நான், பஞ்சவர்ணம்…. என்னும் இளம்பிறை… : டி.அருள் எழிலன்.

”எங்கப்பா அம்மாவுக்கு நான் நான் ஐந்தாவதா பிறந்ததால எனக்குப் பஞ்சவர்ணம்ணு பேர் வெச்சாங்க. அதுவே வெள்ளிக்கிழமை பொறந்திருந்தா லெட்சுமிணு வெச்சிருப்பாருங்க.மற்றபடி ஐந்தாவதாக பிறந்ததைத் தவிற எனக்கும் அந்தப் பெயருக்கும் வேறு என்ன பொறுத்தம் இருக்க முடியும்? அன்றைய பஞ்சவர்ணத்துக்கும் இன்றைய இளம்பிறைக்குமிடையில் மாறிப்போனது காலம் மட்டும்தானே தவிற நான் இன்னும் அதே பஞ்சவர்ணம்தான் மனசுக்கு எது பிடிக்குமோ அதை மட்டுமே செய்கிற பஞ்சவர்ணம் அல்லது இளம்பிறை…
மிட்டாய்த் தட்டுவரும் மூத்த மாமன் சீரு வரும்…மிட்டாய் தட்டுமில்ல இன்னைக்கு மூத்த மாமன் சீருமில்ல…இட்டுலி தட்டுவரும் இளைய மாமன் சீரு வரும்…இட்டுலி தட்டுமில்ல இன்னைக்கு இளைய மாமன் சீருமில்ல… என்று கிராமத்துக் குரலோடு நீட்டிப் பாடுகிற கவிஞர் இளம்பிறை…….இப்போது கொட்டிவாக்கம் குப்பம் அரசுத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர்.
”எங்களோட பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கமுதிதான் விவசாயம் கெட்டுப் போய் கூலி இல்லாமல் போன போது வானம் பாத்த பூமியை வெச்சு எப்படி வாழறதுணு எங்கப்பா தஞ்சாவூருக்கு இடம் பெயர்ந்தாராம். தஞ்சையில் வலிவலம் தேசிகர் பண்ணையில் காவலாளியா வேலை பார்த்தார். அப்போ அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி முதல்தாரம் சின்ன வயசிலேயே இறந்து தனியா இருந்திருக்கார். அப்போ அந்தப் பண்ணையில வேலைபார்த்த எங்கம்மாவை பெண் கேட்டு அப்பா கல்யாணம் பண்ணி ஏழு மக்களைப் பெற்றார்கள்.அந்த ஏழில் நான் ஐந்தாவது. பண்ணையில் எங்கப்பாவை கங்காணிம்பாங்க,கூலி வேலை செய்கிற சனங்களை அரிசிப்படி சனங்கணு சொல்வார்கள். ஒரு நாள் முழுக்க நாற்று நட்டு வயல் வேலை செய்தால் மூன்று ரூபாய் பணமும் ஒரு படி அரிசியும் கூலியாக கொடுப்பதால் அவங்க அரிசிப்படி சனங்க. அவங்களோட உழைப்பை கணக்குப் பண்ணி சம்பளத்தை பிரிச்சுக் கொடுக்கிற வேலையை எங்கப்பா பார்த்ததால் அவர் பேரு கங்காணி.

ஒன்றாம் வகுப்பு கூட படிக்காத அப்பா கால்குலேட்டரை விட வேகமாக கணக்குப் போடத் தெரிஞ்சவர். பாசத்தை நெஞ்சுக் கூட்டுக்குள் பூட்டி வைக்கவும் தெரியாது. கோபத்தை கண்ணுக்குள் மறைத்து வைக்கவும் தெரியாத வெள்ளந்தி பெற்றோர். நாங்க ஏழு பேரில் எங்களோட ஒரே அண்ணன் மட்டும்தான் படிச்சார் அதுவும் பத்தாம் வகுப்பு பெயில் .ஆனா அதுதான் எங்க கிராமத்துலேயே பெரிய படிப்பு. யாருக்கிட்ட இருந்தாவது கடுதாசி வந்தா அதை படிச்சுக் காட்ட இந்தப் படிப்பு போதும் இதுக்கு மேல யாருக்கும் படிப்பு வேண்டாம்ங்கறது எங்க வீட்டோட நினைப்பு. எனக்கோ பள்ளிக் கூடத்துக்கு போறதுண்ணா கொல்லக் கொண்டு போறது மாதிரி இருந்தது. படிப்பின் மீது ஆர்வம் இல்லை. ஒரு வாத்தியாரு என்னை நிர்பந்தித்து பள்ளிக்கூடத்துக்கு அழைச்சிட்டுப் போவாரு. பஞ்சவர்ணம் நீ படிக்கணும். இப்படியே வயக்காட்டுல கிடந்து மாடு மேய்க்கவா? போறேணு அக்கறையாப் பேசுவாரு. எனக்கு அந்த அறிவுரைகள் எல்லாம் கேட்கக் கூடியதாய் இல்லை.

வாய்க்கா வரப்புலயும் ஆத்தங் கறையோரமும் தூண்டி போட்டு மீன் பிடிக்கிறதுதான். இஷ்டமான விஷயமாக இருந்தது.” ”நான் நல்ல மீன் பிடிப்பேன். வித விதமான மீன் பிடி நரம்புகள் வைத்திருந்தேன். தூண்டிலையும் மீன் பிடிக்கும் கழியையும் இணைத்துக் கட்டுவதற்காக வாங்குகிற அறுந்து போகாத நூலில் பெயர்தான் நரம்பு. கதிர் பொறுக்கி காசு சேர்த்து நரம்புவாங்கி நிழல் உள்ள அல்லிக்குளமா தேடி தூண்டில் போடுவேன். நல்ல விலாங்கு மீன்தான் எல்லா தூண்டில் காரங்களுக்குமே குறியா இருக்கும். அதுக்காக மீன் வேட்டைக்கு போறதுக்கு முன்னாடியே ”அய்யனாரப்பா நல்ல விலாங்கு கிடைக்க வழி பண்ணுப்பா உனக்கும் பங்கு தர்றேணு” வேண்டிக்கிட்டு போய் மீன் பிடிப்போம். ஆனா விலாங்கு மீன் கிடைச்சா மனசு அல்பமாயிடும் சின்ன கெண்டையையோ கெழுத்தி மீனையோ அய்யானாருக்கு போட்டுட்டு நாங்க விலாங்கு மீனோட வீட்டுக்கு வந்துடுவோம். ஆனால் மீன் பிடிக்கிறதைத் தவிற வேறு எந்த வேலையும் எனக்கு பிடிக்காது ஏனென்றால் மற்றெல்லா வேலைகளும் வெயில்ல நிண்ணு செய்ய வேண்டிய வேலை ஆனாலும் என்ன? வாழ்வின் தேவைகளுக்காகத்தானே விருப்பமில்லாத எல்லாவற்றையும் செய்கிறோம் இல்லியா? அதுமாதிரிதான் இதுவும். பண்டிகைக்கால தேவைகளுக்காக வயக்காட்டுல கதிர் பொறுக்கித்தான் காசு சேர்த்தோம்.

ஒரு வேளை உதிர்ந்து விழுந்த கதிர்களும், படித்துறை மீன்களும், அல்லிக்குளமும், வாகைமரமும் இல்லாத ஒரு வாழ்க்கை வாய்த்திருந்தால் எப்போதுமே நான் ஒரு கவிஞராகியிருக்க முடியாது. அதுதான் என்னை டீச்சராக்கியது அதுதான் கவிஞருமாக்கியது. நான் ஏழாவது வகுப்பிலிருந்து படிப்பை நேசித்தேன். பஞ்சவர்ணம் நீ படிக்கணும்மாணு வாத்தியார் சொன்னது எனக்குப் புரிய ஐந்து வருஷமாச்சு. ஒரு வேளை அப்படி நான் உணராமல் போயிருந்தால் நானும் ஏதோ ஒரு பண்ணையில விவசாயக் கூலியா வயக்காட்டோரம் எனக்குப் பிடிக்காத வெயில்ல வெந்திருக்க வேண்டியதுதான்.”என் வாழ்க்கை நாடகத்தில் எத்தனையொ காட்சிகள்எத்தனையோ காட்சிகளில் எழ முடியா வீழ்ச்சிகள்வரம் கொடுக்கும் தேவதைகள் வந்த போது தூங்கினேன்வந்த போது தூங்கி விட்டு வாழ்க்கை எல்லாம் ஏங்கினேன்.” என்று கவிஞர் மு.மேத்தாவின் கண்ணீர்பூக்களில் மிதந்த போது கவிதை சாத்தியப்பட்டது இந்தப் பஞ்சவர்ணம் இளம்பிறையானதும் அப்போதுதான்.

பத்தாவது முடிச்சுட்டு திரூவாரூர் பக்கம் ஒரு டீச்சர் டிரெயினிங் சேர்ந்தேன் அதையும் வெற்றிகரமாக முடித்த போது எங்கள் வீட்டில் முதல் தலைமுறையாக ஒரு பஞ்சவர்ணம் டீச்சர் இருந்தாங்க. அண்ணையிலேர்ந்து எல்லோரும் எங்க வீட்டை டீச்சரம்மா வீடும்பாங்க. கதிர் பொறுக்கும் போது ‘ஏண்டீ பஞ்சம்ணு’ நக்கலா கூப்பிடுகிற பெரிய ஆளுங்க கூட அப்புறம் டீச்சரம்மாணு கூப்பிட்டாங்க.”
”வாழ்க்கையின் எல்லா வலிகளுக்கும் ஒரே வடிகாலாக இருந்தது கவிதைதான். அப்போதுதான் எனக்கு காலத்தால் அழியாத சினிமா கானங்களை எழுத வேண்டும் அப்படி நான் எழுதுகிற காவிய வரிகளை என் சனங்கள் வயலோரத்தில் பாட வேண்டும் என்ற ஆசை வந்து தொலைத்தது. எனது ஆசிரியர் பணியை சென்னைக்கு மாற்றி விட்டு இந்த நகரத்துக்கு வந்தேன் ஆனா நான் நினைத்த மாதிரி இங்கே சூழல் இல்லை. திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி ஒரு படத்தில் பாட்டெழுத வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார்.அப்புறம் ஒரு புது இயக்குநரைப் பார்க்கப் போனேன். உள்ளே அழைத்தார் அமரச்சொல்லி உடனே ட்யூன் கொடுத்தார்.”கருவாப்பையா&ணு ஒரு பாட்டு இருக்கு கேட்டிருக்கீங்களா? அது மாதிரி ஆம்பளைங்களை எப்படி எப்படியெல்லாம் செல்லமா? கூப்பிடலாமுண்ணு ஒரு நூறு வார்த்தைச் சொல்லுங்க அதுதான் நம்ம பாட்டு?” என்றார். நான் இவர் நம்மை கிண்டல் செய்கிறார் என்றுதான் முதலில் நினைத்தேன். பின்னர்தான் தெரிந்தது அவர் சீரியஸாகவே என்னிடம் அப்படிப் பாட்டுதான் எதிர் பார்க்கிறார் என்று. நான் சொன்னேன் ஸ்கூலில் குழந்தைகளோட எழுத்துப் பயிர்ச்சியை வளர்க்க ஒரு பயிர்ச்சி கொடுப்போம். பட்டம் என்று சொல்லி முதல் எழுத்தை மட்டும் மாற்றி எழுதச் சொல்வோம். குழந்தைகள் உடனே கட்டம்,வட்டம், சட்டம் என எழுதி வருவார்கள் அதற்கு ஏற்ற மாதிரி மதிப்பெண் கொடுப்போம். இந்த இயக்குநரோ எனக்கு கருவாப்பைய்யா என்று இம்போஷிஷன் கொடுக்கிறார். நான் வேண்டாம் என்னால் செய்ய முடியாது என்று வந்து விட்டேன்.

சிலர் நாம் எழுதிக் கொடுக்கும் பாடலை இரட்டை அர்த்தப் பாடலாக மாற்ற முயர்சித்தார்கள், நான் முதலில் ஒரு ஆசிரியர் என்னிடம் குழந்தைகள் படிக்கிறார்கள். அப்புறம் நான் ஒரு பெண் அதனால் உங்கள் பாடலே வேண்டாம் எனக்கு விடை கொடுங்கள் என்று வெளியில் வந்து விட்டேன்.இப்போது கவிதையும் பள்ளிக் குழந்தைகளும் இந்த சென்னை நகரமும் எனக்கு பிடித்த விஷயமாக மாறிப் போயிருக்கிறது.அப்போ எனக்கும் பள்ளிக்குப் போக பிடிக்காமல் இருந்தது. இப்போ என் பையன் கேட்கிறான் ”அம்மா சளிப்பிடிச்சிருக்கு ஸ்கூலுக்கு போகணுமாம்மா…” என்கிறான் ”அதெல்லாம் ஒண்ணும் செய்யாது போடா மகனே” என்றால். இல்ல ”இப்படி சளிப்பிடிச்ச பிள்ளைய ஸ்கூலுக்கு அனுப்பியிருக்காங்களேணு உன்னை தப்பா நினைக்க மாட்டாங்களாணு? என்னைப் பார்த்து திருப்பிக் கேட்கிறான் என் மகன் என்ன செய்ய குழந்தைகளை நமது பள்ளிகள் இன்னும் கவர வில்லையோணு தோன்றுகிறது.”

”மனித குலத்தின் மீதான கருணையும் அன்பும் கொண்ட எதிர்கால தலைமுறை நம்பிக்கை அளிக்கும் படியாக உருவாகி வருகிறதென்றால் அந்தத் தலைமுறை உருவாவது அரசுப் பள்ளிகளில் இருந்துதான். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. கரும்பலகைகளை ஆசிரியர்களே இப்போது ஆக்ரமித்துக் கொள்வதில்லை சம வாய்ப்பும் சுதந்திரமும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. நாங்கள் குழந்தைகளோடு தரையில் அமருகிறோம்.அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டை கற்பிக்கவும் சுதந்திரமாக சுவாசிக்கவும் விடுகிறோம். நாங்கள் ஆசிரியர்களாக மாறி பாடப்புத்தகங்களை அவர்களுக்கு சுமைகளாக மாற்றுவதில்லை.கல்வியை எளிதாக்கியிருக்கிறோம்.அன்று கல்வியின் தேவையை எனக்கு உணர்த்த ஒரு அப்போ ஒரு வாத்தியார் இருந்த மாதிரி நானும் ஏதோ ஒரு குழந்தைக்கு இருந்தாலே சந்தோஷம். இப்படியாக கவிதைகளோடும் கல்வியோடும் என் வாழ்க்கை கழிகிறது இது வரை நான் எழுதிய ஐந்து கவிதைத் தொகுதிகளோடு எனக்கு ஒரு ஆசையும் இருக்கிறது அது அறுவடைக்குப்பின் கதிர்களைப் போல சிதறிக்கிடக்கும் கிராமத்துப் பாடல்களை அதன் குதிருக்குள் இருந்து எடுத்து சேமித்து பதிவு செய்ய வேண்டும். அப்படி என்னதான் இருக்கிறது அதில் என்றால் நீங்களே கேளுங்கள் என்று ராகமிட்டுப் பாடுகிறார். இளம்பிறை…

ம்ம்ம்ம்ம்……சோறும் அடுப்பினிலே
சுந்தரனும் கையினிலே
சோறை இறக்கலைய்யோ எந்தலைவா?
சுந்தரனை தூக்கலையோ?
பாலும் அடுப்பினிலே பாலகனும் கையினிலே
பாலை இறக்கலையோ எந்தலைவா?
பாலகனைத் தூக்கலையோ…
செத்துட்டாருண்ணு சொல்லி சீமக்கி ஆளு போக ,
சீமத் திரண்டு வர சேவை செய்ய கூட்டம் வர…
மாண்டுட்டாருண்ணு சொல்லி
மதுரைக்கு ஆளு போக,
மதுரை திரண்டு வர மாலை கொண்டு கூட்டம் வர..
அந்த ராகத்தில் கசிவது வெண்மணியின் வேதனை….

9 thoughts on “நான், பஞ்சவர்ணம்…. என்னும் இளம்பிறை… : டி.அருள் எழிலன்.”

 1. எந்திரன் பார்க்க ஒற்றக் காலில் நிற்கப் போகும் மகனுக்கு எந்த அறீவுரை ஏறூம்? அம்மாச்சியின் தாலியை அடகு வைத்தாவது எந்திரன் பார்க்காது விடான் என் மகன்.நிற்க சரவண சுப்பிரமணீய சுவாமி கோயிலில் கம்பராமாயணம் கேட்டது நினைவுக்கு வருகிறது,எங்கள் ஊரில் இருகிகிற வைரவர் தான் அங் கு அய்யனாரா தெரியாது.வாழ்க்கையில் சின்ன விசயமாய் நாம் ஒதுக்குபவைதான் கருவாப் பையா கிராமத்து சொற்கள சேமித்து இருந்தால் இவை கருவாப் பையா இன்னும் சின்ன விசயம்,நமது கிராமத்து, நாட்டுப் புறங்களீல் இல்லாத இரட்டை அர்த்தமா?இதுவே போதுமென்ற உங்கள் கரும் பலகை மனசை உடைத்து விட்டு வாருங்கள்.நீங்கள் சினிமாவுக்கு பாட்டு எழுத வேண்டும் அது இன்னொரு கனவின் தொடக்கம்.ஆசைப்பட்ட வாழ்க்கை இளம்பிற நீ அதை அடைய வேண்டும்.எங்கோ ஒரு தொலைவில் அது ம்ன்சின் உள்ளே இருந்து கொண்டெ இருக்கும்.

 2. மனதை வருடி மணக்கும் கிராமத்து நினைவுகள், அருமையாக கண்முன் விரிகின்றன, சகோதரிக்கு பஞ்சவர்ணம் என்கிற பெயர் பசுமையாக இருப்பதாக உள்மனம் திரும்பத்திரும்ப குயிலின் ராகத்தில் ,
  ரம்யமான ஆரவாரமற்ற தடம் ,

  நன்றி,

 3. கிராமத்துப் பாடல்களை சுகமாகப் பாடும் இளம்பிறையின் திறமை பாராட்டப்பட வேண்டியது.

 4. தமிழ் சினிமா கருவாப்பையாக்களுக்குள் இளம்பிறைகளால் குப்பை கொட்ட முடியாது.

 5. அருள் எழிலன்,

  அழகாக எழுதப்பட்ட கட்டுரை. உங்கள் மீதான அவதூற்களை திட்டமிட்டு செய்பவர்கள், எந்தப் பக்கத்திலிருந்து எழுதுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். தமிழர்கள் மத்தியில் முரண்பாட்டை உருவாக்கி அதில் குளிர்காய நினைக்கும் ஒரு கூட்டம் அலைகிறது. அவதானமாக இருங்கள். வாசகர்களுக்கும் பெரும்பாலான தமிழர்களுக்கும் இது தெரியும். உங்கள் பணி தொடரட்டும்.
  நன்றி

 6. நல்ல கட்டுரை .கவிதை மனதை தொடுகிறது.
  வாழ்த்துக்கள். அருள் எழிலன்.

 7. நான் இதை தனிப்பட்ட அருள் எழிலன், நாவலன் தாக்குதலாகப் பார்க்கவில்லை. பேரினவாத இலங்கை அரசுக்கு எதிராக இனியொரு மட்டும்தான் மிக வலுவாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இனியொருவை சிதைக்க வேண்டும் என்பதும் புதிய திசைகளுக்குள் குழப்பத்தை உருவாக்கி அந்த எதிர்ப்பையும் குலைக்க வேண்டும் என்பதுதான் இலங்கை அரசு ஆதரவாளர்களின் திட்டம். புலி ஆதரவாளர்களே இலங்கையிடம் சரணடைந்து கொண்டிருக்கும் நிலையில் இனியொரு தனது எதிர்ப்பரசியலை முன்னை விட திவீரமாக முன்னெடுக்க வேண்டும்.

  1. என்ர ஊரவன்,என்ர ஊரவன் என குகநாதனுக்காக என்னுடைய ஊரவன் சீறீரங்கனும் அருள் எழிலன் விசயத்தில்,என்னுடைய இரண்டு கண்போனாலும் பரவாயில்லை என வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்.விடாமல் அவரது தமிழும் தடுமாறூகிறது ஆனால் அருள் எழிலன் ஆரோக்கியமாய் இருப்பதை அவரது கட்டுரை காட்டுகிறது.அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

 8. இளம்பிறையின் நேர்காணலில் ஒன்றே ஒன்றுதான் உறுத்துகிறது. அதாவது ஆரம்பல்கல்வி தொடர்பான அவரது கருத்துக்கள். ஆரம்பக் கல்வி இந்தியாவிலேயே படு மோசமாக வீழ்ந்துள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என்பதுதான் உண்மை. வகுப்பறைகள் குழந்தைகளைக் கொன்று கொண்டிருக்கின்றன்.

Comments are closed.