தோற்றுப்போன போராட்டமும் புதிய திசைவழியின் அடிப்படையும் : சபா நாவலன்


பாசிசத்தின் ஊற்றுக் கண்

பெரும்பான்மை மக்களைவிட அதிகாரத்திலுள்ளவர்கள் அபரிமிதமான பலம் பொருந்தியவர்களாக மாறும் பொழுதே பாசிசம் என்ற அடக்குமுறை உருவாகின்றது. அது அரசாகவோ அன்றி அதிகாரத்தைப் பேணவல்ல குழுக்களாகவோ இருக்கலாம். பாசிசத்தின் ஊற்று அங்குதான் காணப்படுகிறது.

சிறுபான்மைச் சமூகமொன்று இராணுவம், காவல்துறை, சிறைக்கூடங்கள், சித்திரவதை மையங்கள் போன்ற இன்னோரன்ன அடக்குமுறைக் கருவிகளை தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக உருவாக்கும் அரசமைப்பு முறையே முதலாளித்துவ அரசு என அழைக்கப்பட்டது.

முதலாளித்து அரசியல் அமைப்புக்களின் மத்தியிலேயே அதிகாரத்தின் பண்பு,  புறனிலை யதார்த்தின் தன்மைக்கொப்ப மாறுபடுகிறது.

முதளாளித்துவ ஜனநாயகத்தில் குறித்த எல்லை வரைக்கும் மக்களின் அதிகாரம் உத்தரவாதப்படுத்தப்படுகிறது. எதிர்ப்பியக்கங்களை நடத்துவதற்கும், தேர்தலில் ஒரு சிறுபான்மைக் கட்சியைத் தெரிவு செய்வதற்கும் பொது மக்களுக்கு வாய்ப்பளிக்கப்டுகிறது.

இந்த ஜனநாயகம் மக்கள் மேலதிகமான உரிமைகளைக் கோரும் போது தனது அடக்கு முறைக் கருவிகளான இராணுவவம், காவல் துறை போன்றவற்றைப் பலப்படுத்திக் கொள்கிறது, மக்களின் குறைந்த பட்ச ஜனநாயகமும் அப்போது பறிக்கப்பட்டு அரச அதிகாரம் மக்களைவிடப் பலமடங்கு பலமடைகிறது.

இவ்வேளையில் தான் பாசிசம் உருவாகிறது.   இலங்கை, மத்திய கிழக்கு நாடுகள்,சீனா,இந்தியா, அமரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்க நாடுகள் என்று அனைத்து அரசுகளுமே அளவில் மாறுபாடுடைய பாசிசக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன.

ஆக, அனைத்து முதலாளித்துவ ஜனநாயக முறைமைகளும் எந்த சந்தர்ப்பத்திலும் பாசிசமாக உருமாறக்கூடிய தன்மையினைத் தன்னகத்தே கொண்டுள்ளன.

எதிர்ப்பியக்கங்களும் பாசிசமும்

புலிகள் ஆரம்பத்தில் வெறுமனே ஆயுதங்களைச் சேர்த்துக்கொண்டு மக்களிலும் அதிகமாக்ப் பலம் பெற ஆரம்பித்ததன் விளைவே தன்னளவில் பாசிசத் தன்மையைப் பெற்றுக்கொண்டது.

அதன் தொடர்ச்சியான தவறுகளுடனான வளர்ச்சி இறுதியில் பெருந்திரளான மக்கள் மீது தாக்குதலை நிகழ்த்துகின்ற அளவிற்கு அவர்களை நகர்த்திச் சென்றது. இறுதியில் போராட்டங்களின் மீதான வெறுப்புணர்வையும் நம்பிக்கையீனத்தையும் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

பாசிசமாக எதிர்ப்பியக்கங்கள் வளர்ச்சி பெற்ற நிகழ்சிப் போக்கானது இலங்கையில் மட்டுமன்றி பல நாடுகளில் காணப்படுகிறது.

அல்ஜீரியாவில் உருவாகி அழிந்து போன அரசியல் இயக்கமான ஜீ.ஐ.ஏ(Groupe Islamique Armé) போன்ற ஆயுதக் குழுக்களிலிருந்து ஆபிரிக்க நாடுகளின் ஆயுதக் குழுக்கள் வரை உதாரணமாக முன்வைக்கலாம்.

ஆக மக்களிடம் அவர்களின் தலைவர்களிலும் அதிகமாகப் பலமிருந்தால் மட்டுமே கட்சியும் விடுதலை அமைப்புக்களும்,அரசுகளும் பாசிசமாக வளர்ச்சியடைவதைத் தவிர்க்க வாய்ப்புண்டு.

மக்கள் பலம்

மக்களின் பலத்தை எவ்வாறு உறுதி செய்வது? மக்களை எவ்வாறு பலம் மிக்கவர்களாக உருவாக்குவது?? என்பது ஒரு குறிப்பான அரசியல் வேலைத்திட்டம்.

இந்த அரசியல் வழிமுறை ஈழப் போராட்ட வரலாற்றில் பிரதானமான எந்த அரசியல் இயக்கத்தாலும் முன்னெடுக்கப் பட்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.
இடது சாரி இயக்கங்கள் என்று தம்மைத் தாமே அழைத்துக்கொண்ட சிறிய குழுக்கள் கூட, மக்களைப் பலப்படுத்துவதற்கான எந்த அரசியல் வேலைத் திட்டங்களையும் முன் வைக்கவில்லை என்பதும் ஈழப் போராட்டத்தின் சீரழிவிற்கு பிறிதொரு காரணமாகும்.

வெற்றுக் கோஷம் போடும் தனிமனிதர்கள் கூட தாம்  மக்களின் பக்கத்தில் சார்ந்திருப்பதாக இன்றுவரை கூச்சலிடுவதற்கு இதுதான் காரணமாகும்.

மக்களைப் பலப்படுத்தும் அரசியல் நடைமுறைக்கு, சோவியத் ரஷ்யா, சீனா, வியட்னாம் போன்ற நாடுகள் எம்முன்னே பல உதாரணங்களை விட்டுச்சென்றுள்ளன.

வெற்றிபெற்ற போராட்டங்கள்

மக்கள் போராட்டங்கள் வெற்றியடைந்த இந்த நாடுகளிலெல்லாம் மக்களை மக்கள் அதிகாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக மக்கள் திரள் அமைப்புக்களை அல்லது வெகுஜன அமைப்புகளைக் உருவாக்கினார்கள்.

இன்று இதே அமைப்புக்கள் தான் தன்னார்வ நிறுவனங்களின் சொல்லாடலில் குடிமைச் சமூகங்கள் ( Civil Societies) என்று அழைக்க்ப்படுகின்றன. புரட்சியாளர்கள் மேற்கொண்ட அதே வேலைமுறைகளை இன்று ஏகாதிபத்தியங்கள் தன்னார்வ நிறுவனங்களூடாக (NGO) முன்னெடுத்து, அந்த அமைப்புகளை நுண்பொருளாதாரம் (Micro economy)
போன்ற வேலைமுறைகளால் சீரழித்துவிடுகின்றன.

வெகுஜன அமைப்புக்கள், ஆசிரியர் சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், கூலி விவசாயிகளின் அமைப்புக்கள் என மக்களின் அன்றாட பிரச்சனைகளை முன்வைத்து உருவாக்கப்படும் அமைப்புக்களாக அமைகின்றன.

இந்த அமைப்புக்கள் கட்சி அல்லது போராட்ட அமைப்பின் நேரடியான கட்டுப்பாடுகளுகளின்றி சுயாதீனமான அமைப்புக்களாக அமையும் போது, மக்கள் அதிகாரம் பல மடங்கு அதிகரிக்கும்.

இவ்வாறு மக்களின் அதிகாரத்தை உறுதிசெய்யும் சுயாதீன அமைப்புக்களுக்கு கட்சி கொள்கை அடிப்படையிலான தலைமை வழங்கும். கட்சியின் சித்தாந்தம் மக்கள் நலனிற்கு எதிராக மாறும் வேளைகளில் இந்த வெகுஜன அமைப்புக்களே கட்சிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும்.

இவ்வாறுதான் கட்சி அல்லது விடுதலை அமைப்பு மக்கள் அதிகாரத்தின் தொடர்ச்சியான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

“கட்சியை மக்களின் கண்காணிப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் ” என்று மாவோ சொல்கிறார்.

ஆக, மாவோயிச சிந்தனையில் உருவான சீனாவும், வெகுஜன அமைப்புக்களைக் உருவாக்கியதிலிருந்து கட்டியெழுப்பப்பட்ட சோவியத் ரஷ்யாவும் ஏன் சர்வாதிகார அரசுகளாக மாறிப் போயின என்பது இனி பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

இதிலும் கூட அடிப்படையான அம்சம் வெகுஜன அமைப்புக்கள் தான். இந்த நாடுகளின் தோல்விகளை பகுப்பாய்விற்கு உட்படுத்தும் பெரும்பாலானோர், இதற்கான பழியைத் தனிமனிதர்கள் மேல் சுமத்துவது மட்டுமன்றி இன்னொரு புறத்தில் கம்யூனிசமே சாத்தியமற்றது என்ற முடிபிற்கு முன்வருகின்றனர்.

சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி

லெனினின் மறைவின் பின்னான காலப்பகுதியில் ரஷ்ய சோசலிச சமூகத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த வேண்டிய தேவை கட்சிக்கு ஏற்படுகிறது. அந்த வேளையில் ரஷ்யாவில் ஐந்தாண்டுத் திட்டம் ஒன்று முன் வைக்கப்படுகிறது.

முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் 1928 – 1932 காலப் பகுதியில் நடைமுறைக்கு வருகிறது. இத் திட்டத்தின் அடிப்படை விவசாயத்தை நவீன மயப்படுத்துவதும், கூட்டுப்பண்ணைகளை அறிமுகப்படுத்துவதுமாகும்.

இத்திட்டம் செல்லாவ்க்கு மிகுந்த குலாக்குகள் எனப்பட்ட சிறு நில உடமையாளர்களின் அபிலாசைகளுக்கு எதிரானதாக அமைந்தது மட்டுமல்ல. சொத்துடமை மனோபாவத்திலிருந்த சிறிய விவசாயிகள் மத்தியிலும் பெரும் அதிர்ப்தியைத் தோற்றுவித்தது.

ஐந்தாண்டுத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் கட்சி தீவிர முனைப்புடன் செயற்பட மக்கள் மத்தியிலான அதிர்ப்தி அதிகரித்தது. ஆயினும் மக்கள் உதிரிகளாக இருக்கவில்லை. பலம் வாய்ந்த வெகுஜன அமைப்புக்களாக அமைப்பாக்கப் பட்டிருந்தனர். இந்த மக்கள் அமைப்புக்கள் அரசின் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தன.

இதனால் அரசு நிலைகுலைய ஆரம்பித்தது. இதனை எதிர்கொள்ள வெகுஜன அமைப்புக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. இப்போது கட்சியின் அங்கமாக மக்கள் திரள் அமைப்புக்கள் மாறிவிட்டன.

இதற்கு எதிராக மக்கள்,  போராட்டங்களை முன்னெடுத்த வேளைகளிலெல்லாம் அரசு ஆயுதபலம் கொண்டு மக்களையும் எதிர்ப்பு சக்திகளையும் ஒடுக்கியது.

இதன் பின்னர் மக்களின் கண்காணிப்பில் கட்சி என்ற நிலை மாறிவிட்டது. கட்சியின் பலம் மக்களின் பலத்தை விடப் பலமடங்கு அதிகரிக்க, நிராயுத பாணிகளான மக்களின் மீது கட்சியின் சர்வாதிகாரம் பிரயோகிகப்பட, மேற்கு நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிராக இவற்றைப் பயன்படுத்திக் கொண்டன.

ரஷ்யா சர்வாதிகார நாடாக மாற்றம்பெற்று மக்கள் மீதான பாசிச அதிகாரம் உருப்பெற்றது.

செஞ்சீனத்தின் தோல்வி

இன்னொரு வகையில் சீனாவிலும் இதே அரசியல் தவறு தான் அந்நாட்டின் அரசியல் அதிகாரத்தைச் சர்வாதிகாரமாக்கிச் சீர்குலைத்ததோடு மட்டுமன்றி இன்று உலகின் மிகக் கேவலமான சர்வாதிகார நாடாக சீனாவை மாற்றியமைத்துள்ளது.

1966 இலிருந்து 1976 இற்குமான காலப்பகுதியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கலாச்சாரப் புரட்சி என்ற சுலோகத்தை முன்வைத்து தனது சோசலிச செயற்பாட்டுத் தளத்தை விரிவுபடுத்த முனைந்தது. “பதினாறு புள்ளிகள்” என்று அறியப்பட்ட கலாச்சரப் புரட்சி சீனாவில் பெரும் நிலை மாற்றத்தை உருவாக்கியது.

பாட்டாளி மக்க்களின் ஆட்சி நிறுவப்பட்டிருந்தாலும், முதலாளித்துவ மனோபாவம் , பண்பாடு, கலாச்சார விழுமியங்கள் போன்ற பல அம்சங்கள் சமூகத்தில் இன்னும் நிலை கொண்டுள்ளன, இவற்றினூடாக முதலாளித்துவம் மறுபடி ஆட்சியை நிறுவ முயல்வதாகவே கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பத்திற்கான காரணம் முன்வைக்கப்பட்டது.

மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வை ஏற்படுத்திய கலாச்சாரப் புரட்சியியை ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்திக்கொள்ள, சீன அரசிற்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக்கப்பட்ட மக்களிற்கும் இடையேயான முரண்பாடுகள் அதிகரித்தன.

மாவோ சேதுங் இன் மறைவிற்குப் பின்னர், எதிர்ப்புப் போராட்டங்களை எதிர்கொள்தல் என்ற தலையங்கத்தில் வெகுஜன அமைப்புக்கள் அரச மயமாக்கப்பட்டன.
மக்கள் அதிகாரம் அழிக்கப்பட்டு கட்சியின் அதிகாரம் நிறுவப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி சர்வாதிகார அமைப்பாக மாற்றமடைகிறது.

இவையெல்லாம் சிறிய கணித சமன்பாடு போன்றனவாக அன்றி பல படிமுறைகளூடாக, ஏகாதிபதியங்களின் ஆதிக்கப் பகைப் புலம், சர்வதேசப் புற நிலை யதார்த்தம் போன்ற அனைத்தும் சார்ந்ததாக அமைந்த நிகழ்வுகளாயினும் எளிமைப்படுத்தும் நோக்கோடு குறித்த விடயத்தைத் தனிமைப்படுத்தி எழுதுகிறேன்.

EPRLF இன் தோல்வி

ஈழத்தில் போராட்டம் தேசிய இன முரண்பாடுகளினூடான போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து கட்சியின் சித்தாந்தத் தலைமைகு உட்படக் கூடிய வகையில் தகவமைக்கப்பட்ட வெகுஜன அமைப்புக்கள் குறித்து எந்த விடுதலை இயக்கமும் சிந்திததில்லை.

ஆயினும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) அமைப்பு முறையில் வெகுஜன இயக்கங்களும் அமைந்திருந்தன. ஈழ மாணவர் பொது மன்றம், ஈழப் பெண்கள் முன்னணி, கிராமியத் தொழிலாளர் சங்கம் போன்ற மக்கள் திரள் அமைப்புக்கள் போன்றனவும் அமைந்திருந்தன.

அவை ஈ.பி.ஆர்.எல்.எப் இன் அங்கங்களாகவே அமைந்திருக்க அவ்வமைப்பின் உறுப்பு அமைப்புகள் போன்று செயலாற்றின. இதனால் கட்சியின் சர்வாதிகாரமே மேலோங்கியிருந்தது. 1983 வரை ஈழ மாணவர் பொது மன்றம் வட கிழக்கு மாணவர்களை அணிதிரட்டியிருந்த செல்வாக்கு மிக்க அமைப்பாகத் திகழந்தது. கிராமியத் தொழிலாளர் சங்கம் வடபகுதியின் பல கிராமங்களில் கூலி விவசாயிகளை அணிதிரட்டியிருந்தது.

1983 இனப்படுகொலையின் பின்னர், இந்திய அரசிற்கு தனது பலத்தை நிறுவ முற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் வெளிப்படையான இந்த வெகுஜன அமைப்புக்களை தனது அங்கங்களாகப் பிரகடனப்படுத்த் பிரச்சாரம் மேற்கொண்டது.

இந்தத் துரோகச் செயலால் வெளிப்படையாகச் செயற்பட்ட பல மாணவர்களும், விவசாயிகளும் அரச படைகளால் தேடியழிக்கப்படும் நிலைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

புலிகள்கூட ஆரம்பத்திலிருந்தே சுயாதீன மக்கள் அமைப்புகளைக் உருவாக்குவதையும், அவற்றிலிருந்து ஆயுதக் குழுக்களை உருவாக்குவதையும் தமது அடிப்படைத் வேலைத்திட்டமாக முன்வைத்திருந்தால் அழிவுகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

தவிர, சோவியத் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் கட்சியின் கட்டுப்பாட்டிலிருந்த நிரந்த இராணுவம் மட்டுமே மக்கள் அதிகாரத்தை சிதைப்பதில் பிரதான பாத்திரத்தை வகித்திருந்தன என்ற அனுபவம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இனியொரு…

இலங்கையின் புறநிலை யதார்தம் என்பது இன்னொரு போராட்டத்தின் தேவையை உணர்த்தி நிற்கிறது. பல சந்தர்ப்பங்களில் அபிவிருத்தியும் வியாபாரமும் தமது உரிமையை உத்தரவாதம் செய்யாது என்பதை தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கைப் பேரினவாத அரசுகளின் முகத்திலறைந்து கூறியுள்ளனர்.

இனி வரும் காலங்களில்  போராட்டங்கள் மக்கள் அதிகாரத்தை உறுதிசெய்வதிலிருந்து உருவாகும் என நம்புவோமாக.

இது முழுமைபெற்ற ஆய்வல்ல, ஆனால் தோல்வியின் சில அடிப்படைகளும் அவற்றிற்கான காரணிகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் தொடர்ச்சிக்குப் பலரின் பங்களிப்பு அவசியமானது.

16 thoughts on “தோற்றுப்போன போராட்டமும் புதிய திசைவழியின் அடிப்படையும் : சபா நாவலன்”

 1. இலங்கையின் புறநிலை யதார்த்தம்>இன்னொரு போராட்டத்தின் தேவையை உணர்த்தி நிற்பது முற்றிலும் உண்மையே! முட்கம்பி வேலிக்குள் மாபெரும் அவலத்திற்குட்பட்ட மக்களும்> யாழ் மக்களும்> ஏன் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக் கும்> அபிவிருத்தியும் வியாபரமும்> தமது உரிமையை உத்தரவாதம்; செய்யாது என்பதை கடந்த தேர்தலுக்கு ஊடாக நிறுவியுள்ளார்கள்! இதை நாவலன் சரியாக கோடிட்டு காட்டியுள்ளார்! யதார்த்த நிலை இப்படியிருக்க> புலம்பெயர்வின் சிலர்கள் இலங்கை போய் > மகிந்த மன்னனின்> அடியாட்களை சந்தித்ததில்> படம் எடுத்ததில்> புளகாங்கிதம் அடைந்ததில்> இஙகு வந்து அபிவிருத்தியே ஆதாரம் > பிரதான முரன்பாடென> கதை அள்க்கின்றார்கள்> கட்டுரை ஆக்குகின்றார்கள்! இதை ஊடகமு;ம் செய்யப்பட> பெரும் “யதார்த்தவாத> தத்துவ ஆய்வாளர்கள்” ஆக்கப்பட்டுள்ளார்கள்! மற்றவர்களை நடைமுறையற்ற-கற்பனாவாத- (ஏதோ) கீபோட் என்கின்றார்கள்! இதைப்பற்றி கேடடால் பதில் இல்லாமல் ஓடி ஒளிக்கின்றார்கள்! இவர்களை என்ன யதார்த்த மார்க்சிச வாதிகள் எனலாம்! விஷயம் தெரிந்தவர்கள் என்னவென்று சொல்லுங்கள்!

 2. “புலிகள் ஆரம்பத்தில் வெறுமனே ஆயுதங்களைச் சேர்த்துக்கொண்டு மக்களிலும் அதிகமாக்ப் பலம் பெற ஆரம்பித்ததன் விளைவே தன்னளவில் பாசிசத் தன்மையைப் பெற்றுக்கொண்டது” என்ற செஞ்சட்டைத் தோழர் சபா.நாவலனின் கண்டு பிடிப்பு அவரது வரட்டு சித்தாந்தங்களின் அடிப்படையில் வீசப்படும் கண்டனமாகும். இந்த அரிப்பு தங்களை பொதுவுடமைவாதிகள் என்று இன்னமும் சொல்லிக்கொண்டு திரிபவர்களிடம் காணப்படுகிறது. வி.புலிகள் மக்கள் எப்போதும் இருந்தார்கள். தொடக்கம், இடைக்காலம், கடைசிக்காலம் என முக்காலமும் வி.புலிகளுக்கு ஆதரவாகவே இருந்தார்கள். புலம்பெயர்ந்த மக்களிடம் இந்த ஆதரவு இன்னும் அதிகமாகவே இருந்தது. அந்த மக்ககள் பலம் இருந்த காரணத்தாலேயே வி.புலிகளின் போராட்டம் 30 ஆண்டுகாலம் நீடித்தது.

  1. முதலில் மக்கள் எல்லா விடுதலை இயக்கங்களுடனும் தான் அனுதாபத்துடன் இருந்து வந்தாரகள்.
   பின்பு மேலாதிக்கத்துக்கான போட்டியின் விளைவகப் பல அப்பாவி இளைஞர்கள் பலியானார்கள்.
   அதைத் தட்டிக் கேட்க இயலதளவுக்கு மக்கள் இயக்கங்களால் அடக்கப்பட்டு வந்தார்கள்.
   புலிகளுக்கு மக்களின் ஆதரவு என்பது, செயற்கையாக உருவான ஒரு சூழலில், வேறு வழியற்று அந்நிய & பேரினவாத ஒடுக்குமுறைகளின் முன்னே இருந்த தெரிவே அன்றி அவர்கள் முதலாக எந்த விடுதலை இயக்கமும் மக்கள் இயக்கமாக அமையவில்லை.
   மக்களை மேய்க்கும் இயக்கங்களே இருந்தன.
   மக்கள் முன்னால் தெரிவுகளை எந்த விடுதலை இயக்கமும் வைத்ததா?
   எல்லாமே ராச கட்டளைகள் தான்.

 3. உககம் எங்கும் போராட்டம் தோல்வியைத் தழுவ ஒரே காரணம் தான் அமைந்துள்ளது என்ற ஆய்வு இலங்கைக்கும் பொருந்துகிறது.

 4. புலிகளின் முக்காலம் வரை> மக்கள் புலிகளால் விரட்டியே அழைத்துச்செல்ப்பட்ட சங்கதியை சரிவரப் புரியவில்லை! தலைவர்i மக்கள் மத்தியில் இருந்திருந்தால்> நந்திக்கடற்கரையில் கோவணத்துடன் தனியாக கிடக்கும் நிலை வந்திருக்காது

  1. முட்டாள்! ராஜ பக்சேக்களின் நாடகத்தை உண்மையென்று ஏற்றுக் கொண்டு தலைவரை அவமதிக்கும் சிறுமதி முட்டாள்.

 5. ஸ்டாலின் மற்றும் மாஓ போன்ற தலைவர்கள் குறித்து சபா நாவலன் முன்வைத்த விமர்சனங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அவர்களைக் கடவுளாகப் போற்றும் ஒரு சாராரும், துரோகிகளாக தூற்றும் இன்னொரு சாராரும் கட்டுரையை மீண்டும் படிக்க வேண்டும்.

 6. போராளீகள் காய்ந்தும்,கறூத்தும் தளபதிகள் பெருத்தும்,சிவந்தும் திடகாத்திரமாக இருந்ததும் யார் சாப்பிட்டார்கள் யாரை சாப்பிடக்கொடுத்தார்கள் என்பதை இனங்காட்டும் போது நான் பிடிச்ச முயலுக்கு மூன்றூ காலென்றூ நிற்பது அழகல்ல.நமது விடுதலைப்போராட்டம் தன் பாதை மாறீ பயணீத்ததெ நம் தோல்விக்கான காரணம்.இந்தியா நமக்கு நல்ல செய்தி தரும்.அண்மையில் தமிழக முதல்வர் இதையே வலியுறூத்தி உள்ளார்.ஆகவே பொறூத்திருப்போம்.

  1. ஈழப்போராட்டத்தை அதன் சமூக உளவியல் பொருளாதார புவியியல் பின்னணியில் ஆராய வேண்டும்.போராட்டத்தின் வளரிச்சியும் வீழ்ச்சியும் அதற்கெயுரிய தனித்துவமான  காரணங்களை கொண்டிருக்கிறது.இப்படியான மேலோட்டமான கருத்தாய்வுகள் ஏற்கனவே உருவாக்கியிருக்கப்பட்ட சித்தாந்தங்களை பொருத்திப்பார்க்கிற அரைவேக்காட்டுத்தனமான ஆய்வுகள் ஏமாற்றத்தை தருகின்றன.தமிழ்ச்சமூகம் பிளவுபட்ட , தன் முனைப்புக்கொண்ட சிக்கலான சமுகமாக இருந்தது.இருக்கிறது.தொடங்கப்பட்ட விடுதலப்போராட்டமும் ஆரம்பத்திலெயே மரித்துப்போகக்கூடிய நிலையிலேயே இருந்தது.உட்பூசல்கள் மலிந்த உட்கொலைகள் நிறைந்ததாக 80கள் இருந்தன.அது எப்படி இத்தனை ஆண்டுகள் கடந்து இப்போது .?ஆராயப்படவேண்டியது ஆழமானது.அரிச்சந்திர மயானகாண்டம் கூத்து பிரபலமான நிகழ்வு ஒரு காலத்தில் .அரிசந்திரன் பொய் சொல்லாததனால் அவனது குடுமபம் அழிந்து மயானத்துக்கு செல்லுகிறது.தாங்க முடியாத அழிவிலும் சமரசம் செய்யமறுக்கிற இயல்பு ,போற்றப்ப்டுகிறது?
   தமிழீழத்தை வன்னியில் உருவாக்கியிருந்தார்கள். அவர்கள் நிருவாகம் கூட இருந்தது.இலங்கை அரசின் போர் இன்னொரு நாட்ட்டின் மேலான போராகவே இருந்தது.இந்தியவுக்கும் சீனவுக்கும் போர் நடந்தால் இந்தியர்கள் சீனவுக்கு ஓடுவார்களா?உலகம் இந்தியாவை மக்களை ப்ணயம் வைக்கிறீர்கள் என்று சொல்லியிருக்குமா? அரசாகவும் பொர்ரட்ட அமைப்பாகவும் ஒரு சிக்கலான நிலைக்குள் சிக்குண்டிருந்தார்கள்.
   மக்கள் குழுக்களை உருவாக்கி அதிலிருந்து இராணுவத்தை உருவாகியிருக்கலாமோ? பத்து இயக்கஙளும் பத்து மக்கள்குழுவும் அவர்களிடம் அயுதமும் தனினாடை உருவாக்கியிருக்குமா?ஆயுதமற்ற அரசியற்கட்சிகள் பல இருந்தால் அது ஜனனாயகம்/ ஆயுதக்குழு ஒன்று ஆட்சி செய்தால் அது பாசிசம்.ஆயுதக்குழுக்கள் பல இருந்தால் அதற்கு என்ன பெயர்?
   மேலோட்டமாக  ”இசங்”களுகூடாக பார்ப்பதை விட்டுவிட்டு எம்ம்மக்களின் வரலாறுக்கூடாக ,அவர்களின் தனித்தன்மைக்கூடான் பார்வைக்குடாகத்தான் ஒரு தெளிவை அடைய முடியும்

  2. ஓமோம்.நீரும் பொறுத்திரும்.உமது பிள்ளையும் பொறுத்திருக்கும். பிறகு அதன் பிள்ளையும் பொறுக்கும். இப்டியே அடிமையா வாழ்ங்கடா. இந்தியா எப்பவுமே தான் திண்ட ( தனது சுயநலனுக்கு பிறகே) மிச்சத்தையே எப்பவும் எமக்கு தரும். இலங்கை தன் ஆட்டத்துக்கு ஆடாட்டி ,உடனே கருனானிதியை வைச்சு கதை-வசனம் எழ்த தொடங்கி விடும்.

 7. த்னி மனித உரிமை என்பது வேறு.ஓரு சமுதாயத்தின் உரிமை என்பது வேறு..பாசிச சக்திகள் மனிதாபிமான்ம் பார்த்த வரலாறு இது வரை உலகம் கண்டதில்லை.ஒரு சமுதாயத்தின் உரிமைகள்நசுக்க்பபடும்போதும், ஒடுக்க்ப்படும்போதும் உணர்வுகள் பொங்குவதும் அது எரிமலையாவதும் இயற்கை.ஒருபோராட்டம் வெல்வதும் தோற்பதும் அதன் வலிமை பொறுத்த்து..ஆனால் உனர்வு..ஒருபோதும் தோற்காது.உரிமைப்போர் தோற்ற வரலாறு இல்லை. ஜன்நாயகம் என்று வாயினிக்க பொய் சொல்லி ஒரு சம்முதாயத்தினை வ்ல்லரசுகளின் துனை கொண்டு கருவறுப்பதா ஜனநாயகம்?

 8. Give the awarness programme to every individual person by the way of emails or any other communications.

 9. சபாநாவலன் போன்றோர் தோற்றுவிட்ட இந்திய மார்க்சியத்தை தூக்கி நிறுத்துவதற்காக செய்யும் அயோக்கியத்தனமே தமிழ் இயக்கங்களின் செயல்பாடுகளை ஆதரிப்பதுபோல் தூற்றுவது … அதாவது நக்கீரனும் ஜெகத்கஸ்பரும் போல……. இன்றைய மார்க்சீயம் இந்தியாவை பொருத்த அளவில் முதலாளிகளீன் கைப்பாவை ஆகிவிட்டது….. அந்த முதலாளிகளின் வியாபார பெருக்கத்துக்காக ஈழம் துரோக உச்சியில் கொடுமைக்குள்ளாக்கப் பட்டது… மார்க்ஸ் சொன்ன இன விடுதலைக்கான் தத்துவம் இந்த இடத்தில் இந்திய மார்க்சிய வாதிகளால் வசதியாக மறக்கப்பட்டு… அது இந்துராம் போன்ற பார்ப்பன பூணூலிஸ்டுகளுக்கு வழியாக்கப்பட்டது… பதவீக்காக டெல்லியை நக்கும் திமுக வால் மேலும் வலுவாக்கப்பட்டது… தோற்றவணை வஞ்சமாக தோற்க்கடிக்கப்பட்டவர்களை… வென்ற துரோகிகளின் சார்பாக எவன் எப்படியும் பேசலாம் அந்தவழியில் இக்கட்டுரை உள்ளது

  1. தயவு செய்த்து எந்த மர்க்சியம் தோற்றது என்று சொல்வீர்களா?
   இன்று இந்தியாவில் யாரை மார்க்சிஸ்ட்டுக்கள் என்று கருதி எழுதுகிறீர்கள் என்று சொல்வீர்களா?
   சபாநாவலன் அவர்களில் ஒருவர் என்கிறீர்களா?
   ஏன் என்று சொல்வீர்களா?

   திரிபுவாதம் பற்றிய பிரச்சனை காலத்துக்குக் காலம் இருந்து வந்த ஒன்றே.
   திரிபுவாதிகளை முன்வைத்து, ஒட்டு மொத்தமாக மர்க்சியத்துக்கு வசை பாடுவதும் இருந்து வந்த ஒன்றே.

 10. நக்கீரன்,நான் இங்கு மக்கள் ஆதரவைப் பற்றிக் குறிப்பிடவில்லை. மக்களை அதிகாரமுடையவர்களாக உருவாக்குவது (Empowering People) எப்படி என்பது குறித்தே பேச முனைந்துள்ளே. மக்கள் அதிகாரத்தை உருவாக்குவதனூடாக பாசிசத்தின் தோற்றுவாயை எதிர்கொள்ளல் எப்படி என்பதன் வரலாற்று அனுபங்களை ஆதாரமாக முன்வைத்துள்ளேன். இவறிற்கு உலகம் முழுவதும் எழுந்த கோட்பாடு சார்ந்த விவாதங்கள் கூட நிறைய உண்டு.

  நொயல் நதி,
  இந்திய மார்க்சியம் இலங்கை மார்க்சியம் என்று குறுகிய வரைமுறை ஏதும் கிடையாது. மார்க்சியத்தை சமூகத்தை, அதன் புறநிலை யதார்த்ததை ஆராய்வதற்கான முறை என்பதை முதலில் புரிந்துகொண்டு, அதன்னை மாற்றும் இயங்கியலை முன்வைப்பதே சரியானதாகும். எனக்கு இந்திய மார்க்சியம் என்று நீங்கள் குறிப்பிடுவது புரியவில்லை. நாவலன்

 11. இந்தியாவில் மார்க்சிசம் இல்லை ஆச்சிரம்தான் இருக்கிறது.பல்வேறான கலாச்சாரம்,பண்பாடுகள் இருந்தாலும் இந்தியா,இந்தியன் உணர்வுதான் இருக்கிறது.

Comments are closed.