‘தோட்டக்காட்டி’ கவி நூல் அறிமுக நிகழ்வு

open bookதேசிய கலை இலக்கிய பேரவை நூரளைக்களையின் ஏற்பாட்டில் தமிழகக்கவிஞர் இரா.வினோத்தின் ‘தோட்டக்காட்டி’ கவிதை நூல் அறிமுக நிகழ்வு இராகலை சென்லெனாட்ஸ் கலாசார மண்டபத்தில் 2014.09.21 ம் திகதி இடம்பெற்றது. இதில் தலைமையுரையை பத்தனை ஆசிரிய பயிற்சி கலாசாலையின் உபபீடாதிபதி ஜெ.சற்குருநாதனும், அறிமுகவுரையை கவிஞர் இராகலை பன்னீரும் ஆய்வுரையை பேராதனை கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் கவிஞர் மை.பன்னீரும், கருத்துரையை சட்டத்தரணி எஸ்.மோகனராஜனும் நிகழ்த்தினர்.
தலைமையுரையில்;
‘வராலாற்றினை ஆவணப்படுத்தும்போது அதை எவ்வாறு ஒரு படைப்பிலக்கியத்துள் கொண்டு வருவது என்பது முக்கியமானது. வரலாற்றை ஆவணப்படுத்துவதில் கோகிலம் சுப்பையாவின் ‘தூரத்துப்பச்சை’இ ‘இனி பாட மாட்டேன்’ எனும் சி.வி.வேலுப்பிள்ளையின் நாவல் என்பன குறிப்பிடத்தக்கன. இவை மலையக மக்கள் அரசியலை, வரலாற்றை கூறியிருந்தாலும் முழுமையாக கூறியுள்ளதா என்பது கேள்விக்குறியானதே.
உலகில் அலெக்ஸ் ஹயிலியின் வேர்கள் கருப்பின மக்களின் அடிமை வரலாற்றை ஆதாரபூர்வமாக கூறுகின்றது. அருந்ததிராயின் ‘நொருங்கிய குடியரசு’ நக்;சலைட் போராளிகளின் தகவல் அவர்கள் பற்றிய உண்மையான தகவலை மக்களுக்கு கூறுகின்றார். அவர் வரலாற்றினை நேரடியாக சென்று பெண்கள் பிரச்சினைகள், பிள்ளைகள் என பலவற்றினை செழுமையாக ஆவணப்படுத்தியுள்ளார.; .குறிஞ்சித்தேன், எரியும் பனிக்காடுகள், எனும் நாவல்களும் வீடற்றவன் போன்றனவும், அண்மையில் பரதேசி எனும் எரியும் பனிக்காட்டினை திரிபு படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படம் என்பனவற்றை ஆவணங்களாக கருதலாம்.
மலையகத்திற்கு அப்பால் பர்மா, பிஜித் தீவுகள், மலேசியா, கரிபியன் தீவுகள், மடகஸ்கர் என பல இடங்களுக்கு இந்தியாவிலிருந்து மக்கள் வேலை திமித்தம் இடம்பெயர்ந்துள்ளனர். ஏனையோர் தமது மொழி, கலாசாரத்தினை இழந்து வாழ்ந்துள்ளனர். மலையக மக்கள் இன்னும் தனித்துவமான தனி தேசிய இனமாக இருந்து வருகின்றனர்.
இலங்கைக்கு குடிபெயர்ந்த மக்கள் ஆங்கிலேய காலத்திற்கு முன்பு இந்திய மன்னன் படையெடுப்புகள், விஜயனின் வருகையோடு தொடங்கியதுடன், அதற்கு முன் நாக இனத்தினர், இராவணன் போன்றோர் இருந்ததாக சான்றுகள் கூறுகின்றன. இவர்கள் அனைவரும் இந்தியாவிலிருந்து வந்தவர்களே. மலையக தமிழர் இறுதியாக வேலை நிமித்தம் இடம்பெயர்ந்தனர். ஏனையோர் படையெடுப்பு, வியாபார நோக்கங்களுக்காக இடம்பெயர்ந்தனர்.
இன்று வன்னி நிலப்பகுதியில் சுமார் 200,000 மக்கள் வாழ்கின்றனர். இவர்களையும் ஒன்று சேர்த்து எவ்வாறு வரலாற்றினை ஆவணமாக்குவது எவ்வாறு இலக்கியத்துடன் உள்வாங்குவது என்பது கவனிக்க வேண்டியது.
இலங்கையில் 1948ம் ஆண்டு குடியுரிமை சட்டம், 1964, 1974, ஒப்பந்தங்கள் மலையக மக்களுக்கு இழைத்த துரோகம், 1956 இன் பின்பு இலங்கையில் தோன்றிய மிக முக்கிய இயக்கங்கள்;
01. இடதுசாரி இயக்கங்கள்
02. இலங்கை இந்திய காங்கிரஸ்
03. திராவிட இயக்கம்
இவற்றின் பணிகள் வரலாற்றில் பதியப்படவேண்டும்.

சி.வி போன்றோர் மலையக மக்களின் தேசியத்தினை பற்றி பேசுகின்றனர்.
ஓர் விமர்சனம் மலையக கவிதைகள் பற்றி முன்வைக்கப்படுகிறது. மலையக கவிதைகள் உள்ளடக்கத்தினை கொண்டிருக்கின்றன. ஆனால் உருவம் இல்லை என, ஆனால் மலையக கவிதைகள் உணர்ச்சியின் வெளிப்பாடு, சாதாரண தோட்டத் தொழிலாளர்களின் கவிதை. வெர்களுக்கு இலக்கணம் தெரியாது. உணர்ச்சிக்கு இலக்கணம் தடை போட முடியாது.
மு.சிவலிங்கத்தின் மூன்று சிறுகதை தொகுதிகள் மலையக மக்களை செம்மையாக ஆவணப்படுத்துகின்றன. நாடற்றவர்களாக மலையக மக்கள் ஆக்கப்பட்ட பின்பு அவர்களின் நிலை, அழுகைக்கோச்சி என பல சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளார். வடக்கில் மக்கள் எவ்வாறு துன்பப்பட்டனர். சாதி ஒடுக்குமுறை, யுத்தம் இழைத்த துன்பம், யாழ் தமிழர் செய்த கொடுமை பாரபட்சம் என்பன பற்றி சிறுகதைகள் கூறுகின்றன.
இவ்வாறு இலக்கியங்கள் வரலாற்றினை ஆவணப்படுத்துக்கின்றன. இரா.வினோத் ‘தோட்டக்காட்டி’ நூலில் கவிதையில் வரலாற்றை கூற முற்பட்டுள்ளார். ‘தோட்டக்காட்டி’ நூலில் மலையக மக்கள் பற்றிய வரையறை, அடையாளம், ஓர் அறிமுகம் இல்லை. மக்களின் போராட்டங்கள்

 உருளுவெலி போராட்டம்
 பிந்துனுவௌ போராட்டம்
 சிவனு லெட்சுமன் போராட்டம்
 கோவிந்தன் போராட்டம்
 சிறுபாத கல்வியல் கல்லூரி போராட்டம்
 மேல் கொத்மலை திட்டத்திற்கெதிரான போராட்டம் என்பனவற்றை தோட்டக்காட்டி ஆவணம் செய்ய தவறியுள்ளது.
துன்பக்கேணி 1ம் பகுதி இந்தியாவின் மண்டப முகாமில் முடிகிறது. 2ம் பகுதி இலங்கை பகுதி. முதற் பகுதி புதுமைப்பித்தன் இருந்த தமிழ் நாட்டின் கதை யதார்த்தமானது உண்மையானது. 2ம் பகுதி புதுமைப்பித்தன் இலங்கை வராமல் படைத்த படைப்பு எனவே அவ்வளவாக யதார்த்தம் இல்லாமல் உள்ளது. கோகிலம் சுப்பையா இந்தியாவிலிருந்து வந்து தூரப்பச்சையை இலங்கையிலேயே படைத்தார் எனவே அது தத்ரூபமாக உள்ளது.
இக் கவிதையிலும்; மலையக மக்களின் முடிவு, பாதை என்ன என்பது பற்றி கூறாமல் போயுள்ளார். வைரமுத்துவைப்போல ‘கல்லிக்காட்டில் வளர்ந்த தாயே’ என அவசரப்பட்டு இந்தாவணக்கவிதைகளை படைக்க முடியாது. அவதானம் தேவை.

பின்லாந்து மக்களுக்கு சுதந்திரத்தின் பின்பு வரலாறு இருக்கவில்லை மக்களின் நாட்டார் பாடல்களே வரலாறானது. மலையகத்தில் நாட்டார் பாடல்கள் வெறுமனே வந்தவையல்ல உழைப்பும், வேர்வையும், அனுபவமும், நோவும், விரக்தியும், நாட்டார் பாடலாக வரலாறாக பாடப்பட்டுள்ளன. அவை இம்மண்ணை உருவாக்கியுள்ளன. ‘தோட்டக்காட்டி’ முகம் தெரியாத ஓர் இந்தியக்கவிஞனின் படைப்பு, இங்குள்ளவர் அல்ல வந்து தேடி, தெரிந்து எழுதி உள்ளார். பூரணமாக தகவல் கிடைக்காமல் போயிருக்கலாம். ஒழுங்காக வழிகாட்டப்படாமலிருந்திருக்கலாம். நாமெல்லாம் ஒன்றும் எழுதாமல் சொல்லாமல் இருக்கும்போது இரா.வினோத்தின் இம்முயற்சி பாராட்டத்தக்கது. தானியா எனும் ஊ.ஐ.யு உளவாளி பொலிவியாவில் இறக்க முன்பு கூறியுள்ளார் ‘கண் முன்னே துயரங்கள் நடக்கும்போது மண்ணிக்க முடியாத பெரிய குற்றம் மௌனம்’ எனக் கூறுகின்றார். நாமும் எமது வரலாற்றை ஆவணப்படுத்த துன்பம், அநீதிக்கெதிராக போராட எழுத, பேச முன்வரவேண்டும்.’ எனக்கூறினார.

One thought on “‘தோட்டக்காட்டி’ கவி நூல் அறிமுக நிகழ்வு”

Comments are closed.