயலலிதாவுக்குத் திடீர் அக்கறை வந்திருக்கிற்து. இது தொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 9.6.2010 முதல் சில வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வளாகத்தினுள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை நேரில் சந்தித்து “உயிரை மாய்த்துக் கொள்கிற உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும்” என்றும், “இந்த நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வேறு ஏதாவது வழியில் போராட்டத்தை நடத்துங்கள்” என்றும் ஒரு நீதிபதி ஆறுதல் கூறியுள்ளார்.மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வேண்டும் என்ற கோரிக்கையை செயல்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளுக்கு 32 கோடி ரூபாயை ஒப்பளிப்பு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் தமிழக அரசுக்கு ஒரு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், ஆனால் திமுக அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் பெறப்படவில்லை என்றும் மற்றுமொரு தகவல் வருகிறது.தமிழில் வாதாடுவது என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று கூட வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
மாவட்ட நீதிமன்றங்களில் தமிழில் வாதாட வழி வகுத்தவர் எம்.ஜி.ஆர். என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்டுவதோடு, வழிக்கறிஞர்களின் இந்தக் கோரிக்கைக்கு அ.தி.மு.க. தனது முழு ஆதரவை அளிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.போராடும் வழக்கறிஞர்களை, அ.தி.மு.க. சார்பில், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், மாணவர் அணி செயலாளர் ஆர்.பி.உதயகுமார், வழக்கறிஞர் பிரிவு இணைசெயலாளர்கள் பி.ஜோதி, எம்.கோவிந்தன், துணை செயலாளர் டி.மோகன், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் கே.ராஜபு, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் எம்.ஜெயராமன் ஆகியோர் நேரில் சந்திப்பார்கள்2011 ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கருணாநிதி எச்சரிக்கை

…………………………………………………….

இந்நிலையில் தமிழுக்க தான் ஏராளமாக செய்து விட்டதாகவும் இன்னும் செய்து கொண்டிருப்பதாகவும் ஆகவே செம்மொழி மாநாட்டை குழ்ப்பும் நோக்கத்தில் சிலர் தூண்டிவிட்டு போராடுகிறவர்களை எச்சரிக்கிறேன் என்று கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஆக இந்தப் போராட்டம் விரிவடையும் பட்சத்தில் உயர்நீதிமன்றத்தில் போலீசை ஏவி வழக்கறிஞர்க்அளின் மண்டையை கருணாநிதி உடைத்தாரோ அப்படியான அடக்குமுறை போராட்டக் காரர்கள் மீது ஏவப்படலாம் எனத் தெரிகிறது.

புதுக்கோட்டையிலும் போராட்டம்
……………………………………………………………………………

புதுக்கோட்டையில் இளம் வழக்கறிஞர்கள் சங்கம், நாம் தமிழர் கட்சி, மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் புதுக்கோட்டை பகுதி தமிழுணர்வாளர்கள் இணைந்து புதுக்கோட்டை நீதி மன்ற வளாகத்தில் அம்பேத்கார் சிலை அருகே நாளை காலை 10 மணிமுதல் தொடர் உண்ணாவிரதம் தொடங்குகின்றனர்.

இந்த உண்ணாவிரதத்திற்கு போலீசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.  அந்த அனுமதி தூய தமிழிலேயே அச்சிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பித்தை இளம் வழக்கறிஞர்கள் சங்க  முன்னாள் மாநில செய்லாளர் சின்னப்பன் கொடுத்திருக்கிறார்.முதல் நாளில் உண்ணாவிரதத்துடன் தொடங்கும் இந்த போராட்டம் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு வடிவங்களில் மாறலாம். உண்ணாவிரதத்திற்கு அனுமதி கொடுத்த காவல்துறை ஒளிபெருக்கிக்கு அனுமதி மறுத்துள்ளது.

One thought on “நீதிமன்றத்தில் தமிழ்- போராட்டம் வலுக்கிறது கடுப்பில் கருணாநிதி.”

  1. சமஸ்கிருதத்தால் சாகாத தமிழ் ஆங்கிலத்தால் செத்துக் கொண்டிருக்கிறது.செம்மொழி மகாநாட்டுத் தமிழ் பாமரனுக்கு புரிய வாய்ப்பில்லை அது தமிழை ரசிக்கின்ற ஆனுபவிக்கின்ற மகாநாடு ஆனால் நீதி மன்றம் வருகின்ற தமிழ் பாமரனுக்கும் என்ன நடக்கிறது வீடு பேறா, வீடு தேறூமா என்பதை அறீய வைக்கும்.

    கோயில்களீல் தமிழில்லை பார்க்கும் சினிமாவில் தமிழில்லை கடைத்தெருவில் தமிழில்லை வாழ்க்கையில் தமிழில்லை இன்நிலையில் செம்மொழி மகாநாட்டால் பயனுண்டா? பயணூண்டு எனில் நீதி மன்றமும் தமிழ் தாங்கச் செய்வீர் தமிழ் செய்யும் கலைஜர் அய்யா அவர்களே.

Comments are closed.