நான் எப்படி மறக்க?.. – சேரன் – கவிதை பகிர்வு 7 : கவிதா (நோர்வே)

பரந்து விரிந்த பூமி, நில்லாது ஓடும் நதி, காற்றாடும் மேகம், சுடும் நெருப்பு, உணர்வைத் தொடும் காற்று என்று ஐம்பூதங்களையும் மட்டுமல்ல நேற்றைய இன்றைய பொழுதின் குருதி தோய்ந்த சமூகம், முகவரி தொலைத்த மனிதர், முகம் இல்லாத மனிதம் என்று அத்தனையும் தம் குரலில் பதிவுசெய்யும் மொழிக் காதலர்கள் கவிஞர்கள்.

படிமங்களாலும், உவமானங்களாலும் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்த கவிதையின் பாதை, அதே வழியில் தன்னை இழுக்கும் செக்குமாடு போலல்லாது கயிறறுத்து இன்று பல தளங்களிலும் தன்னை பரீட்சித்துக் கொண்டிருக்கிறது. தளத்திலும் புலத்திலும் தன் விரல்கள் வரித்துச் செல்லும் கவிஞர் சேரனுடைய கவிதைகள் கவித்துவம் பற்றிய பேச்சாக மட்டும் நில்லாது ஒட்டுமொத்த அனுபவங்களை அள்ளி வருகிறது. கவிஞர் சேரனுடைய கவிதைத் தொகுதிகள் அனைத்தும் என் கைகளுக்கெட்டவில்லை. படித்து நான் ரசித்த சில வரிகளை நாம் பகிர்ந்து கொள்வோமே.

”தொடரும் இருப்பு” என்ற கவிதைத் தொடரின் இறுதிவரி இப்படிச் சொல்கிறது.

அலைக் கரங்கள் மணலுக்கு
ஆகாய வெளியிருந்த
செம்பரிதி கடலுக்கு
ஆழப் பதிந்தபடி
என் கவிதைச் சுவடுகளோ
உயிர் வாழும் துடிப்பிற்கு

கவிஞர் சேரனின் ” இரண்டாவது சூரிய உதயம்” என்ற கவிதையில் இருந்து இந்த வரிகள் என்பதாம் ஆண்டுகளில் கவிஞரை அடையாளப்படுத்திய கவிதைளில் ஒன்று சிரஞ்சீவிதம் கொண்;டு எம் முன்னுடன் இன்றும் காற்றோடு வருகிறது.

…..
என்ன நிகழ்ந்தது
எனது நகரம் எரிக்கப்பட்டது
எனது மக்கள் முகங்களை இழந்தனர்
எனது நிலம் எனது காற்று
எல்லாவற்றிலும்
அன்னியப் பதிவு
கைகளை பின்புறம் இறுக்கிக்கட்டி
யாருக்காகக் காத்திருந்தீர்கள்?
முகில்கள்மீது நெருப்பு
தன் சேதி எழுதியாயிற்று
சாம்பல் பூத்த தெரு;களில் இருந்து
எழுந்து வருக

முன்பெல்லாம் கவிதை என்றால் ஓசைநயத்தில் சொற்கள் மிளிரவேண்டும். இன்றெல்லாம் ஓசை நயம் பற்றிய சிந்தணையே கவிஞர்களுக்கு இருப்பதில்லை. இன்றைய உணர்வுகளின் சிந்தனை வீச்சை இலக்கண மரபிற்குள்ளே அடைத்து வைக்க புதுக்கவிஞர்கள் தயாராகவும் இல்லை. முன்பு போல சத்தம்போட்டு வாசிக்கப்படும் கவிதைகள் எல்லாம் இன்று மனதிற்குள்ளே மீட்டப்படுகின்றன. அவை கிளப்பிவிடும் உணர்வலைகள் எங்கோ ஒரு மூலையில் சிறு அதிர்வையாவது ஏற்படுத்திவிடும் வல்லமை கொண்டு கவிஞர்களிடம் இருந்து புறப்பட்டுச் செல்கிறது.

மிகப்பரந்த அளவில் மானுடத்தின் நேசம் பாய்ந்த கணப்பொழுதுகளை எத்தனை ஆசுவாசமாகவும் நிதானமாகவும் காட்சிப்படுத்துகிறார் என்பதiயும் சோமான ஒரு காதல் சுகத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்கின்றன கவிஞரின் இந்த வரிகள்

பிரிதல்
கோடி எங்கும் மல்லிகைப்பூ
குளமெங்கும் அல்லி மொட்டு
வேலி வரிச்சுக்கள் மேல்
முள் முருக்கு பூத்திருக்கு
இப்படித்தான் விரியும்
வசந்தம் என்று சொன்னபடி
நீ போனாய் அன்றைக்கு
மஞ்சு,
குளக்கரையில்
நீளக் காலூன்றி ஒரு
கொக்கு தவமிருக்கு…

சோற்களின் இறுக்கம் தளர்த்தி, வாசகனிடம் மாயாஜால வித்தைகளைக் காட்டாமல் எளிமை கொண்டு வரும் கவிதைகள் வெற்றி பெறுகின்றன. கவிதைகள் ஏன் புரியவேண்டும் என்று வாதிடுபவர்களும் உண்டு. புரியப் போவதில்லை என்று தெரிந்து கொண்டே ஏன் எழுத வேண்டும். யாருக்கு எழுதவேண்டும். சாதாரணமாய் தொடர்ந்து கவிதை வாசித்தலை வழக்கமாக்கிக் கொண்ட ஒருவன் பல முறை படித்தும் புரியாத புதிராகத் தோன்றும் கவிதை வாசகனைச் சலிப்படையச் செய்கிறது என்பதே உண்மை. மொழி வளம் வாசகனது மனதை ஊடுருவிச் செல்வதாகவும், நுழைந்தபின் புதிய சிந்தனைகளைத் தூண்டிவிடும் வலிமைமிக்கதாகவும் இருக்க வேண்டும். சாதாரண உணர்வுகளை சிக்கலான நடையில் எழுதி அதைப் படிக்கிறவர்கள் குழப்பமடைவதுதான் உயர்ந்த இலக்கியம் என்னும் சில அறிவுஜீவிகளின் சிந்தனையின்றி, எளிமைத்தமிழே சேரனின் கவிதைகளுக்கு இலக்கிய பலம் சேர்த்திருக்கிறது.

முதல் வாசிப்பிலேயே தன்வசம் ஈர்த்துவிடக் கூடிய சேரனின் கவிதையொன்று ஈழத்தழிழரின் போர் வரலாற்றை சில வரிகளினூடு யாதார்த்தமாயும் எளிமைiயாயும் எம்முடன் பேசிப்போகிறது.

கடவுளரும் பிசாசு…..

கடவுளரும் பிசாசுகளும்
இணைந்து புரிந்த
இனப்படுகொலையின்
ஒரு குரதித்துளி
பாலைப்பட்டினத்தின்
ஒதுக்குப் புறத்தில்
தெறித்து வீழ்ந்தது
அந்தப் புள்ளியிரிருந்து
மூன்று தெருக்கள்
குpளை பிரிந்தன
ஓன்று தெற்கே போயிற்று

எவரும்
திரும்பி வர முடியாத தெரு அது எனப்
போனவர்க்குத் தெரியாது
அவர் சாம்பலையும் காணோம்
இன்னொன்று மேற்கே போயிற்று
டலும் காடுகளும் தாண்டி
இரவல் முனங்களுடன்
குளிர்காலத்து
ஆறுகளின் குறுக்கே நடந்து
எல்லைக் காவலர்களின்
கொள்ளி கண்களுக்கும் தப்பி
இரவுப் பயணங்களில்
புதிய நாடுளுக்குச் சென்றனர்
கறுப்பு முகங்களில்
அவர்களுடைய வெள்ளை அநியாயம் படிந்தது
திரும்பி வரும் கனவுகள்
தொலைந்து போக
வந்து சேர்ந்த வழியும்
மறந்து போய்த்
திசை கெட்டது உலகம்
மூன்றாவது தெருகிழக்கே
கானகத்திற்குப் போயிற்று
திரும்பி வந்தனர்

மூன்று தெருக்களிலிருந்தும்
மூன்று உலகங்கள் புpறந்தன
முன்ற உலகங்களிலிருந்தும்
முந்நூறு பார்வைகள் விரிந்தன
முந்நூறு பார்வைகளிலிருந்தும்
மூன்ற கோடி முகங்கள்

கவிஞருடைய கவிதையில் சொற்களின் தூவல்கள் இன்றி ஒரு சாதாரண மனித வாழ்க்கையை, கதையை நம்மோடு விட்டுச் செல்வது தெரிகிறது. ஒரு கவிதையின் முடிவில் எம் சார்ந்த உலகையும் சோகத்தின் சுவடுகளையும் விட்டுபோகிறது. காற்றின் திசைக்கேற்ப்ப தாறுமாறாய் கார்மேகம் மோதி கொட்டும் துளிகள் போல உணர்ச்சித் திரளின் உந்துதலில் கொட்டிப்போன கவிதைகளாய் இல்லாது கற்பனையாகவிருந்தாலும் சம்பவங்களின் நேர்த்தியான கோர்வையாய் மடியில் வந்து விழுகின்றன இந்தத் துளிகள்.

எல்லாவற்றையும் மறந்து விடலாம்…

உன் குழந்தைகளை ஒளித்து வைத்த
தேயிலை செடிகளின் மேல்
முகில்களும் இறங்கி மறைத்த
அந்தப் பின் மாலையில்
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த
கொஞ்ச அரிசியைப் பானையிலிட்டுச்
சோறு பொங்கும் என்று
ஓளிந்தபடி காத்திருந்த போது
பிடுங்கி எறியப்பட்ட என் பெண்ணே
உடைந்த பானையையும்
நிலத்தில் சிதறி
உலர்ந்த சோற்றையும்
நான் எப்படி மறக்க?

கற்களை அடுக்கி வீடு கட்டுவதுபோல பல மாடிகள் கட்டுவதல்ல கவிதை. மாறாக தேவைக்கேற்ப கற்களை விலக்கி செதுக்கி சிற்பமாகுவதே என்று சொன்னால் பொருத்தம் எனலாம். வாசகனை தொடர்ந்து வாசிக்க தூண்டும் படி அமையுமானால் அது சிறந்த இலக்கியம் எனப்படுகிறது. அந்த வகையில் சேரனின் இந்த கவிதைச் சொற்களின் நேர்த்தியை பாருங்கள்.

எப்படிப் புணர்வது என்பதைப்
பாம்புகளிடமும் எப்படிப் புலர்வது என்பதை
காலையிடம் பொறுமை என்பது என்ன
என்பதை மரங்களிடம் கனவுகளுக்கு
வண்ணங்கள் உண்டா என்பதை தூக்கத்தில்
நடப்பவர்களிடம் கண்ணீர்த்துளிகள் சிறைக்கூடங்களாக
மாறியது எப்படி என்பதை
அகதிகளிடம். பயம் என்பது என்ன என்பதை
நடு இரவில் இந்த நகரில் நடக்க நேர்கிற
கறுப்புத் தோல் மனிதர்களிடமும்
பெண்களிடமும் …..
…..

மொழியின் தனிமையிலிருந்து பிறப்பது என்ன என்பதைத்
திசை தொலையப் புலம் பெயர்ந்தவர்களிடமும்
துயரத்தின் சாறு பிழிந்த தனிமை எப்படியிருக்கும்
என்பதை என் பனிப்பாறையுள் நெருப்பின்
உயிர்ச் சுவட்டை எறிந்தவளிடம். அவளிடம்
இவளிடம் இரவின் கடைசி ரயிலும் போய்விட்ட
பிற்பாடு தண்டவாளங்களும் குளிரில் துடித்துப்
பிளக்க, ஒற்றைச் சிறகுடன் கையில் ஒற்றைப்
பூவுடன் காத்திருப்பது எப்படி என்பதை
என்னிடம்
கேள்.

சேரனின் கவிதைகளில் காணப்படும் சொல்அமைப்பு முறை பல கவிஞர்களிடம் இருந்து அவருடைய தனித்துவத்தை அடையாளப்படுத்துகிறது. பொது நிகழ்வுகளை கவிதையின் வடிவம் சிதறாமல் உரையாடல் தொனி கலந்து நம்மிடம் தருவது கவிஞருடை சிறப்பு .

சேரனின் பல நூறு கவிதைகளில் சிலவற்றையே உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். கவிதை பிரியம் உள்ளவர்களும் மேலும் சேரனின் கவிதைகளை படிக்க ஆர்வமுள்ளவர்குளும் கவிஞருடைய ”இரண்டாவது சூரிய உதயம்” ”யமன்” ”கானல் வரி” ”எழும்புக்கூடுகளின் ஊர்வலம்” எரிந்து கொண்டிருக்கும் நேரம்” ”நீ இப்பொழுது இறங்கும் ஆறு” ”உயிர் கொல்லும் வார்த்தைகள்” எனும் கவிதை நூல்களின் காணலாம்.

47 thoughts on “நான் எப்படி மறக்க?.. – சேரன் – கவிதை பகிர்வு 7 : கவிதா (நோர்வே)”

 1. இதயம் பிளந்து அதில் நீர் விட்டு விடுதலை வேர் வைத்தவன் சேரன்.தீவுப் பகுதிக்கு போவதற்கு பஸ் ஏறூம் போதெல்லாம் பேரூந்து நிலையத்தில் எழுதப்பட்ட கவிதைகள் மனதைச் சுமந்து பயணம் செய்தன.அப்போது ஆமி கோட்டையில் காவல் இருந்த காலம்.தீவுப் பகுதி புயலற்றூ இருந்தது.சுதந்திரமாய் சேரன் எங்கள் சுவாசத்தில் கலந்தான்.

  1. விடுதலைப்புலிகளின் தவறுகளையும் இலங்கையரசின் தவறுகளையும் நடுநிலையாக ஆய்வுக் கண்ணோட்டத்தில் தனது கருத்துக்கனள பகிர்ந்து கொண்டவர் இவர்.தமிழர்களின் உரிமைக்காக ஜனநாயக ரீதியாக போராடி போதும் பின்னர் ஆயுத ரீதியாக போராடிய போதிலும் அவை ஏன் இடம்பெறுகின்றன என்பதை இலங்கையை ஆண்ட அரசுகள் மிகத் தெளிவாக அறிந்து கொண்ட போதிலும் தமிழர்களுக்கு நியாயங்கங்கள் வழங்கப்படவில்லை தெளிவாகவே இலங்கை அரசு உணர்ந்து கொண்ட போதிலும் தமிழர்களை “பயங்கரவாத”முத்திரை பதித்து ஆயுத அதற்கமைவான ஆயுத மிரட்டல் அடக்குமுறைச் சட்டங்கள் ஊடாக தமிழர்களை அழித்தல் அடக்கியாளுதல் என்பவற்றை இனவாத நோக்குடன் செய்து வருகின்றன.புலிகள் என்ற காரணம் காட்டுகின்றதற்கு அப்பால் இலங்கை அரசு தமிழர்கள் என்ற அடையாளத்தை நோக்கிச் சென்ற வேளையில் சேரன் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையின் வடிவங்களை உலகிற்கு சொல்லத் தொடங்கினார்.இது நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இடம்பெற்று வருகின்றது.இன்றைய நிலையில் சமகால இலங்கையரசின் அறிக்கைகள் செய்திகள் எப்படியிருக்கின்றன என்றால் தமிழர்கள் யாருமே கொல்லப்படவில்லை நிரூபியுங்கள் பார்க்கலாம் என சவால் விடுகிறார்கள்.ஒரு அரச இயந்திரத்தை பக்குவப்பட்ட அறிவு முதிர்ந்த இராஜதந்திரிகள் நடத்திச் செல்வது பொலவா தெரிகின்றது.துப்பாக்கியை மக்கள் முன்னால் நீட்டிப் பிடித்தவாறு பயமுறுத்துவது போலல்லவா தெரிகின்றது.ஒரு சர்வாதிகார ஆட்சிக்குகூடு சில வரைமுறை இருக்கும்.ஆனால் இலங்கையில் “உண்மையில் சர்வாதிகார ஆட்சியா”நடக்கின்றது என்று என்னத் தோன்றகின்றது.இது எப்படியெனில்”ஜனநாயக ஆட்சியா நடக்கின்றது “என்று கேட்பது போல் அடுத்தகட்டமான சர்வாதிகார ஆட்சிகூட அதற்கப்பால் சென்றவிட்டது.இதற்கு எதை ஒப்பிடலாம் என்றால்-வெளி உலகிற்க தன்னை கணவானாக ஏகபத்தினி விரதனாக காட்டிக் கொள்ளும் ஒரு ஆண் “வெளி உலகிற்கு தெரியாதவாறு ஒரு “பொமபிளைப் பொறுக்கியாக” (இந்த வார்த்தை பிரயோகத்திற்காக என்னை மன்னிக்கவும்>இப்படியான வாரத்தைகளை பயன்படுத்துகிற அளவிற்கு தமிழர்களின் உணர்வுகளை இலங்கையரசு கொண்டு வந்துவிட்டது-சேரன் மன்னிக்கவும்) கேவலமான மனிதனாக இருப்பது போன்றதுதூன் இலங்கையரசின் நிலை.திரு.சேரனின் கவிi தகள் பற்றிய ஆய்வில் இக்கருத்தை சொல்வது பொருத்தமில்லையெனினும்.திரு.சேரனைப் போன்ற நடுநிலையான அறிவுஜீவிகள் கடந்தகாலங்களில் அவர்களுக்கு ஏற்பட்ட அவமானங்களை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து எங்கெங்கு தமிழர்கள் சார்ந்து உண்மைகளை வெளிப்படத்து வேண்டுமென்று வேண்டுகின்றேன்.

 2. ”இரவல் படையில் புரட்சி எதற்கு.. ”என்று சேரன் எழுதியபோதே நாம் சேரனை அடையாளம் கண்டுவிட்டோம்! (நடைமுறைக்கு வெளியே!!)

  மிகுதி எல்லாம் வரலாற்றில் மலிந்து கிடக்கிறது….

  இலக்கியம் கடந்தகாலத்தில் புரட்சிக்குத் தலைமை தாங்கவில்லை என்றால், அவை எங்கே சூழ் கொள்கிறது? இதற்கு சரியான விடையைத் தேடாத எந்தக் கவித்துவமும், ‘புரட்சி இலக்கியமும்’ வெறும் ‘தும்பிமிட்டாஸ் இலக்கியமே’ இலகுவில் ‘நாநீரீல் கரைந்நு விடும்’ – இனிப்பு – மேல்தட்டு இலக்கிய இரசனைப்போக்கே!

  எடுகோளாக,
  ”கவிதா”

  என்பதும் இதற்குச் சமமான பதமே!!

  பி.கு:- இவ் இணையத்தளத்தில் ஏற்றுவதற்கு விருப்பமில்லாததும், மக்கள் நன்மை கருதி பதிவேற்றுவதற்கு, முயற்சிக்கிறேன்…

  ரூபன்
  200610

 3. சிறப்பான பதிவுகள்… ஒரு கவிஞரோ கலைஞரோ தம்மைவிட இன்னொருவரை எழுதாத காலம் இது. தமது படைப்புகளை தாமே பறைசாற்றி விளம்பரப்படுத்தி வரும் காலத்தில் பிறருடைய கவிதைகளைப் பகிர்ந்து கொள்ளும் மனம் எல்லார்க்கும் வாய்க்காதது. உங்கள் இலக்கிய பயணம் தொடரட்டும்.

  1. நான் பல கலை இலக்கிய கர்த்தாக்களைச் சந்தித்திருக்கிறேன்.அவர்கள் மற்றவர்களின் கலை இலக்கியப் படைப்புகளை அங்கீகரிப்பதும் இல்லை சரியைச் சரியென்றும் பிழையை பிழையென்றும் சொல்லி நடுநிலைமையாக விமர்சசிப்பதும் கிடையாது.தமக்குத்தாமே பொன்னாடை போர்த்திக் கொள்வார்கள்.எனக்குத் தெரிந்த வில்லிசைக் கலைஞர் ஒருவர் இருக்கின்றார் அவர் நாடகக் கலைஞரும்கூட ஆனால் அவர் இதுவரையில் எந்தவொரு நாடகக் கலைஞரையும் பாராட்டி ஊக்கப்படுத்தியது கிடையாது.தன்னைத்தவிர வேறு எவருக்குமே நாடகம்பற்றி எதுவுமே தெரியாதென செருக்குத்தனமாக கதைப்பார்.ஒரு தரமான கலை இலக்கிய கர்த்தா எப்படியிருப்பானெனில் மற்றவர்களுடைய கலை இலக்கிய படைப்பகளை இரசித்து பாராட்டுவான்.கவிதா அதனைச் செய்கிறார்.கவிஞர் சேரனின் தந்தை எழுதிய கவிதைகள் சுவையானவை என்பதை என் மனம் அறியும்.அதனை அண்மை நாட்களில் அவரின் ஊரைச் சார்ந்த எனது நண்பர்களுடன் சுவைபட பகிர்ந்து கொண்டேன்.ஒரு மலரின் பின் அட்டையில் பதியப்பட்ட தன் ஊரில் காலை வேளையில் நடுகைக்கு பொகும் பெண்கள் மண்வெட்டியை தோளில் சுமந்து செல்லும் தோட்டாக்கார்கள் பயிற்றங்காய்களை கொதுத்தச் செல்லும் கிளிகள் என தான் பள்ளிக்குச் செல்லும் காலங்களில் பார்த்தவற்றை பதிவு செய்த ஆதவனின் கவிதைகள் எனக்கு பசுமையாக நினைவுக்கு வருகின்றன.

   1. சேரன், ஆதவன், வ.ஐ.ஜெயகாலன்…… போன்றவர்கள் (யாழ்ப்பாண வீழ்ச்சிக்குப்பின்) குறிப்பாகத் தொடங்கி… முள்ளிவாக்கால்வரை இந்தக் ‘கவிஞர்களின்’ நடைமுறை என்ன?

    ‘சுபத்திரன்’ என்று ஒரு கவிஞன் வாழ்ந்தான், இறந்தான் (கொல்லப்பட்டான்) என்பது – கவிதாவுக்கு – தெரியுமா?

    மேற்கூறிய ‘கவிஞர்கள்’ யாராவது அவனுக்காக ஒரு வரி எழுதினார்களா?

    ஏன் முடியவில்லை? பதில் எழுதட்டும் ….

    நான் எழுதியதுக்கு ஒரு வரலாற்று விளக்கமே எழுதுகிறேன்…

    ” சிறப்பான பதிவுகள்… ஒரு கவிஞரோ கலைஞரோ தம்மைவிட இன்னொருவரை எழுதாத காலம் இது. தமது படைப்புகளை தாமே பறைசாற்றி விளம்பரப்படுத்தி வரும் காலத்தில் பிறருடைய கவிதைகளைப் பகிர்ந்து கொள்ளும் மனம் எல்லார்க்கும் வாய்க்காதது. உங்கள் இலக்கிய பயணம் தொடரட்டும்.”

    இது ஆதவன்…

    ” நான் பல கலை இலக்கிய கர்த்தாக்களைச் சந்தித்திருக்கிறேன்.அவர்கள் மற்றவர்களின் கலை இலக்கியப் படைப்புகளை அங்கீகரிப்பதும் இல்லை சரியைச் சரியென்றும் பிழையை பிழையென்றும் சொல்லி நடுநிலைமையாக விமர்சசிப்பதும் கிடையாது.தமக்குத்தாமே பொன்னாடை போர்த்திக் கொள்வார்கள்.எனக்குத் தெரிந்த வில்லிசைக் கலைஞர் ஒருவர் இருக்கின்றார் அவர் நாடகக் கலைஞரும்கூட ஆனால் அவர் இதுவரையில் எந்தவொரு நாடகக் கலைஞரையும் பாராட்டி ஊக்கப்படுத்தியது கிடையாது.தன்னைத்தவிர வேறு எவருக்குமே நாடகம்பற்றி எதுவுமே தெரியாதென செருக்குத்தனமாக கதைப்பார்.ஒரு தரமான கலை இலக்கிய கர்த்தா எப்படியிருப்பானெனில் மற்றவர்களுடைய கலை இலக்கிய படைப்பகளை இரசித்து பாராட்டுவான்.கவிதா அதனைச் செய்கிறார்.கவிஞர் சேரனின் தந்தை எழுதிய கவிதைகள் சுவையானவை என்பதை என் மனம் அறியும்.அதனை அண்மை நாட்களில் அவரின் ஊரைச் சார்ந்த எனது நண்பர்களுடன் சுவைபட பகிர்ந்து கொண்டேன்”

    இது ANKAYATPIRIYAN ….

    மொத்தத்தில் இது பொல்லாத காலம்…

    ரூபன்
    230610

   2. ரூபன்,
    கவிதா வயதில் இளையவர். அவர் சுபத்திரனையோ பசுபதியையோ மற்றும் பல அன்றைய மக்கள் கவிஞர்களையோ தெரிந்திருக்க நியாயமில்லை. அவரை நோகாதீர்கள்.
    ஈழத்து இலக்கியவாதிகளைத் தமிழகத்துக்கும் உலகுக்கும் அறிமுகப் படுத்தியதற்காகப் போற்றப்படுவோருக்கே அந்த அக்கறை இல்லை. (அதற்குத் தெளிவான அரசியற் காரணங்கள் உண்டு).
    முருகையனையும் பாரதிதாசனையும் புறக்கணித்தே ஒரு பெங்குவின் (இந்தியா) தமிழ்க் கவிதைத் தொகுப்பு நூல் (ஆங்கில மொழிபெயர்ப்பில்) வந்துள்ளது. அதற்கென்ன காரணம்?
    அத் தொகுப்பை விமர்சித்து “தேட் ஐ” இணையத்தள சஞ்சிகையில் நான் ஆங்கிலத்தில் எழுதியதை அறிய வேண்டியோர் அறிவர். ஓராண்டுக்கு மேலாகியும் எங்கும் உரிய பதில் தரப்பட்வில்லை.

    அரசியலை ஒதுக்குவதாகச் சொல்லிப் பிற்போக்கு அரசியலும் குறுகிய தேசியவாதமும் இடம் பிடிக்க முடிகிறது.
    புதுவை இரத்தினதுரை புலிகளுடன் போயிராவிட்டால் அவரை ஒரு கவிஞரென்றே நம் தூய இலக்கியக் காவலர்கள் ஏற்றிருக்க மாட்டார்கள்.
    இதுவே நம் பரிதாபமான யதார்த்தம்.

 4. வணக்கம் ரூபன்.

  உங்கள் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்கிறேன். சுபத்திரன் என்ற கவிஞன் பற்றி நான் அறியவில்லை என்பது உண்மையே… இப்பொழுதான் கிடைத்கும் நேரங்களில் கவிஞர்களை அறிய முற்படுகிறேன். எனக்கு பிடித்தவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். நான் அறிந்த கவிஞர்களைவிட நான் அறியாத கவிஞர்கள் அதிகம் என்பதே உண்மை. சுபத்திரன் மட்டுமல்ல எமது தேசத்தில் ஆயிரம் சுhத்திரன் கள் இருந்திருப்பார்கள் என்பது திண்ணம். நிச்சயமாக சுபத்திரன் பற்றியும் அவருடைய கவிதைகள் பற்றியும் அறிய ஆர்வமாயுள்ளேன். இக்கவிதைப் பகிர்வு நீண்ட பயணம். முடிவற்றது. இந்த பயணத்தில: உங்கள் உதவியையும் எதிர்பார்க்கிறேன்… இன்னொன்று என்னவென்றால் உங்களையும் நான் அறிந்திருக்கவில்லை. கவிஞர்களைப் பற்றி தெரிந்திருக்கும் நீங்களும் நிச்சயமாக ஒரு கவிஞராக இருக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் படைப்புகள் பற்றி அறியலாமா? தவறில்லையே..?

  உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு அனைவருக்கும் எனது நன்றிகள்.

 5. கவிதாவின் வயது சிறிது என்றாலும் அவருடைய கவிதைகள் ஆழமானவை அழகானவை. எந்த ஒரு பெரும் படைப்பாளியாகினும் அனைத்து இலக்கியவாதிகளையும் படைப்பாளிகளையும் தெரிந்து வைத்திருப்பதென்பது சாத்தியமானதல்ல. பிறர் மீது பிழை கண்டு பிடிப்பதே நோக்கமானவர்கள் அதை ஒழுங்காகச் செய்வார்கள். அவர்களுடைய பெரும்பான்மை நேரம் அதற்கே கழிந்து விடுவதால். தாம் எதையும் செய்யமாட்டார்கள். ரூபன் அவர்கள் எழுதப் போகும் வரலாற்று விளக்கத்தை அறிய ஆவலாக உள்ளேன்.

  1. நட்புடன் சஞ்சீவனுக்கு…

   ” எந்த ஒரு பெரும் படைப்பாளியாகினும் அனைத்து இலக்கியவாதிகளையும் படைப்பாளிகளையும் தெரிந்து வைத்திருப்பதென்பது சாத்தியமானதல்ல. பிறர் மீது பிழை கண்டு பிடிப்பதே நோக்கமானவர்கள் அதை ஒழுங்காகச் செய்வார்கள். ”

   இந்த வார்த்தைப் பிரயோகத்துக்கு நான் பதில் எழுதவேண்டய அவசியமில்லை! இருப்பினும்….

   மீண்டும் ஒரு முறை தவுசெய்து என் பின்னூட்டத்தை வாசிக்கவும்.

   ” பிழையை கண்டுபிடிக்கவில்லை”, ‘உலகம் பிழை இல்லை’ (ஒரு வர்க்கத்தின் -மேல்தட்டடு – பார்வை) என்ற நடைமுறையில் நான் எழுப்பியது ஒரு கேள்வி மட்டுமே!

   கவிதாவைப் பற்றி நான் அறிவேன்…

   பின்னூட்டங்களின் கருத்துக்கள்
   கவிதாவை வைத்து தமது இலாபங்களுக்கான ‘மடி கழுவல்’ செய்வதைப் பொறுக்க முடியவில்லை!

   இதில் சிவசேகரம் மட்டுமே நேர்மையாகப் பதிலளித்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்களும் தோழமையும்….

   ‘சஞ்சீவனின்’ ஆவலுக்கு….

   ” ரூபன் அவர்கள் எழுதப் போகும் வரலாற்று விளக்கத்தை அறிய ஆவலாக உள்ளேன்.”…..

   ‘ஈழத்து பதினொரு கவிஞ’ருக்குள் ஏன் சுபத்தின் வரவில்லை?
   இதற்கு விடையை நீரே தேடினால் விடையும் கிடைக்கும்…

   இதையும் நான் தான் எழுத வேண்டுமா?

   ஏன் உங்களின் பின்னூட்டம்.. உண்மைக்காக எழும்பாதோ??

   ரூபன்

   250610

 6. கவிதா
  “எமது தேசத்தில் ஆயிரம் சுபத்திரன்கள் இருந்திருப்பார்கள் என்பது திண்ணம்” என்று சொல்லும் போது ஒரு தவறு செய்கிறீர்கள். சுபத்திரன் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுவரும் மிக முக்கியமான ஒரு கவிஞர். (அதற்கான காரணங்களை நீங்கள் அறிய வாய்ப்பில்லை.) எனவே, “ஆயிரம் சுபத்திரன்கள்” என்று சொல்லும் போது சுபத்திரனின் பெறுமதியை மிகத் தாழ்த்துகிறிர்கள்.
  அது கவனமற்ற ஒரு சொற் பாவனையின் விளைவன்றி உங்கள் நோக்கமல்ல என்பதே என்நம்பிக்கை.

  கவிஞர்களைப் பற்றி தெரிந்திருக்கும் எவரும் ஒரு கவிஞராக இருக்க அவசியமில்லை. இன்றைய நிலை என்னவென்றால் பல கவிஞர்கள் தங்கள் படைப்புக்களை விட வேறெதையுமே தேடிப் பார்ப்பது அரிது. (எனவே கவிஞர்களைப் பற்றித் தெரியாதோராகவே பெருவாரியான கவிஞர்கள் உள்ளனர்) தன்முனைப்பை விட, வாசிப்பின்மை பெரியதொரு குறைபாடு.

  உங்கள் முயற்சியில் தொடருங்கள். அறிய வேண்டிய ஆனால் அதிகம் அறியப்படாத கவிஞர்களைப்பற்றி எழுதுவது உங்களுக்கும் நல்லது, வாசகர்கட்கும் நல்லது.

 7. “இன்றைய பல எழுத்தர்கள் கவிஞர்கள் தாங்கள் எழுதுவதை தவிர வேறொன்றும் வாசிப்பதில்லை ” என்று எஸ். பொன்னுத்துரை எங்கோ சொன்னது ஞாபகம்.
  மற்றவரை வரைமுறையில்லாமல் புழந்து எழுதுவது ஒன்றும் விமரசனமில்லை .
  “தமிழே உன்னை பாட மாட்டேன் – ஏன் என்றால் நீ என்னை எம்பி ஆக்கிவிடுவாய்.” என்பது சுபத்திரன் என்கிற தங்கவடிவேல் என்ற இயற்பெயர் கொண்ட மக்கள் கவிஞன் எழுதிய தமிழரசு கட்சிகளின் பொய் முகத்தை உரித்த வரிகள்.
  பசுபதி,சுபத்திரன் ,முருகையன்,புதுவை ரத்னதுரை ,சில்லையூர் செல்வராஜன் இடது சாரி இயக்கத்தில் முளைத்த கவிஞர்கள்.
  “புதுவை இரத்தினதுரை புலிகளுடன் போயிராவிட்டால் அவரை ஒரு கவிஞரென்றே நம் தூய இலக்கியக் காவலர்கள் ஏற்றிருக்க மாட்டார்கள்.
  இதுவே நம் பரிதாபமான யதார்த்தம்.” என்ற தோழர் சிவசேகரத்தின் கருத்து மிக சரியானது.புதுவை புலிகளுடன் போனதும் பல கவி குஞ்சுகள் எல்லாம் பதறி விட்டார்கள் .எங்கும் நிதானமாகவும் ,சரியாகவும் நிற்க முடியாதவர்கள் எல்லாம் “பிரச்சார நெடி” என்று உளற தொடங்கினார்கள்.இருப்பினும் அவற்றையெல்லாம் மௌனத்தில் மூழ்கடித்து விட்டார்கள்.இல்லாவிட்டால் மரண தேவன் வாசலில் வந்து விடுவான் அல்லவா.
  பாரதி பற்றிய மிகைப்படுத்தலும் பாரதிதாசன் பற்றிய இருட்டடிப்புகளும் இன்னும் சரியான முறையிலேயே வெளிவரவில்லை.

 8. இன்றைய எழுத்தாளர்களும் ,கவிஞர்களும் தாமேளுதியத்தை தவிர வேறொன்றும் படிப்பதில்லை என்று எஸ்.பொன்னுத்துரை சொன்னது ஞாபகம் வருகிறது .வசனத்தை முறுத்து முறித்து எழுதினால் கவிதை என்கிற தவறான பார்வையும் இருக்கிறது.
  பசுபதி, சுபத்திரன் ,புதுவை இரத்தினதுரை,சில்லையூர் செலவராசன்,முருகயன் போன்ற சிறந்த கவிஞர்களை இடது சாரி இயக்கம் தந்தது.
  ” புதுவை இரத்தினதுரை புலிகளுடன் போயிராவிட்டால் அவரை ஒரு கவிஞரென்றே நம் தூய இலக்கியக் காவலர்கள் ஏற்றிருக்க மாட்டார்கள்.” என்று சரியாக சுட்டிக்காடியமைக்கு நன்றி.புதுவையின் புலி இயக்க இணைவு ஊசலாட்டமான குஞ்சு கவிஞர்களை வாய் பொத்த வைத்தது.அவரின் கவிதைகளை பிரச்சார நெடி என்று கூறி வஞ்சித்தது .இருந்தாலும் விழப்போகும் “சூட்டை ” எண்ணி மெளனமாக நொந்தனர்.
  தமிழை வைத்து பிழைப்பு நடாத்தி வந்த தமிழரசு கட்சியினை சாடி சுபத்திரன் எழுதிய ” தமிழே உன்னை பாட மாட்டேன் ,ஏனென்றால் நீ என்னை எம்பி ஆக்கிவிடுவாய் ” வரிகள் பிரபலமானவை .

  பாரதி பற்றிய மிகை படுத்தலும் பாரதிதாசன் பற்றிய இருட்டடிப்புகளும் வெளி கொண்டு வரப்பட வேண்டியவையே.

  1. பாரதியார் கற்கண்டு என்றால் பாரதிதாசன் கற்கண்டு கலந்த பால்.இருவரும் தமிழின் அனிகலஙகளே.

  2. ஏன் ஒரு கண்ணுக்கு வெண்ணெய் மற்றதுக்குச் சுண்ணாம்பு என்பது தான் யோகனின் கேள்வி. அதை விட்டு வழமை போல தமிழ்மாறன் எங்கோ போகிறர்.

 9. சங்கமாடிய தமிழ் என பேசிய
  தம்பிமார் எல்லாம் கடல் கடந்தனர்
  தப்பி பறந்தவர் தம்பிமாரையும் வா என அழைத்தனர்
  துப்பு கேட்டவர் ..நாயிலும் கீழவர் ..
  பாய் விரித்தால் போதும்
  படுத்துறங்கும் இவர்கள் எல்லாம் நாய் சாதி. – புதுவை இரத்தினதுரை

  “சங்கமாடிய தமிழ் என பேசிய
  தம்பிமார்” என்று இங்கே சொன்னது தங்களை எல்லாம் பெரிய கவிஞர்கள் என்று இன்று தம்பட்டம் அடிப்பவர்கலையே !!!
  கவி பெரும் மக்களின் இரட்டை தன்மையை தான் புதுவை சாடினார்.
  இந்த போலித்தனத்தின், இரட்டைதனத்தின் ,(அதாவது தனக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயம்) முன்னோடியாக இருந்து இவர்களுக்கு எல்லாம் வழி காட்டியவனும் பாரதி தான் .
  “என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம் ” என்றும் “விட்டு விடுதலையாகி நிற்ப்பாய் சிட்டு குருவியை போலே” என்று எழுதிய கையாலேயே வெள்ளை காரனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி “அரச துரோக காரியங்களில் இனி ஈடு பட மாட்டேன் ” என்றும் எழுதிய புரட்சி கவிஞர் தான் பாரதி.

  1. யோகன் ஏற்படுத்ட்கும் இலக்கிய பசியை அவரே தணீக்க வேண்டும்.உயிர் மயக்கும் கவிதைகள புதுவையன்றீ யாரால் எழுத முடியும்?.

 10. புதுவை தமிழ் மக்களின் சொத்து.அவருக்கு நிகரான கவிஞன் இந்தியாவிலும் கிடையாது.
  அவர் பற்றிய செய்திகள் இருப்பின் யாராவது எழுதுங்கள்.

  1. கவிஞன் என்பது யார்?

   கவிதை என்பது எது??

   மக்களின் புரட்சிப் பசியை யார் இதுவரை சரியாகத் தீர்த்தார்கள்???

   ”புதுவை தமிழ் மக்களின் சொத்து”

   ‘சொத்துடமைக் கவிஞன்’ எந்த வர்க்கத்துக்குரியவன்…?????

   – யோகனுக்குச் – செய்திகளை மட்டுமே கேட்க விருப்பமாக இருக்கிறது….

   இலக்கியம் சமன் செய்தி … செய்தி சமன் வரலாறு

   ‘கவிஞன்’ , ‘மனிதன்’ இரண்டையும் ஒன்றாக்கும் நடைமுறை எது????

   புரட்சியா? கவிதையா??

   ரூபன்
   03 07 10

  2. அது உண்மை யோகன் .முற்றிலும் உண்மை
   தங்கள் கருத்துடன் முழுவதுமாக உடன் படுகிறேன்
   ஆனால் ,”தமிழே நானுனைப் பாட மாட்டேன் ஏனென்றால்
   நீயென்னை எம்பியாக்கி ப் போடுவாய் ” என்பது கவிஞர்
   நல்லை அமிழ்தன் அவர்களுடையது அல்லவா ..???

 11. மிடுக்கோடு தொடங்கவேண்டும் மீண்டும் இலக்கியம்….

  நாளை கடக்கிறது ஒரு – மக்கள் கவிஞனின் – மறைவின் 35 ஆண்டுகள்! (05 07 1965)

  சாகாத ‘மக்கள் கவிஞர்’ பேசும் காலம்…. இது!

  ‘யாழ்ப்பாணக் கவிராயர்’

  இவர்தான் ‘மக்கள் கவிஞன்!’ – பசுபதி –

  இக்கவிஞன் இறந்து 3மாதங்களும் 6 நாட்களும் கழியும்வேளை…

  வெளிவந்ததுதான், இந்த மக்கள் கவிஞனின் கவிதைத் தொகுப்பு – ‘புது உலகம்’.

  இந்தக் கவிதைத் தொகுப்பு அவரின் கவிதையின் தலைப்புமாகும். அதன் முதற் சிலவரிகள்….

  ” காணுகின்ற புதுவுலகம் கற்பனைக்கே யெட்டாக்
  கதையல்ல கடலல்ல: கன்னியுந்தான் அல்ல!
  பேணுகின்ற பொருளெல்லாம் தனியுடமை யாகா:
  பொதுவுடமை: பொதுமக்கள் பொதுச்சொத்து ஆகும்…

  இந்தக் கவிதையின் தலையங்கமே கவிதைத் தொகுப்பின் கதையங்கம்!

  இப் புது உலகத் தேரில் மீண்டும் சில வரிகள்….

  ” அதிகார அரசொன்று ஆளுவது மில்லை!
  அயல்நாட்டை அடிமை கொள்ளும் அவலநிலை இல்லை
  அதிகாரம் அந்நாட்டு மக்களவர் கையில்:
  அடிமைத்தனம் அன்றொழிந்து அன்புநெறி தோயும்:
  சதிராடு தேவடியாள் போலோடு பணமோ
  சண்டாளர் கையிலிருந்து சாரமற்றுப் போகும்!
  துதிபாடித் தொந்திவளர் தூபமிட்ட தீயர்
  தொலைந்திட்டார்! துன்பமில்லை இன்பஞ்சூழ் வையம்!……”

  இந்தியா பற்றி இந்த (மக்கள் கவிஞனின்)மிடுக்கு…

  ” எந்தாயாம் எழிலான ஈழ நாட்டில்
  இருக்கின்ற என்சகத்துத் தமிழர் சில்லோர்:
  என்தாயின் அணைப்பினிலே இனிமை பெற்றும்
  என்நாடு இந்தியநா டென்று சொல்வர்…”

  இந்தக் கவிஞன் அன்றே, ‘தேசியம்’ என்றால் என்ன என்பதை: அன்றே பாடியும் தீர்த்தான்.

  ” தேசத்தின் பண்புதனைத் தெரியக் காட்டும்
  தரமுள்ள இலக்கியங்கள் தாரும் என்றால்
  தேசீயம் இதிலுமா வேண்டும் என்பார்
  தேசத்தின் வாசனை தெரியா தோர்கள்..”

  சில எடுத்துக்காட்டு!!!

  ‘தான்தோன்றிக் கவிராயன்’ (”தணியாததாகம்” புகழ: – ‘தில்லையூர் செல்வராசன்’- )
  ”சிந்தையால் வாக்கால் செம்மைச்
  செய்கையால் புரட்சி உய்க்க,
  செந்தமிழ் செங்கொடிச்
  சேவகம் செய்ய வைக்க
  மாமனிதனான
  பசுபதிக் கவிஞன்” என்று பாடினான்…..

  ‘தீண்டாண்மை ஒழிப்பு யுத்தத்தின் போது’…. இக் கவிஞனின் பாடல்….

  ” ஊன் தின்னும் உத்தமரே உம்மைத்தானே
  உடல் தீண்டல் தீ தென்பீர் தீண்டாச் சாதி
  மான் விழியாள் ஒருத்தி வந்து மயக்கமேற்ற
  மறுப்பில்லை ”……

  ‘பசுபதி’யை கவிஞனாக மறுத்த இந்த உலகத்தில்…

  இலங்கைத் தமிழ் உலகத்தில் மீண்டும் ‘பசுபதி’யை, இந்தத் தமிழ் உலக வரலாற்றில் முதலாவது ‘மக்கள் கவிஞனாக’ பிரகடணப்படுத்தும் கோரிக்கையை முன்வைக்கிறோம்…

  ”புதிய தோர் உலகம் செய்யப்
  புறப்படு புரட்சி நோக்கி”
  என்று பாடிய இரும்புக் கவிஞன் பசுபதிக்காக:

  அவரின் பிரிவைத்தாங்காத ‘சுபத்திரன்’ அன்று எழுதியது…

  ” யாழ்ப்பாணக் கவிராயர் என்று – புரட்சி
  யாப்புக்குள் கவி செய்த தோழா!
  வாழ்க்கைக்கு முற்றிட்டுச் சென்றாய் – நுி
  வைத்திங்கு சென்ற கவி வாழும்!” …

  சாரம்: நன்றி _’மக்கள் இலக்கியம்’ ,மலர்-3: 1983.

  ரூபன்
  04 07 10
  17: 39

 12. சிறு தவறு..

  ‘கவிஞனின் 45 ஆவது ஆண்டு நாளை! வாசகர்கள் திருத்தி வாசிக்கவும் . சிரமத்துக்கு மனம்வருந்தும்………..

  ரூபன்
  04 07 10
  18:55

 13. மரபை மறந்தும் மண்ண மறந்தும் வாழும் தமிழரிடம் மரபுக்கவிதை தேடித் தந்த ரூபா பசுபதி என்றால் அது தமிழ்ப் படத்து நாயகன் என நினைக்கப் போகிறார்கள்.யாரய்யா அந்த பசுபதி என அறீமுகம் வேண்டாமா?

 14. ரூபன் ,

  நீங்கள் வர்க்க புரட்சியை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.(ரயாகரன் கோவித்து கொள்ள போகிறார்.)சிங்களவர்கள் தமிழர்களை வர்க்கம் பார்த்தா அடிக்கிறார்கள்.?
  முதலாவது ‘மக்கள் கவிஞனாக’ பிரகடணப்படுத்தும் கோரிக்கையை முன்வைக்கிறோம்…என எழுதுகிறீகள் .எனக்கும் மகிழ்சியே .பசுபதியின் கவிதைகளை நீங்கள் வெளியிட்டால் அது பரவலான மக்களை சென்றடையும்.
  இலக்கியம் சமன் செய்தி … செய்தி சமன் வரலாறு … எல்லாம் தெரிந்தவராக நீங்கள் தங்களை கருதுவதால் ,அக் காரியத்தை செய்வதே சிறப்பாக இருக்கும்.எத்தனையோ வாசகர்களுக்கு பசுபதி ,சில்லையூர் .சுபத்திரன் போன்ற கவின்ஞர்களை எல்லாம் தெரியாது. உங்களை போன்ற வர்க்க புரட்சியை விரும்புவர்களுக்கு உதவும் இல்லையா.?அதற்ட்கு நானும் ஒத்துலழைக்க தயார்.
  அவர்களின் கவிதை நூல்களை நானும் பார்திதிருக்கிறேன் .கைவசம் இல்லை.

  ”புதுவை தமிழ் மக்களின் சொத்து”
  ‘சொத்துடமைக் கவிஞன்’ எந்த வர்க்கத்துக்குரியவன்…?????புதுவை குறித்து நான் எழுதியது அவரின் கவிதை வீச்சு பற்றியே . நீங்கள் செய்யும் (விதண்டா வாத )வியாகியானத்திற்ற்கு அல்ல.
  இளைஞன் பசுபதியின் மரணம் அவரின் தோழர்களை எல்லாம் பாதித்தது.
  சுபத்திரன்,சில்லையூர் செல்வராஜன் ,பசுபதி ,என்,கே ,ரகுநாதன் .கே.டானியல் , கே.தங்கவடிவேல் மாஸ்டர்,சண்முகதாசன் ,மான் முத்தையா போன்றவர்கள் எல்லாம் சொல்ல கேட்டிருக்கிறேன்.
  ரூபன் சொற்களை பிடித்து வைத்து மயிர் பிளக்கும் விவாதங்களுக்கு நான் தயாரில்லை.
  புரட்சி பேசிய பல தோழர்கள் துப்பாக்கியை கண்டதும் வேர்த்து நடுங்கியதையும் நான் கண்டவன் .
  தோழமையை பேணுவோம் .

 15. என்ன நிகழ்ந்தது 

  எனது  மக்கள்  துரத்தப்படார்கள்

   எனது  மக்கள் தொளுகைல் உயர்களை இழந்தார்கள் 

  எனது நிலம் எனது காற்று

  எல்லாவற்றிலும்

  கொலையாளிகளின் பதிவு 

  தமிழ் மொழி பேசிய பாவம்

  அந்நிய மொழி  காரனும் செய்யாத 

  கைகளை பின்புறம் இறுக்கிக்கட்டி

  தெருதெருவாக  தொங்க விடார்கள் 

  சுயநல கயவர்கள் 

  1. இஸ்ரெலில் கொல்லப்படும் அப்பாவி பலஸ்தீனர்கள யாரும் ஏறேடுத்தும் பார்ப்பதில்லை ஆனால் யூதர் கொல்லப்பட்டது பற்றீயே பேசுகிறாரகள் அது போலவே முள்ளீவாய்க்காலில் கொல்லப்ட்ட எனது உறவுகள் மனிதர் இல்லையோ.அவர்கள் தமிழர் என்பதால் பயங்கரவாதிகள் ஆனார்கள்.

  2. பாவம் அப்துலாஹ்
   சாவி கொடுத்த
   பொம்மை போல்
   எப்போதும் எங்கும் ஒன்றேதான்
   அவர் புலம்பல்.
   இது கவிதை,கவிஞர்
   பற்றிய பகுதி
   தயவு செய்து புரிந்து கொள்ளவும்

 16. யோகனுக்கு..

  நான் ‘வர்கப் புரட்சி’ பற்றி இங்கு பேசவில்லையே!!

  மக்களின் அன்றாட அடிப்படைக் காரியங்களையும் இலக்கியத்துக்குள் கொண்டு வந்தவர்கள் பறறியே, நான் இங்கு பேசியுள்ளேன்.

  யோகனுக்கு மீண்டும் அழுத்திக்கூற வரும்புவது…

  ‘இலக்கியம் மீண்டும் மீண்டும் மீடுக்குடன் எழ வேண்டும்!!’

  யோகன் புதுவையை கவிஞன் இல்லை என்று நான் என்றும் சொல்லவில்லை.!

  ‘புதுவை’ யாருக்காக எதை எழுதினார். ஒர் இனமே தெருவில் பலாத்காரமாக இதயமற்றுத் துரத்தப்பட்டபோது ( யாழ்.முஸ்லீம் மக்கள்) பாடாத புதுக் குயில் தான் இது!!

  நான் விதண்டாவாதம் செய்யவில்லை!

  கவிஞன் யார்? என்பதிலுள்ள கடந்தகாலத்தின் நடைமுறை விதிகளையே மாற்றும் படி கூறியுள்ளேன்!

  யோகனே கடந்தகாலத்தில் அங்கீகரிக்கப்பட்ட யாராவரது ஒரு கவிஞரை, ‘கவிஞர்’ இல்லை என்று மறுக்கும் படியோ அல்லது நீக்கும்படியோ நான் கூறவில்லையே, அப்ப ஏன் இந்தக் கொதிப்பும் குதிப்பும்..??

  ரூபன்
  04 07 10

  22 .34

  1. புதுவை தொழிலாள வர்க்கத்தை சரர்ந்தவன் அவன் ஒரு சிற்பி நல்லூரில் அவன் வாழ்ந்தது திண்ண வீடே எப்போதும் வெற்றீலை போடும் பாமரன். வர்க்கம் எனப் பாடிய முற்போக்குக் கவிஜன் அவனை ஊருக்கும் உலகுக்கும் தெரிந்திருந்தது ஏனெனில் தான் பிறந்த மண்ண பாடினான் நேசித்தான் அந்த நேசிப்பே எம்மை அவனை வாசிக்க தூண்டியது.மானுடம் நேசித்த மகத்துக் கவிஜன் காசுக்காக எழுதி இருந்தால் இன்றூ கல்லற ஆகி இருக்க மாட்டான்.

 17. ரூபன் ,

  ‘புதுவை’ யாருக்காக எதை எழுதினார். ஒர் இனமே தெருவில் பலாத்காரமாக இதயமற்றுத் துரத்தப்பட்டபோது ( யாழ்.முஸ்லீம் மக்கள்) பாடாத புதுக் குயில் தான் இது!!
  (புதுவையின் நிலையில் நீங்கள் இருந்திருந்தால் புலிகளுக்கு எதிராக கண்டிப்பாக கவிதை வடித்திருப்பீர்கள் !!!!என்று எண்ணுகிறேன்.)

  புதுவை இது குறித்து எழுதியதை நான் அறியவில்லை.பொதுவாக உணர்ச்சிமிக்கவர்கள் கவிஞர்கள் .அந்த விதத்தில் புதுவை சேர கூடாத இடத்தில் விழுந்து விட்டார் தான்.அவர் புலி இயக்கத்தில் சேர்ந்ததற்கு அவருடைய முனைய தோழர் ஒருவர் அவரை திட்டி இருக்கிறார். அவர் அதற்கு எதிர்ப்பு ஏதும் சொல்லவில்லை என்றும் ,தலை கவிழ்ந்து நின்றார் என்றும் அந்த மூத்த தோழரே என்னிடம் சொல்லி உள்ளார்.” தெரிஞ்சோ தெரியாமலோ போய் விட்டான் …இனி அவனைஅவங்கள் விடவா போறாங்கள்? ..” என்று அவருக்காக வேதனை பட்டார் .

  ஈழ அலையில் பொதுவாக எல்லோரும் அள்ளுபட்ட நேரத்தில் எத்தனையோ மூத்த மாக்க்சிய தோழர்கள் அந்த இயக்கம் நல்லது ,இல்லை இந்த இயக்கம் நல்லது என்று குழம்பியதை நான் அறிவேன்.தத்துவம் ,கோட்பாடு இவற்றை எல்லாம் ஆராய்ச்சி பண்ண கூடிய மாக்ச்ய -லெனினியம் பேசிய தலைவர்கள் சிலருடைய பிள்ளைகளே இயக்களுக்கு ஓடி போய் இருக்கிறார்கள்.இதெல்லாம் நடந்த உண்மைகள்.

  நமக்கு தேவை வார்த்தை விளையாட்டுக்கள் அல்ல.

  பசுபதியை, சுபத்திரனை எப்போது வெளியிடபோகிறீகள் ? ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.அல்லது இனி ஒரு விலாவது உங்களிடம் உள்ள அவர்களின் கவிதைகளை வெளியிடலாமே.

  1. யோகன்
   பின்வரும் இணையத்தளத்தில் அவர் பற்றிய குறிப்பும் ஒரு கவிதையும் உள்ளன. ரூபனின் பயனுள்ள ஒரு குறிப்பையும் கன்டேன்.
   http://dantamil.blogspot.com

 18. “புதுவை தமிழ் மக்களின் சொத்து.அவருக்கு நிகரான கவிஞன் இந்தியாவிலும் கிடையாது.” — யோகன், இது உணர்ச்சி வேகத்திற் கூறப்பட்டதா அல்லது உங்களின் ஆய்ந்தறிந்த கூற்றா?
  புதுவை இரத்தினதுரை வர்க்கக் கண்ணோட்டத்திலும் சாதிய எதிர்ப்பு நோக்கிலும் எழுதிய போது அவரைக் கவிஞனே அல்ல என்று நிராகரித்த “தூய இலக்கியக்” கொள்கையாளருக்கு அவர் இயக்கப் பாடல்கள் எழுதத் தொடங்கிய பின்னால் முக்கியமான கவிஞராகி விட்டார். இதை நாம் நினைவிலிருத்துவது பயனுள்ளது.

  புதுவையின் முக்கியமான பங்களிப்பு வி.பு. இயக்கப் பாடல்களை வெறும் உணர்ச்சிக் குவியல்கள் என்ற நிலையிலிருந்து மீட்டமை என்பேன்.
  புதுவையின் பாடுபொருள், உள்ளடக்கம் தொடர்பாகப் பல விமர்சனங்கட்கு இடமுண்டு.
  எவரதும் கவித்துவம் பற்றிய பொதுவான அளவுகோல் ஒன்றில்லை.

  “முருகையன் கவிஞனே இல்லை” என்று சொல்ல ஒரு “கவிஞரும்” அதை மேற்கோள் கட்டிப் பேச ஆட்களும் உள்ள காலமொன்றில், கொஞ்சப் பேராவது நிதானத்துடன் பேசுவது எல்லாருக்கும் நல்லது.
  இந்தப் பின்னூட்டத் தொடர் மூலக் கட்டுரையினின்று வெகு தூரம் விலகிவிட்டது என்றே நினைக்கிறேன்.

 19. நான் கவிதை ஆய்வாளன் அல்ல ,கவிஞனும் அல்லபல கவி அரங்க கவிதைகளை
  கேட்டும் பல் கவிஞர்களின் நூல்களை படித்தும் வந்திருக்கிறேன்

  சீன சார்பு கம்யுஷ்டுக்கள் .(பொதுவாக எல்லோரும் நல்ல வாசிப்பு பழக்கமும் ,எழுத்து ஆற்றல் மிக்கவர்களாகவும் இருந்தவர்கள் புதுவையை வியந்து பாராட்டுவதை கேட்டிருக்கிறேன்.
  குறிப்பாக புதுவை பற்றி சில்லையூர் செல்வராஜன் விதந்து பாராட்டியதை பல முறை கேட்டிருக்கிறேன்.புதுவையின் நினைவாற்றல்,கவிதை சொல்லும் வேகம்,முன் தயாரிப்பு இல்லாமலேயே கவிதை பொழியும் ஆற்றல் போன்றவற்றை சில்லையூரார் வியந்து பாராட்டுவர்.சில்லையூர்ரர் “நான் எத்தனையோ வருடங்களுக்கு முன் எழுதிய கவிதைகளையே எனக்கே சொல்லி ஆச்சர்ய பட வைப்பான் ,அவனுக்கு நிகர் அவனே “என்பார்.
  “புதுவை தமிழ் மக்களின் சொத்து” என்கிற தொனி சீன சார்பு கட்சி தோழர்களிடமிருந்து எனக்கு கிடைத்த மன பதிவு தான் என்று தான் நினைக்கிறேன். புலிகள் இயக்கத்தில் அவர் சேர்ந்த பின்னும் அந்த மன பதிவு மாறவில்லைநல்ல கவிஞனை நாம் இழந்து விட்டோம் என்கிற ஆழ்ந்த கவலையும் சேர்ந்தது தான் அப்படி எழுத வைத்ததே தவிர எனது ஆய்வு அல்ல.நான் சாதாரண வாசகன் .
  உங்கள் மற்றைய கருத்துகளில் எனக்கு முரண்பாடுகள் ஏதும் கிடையாது.தவறை சுட்டி காட்டியதற்கு மிகவும் நன்றி.

  1. புதுவை என்றதும் மீண்டும் வலிக்கிறது இதயம்.ஏனோ மனதில் இனம் புரியாத சோகம்.கம்பன் விழாக்களீல் காணாமல் போனவரை மீண்டும் காணூம் கொடுப்பினை கிடைக்கவில்லை..சிலைகளீல் வாழ்ந்து,கவிதைகளீல் உயிர்ப்புடன் இருப்பான் எங்கள் புதுவை.=இந்த மண் எங்களீன் சொந்த மண்=

 20. இன்று தமிழ்ச்சூழலில் கவிஞன் என்ற சொல் மிகவும் அவமானத்துக்குரியதாகிவிட்டது. ஒரு அறமற்ற சொல் அது. ஈழத்துக் கவிதைப்பரப்பு மிக மோசமாக பொய்களினூடே வலம் வந்திருக்கிறது. அதைவிஞ்சியது புலம்பெயா; கவிதைச்சூழல் என்பது. ஆனாலும் ஒன்று இதற்குள்தான் சிவரமணி போன்றவர்களும் தன்னையும் தனது கவிதைகளையும் கொழுத்திவிட்டுப் போயிருக்கிறார்கள். புதுவை போன்றவர்கள் நாட்டைவிட்டோடியோர் நாயிலும் கேவலர் என்று கவிதை பாடிவிட்டும் போயிருக்கிறார்கள். ஈழத்துக் கவிதை விமர்சனப் பண்பு என்பது முதுகு சொறிதலைவிட மோசமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.

  கற்சுறா

  1. சோ.பத்ம நாதன் எனும் வெண்பாக் கவிஜன் அறீவீரோ, ஒரு வரி சொல்ல ஆசைப்ப்டுகிறேன் உங்கள் முதுகில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள்.

 21. கவிஞன் என்ற சொல்லுக்கு ஒளிவட்டங்களைப் பொருத்திவிட்டு வெளிச்சம் போதவில்லை என்று நாம் ஏன் முறைப்படவேன்டும்?
  எல்லாரலும் கவிதை எழுத இயலும். நல்ல கவிதைக்குப் பரிச்சயமும் மனப் பயிற்சியும் தேவை. அவ்வளவு தான்.
  நான் புதுவையை என் அபிமானக் கவிஞராகக் கொண்டதில்லை. ஆனால் அவர் முக்கியமான நல்லதொரு கவிஞர் என்பதை நான் ஏன் மறுக்க வேன்டும்?
  நமக்கு உடன்படற்ற கருத்துக்களைக் கூறுவதற்காக ஒருவரை நாம் கவிஞரல்ல என்று நிராகரிக்க முடியுமா? (அது முருகையன் பற்றி ஒரு உதிரியின் உளறல் போலாகிவிடும்.)
  நம்மை எதிர்நோக்கும் கேள்வி ஒருவர் யாருடைய கவிஞராக இருந்தார் என்பது தான்.

  புதுவை இரண்டு உலகங்களிடையே தத்தளித்துக் கொண்டிருந்தார் என்று நம்ப நியாயம் உன்டு. “நாட்டைவிட்டோடியோர் நாயிலும் கேவலர்” — மக்கள் இன்னற் பட்டநேரத்தில் மக்களுடன் மக்களாக நின்ற போது அவருடைய உணர்வு அது.

  கவிஞர்கள் மட்டுமல்ல உரைநடையாளர்களும் சில தீவிர நிலைப்பாடுகளை எடுக்கின்றனர். அவை விமர்சிக்கப் படுவதும் கண்டிக்கப் படுவதும் ஒரு விடயம். அவற்றை வைத்தே ஒருவரை நிராகரிப்பது இன்னொரு விடயம்.
  100% புனிதமான ஒருவரை நான் சந்தித்ததில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
  புதுவையை விமர்சிப்பதை விட அவரை அங்கு கொண்டு சேர்த்த குறுகிய தமிழ்த் தேசியவாதத்தை விமர்சித்தால் அதிக பயனுண்டு.

 22. காட்டெருமை
  கடவைக்குள் மேய்கிறது ..

  எல்லை புற கிராமங்களில்
  கசாப்பு கடை ஓலம் கேட்கிறது ..புதுவை

  அநீதியை கண்டு கொதித்தது அவர் மனம்.

  “புதுவையை விமர்சிப்பதை விட அவரை அங்கு கொண்டு சேர்த்த குறுகிய தமிழ்த் தேசியவாதத்தை விமர்சித்தால் அதிக பயனுண்டு.”..
  நிதானமான பதிவு .

 23. நாம் அநேகமாக ஆதரவு அல்லது நிராகரிப்பு என்ற இரண்டிற்குள்ளும் மட்டும் நின்று யோசிப்பதால் நான் புதுவையை நிராகரிக்கிறேன் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். நமது சூழலில் நிராகரித்தல் என்பது கொலைக்காரியம். நுடந்து முடிந்த ஈழத்திற்கான யுத்தம் மிகவும் கீழ்த்தரமானது என்பதை புதுவையால் உணரமுடியாமல் போனதற்கு தனியே குந்தமிழ்த்தேசியவாதம் தான் காரணமாக இருக்கும் என்றும் நம்பமுடியாது. ஜெயபாலன் போன்றவர்கள் தமிழ்தேசியக் காய்ச்சலில் மற்ற அனைத்தையும் அள்ளிப் புதைத்தவர்கள் தான். புதுவை இரண்டு உலகங்களிடையே தத்தளித்துக் கொண்டிருந்தார் என்று நம்ப நியாயம் உன்டு. “நாட்டைவிட்டோடியோர் நாயிலும் கேவலர்” — மக்கள் இன்னற் பட்டநேரத்தில் மக்களுடன் மக்களாக நின்ற போது அவருடைய உணர்வு அது. புதுவை மக்களோடு மக்களாக ஒருபோதும் நிற்கவில்லை. ஆவர் இறுதிவரை புலிகளுடன்தான் நின்றார். புலிகள் மக்களுக்குள் இருந்தார்கள். ஆனால் மக்கள் புலிகளோடு இருக்கவில்லை. இதை நிதானமாக உணரவேண்டும். உண்மையில் ஈழத்துக் கவிதைச்சூழல் என்பது வெளியெங்கும் பரந்து வெறுமையாகக் கிடக்கிறது. கவிதை என்பது வரிகளை இழுத்து கோர்ப்பதல்ல. நான் முன்னம் ஒருமுறை சொன்னேன் அதனை திரும்ப இங்கு குறிப்பிடுகிறேன். அநேக ஈழத்துக் கவிஞர்களது கவிதைகளை எடுத்து எழுதியவர்களது பெயரை நீக்கி விட்டு பார்த்தால் எல்லாம் ஒருவர் எழுதியது போல் தான் தோன்றும். இதுதான் ஈழத்துக் கவிதை வளர்ச்சி.

  கற்சுறா

  1. சு.வில்வரத்தினம் படித்தீர்களா?இப்போது தீபச்செல்வன் அழகாக எழுதுகிறார்.கவிஜனில் முழுமையாளனை நீங்கள் தேடுவதால் புதுவைவையை விட்டு விடுங்கள்.

 24. கற்சுறாவின் இடுகை எனக்கான மறுமொழி என நினைக்கிறேன்.
  வாழ்க்கை பல விடயங்களில் நம்மை ஆதரவு அல்லது நிராகரிப்பு எனும் நிலைப்பாடுகளுள் தள்ளிவிடுகிறது. நான் வலுவாக ஆதரிக்கும் பலவும் வலுவாக மறுக்கும் பலவும் உள்ளான.
  அதன் பொருள், எதையும் கேள்விக்குட்படுத்த மறுக்கிறேன் என்பதல்ல.

  புதுவை பற்றிய கற்சுறாவின் சொற்கள் நிராகரிப்பைச் சுட்டும் தொனியில் அமையவில்லை என்றால் நான் சொன்னது தவறு தான்.
  புலிகளை விமர்சிக்காதவர்கள் மக்களோடு இல்லை என்று யாரும் நினைத்தால் புதுவை மக்களோடு நிற்கவில்லைத் தான்.
  அவர் புலிகளுடன் நின்றார் என்பதில் எனக்கு என்றுமே ஐயமில்லை.
  எனினும் அவருடைய எழுத்துக்களில் மக்களின் அவலம் பற்றிய அக்கறை தெளிவாகவே இருந்தது.
  அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கண்டித்து எழுதிய ஒரு ஆக்கம் புலிகளின் அதிருப்தியைச் சந்தித்ததையும் அறிவேன்.

  குறிப்பிட்ட ஒரு கவிதையைப் பற்றிய கற்சுறாவின் கண்டனமே அதன் இன்னொரு பரிமாணத்தைச் சுட்டிக்காட்டத் தூண்டியது.
  கியூபாவை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்குப் போனோர் ஒரு காலகட்டதில் புழுக்கள் எனப்பட்டனர். இப்போது அப்படி இல்லை.
  அததன் சரிபிழைகளை அததன் காலத்தில் வைத்துப் பார்க்க வேண்டும் என்பதே என் வாதம்.

  ஈழத்துக் கவிதை 1990 களின் பின் –சில முஸ்லிம் கவிஞர்களின் வருகையைத் தவிர்த்து நோக்கின் — பலவீனப்ப்பட்டுப் போயிருந்தது மெய்யே. எனினும் கற்சுறா நினைக்குமளவுக்கு ஈழத்துக் கவிதை மலினப்பட்டுப் போயுள்ளதாக நான் எண்ணவில்லை. கவிதைகளை அவற்றின் சூழலில் வைத்தே முறையாக மதிப்பிட இயலும்.-

 25. I thought the article is about Cheran’s poems …why nobody speaks of him,,, why only puthuvai? what is the motivation behind the distortions.
  i am sorry to say :::there is a great danger that this web becomes lunatics asylum like many other tamil websites….I appeal all the commentators to obey to the rules of inioru

  CRITICS KILL THE POETS AND THE POEMS

  1. If you are by any chance the person who wrote frequently for a few weeks until recently in the name “suagathy”, I would truly have been very surprised by your words of wisdom.

   I do not think that there was much to add by way of comment to what is in the source article than the first few comments, for the article was just an appreciation of a poem with reference to a few other writings.
   The author responed to a response questioning her choice of subject and her response stirred a debate –which has not been unhealthy altogether thus far– and some useful thoughts have been shared –much of it relating to poetry, although not Cheran’s.

   Now that you see the need to clean up the stable, why don’t you put the discussion back on track with appropriate comments. I am sure there will be a few sane beings in this ‘madhouse’ that can take up your challenge.

 26. அரிசி கொண்டு
  படகு வந்தது
  அதை தொடர்ந்து செஞ்சிலுவை வந்தது
  வரிசை வரிசையாய்
  கவச வாகனம்
  வந்து வந்தெமை
  உரிசை பாத்தது
  படகு வந்து
  வாய்க்கரிசி போட்டது
  சிலுவை வந்தெமை
  உரிசை பார்த்தது.

 27. சேரனின் கவிதைகள் யார்த்தத்தை ஒட்டியது மனித்தைகட்டியது இனத்தை தெழுவியது இனறிவெறியை தொட்டது மகாகவியின் உருத்திரமூ;த்தியின் இலக்கணசொல்லாடலை மீஞசியது இலக்கியம் என்பது ஒரு சமுகத்திற்கு விளக்குவது சமுகசீர்திருத்த்தை செய்வது என்றபார்வையில் செல்லும் கவிநயம் வாழ்த்த வேண்டியது எம்மினத்தில் வளரவேண்டியது சேரனின் அதிக கவிதைை நுhலைபடித்த ரசித்த கவியுள்ளம் என்ற முறையில் உள்ளத்தில உள்ளது கவிதை உணா;வில் ஊற்றொடுப்பது கவிதை தெள்ளதெளிந்த மொழியில் உண்மை உணா;ந்து உரைப்பதுகவிதை இந்த வரிசையில் கவிதையின் உச்சத்தில் இருக்கும் கவிஞா; சேரன் தமிழிமொழிக்கு கிடைத்த கொடை வாழ்க கவிவளம்

Comments are closed.