நான் ஜனாதிபதியுடன் அதிகமான விடயங்களைக் கலந்துரையாடவுள்ளேன்!:கருணா.

சார்க் மாநாடு நிறைவுற்றபின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தான் அரசியலில் நுழைவது குறித்து கலந்துரையாடவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்புக்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், இச்சந்திப்பின்போது தமது கட்சியின் புதிய கட்டமைப்பு குறித்து ஜனாதிபதியிடம் விரிவாக விளக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

” நான் எனது கட்சியை மீள ஒழுங்கமைத்துள்ளேன். அத்துடன், கிழக்கிலுள்ள பொதுமக்கள் மத்தியில் சிறிய குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் மூலம் சில அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசியலில் நுழைவதற்கு நான் தயாராகவுள்ளேன். இந்த விடயத்தை ஜனாதிபதியிடம் தெரிவிக்க காத்திருக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது கட்சி உறுப்பினர்கள் தான் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் செல்வதற்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“நான் ஜனாதிபதியுடன் அதிகமான விடயங்களைக் கலந்துரையாடவுள்ளேன். கிழக்கு மக்களின் நன்மை கருதி ஏற்கனவே கிழக்கை மீளக்கட்டியெழுப்புவதற்கான செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளேன்” என்றும் கருணா தெரிவித்துள்ளார்.