தோழர் உ.ரா.வரதராசனின் மரணம் தற்கொலையல்ல..! கொலைதான்..! :உண்மைத்தமிழன்

“தோழர்களே.. நமது மதிப்பிற்குரிய தோழர் வரதராசனின் உடலை கொண்டுசெல்லவிருக்கும் ஆம்புலன்ஸ் வேனிற்கு பின்பு முதலில் நான்கு பேர் வரிசை கொண்ட பெண்கள் அணி நடந்து செல்ல.. அதற்குப் பின்னால் நமது தோழர்கள் வரிசையாய் அணிவகுத்து நமது உற்றத் தோழரின் இறுதிப் பயணத்தை சீரும், சிறப்புமாக நடத்திக் கொடுக்குமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். நமது தோழரின் இந்த இறுதிப் பயணம் கட்டுக்கோப்போடும் , கண்ணியத்தோடும் , கடமையுணர்வோடும் நடப்பதுதான் அன்னாருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும்..”

இப்படியொரு ஒலிபெருக்கி அறிவிப்போடுதான் உ.ரா.வரதராசன் என்கிற 65 வயதான அந்த மூத்த கம்யூனிஸ இயக்கத் தோழரின் இறுதி ஊர்வலம் நேற்று மதியம் 3.10 மணிக்கு சென்னை தியாகராய நகரில் இருக்கும் பிஇராமமூர்த்தி நினைவகம் என்னும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டது.

இந்த மாதம் 6-ம் தேதி கொல்கத்தாவில் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி கூட்டத்தில் நடந்தப்பட்ட விசாரணைக்குப் பின் மத்திய கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நமது தோழர் உ.ரா.வரதராசன் அதே 6-ம் தேதி தனது அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்கச் செய்த கொல்கத்தாவில் இருந்தபடியே ஒரு கடிதத்தை எழுதிவைத்துவிட்டு , மீண்டும் 11-ம் தேதி சென்னையில் தனது வீட்டில் மேலும் ஒரு கடிதத்தை தாய்த்தமிழில் பதிவு செய்துவைத்துவிட்டு காணாமல்போக.. 13-ம் தேதி சென்னை போரூர் ஏரியில் பிணமாக அவர் கண்டெடுக்கப்பட்டு.. உற்ற தோழர் உயிரிழந்த கொடூரம்கூட தெரியாமல் 14-ம் தேதி காவல்துறையில் அவருடைய துணைவியாராலும் , கட்சியினராலும் புகார் கொடுக்கப்பட்டு , தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் 21-ம் தேதி ராயப்பேட்டை மார்ச்சுவரியில் அழுகிப் போய் அடையாளம் காண முடியாத உடலாகக் காட்சியளித்து , 22-ம் தேதி இவர்தான் என அடையாளம் காணப்பட்ட இந்தச் சிவப்புக் கொடி தோழரின் முடிவு இப்படியொரு நாள் புள்ளிவிவரக் கணக்கில் சொல்லப்படும் அளவுக்குச் சென்றது மிக மிக கொடூரமானது.

என்ன தவறு செய்துவிட்டார் இந்தத் தோழர்..? யாருக்கும் தெரியவில்லை. ஆனால் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ள செய்தி பத்திரிகைகளில் வெளியான பின்புதான் கடந்த 6-ம் தேதியே அவர் மத்தியக் கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தியை ‘தீக்கதிர்’ வெளியிட்டது. அதுவரையில் எட்டு நாட்களாக சோவியத்தின் கம்யூனிஸ ஆட்சியைப் போன்றதொரு நீண்ட மெளனம் கட்சியிலும் , கட்சிப் பத்திரிகையிலும்!

பொதுவாழ்க்கையில் அதுவும் சித்தாந்தத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உழைக்கும் மக்களின் அபிமானம் பெற்ற கட்சியின் பெருந்தலைவர் ஒருவரே இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டிருப்பது எப்படி.. ஏன் என்பதை அக்கட்சிக்காரர்கள் இப்போதுவரையில் வெளிப்படையாகச் சொல்லவில்லை. இனியும் சொல்ல மாட்டார்கள் என்பதும் நிச்சயம்.

இதுவரையில் தெரிந்த அளவுக்கு அவர் மீதான புகார்களை அவருடைய குடும்பத்தினரே சுமத்தியதால் மாநிலக் கட்சிக் குழு அதை விசாரித்து உண்மை என்று அறிந்து கட்சியில் இருந்து வரதராசனை நீக்கவேண்டும் என்று மத்தியக் கமிட்டிக்கு பரிந்துரை செய்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் என்ன காரணம் என்பதை மட்டும் வெளியில் சொல்ல மறுக்கிறார்கள்.

இன்றைய செய்தியின்படி கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத்துதான் பிடிவாதமாக வரதராசனை நீக்கினார் என்று சாவிற்கான பழியை பிரகாஷ்காரத் மீது வீசுகிறார்கள் தமிழ் மாநிலத் தலைவர்கள். பிரகாஷ்காரத்தின் விசாரணைக்கு மையப்புள்ளியே கட்சியின் தமிழ் மாநிலக் குழு , தோழர் வரதராசனை நீக்கும்படி அனுப்பியிருந்த பரிந்துரைக் கடிதம்தான். அந்தக் கடிதத்தை இவர்கள் அனுப்பாமல் இருந்திருந்தால்..?

அப்படியென்ன அது கொடுங்குற்றம்..? தோழராக இருந்தாலும் அவர் முதலில் மனிதராகத்தானே இருக்கிறார். பின்புதானே ஏற்றுக் கொண்ட , பின்பற்றுகின்ற கொள்கையின்படி ஒரு அமைப்பின் உறுப்பினர். பலவீனங்களால் ஆட்படுபவன்தான் மனிதன். நிச்சயம் அவன் வாழ்நாளில் ஒரு முறையாவது ஏதாவது ஒருவகை சைத்தானுக்கு ஆட்பட்டே தீருவான்.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று காட்சியளிக்கும். சிக்கியவர்கள் மீள்வார்கள். மீளாதவர்கள் கொடும் சிக்கலுக்குள்ளாவார்கள். தெருவுக்கு நான்கைந்து பேர் நிச்சயமாக இருப்பார்கள்.

ராயப்பேட்டை மார்ச்சுவரியில் தோழரின் உடலைப் பார்த்தவுடன் தங்களிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்று தோழரின் உடன் பிறந்த சகோதரிகளும் , மனைவியும் ஆளுக்கொரு பக்கமாகப் போர்க்கொடி தூக்கியதில் இருந்தே அத்தோழரின் குடும்பத்துப் பிரச்சினை எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பது புரிகிறது.

கேவலம்.. ஒரு சாதாரண குடும்பத் தகராறையெல்லாம் ஒரு அகில இந்தியக் கட்சியின் மத்தியக் கமிட்டி கூட்டம் அலசி ஆராய்ந்து துவைத்துக் காயப்போடுகிறது என்பதை நினைக்கும்போது இந்தக் கட்சியின் தலைவர்கள் எந்த அளவுக்கு வேலைவெட்டியில்லாமல் இருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இது நிச்சயம் குடும்பத் தகராறுதான். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

இது பொதுவில் வந்திருக்க வேண்டியதில்லை. புகார் கொடுத்தவர் கட்சியைச் சேர்ந்த அவருடைய மனைவியாகவே இருந்தாலும் அதனை குடும்பப் பிரச்சினையாகக் கருதி நான்கு சுவர்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளும்படி அனுப்பி வைத்திருந்தால் இன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவுக்கு ஒரு லட்சம் ரூபாய் எழவுக்கான செலவு ஏற்பட்டுத் தொலைந்திருக்காது. அவர்களுக்கும் அடுத்த சட்டசபை தேர்தலில் நிற்க ஒரு மக்கள் தொண்டரும் கிடைத்திருப்பார்.

எத்தனையோ குடும்பங்களில் இது போன்ற பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அத்தனையிலும் வீட்டில் இருக்கும் யாரோ ஒருவர் விட்டுக் கொடுத்துத்தான் போகிறார்கள். யாரும் இதை அறிவுப்பூர்வமாக அணுக வேண்டியதில்லை. உணர்வுப்பூர்வமாகதத்தான் அணுகியிருக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு இந்த விஷயத்தில் நடந்து கொண்டது கிட்டத்தட்ட சர்வாதிகாரம்தான். இது போன்ற விஷயங்களையெல்லாம் கட்சியில் வைத்து அலசுவார்கள். இதுதான் கட்சியின் கொள்கை என்றால் அந்த ‘புடலங்காய்கள்’ ஏன் இன்னும் மார்க்கெட்டில் அதிகமாக விற்கவில்லை என்பதற்கான காரணமாக இதனையே ஏற்றுக் கொள்ளலாம்.
“மயிர்நீப்பின் வாழா கவரிமான் அன்னார், உயிர்நீப்பர் மானம் வரின்” என்ற குறளை அடையாளம் காட்டி , “தற்கொலை செய்து கொள்பவன் கம்யூனிஸ்டே அல்ல. உள்கட்சிப் போராட்டத்தில் எத்தனையோ இடர்களை என்னால் எதிர்கொள்ள முடிந்தது. ஆனால் உள்வாழ்க்கைப் போராட்டத்தில் நான் நிலைகுலைந்து வீழ்ந்துவிட்டேன். இனி.. ஏது..? குறளே நின்றது.. மனதை வென்றது..” என்று தனது மரண சாசனத்தை எழுதி வைத்துவிட்டு சாவைத் தேடிச் சென்றுள்ளார் தோழர் வரதராசன்.

இதற்குப் பெயர் கோழைத்தனம் அல்ல.. புறவாழ்க்கையில் எதிர்ப்பட்ட எதிர்ப்புகளை எல்லாம் ஓட ஓட விரட்டிய இந்தத் தோழரால் அகவாழ்க்கை சிக்கல்களில் இருந்து மீளத் தெரியவில்லை. அல்லது முடியவில்லை. இந்தத் ‘தெரியவில்லை’; ‘முடியவில்லை’ என்கிற வார்த்தைகளினால்தான் உலகம் முழுவதும் தினம்தோறும் லட்சக்கணக்கானோர் தங்களது உடலைத் தியாகம் செய்துவிட்டு வீழ்கின்றனர்.

அறிவின் சிகரங்கள் இதனைக் ‘கோழைத்தனம்’ என்று வர்ணிப்பது காலம்காலமாக நடந்துதான் வருகிறது. ஆனால் அவர்களுக்கு இது மாதிரியான சந்தர்ப்பங்கள் வந்து தொலையாதது அவர்களது அதிர்ஷ்டம் என்பதை மட்டும் அவர்கள் உணர்வதே இல்லை.

ஆறாண்டுகளுக்கு முன்பாக விஜய் டிவியில் தினம்தோறும் காலை 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘முதல் பிரதி’ என்னும் நிகழ்ச்சியில் நான் பணியாற்றி வந்தேன். ஒரு நாள் நிகழ்ச்சியில் இரண்டு எதிரெதிர் தரப்பு அரசியல்வாதிகள் பேசுவார்கள். அந்த வரிசையில் ஒரு நாள் இந்தத் தோழரின் பெயரும் இருந்தது. கூடவே அவருடைய வீட்டு முகவரியும்தான்.

தினமும் அதிகாலை 5.30 மணிக்கு ஷூட்டிங். நாங்கள் 3 மணிக்கு ஸ்டூடியோவில் ஆஜராவோம். 4 மணிக்கு அனைத்துச் செய்தித்தாள்களும் கைக்கு வர.. செய்திகளை தட்டச்சு செய்துவிட்டு கேள்விக்கணைகளோடு தயாராக இருப்போம். அன்றைய விருந்தினரான தோழர் உ.ரா.வரதராசனை வரவேற்க கார் அவருடைய வீடிருந்த அண்ணா நகருக்குச் சென்றிருந்தது. வந்துவிடுவார் என்று எதிர்பார்த்து நாங்களெல்லாம் வாசலில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது , ஒரு சைக்கிளின் பின்பக்க கேரியரில் அமர்ந்தபடியே இந்த முரட்டு சட்டை மனிதர் ஸ்டூடியோ வாசலில் வந்து இறங்கினார்.

திக்கென்று இருந்தது எங்களுக்கு.. “என்ன ஸார்..? உங்களைக் கூப்பிடத்தான கார் வந்துச்சு..? வரலியா..?” என்று கேட்க , “நான்தான் நேத்து நைட்டே , உங்க ஆபீஸுக்கு போன் போட்டு சொன்னனேப்பா.. கார் வேண்டாம்னு..” என்றார். “காலைல சீக்கிரம் எந்திரிக்கணுமேன்னு நைட்டு நம்ம கட்சி ஆபீஸ்லேயே படுத்திட்டேன்..” என்று விகல்பமில்லாமல் சொல்லிவிட்டுச் சிரித்தார்.

ஏஸி கார் அனுப்பவில்லையே என்பதற்காக காரில் ஏற மாட்டேன் என்று தகராறு செய்து ஏஸி காரை அனுப்பிய பின்பு நிகழ்ச்சிக்கு வந்த ஒரு பாரம்பரியக் கட்சியின் வி.ஐ.பி.க்களை மட்டுமே பார்த்திருந்த எங்களது டீமுக்கு இது ஒரு சுவையான அனுபவம். இப்படித்தான் இந்த எளிமையான தோழர் எனக்கு அறிமுகமாயிருந்தார்.
ஆனால் இன்றைக்கு சவப்பெட்டிக்குள் ஏதோ கருப்பு மை பூசி மெழுகப்பட்ட முகத்துடன் அடையாளம் காண முடியாத அளவுக்கு கோரமாக காட்சியளித்த இவரா , புகைப்படத்தில் இருக்கும் சிவப்பு நிறத் தோழர் என்ற ஆச்சரியமும் , அதிர்ச்சியும் ஒன்று சேர என்னைத் தாக்கியது.
கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை என்பதாலும் , கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் இருந்த காரணத்தால் அந்த அலுவலகத்தில் இவருடைய சடலத்திற்கு மட்டும் இடம் கிடைத்திருக்கிறது போலும்.

“எனது இரண்டு வங்கிக் கணக்குகள் முடிக்கப்பட்டு எஞ்சியுள்ள தொகையை கட்சிக்கு வழங்க வேண்டும். என்னுடைய புத்தகங்கள் கட்சி மற்றும் ‘தீக்கதிர்’ நூலகங்களுக்கு அளிக்கப்பட வேண்டும். எனது மடிக்கணினியை(அமெரிக்கா சென்றிருந்தபோது மகன் வாங்கிக் கொடுத்தது) ‘தீக்கதிர்’ பயன்பாட்டிற்குத் தர வேண்டும். எனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒப்படைத்துவிடுங்கள். எனது இல்லம் உட்பட எங்குமே எனக்குப் படத்திறப்போ , இதர நிகழ்ச்சிகளோ நடத்தக்கூடாது..” என்ற தனது இன்னொரு கடிதத்தில் எழுதியிருந்ததைப் படிக்கின்றபோது மனிதர் என்ன மாதிரியான உறுதியுடன் இருந்திருக்கிறார் என்பது புரிகிறது.

இவரா கோழை.. இதுவா கோழைத்தனம்.. இல்லவே இல்லை. இத்தனை நாட்கள் உங்களுடன் ஒன்றிணைந்து உறவாடிஇ பேசிப் பழகி , போராட்டங்களுடன் துணை நின்று தன்னைப் புரிந்து கொள்ள முடியாத அல்லது தனக்குத் துரோகம் செய்வித்த நண்பர்களான தோழர்களை மறுபடியும் தான் சந்திக்கவே விரும்பவில்லை என்கிற வெறுப்புணர்வுதான் அவரை ஆட்கொண்டுள்ளது.

“படத்திறப்புக்கள் நடத்தப்படவே கூடாது” என்று சொல்லியிருப்பதில் இருந்தே தான் தேடிக்கொள்ளும் முடிவின் மூலம் தான் ஒரு கம்யூனிஸ்ட்டே இல்லை என்பதை உலகிற்கு சொல்லியிருக்கும் இவர்தான் உண்மையிலேயே தோழர்.. நிச்சயமாகச் சொல்லலாம். இறக்கப்போகும் தருவாயிலும் கட்சியின் கொள்கைகள் மீது தோழர் வரதராசன் எந்த அளவிற்கு மரியாதை வைத்துள்ளார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பத்திரிகைகள் வட்டாரத்திலோ இந்தப் பிரச்சினைக்கு வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பதவியிலிருந்து உடல் நலக் குறைவு காரணமாக என்.வரதராஜன் விலகியபோது அடுத்த மூத்தவர் என்கிற நிலையில் இந்த உ.ரா.வரதராசன்தான் அடுத்தப் பொதுச்செயலாளராக ஆகியிருக்க வேண்டும். ஆனால் இப்படியொரு நிலைமையைத் தவிர்க்கவே , என் வரதராஜனின் பதவி விலகலுக்கு முன்பாகவே உ.ரா.வரதராசனின் பதவி நீக்க நடவடிக்கை அவசரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

அனைத்துக் கட்சிகளிலும் இருக்கக்கூடிய சிற்சில போட்டி , பொறாமைகள் இக்கட்சியிலும் இருந்திருக்கலாம். அதன் தாக்கம் இவர் மீது அதிகமாக படிந்து அதன் மூலம் இவர் துரத்தப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் பொதுவானவர்கள்.

கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதையும் , காணாமல் போயிருப்பதையும் ஒரே நாளில் கண்கூடாகப் பார்த்து கட்சியின் அடிமட்டத் தோழர்கள் குழம்பித்தான் போயிருக்கிறார்கள். நான் அங்கு பார்த்தவகையில் பலரும் ஏதோ ராணுவ ரகசியம்போலத்தான் இதைப் பற்றிப் பேசினார்கள்.

“தெரியலை..” “செயலாளர் அறிக்கையிலதான் படிச்சேன்..” “கட்சின்னா ஆயிரம் இருக்கும்..” “எங்க கட்சில இப்படித்தான்..” “என்ன இருந்தாலும் தோழர் இப்படி செஞ்சிருக்கக் கூடாது..” என்றெல்லாம் மானாவரியாக சொன்னார்களே ஒழிய.. கட்சியைக் குறை கூறி ஒரு வார்த்தை.. ம்ஹும்.. என் காதுபட யாரும் சொல்லவில்லை. அதுதான் இந்த இயக்கம்..

பொதுவாழ்க்கையில் அரிவாள் , சுத்தியல் அடையாளத்துடன் கடந்த 45 ஆண்டு கால அனுபவமுள்ள இந்தத் தோழரின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. வடஆற்காடு மாவட்டம் உள்ளியநல்லூர் கிராமத்தில் 9.7.1945 அன்று பிறந்தவர் உ.ரா.வரதராசன்.

‘அருவி’ என்ற இலக்கிய சிற்றிதழை மாணவப் பருவத்திலேயே நடத்தியுள்ளார். 1967-ம் ஆண்டு ரிசர்வ் வங்கிப் பணியில் சேர்ந்த அவர் 17 ஆண்டுகள் வங்கிப் பணியில் இருந்திருக்கிறார். ரிசர்வ் வங்கிப் பணியில் இருந்தபோதே கட்சியின்பால் ஈர்க்கப்பட்டு கட்சிப் பணியையும் சேர்த்தே செய்து வந்திருக்கிறார்.

1984-ம் ஆண்டுஇ வங்கிப் பணியைத் துறந்து , கட்சியின் முழுநேர ஊழியராகித் தனது பொது வாழ்க்கையில் தீவிரமாக இறங்கியுள்ளார். சென்னை மாவட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வந்த வரதராசன் , 1989-ம் ஆண்டுஇ நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளராக வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்கிற பெருமையுடன் வெற்றி பெற்றார்.
சி.ஐ.டி.யு. மாநிலச் செயலாளர்களில் ஒருவராக செயல்பட்டு வந்த அவர்  பிற்பாடு சி.ஐ.டி.யு.வின் அகில இந்திய செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக இருந்தபோது டெல்லி தொழிற்சங்கப் பணிக்காக சென்றிருக்கிறார். இதன் பின்புதான் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கட்சிப் பணிகளுக்காக பெரும்பாலான நேரங்கள் டெல்லியிலும் , கொல்கத்தாவிலுமாக இவரது சேவை கட்சிக்குக் கிடைத்துள்ளது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தமிழ்நாட்டில் இவரது குரல் ஒலிக்காமல் இல்லை. ஈழப் போராட்டத்திற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே முன்னின்று ஒரு கவன ஈர்ப்புப் போராட்டத்தை சென்னையில் நடத்தியபோது அதனை முன்னின்று நடத்தியவர் இந்தத் தோழர் வரதராசன்தான். .

சிஐடியூவின் அகில இந்தியச் செயலாளராக இருந்திருந்த காரணத்தாலும் , சிம்சன் நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவராக புகழ் பெற்றிருந்ததாலும் தொழிலாளர் பெருமக்களின் அஞ்சலி இந்தத் தோழருக்கு பெருமளவில் கிட்டியது.

தோழர் பாரதி கிருஷ்ணகுமார் பார்க்கின்ற தோழர்களையெல்லாம் கட்டிப் பிடித்து கதறிக் கொண்டிருந்தார். அவ்வளவு பெரிய ஆளுமை கொண்ட பாரதிகிருஷ்ணகுமார் , நடுரோட்டில் உடல் குலுங்கி அழுவதை பார்த்தபோது என்னையறியாமல் கண்கள் கலங்கிவிட்டன. இவர் ஒருவரே கண்ணீரை தைரியமாக வெளியில் விட்டவர். ஒரு ஐந்து பேர் சுற்றி நின்றிருந்தால் அதில் ஒருவர் நிச்சயம் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார். துக்கப்படுகிறோம் என்பதை வெளியில் சொல்வதற்குகூட முடியாததுதான் மாவோவின் சிந்தாந்தம்போல..

மாலை அணிவித்துவிட்டு கைகளை உயர்த்தி வீரவணக்கம் செலுத்திய தமிழ் மாநில உயர் மட்டத் தலைவர்களை பார்த்தபோது எனக்கு வெறுப்புதான் வந்தது. எப்படி இவர்களால் சலனமேயில்லாமல் அனைத்தையும் செய்ய முடிகிறது என்றுதான் தெரியவில்லை.

மற்றக் கட்சிகளாக இருந்திருந்தால் வேறுவிதமான சம்பவங்களை இறுதி ஊர்வலத்தில் பார்த்திருக்க முடியும். ஆனால் நான் முதல் பாராவில் சொல்லியிருப்பதுபோல் கடைசிவரையில் கட்டுக்கோப்பாக , கண்ணியமாக ஒரு சிறு எதிர்க்குரல்கூட எழுப்பாமல் இருந்தது இந்தத் தோழர்களின் கட்டுப்பாட்டைக் காட்டினாலும் நமக்குள் கோபம் கொப்பளிக்கத்தான் செய்கிறது.

கட்சியில் பல மட்டத்தில் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்புதான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பல பத்திரிகைகளுக்கும் பேட்டியளித்துக் கொண்டிருந்த கட்சியின் பெண்ணியவாதிகள் ,தோழரின் உடல் மீட்கப்பட்டவுடன் அப்படியே அமைதியானார்கள். கட்சித் தலைவர்கள் கட்சியின் நியாயத்தை சொல்வதை நிறுத்திவிட்டு தோழரின் அருமை , பெருமைகளை பறை சாற்றத் துவங்கிவிட்டார்கள். தனது கணவரான தோழர் வரதராசன் மீது கட்சியில் புகார் மனு அளித்திருந்த அவரின் துணைவியாரே , கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால்தான் தோழர் வரதராசன் இந்த முடிவுக்குச் சென்றதாக பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.

தோழர் வரதராசனின் இறுதி மூச்சு தானாகவே அடங்கியிருப்பதாக அத்தனை தோழர்களின் மனதில் பதிய வைக்கும் முயற்சிகள் இந்த இரண்டு நாட்களில் நடந்தேறின.
இதில் மிகப் பெரிய சோகம் அவருடைய விருப்பப்படி அவருடைய உடலை மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட முடியாமல் போனதுதான். கிட்டத்தட்ட 2 நாட்கள் முழுவதும் தண்ணீரில் ஊறியிருந்து முகமெல்லாம் கருமையாக மாறிப் போனதாலும் , உடல் உப்பியிருந்த காரணத்தாலும் உடலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்களாம்.

“ஜெய் சலோ ஜெய் சலோ
செவ்வணக்கம் செவ்வணக்கம்
வீர வணக்கம் வீரவணக்கம்..
தோழர் வரதராசனுக்கு வீரவணக்கம்..
வீர வணக்கம் வீரவணக்கம்..
தோழர் வரதராசனுக்கு வீரவணக்கம்..
நடப்போம் நடப்போம்..
வரதராசன் காட்டிய பாதையில் நடப்போம்..
செய்வோம் செய்வோம்..
வரதராசன் ஆற்றிய கடமையைச் செய்வோம்..
தொடர்வோம் தொடர்வோம்..
வரதராசன் பணியைத் தொடர்வோம்”

இதுவெல்லாம் இறுதிப் பயணத்திற்காக தோழர் வரதராசனின் உடலை சவவண்டியில் ஏற்றி வைத்துவிட்டு அத்தனை தோழர்களும் உரத்தக் குரலில் எழுப்பிய கோஷங்கள்.

இதில் “தோழர் வரதராசன் காட்டிய பாதையில் நடப்போம்” என்று சொன்னவர்களுக்கு கட்சித் தலைவர்கள் வரதராசனின் “எந்தப் பாதை”யைக் காட்டப் போகிறார்கள் என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. அவரை நீக்க வேண்டும் என்ற முனைப்போடு மல்லுக் கட்டியவர்கள்.. இத்தனை வருடங்கள் கட்சிக்காக உழைத்திருக்கிறாரே என்கிற சிந்தனையில்லாமல் தூக்கி வீசிவிட்டு இப்போது எதற்கு இந்தப் புகழாரம்..?

“அவர் தற்கொலை செய்யும் நிலைமைக்குச் செல்வார் என்பது எங்களுக்கு எப்படி தெரியும்..?” என்று இனிமேல் அறிவாளிகளாக கேட்பார்கள் கட்சியின் தமிழகத் தலைவர்கள். “அவர் சாதாரணமாக காபி சாப்பிடத்தான் கொல்கத்தா வந்தார்..” என்று கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் சரடுவிடப் போகிறார்கள்.. தலைவர்கள் வரிசையில் இரண்டாவதாக இருந்துவிட்டு இனிமேல் தான் சாதாரண காம்ரேடுகளில் ஒருவராகத்தான் கட்சி அலுவலகத்திற்கு வரமுடியும் என்பதை எந்தத் தலைவரால்தான் ஜீரணிக்க முடியும்..?

புறக்கணிப்பு என்கிற மிகப் பெரிய கொடூரமான தண்டனையை மனச்சாட்சியுள்ள எந்த மனிதராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தப் புறக்கணிப்பினால்தான் இந்தத் தோழர் தனது முடிவைத் தானே தேடிச் சென்றிருக்கிறார்.

2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோவையில் நடந்த கட்சியின் அகில இந்திய மாநாட்டின்போது , “தோழர்கள் ஜோதிபாசுவும் , ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தும் தங்களது உடல் நலன் காரணமாக தங்களை கட்சியின் உயர்மட்டக் குழுவில் இருந்து விடுவிக்கச் சொல்லியிருக்கிறார்கள். இது பற்றி கட்சி இந்த மாநாட்டின் இறுதி நாளில் முடிவெடுக்கும்..” என்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரிகளை பத்திரிகைகளுக்குத் தெரிவித்திருக்கும் தோழர் உ.ரா.வரதராசன் என்ற இந்த முக்கியத் தோழரால் , இந்த உள்ளடிகளை எப்படித் தாங்கிக் கொண்டிருக்க முடியும்..?

கட்சியே. கொள்கைகளே , கோட்பாடுகளே , சித்தாத்தங்களே முக்கியம். மற்றவைகளெல்லாம் பிற்பாடுதான் என்று இயங்கி வரும் மனிதர்களுக்கு கட்சியில் தங்களுக்கான இருப்பிடம்தான் பெரியது. அதுதான் உலகம். அது அவர்கள் கைகளில் இருந்து விடைபெறும்போது வாழ்க்கையே தொலைந்துவிட்டது போலத்தான்.

தோழர் உ.ரா. வரதராசனின் வாழ்க்கையைத் தொலைத்தது அக்கட்சியின் தலைவர்கள்தான். ஒரு நல்ல தலைவனை இழந்து நிற்கும் அக்கட்சியின் தொண்டர்களுக்கு நியாயமான , வெளிப்படையான பதிலைச் சொல்ல வேண்டியது அக்கட்சித் தலைவர்களின் பொறுப்பு.

மாலை 4.30 மணியளவில் தியாகராய நகர் கண்ணாம்மாபேட்டை இடுகாட்டில் தகனம் செய்யப்பட்ட தோழர் உ.ரா.வரதராசனின் உடலில் வைக்கப்பட்ட தீ , உண்மையிலேயே கடந்த பிப்ரவரி 6-ம் தேதி கொல்கத்தாவில் அவருடைய கட்சியினராலேயே வைக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.

அவருடைய செயல் நிச்சயம் கோழைத்தனம் அல்ல.. அந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்குப் பெயர் தற்கொலையும் அல்ல. கொலைதான். நிச்சயம் படுகொலைதான்.

தோழர் உ.ரா.வரதராசன் அவர்களுக்கு எனது வீர வணக்கம்.

http://truetamilans.blogspot.com/

6 thoughts on “தோழர் உ.ரா.வரதராசனின் மரணம் தற்கொலையல்ல..! கொலைதான்..! :உண்மைத்தமிழன்”

 1. அழகான கவிதைபோல அழகான கட்டுரை.கோபம் நாம் சிந்திப்பதையே தடுத்து விடுகிறது.தன் தோழர்களீன் துரோகம் குடும்பத்தினரின் குடைச்சல் அதனால் ஏற்படுகின்ற காயங்கள் நல்ல மனிதனின் பலகீனமான கோபம்.விடை மரணம் என த் தேட வைத்திருக்கிறது.தோழர் வரதராஜன் சிந்திப்பதற்கான தனிமை கிடைத்திருந்தால் சாவைத் தவிர்த்திருப்பார்.தமிழ் குடும்பம் ஒரு கோயில் என்பது இதற்காகத்தான்.எங்கும் அமைதி இல்லை என்றால் எங்குதான் போவது.

  1. இடதுசாரிக் கட்சிகளின் இறுகிய அமைப்புக்குள் இருக்கும் கொடிய நிலை இதுதான். இதுதான் பலரை இடதுசாரி ‘அமைப்புக்களை’ விட்டு எப்போதும் விலகியிருக்கச் செய்கிறது. மூடத்தனத்தை கட்சி நடவடிக்கை என்பார்கள்.

   இந்ததத் தோழரை சில தடவைநேரில் சந்தித்திருக்கிறேன்.
   முதல் வந்த மறைவு குறித்த செய்தி தந்த அனுதாபம் இதை வாசிக்க… கோபமாயிருக்கிறது என்பதுதான் உண்மை.

   இந்த இடது சாரிக் கட்சிகள் ஒழுங்காக இருந்திருந்தால் ….எவ்வளவு நல்லாக இருந்திருக்கும்.

  2. றபேல்,
   உஙளுக்கு எத்தனை இடதுசாரிக் கட்சிகளைத் தெரியும்? எதிலாவது செயற்பட்டிருக்கிறீர்களா?
   கட்சிக் கட்டுப்பாடு என்பது முக்கியமானது.
   இல்லாவிட்டால் தமிழ் விடுதலை இயக்கங்கள் போலத் தன் அராஜகதில் போய் முடியும்.

   மனிதரை எடுத்த எடுப்பில் தூக்கி எறிவது மார்க்சியப் பண்பாடல்ல. கட்சிக்குள் தவறுகளைத் திருத்த மிகவும் மனிதத் தன்மையான விமர்சன-சுயவிமர்சன நடைமுறை வழிகாட்டல்கள் உள்ளன.

   இங்கு நடந்தது ஒரு நல்ல கம்யூனிஸ்ட் கட்சிக்குரிய நடவடிக்கை அல்ல.
   சீரழிந்துபோன சி.பி.எம். நல்ல கம்யூனிஸ்ட் கட்சியுமல்ல.

 2. /நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் நித்தியானந்தா சுவாமிகள்: பரபரப்பு/– http://thatstamil.oneindia.in/news/2010/03/03/nithyanandda-swamigal-s-scandalous.htm.
  யூதர்கள் தங்களை கடவுளின் குழந்தைகள் என்கிறார்கள்!.கோ + இல்லம் = “கோயில்” அதாவது அரசனின் வீடு என்கிறார்கள்.”சர்ச்” என்பதற்கும் இத்தகைய அர்த்தம்தான்,அதனால்தான் ஆங்கிலிக்கன் சர்ச்சில்,இங்கிலாந்து மகாராணிதான் தலைவர்.அதாவது கடவுளுக்கும்,மனிதர்களுக்கும் இடையில் ஒரு “தொடர்பாளர்” வரலாறுகளில் தொடர்ந்து இருந்துவருகிறது!.இவர்கள் தங்களை கடவுளாக காட்ட நினைக்கும் ஏமாற்று முயற்சியே “இறை நூல்களின்” திரிபுகள் ஆகும்!.இதில் ஒன்றுதான் “ஹத்த யோகா”!.
  இந்து – புத்த மதங்களில்,இருட்டு – வெளிச்சம்,ஆண் – பெண்,நல்லது – கெட்டது,போன்றவற்றை சமன்(பேலன்ஸ்) செய்வதே உலகம்(இன் -யாங்),அதிலேயே உயிர்ப்பு துவங்குகிறது,அந்த “ஒன்று கூடல்தான்” “சிவலிங்கம்” என்கிறது!.உயிர்ப்பின் நிலையில் உண்மையை அறியலாம் என்பது கடவுள் மனிதனுக்கு அளித்த ரகசியம்!.அதற்கு அப்பால் வெறும் “வெறுமைதான்”!.உயிர்ப்பின் நிலைக்கு போவது “ஏஸ்ஃடஸி” என்று மேற்கத்திய உலகத்தால் புரிந்துக் கொள்ளப்பட்ட “ஹத்த யோகா” ஒரு கண்டம்பிளேஷனாக” பொருள் படுத்துகிறது.அதனால்தான் பரமஹம்ஸரை பின்பற்றிய மகாகவி பாரதியார் கஞ்சா அடித்தார்!.பல பெண்களிடம் உறவுவைத்துக் கொள்வதை தியானம் என்கிறது!.ராமகிருஷ்ண பரமஹம்ஸர்,விவேகானந்தர் போன்ரவர்கள் இவைகளை ஆதரித்தாலும்?,அதை ஒரு வியாபாராமாக்கியவர் “ஓஷோ ரஜினீஷ் சாமியார்”!.இந்த முறையை பொடு வாழ்விற்கு கொண்டுவந்து வெற்றி கண்டவர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி.இதற்கு கிரிஸ்த்தவ அமைப்புகளின் ஆதரவும் உண்டு!.ஆனால் இது மிகவும் சிக்கலானது……விவரங்கள்…பிறகு….
  இந்த வெற்றிப் பாதையை தாங்களும் அடைந்துவிட வேண்டும் என்று பல இந்திய அரசியல் தலைவர்கள் எண்ணுவதன் விபரீதம்தான் தோழர் திரு.உ.ரா.வரதராசன் அவர்களின் நிலைக்கு காரணம்!.

 3. நித்தியாந்தா தாய்மொழி தமிழாய் இருப்பதால் இது ஒரு திட்டமிட்ட சதியாக இருப்பதற்கான சாத்தியக்கூறூகள் உண்டு.இப்போதுள்ள கிராபிக்ஸ் முரையால் ஒரு தெலுங்கு நடிகையை செட்டப் பண்ணீ தெலுங்குச் சாமியான கல்கி இதைச் செய்திருக்கலாம்.பங்காரு செய்திருக்கலாம். கன்னடன் ரஜனியும் சாமி மாதிரியே நடித்துக் கொண்டிருக்கிறான்.எனக்கு பல சந்தேகங்கள் உண்டு.தமிழ்ரிடையே ஊடுருவி தமிழ்ரை அழிக்கத் தெலுங்கனும், மலையாளீ, கன்னடன் செய்யும் சதியே இந்த தெலுங்கு நடிகை விடியோ.

  1. டொக்டர் சிவசம்புவைப் போய்ப் பாருங்கள்.
   சரிவராவிட்டால் வேறு ஆளைச் சொல்லுகிறேன்.

Comments are closed.