நாடுகடந்த அரசு – துர்க்கனவின் தொடக்கம்: துடைப்பான்

p1ராணுவ ரீதியில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னாலான வெளியில் புலிகளால் பல்வேறுவகைப்பட்ட சொல்லாடல்களுக்கூடாக புலிகளின் வேறு வேறு தரப்பினரால் வேறு வேறு அரசியல் பாதைகள் முன்னெடுக்கப்படுகின்றன. புகலிடத்தில் நாடுகடந்த நிலையிலான அரசு என்றும், வன்னி முகாம்களிலுள்ள மக்களைக் காப்பதற்கான போராட்டம் என்றும், பொப்ரேயை முன்வைத்து கனடிய அரசின் மரியாதையைக் காப்பதற்கான போராட்டம் என்றும் பல முனையிலான போராட்டங்களை விடுதலைப் புலிகள் முன்வைக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளின் இந்தப் போராட்ட வடிவங்கள் அனைத்தும் சோர்ந்து போயிருக்கும் புலிகளின் மக்கள் ஆதரவுத் தளத்தை உத்வேகத்துடன் வைத்திருக்கும் உணர்ச்சிகரமான ‘உசுப்பல்களாக’ அமையுமே அல்லாது, நடைமுறையில் இந்தப் போராட்டங்கள் எந்தவிதமான ஆக்கவிளைவுகளையும் உருவாக்கிட முனையும் சாத்தியமற்றது என்பது தெளிவானது. இதே வகையிலான புகலிட விடுதலைப் புலிகளின்; முன்னைய தொடர்போராட்டங்கள் அவர்கள் எதிர்பார்த்த வகையிலான எந்த விதமான ஆக்க விளைவுகளையும் உருவாக்கவில்லை என்பது அப்பட்டமான உண்மையாக இருக்கிறது என்பதனை அவர்கள் பார்க்க மறுத்துவிடுகின்றார்கள்.

புலிகளின் ராணுவ வீழ்ச்சிக்குப் பின்னான காலகட்டத்தில், தமது மனித உரிமை மீறல்கள், சுத்த ராணுவவாதம், படுகொலை அரசியல் பற்றிய எந்தவிதமான சுயவிமர்சனமும் அற்ற நிலையில், p2தமது வழமையான கடந்த முப்பதாண்டுகால சுத்த இராணுவவாத மனோநிலைபோக்கிலான ‘அரசியல்அற்ற அரசியலின்’ தொடர்ச்சியாகவே தமது மோதல் போக்கிலான அரசியலை தொடர்ச்சியாக, தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் தமது போராட்ட வடிவங்களாக முன்னெடுத்துச் செல்ல முனைகின்றனர்.
விடுதலைப் புலிகளின் அரசியலை அங்கீகரிக்கிற நாடுகள் உலகில் ஒன்று கூட இல்லை என்கிற அரசியல் யதார்த்தத்தை அவர்கள் காணத் தவறிவிடுகின்றார்கள். எந்தவிதமான நாட்டினது அங்கீகாரமும் இல்லாமல், எந்த அரசினதும் அணுசரணையும் இல்லாமல் புலிகள் முன்வைக்கும் நாடுகடந்த நிலையிலான தமிழீழ அரசாங்கம் என்பது செயலளவில் ஒரு கனவுலகமாகவே இருக்கும்.

வரலாற்று ரீதியில் இரண்டாம் உலகப் போர்க்கால கட்டத்தில் கிட்லரால் ஆக்கிரமிக்கப்பட்ட பல ஐரோப்பிய நாடுகள் நாடுகடந்த அரசுகளை அமைத்திருந்தன. கிட்லரை எதிர்த்து நேசநாட்டுப் படைகளும் செஞ்சேனையும் போராடி வெற்றி பெற்றபின் அந்த அரசுகள் மறுபடி எழுந்தன. முன்னர் ஆட்சியில் இருந்து, பாசிசத்தின் கீழ் இல்லாது போன அரசுகள், மறுபடி முகிழ்த்தன. அரசியல் ரீதியில் அன்றைய யதார்த்தத்தின் அடிப்படையில் இது சாத்தியமாயிற்று.
பிறிதொரு வகைகயில் மக்கள் எழுச்சிகளால் நாட்டை விட்டோடிய மன்னராட்சிகள் தாம்தான் இன்னும் நாட்டின் அதிகாரத்துக்கு உரியவர்கள் எனும் நோக்கில் நாடு கடந்த அரசை அமைத்திருந்தார்கள். ஈரானது மன்னர் ஷா இப்படி அமெரிக்காவில் நாடு கடந்த ஈரானிய அரசை அமைத்தார். தென்வியட்நாமியர்கள் ஹோசிமினுக்கு எதிராக, ஒரு தென் வியட்நாமிய அரசை அமெரிக்காவில் அமைத்தார்கள்.

கம்யூனிச எதிர்ப்பாளர்கள் போலந்து சோவியத் ஆளுகைக்கு உட்பட்ட காலத்தில் அமெரிக்காவில் நாடு கடந்த போலந்து அரசை அமைத்திருந்தார்கள். எண்பதுகளின் போது லெச்வலேசாவின் ஆட்சியை இவர்கள் அங்கீகரித்துத் தமது நாடு கடந்த அரசைக் கலைத்தார்கள். தலாய்லாமா இந்தியாவிலிருந்தபடி நாடுகடந்த திபெத்திய அரசை அமைத்துக்கொண்டிருக்கிறார் . அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் தலாய்லாமாவுக்குத் தார்மீக ஆதரவை வழங்கினாலும், உலகில் எந்தவொரு நாடும் தலாய்லாமாவின் நாடுகடந்த அரசை அங்கீகரிக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.

சர்வதேசிய சட்டங்களின்படி இத்தகைய நாடுகடந்த அரசுகளை எவரும் அமைத்துக் கொள்ளலாம். சர்வதேசிய நாடுகளினது அங்கீகாரம் என்பது, தத்தமது சொந்த நாடுகளில் இந்த அரசுகளின் p4நிர்வாகிகள் சென்று அதிகாரத்தைக் கைக்கொள்ளும் போதே சாத்தியமாகும். அப்போதே நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாடாகவும், சட்டபூர்வ அரசாகவும் இது பரிணாமம் பெறும். அதுவரையிலும் பெயரளவில் மட்டுமே இருக்கும் இந்த அரசுகள் செயலளவில் ஏதுமற்ற இன்மைகளாகவே இருக்கும்.

இன்றைய நிலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட இத்தகைய நாடுகடந்த அரசுகள் அமெரிக்காவிலும் மேற்கிலும் இந்தியாவிலும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

நாடுகடந்த அரசாங்கம் என்பது, எந்த நாட்டைத் தமது அரசினது நிலமாகக் கோரிக் கொள்கிறதோ அந்த நிலத்திலுள்ள செயலூக்கமுள்ள அரசியல் சக்தியின் அல்லது இயக்கத்தின் பகுதியாக இருக்க வேண்டும்என்பது முக்கியமாகின்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது தூரநோக்கிலான அரசியல் அடிப்படையில் இரு விதங்களிலேயே சாத்தியப்படும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் இலக்கை ஒப்புக் கொள்ளும் ஒரு அரசியல் சக்தி அங்கு இயங்க வேண்டும். அல்லவெனில் என்றேனும் ஒரு நாள் குறிப்பிட்ட நிலப்பரப்பினை தமது அதிகாரத்துக்குள்ளும் கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டுவரக் கூடிய ஒரு ராணவ சக்தி அங்கு இயங்கிவருதல் அவசியம்.

இலங்கையில் இந்த இரண்டு சாத்தியங்களும் புகலிடத்தில் இயங்கி வரும் விடுதலைப் புலிகளுக்குச் சாதகமாக இல்லை. விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான கே.பத்மநாதன், நாடுகடந்த தமிழீழ அரசின் முன்னோடி வழக்குரைஞரான உருத்திரகுமார் போன்றோரின் கருத்தின்படி, புகலிட விடுதலைப் புலிகளின் அரசியல் இலக்கையும் செயல்போக்கையும் ஒப்புக்கொள்கின்றவர்களாக இலங்கையில் இயங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சுட் டிக்காட்டப்பட்டார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிறிகந்தா திட்டவட்டமாக புகலிட விடுதலைப் புலிகளினதும், நாடு கடந்த தமிழீழ அரசு எனும் இலக்கையும் முற்றிலுமாக மறுதளித்திருக்கின்றார். ஓன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதே தமது அரசியல் திசைவழி என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருப்பதோடு, தாம் எவரது கட்டளைப்படியும் செய்பட முடியாது எனவும், தமது முடிவுகளின்படியே தாம் செயல்படமுடியும் என்பதையும் தெளிவாக முன்வைத்திருக்கின்றார். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசின் நிலம்சார்ந்த அரசியல் அடிப்படை தகர்ந்துபோகிறது.

ராணுவரீதியிலும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததான போராட்டமுறைக்கு மறுபடி திரும்புவது இனி சாத்தியமில்லை என்பதனை முன்பாகவே விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொருப்பாளர் கே. பத்மநாதன் ஒப்புக் கொண்டிருக்கின்றார். நிலம் சார்ந்த அரசியல் அடிப்படையும் இல்லாமல், ராணுவ அடிப்படையும் முற்றிலும் இல்லாத நிலைமையில், நாடு கடந்த தமிழிழ அரசு என்பது ஒரு துர்க்கனவாக முடிகிற சாத்தியமே இன்றைய நிலையில் அதிகமாக இருக்கிறது என்பதே யதார்த்தமான வெளிப்பாடாக அமைந்திருக்கிறது.

One thought on “நாடுகடந்த அரசு – துர்க்கனவின் தொடக்கம்: துடைப்பான்

  1. துடைப்பானின்நினைப்பு உன்மையாக இருப்பினும்சொர்வ்டைடயக்கூடாது. தற்பொலழுதுள்ள்நிலைதற்கலிகமானதுதான். விடியல்நிஷயம் வரும்… காதிறுப்பொம்.

Comments are closed.