நிலைமையை இலங்கை கையாள்வதற்கு இந்தியா மிகவும் ஆதரவாக இருக்கிகிறது:பாலித கோஹண

 

இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பது குறித்து இந்தியத் தலைமைத்துவத்திற்கு கிரமமாக அறிவித்து வருவதாகவும் அவை தொடர்பாக கலந்தாலோசனை நடத்துவதாகவும் தற்போதைய நிலைமையை இலங்கை கையாள்வதற்கு இந்தியா மிகவும் ஆதரவாக இருப்பதாகவும் வெளிவிவகார செயலாளர் பாலித கோஹண தெரிவித்துள்ளார்.

ஹிமால் இணையத்தளத்திற்கு அளித்த பிரத்தியேகமான பேட்டியொன்றில் அவர் பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அவற்றின் சில பகுதிகள் இங்கு தரப்படுகிறது.

சுமார் 2 இலட்சத்து 87 ஆயிரம் பேர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியிலிருந்து வெளியேறியிருந்தனர். அவர்களைப் பராமரிப்பதற்கு நாம் முன்னுரிமை கொடுத்துள்ளோம். இப்போது 40 ஆயிரம் பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். எமது அடுத்த இலக்கானது விடுதலைப் புலிப் போராளிகளையும் போர் நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்களையும் வேறாகப்பிரிப்பதாகும். அதிக எண்ணிக்கையான முன்னாள் போராளிகளை சிறைக்குள் வைத்திருப்பதற்கான நோக்கம் எமக்கில்லை. அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படவேண்டியது அவசியமாகும். அடுத்ததாக முகாம்களில் உள்ளவர்களை அவர்களுடைய வீடுகளுக்கு 180 நாட்களுக்குள் அனுப்ப வேண்டியது உடனடியான இலக்காக உள்ளது. இதுவரை 3000 பேர் மன்னாருக்கு திரும்பி சென்றுள்ளனர். 10,000 பேர் யாழ்ப்பாணத்திற்கும் கிழக்கிற்கும் சென்றுள்ளனர். அத்துடன், மேலும் 10,000 முதியவர்கள் விடுவிக்கப்படுவதற்கென அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் தமது வீடுகளுக்கு துரிதமாக திரும்பிச் செல்வதற்கு பிரதான தடையாக இருப்பது கண்ணிவெடிகளாகும். கண்ணி வெடி அகற்றும் பணிகளை நாம் மேற்கொண்டுள்ளோம். இது ஒரு பாரிய சவாலாகும். சர்வதேச சமூகம் இதற்கு எமக்கு உதவுமென்று கருதுகிறோம்.

மக்களை முகாம்களுக்குள் அனுமதித்த பின்னர் சாதாரண பொதுமக்களில் இருந்த போராளிகளைப் வேறுபடுத்தும் நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். கிழக்கில் 1987 இல் எம்மிடம் முகாம்கள் இருந்தன. அச்சமயம் அவற்றைச் சுற்றி முற்கம்பி வேலி அடைக்குமாறு ஐ.நா. கேட்டுக்கொண்டது. சிறுவர்களைப் பாதுகாப்பதற்காக ஐ.நா. அச்சமயம் அதனைக் கோரியிருந்தது. இப்போது நாங்கள் அவ்வாறு வேலிகளை அமைத்துள்ளோம். தடுப்பு முகாம்களில் நாங்கள் ஆட்களை வைத்திருப்பதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது அநீதியானதென நான் நினைக்கிறேன். இந்த முகாம்களைத் தடுப்பு முகாம்கள் எனக் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகும். உலகிலேயே தபாலகங்கள், பாடசாலைகளைக் கொண்ட முகாம்களாக இவை மட்டுமே இருக்குமென்று நான் கருதுகிறேன். 232 மருத்துவர்கள் இந்த முகாம்களில் பணியாற்றுகிறார்கள். இது தொடர்பான விமர்சனம் லண்டன் டைம்ஸ் பத்திரிகை மூலமே உருவாக்கப்பட்டிருந்தது. அந்தப் பத்திரிகையின் புதுடில்லியில் உள்ள நிருபர் இலங்கைக்கு வருவதற்கு இடமளிக்கப்படவில்லை. அவர் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த முகாம்களைத் தடுப்பு முகாம்கள், சித்திரவதை முகாம்களென அவர் குறிப்பிட்டுள்ளார். சேர் ஜோன் ஹோம்ஸ் வருகை தந்த போது எடுத்த படங்களை அவர் பயன்படுத்தியுள்ளார். முற்கம்பி வேலிக்குள் பிள்ளைகள் நிற்பதாக படம் எடுத்து உலகம் பூராகவும் மக்கள் தடுப்பு முகாம்களுக்குள் வைக்கப்பட்டிருப்பதாக அனுப்பப்பட்டிருக்கிறது என்று பாலித கோஹண தெரிவித்திருக்கிறார்.

மோதல் சூன்யப் பகுதிக்குள் இடம்பெற்ற விமானத் தாக்குதலை அல்ஜசீராவுக்கு அளித்த பேட்டியில் பாலித கோஹண நியாயப்படுத்தியிருந்ததாகவும் ஆனால் அதற்கு இரு வாரங்களுக்கு முன் அதனை நிராகரித்திருந்ததாகவும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பாலித கோஹண கூறியதாவது;

இல்லை, தவறாக குறிப்பிடப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். மோதல் சூன்யப் பகுதிக்குள் ஒருபோதுமே விமானத் தாக்குதலோ குண்டு வீச்சோ இடம்பெறவில்லை என்று நான் கூறியிருந்தேன். மோதல் சூன்யப் பகுதியை பிரகடனப்படுத்தியவர்கள் நாங்கள் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். மோதல் சூன்யப் பகுதியை பிரகடனப்படுத்துவதற்கான சட்ட ரீதியான கடப்பாடில்லை. ஒருவரும் அவ்வாறு செய்யுமாறு எம்மைக் கேட்கவில்லை. நாங்கள் பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக அதனைச் செய்தோம். ஒரு போதுமே மோதல் சூன்யப் பகுதியை நாங்கள் இலக்கு வைத்ததில்லை என்று கூறினார்.

விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைவதற்கு காலம் மிகவும் பிந்திவிட்டதாக நீங்கள் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. யுத்த ரீதியான சாசனங்கள் சரணடைவது தொடர்பாக சில சட்டங்கள் விதிமுறைகளைக் கொண்டுள்ளன. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்ட போது பதிலளித்திருக்கும் ஹோகன;

ஆம், அவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டனர். புலிகள் அல்ல மூன்றாம் தரப்பினரே தொடர்பு கொண்டனர். அரசாங்கத் தரப்போ அல்லது ஐ.சி.ஆர்.சி.யோ தொடர்பு கொள்ளவில்லை. மூன்றாம் தரப்பே தொடர்பு கொண்டது. நான் நினைக்கிறேன் அதிகாலை 2 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்தது. இப்போது மிகவும் காலம் பிந்தி விட்டது. யுத்தம் முடிவடையப்போகிறது என்று நான் கூறியிருந்தேன். சாதாரண மான யுத்த விதிகளைப் பின்பற்றுமாறு நான் கூறினேன். நீங்கள் சரணடையும் போது என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்யுங்கள். எனக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கத் தேவையில்லை. கைகளை உயர்த்திக் கொண்டு வெள்ளைக் கொடியுடன் செல்லுங்கள் அதுதொடர்பாக எனக்கு தொலை பேசி எடுக்கவேண்டிய தேவையில்லை என்று கூறினேன். ஆனால், அது அப்போது காலம் பிந்தியதாக இருந்தது. ஏனென்றால் யுத்தமானது அச்சமயம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருந்தது என்று கலாநிதி கோஹண கூறியுள்ளார்.

சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் எதிர்காலம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கோஹண இந்த விவகாரத்தில் இரண்டு அல்லது மூன்று விடயங்கள் உள்ளன. தாங்களாகவே சரணடைந்தவர்கள் உள்ளனர். அவர்களில் 9 ஆயிரம் பேர் எம்மிடம் உள்ளனர். ஏனையோர்கள், இப்போது அடையாளங்காணப்பட்டு வருகிறார்கள். முகாம்களில் உள்ளவர்களில் அநேகமாக எல்லோருமே இராணுவப் பயிற்சி பெற்றவர்களாகும். விடுதலைப் புலிகளிடம் பயிற்சி பெற்ற பிள்ளைகள் வளர்ந்தவர்கள், முதியவர்கள் என ஆட்கள் உள்ளனர். ஆனால், முழுமையான போராளிகளை இனங்கண்டு வேறுபடுத்த நாம் முயற்சிக்கிறோம். சாதாரணமான பொதுமக்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். ஏனையோருக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும்.

விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினரான எஸ்.பத்மநாதன் ஜூன் 15 இல் நாடுகடந்த அரசாங்கம் அமைக்கப்போவதாகக் கூறியுள்ளார். இது தொடர்பான உங்கள் கருத்தென்ன என்று கேட்கப்பட்டபோது, அவர் கனவு காண்கிறார். விடுதலைப் புலிகள் எதனையும் விட்டுச் செல்லவில்லை. தலைமைத்துவம் இல்லாமல் போய்விட்டது. இன்டர் போலால் தேடப்படுபவர் இந்த மனிதர். ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பாகவும் இவர் தேடப்படுபவர். இவர் இப்போது நாடுகடந்த அரசாங்கம் குறித்துப் பேசுகிறார். அவர் புலிகளின் சொத்துக்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். நிதி சேகரிப்பவர்களை அவருக்குத் தெரியும். உலகளாவிய ரீதியில் புலிகளின் நிதி தொடர்பாக அறிந்தவர் பத்மநாதன். அதனாலேயே அவருக்குத் தற்போது தேவை எழுந்துள்ளது. இந்தப் பணத்தை அனுபவிக்கப்போகிறார் என்று பாலித கோஹண கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுமெனவும் அரசாங்கம் அதில் உறுதிப்பாட்டுடன் இருப்பதாகவும் ஹோகன குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் பத்திரிகைகளுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாகக் கருதப்படுகின்றது என்பது பற்றி கருத்துத் தெரிவித்த அவர் அழுத்தத்தின் கீழ் அவ்வாறு பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. இல்லாவிடில் எவ்வாறு தமது பத்திரிகைகளை அவர்களால் விற்பனை செய்ய முடியுமென்று அவர் வினா எழுப்பியுள்ளார்.