தொடரும் இலங்கை அரச பயங்கரவாதம் : ஊடகங்கள் மீதான தாக்குதல்களாக..

லங்கா சிங்கள வாரப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த நேற்று மாலை குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்பத்திரிகையின் கடந்த வார இதழில் வெளியாகியிருந்த கட்டுரையொன்று தொடர்பில் விசாரணை நடத்தும் பொருட்டே அவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது கைது தொடர்பாக தமக்கு தெரியவந்த போதிலும் அது குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் உத்தியோகபூர்வமான முறையில் அறிவிக்கப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை வெளியான லங்கா பத்திரிகையில் சத்மெத லங்கா (உண்மைக்கு மத்தியில் இலங்கை) என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் கோதபாய ராஜபக்ச தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விளக்கமளிக்குமாறு அதன் ஆசிரியர் சிறிமல்வத்தவை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்றுக் காலை அறிவித்திருந்தனர்.
இதே வேளை பிரதீப் எக்னெலிகொட என்ற ஊடகவியலாளர் மகிந்தவையும் சரத் பொன்சேகாவையும் ஒப்பு நோக்கி எழுதியதி பின் கடத்தப்பட்டுக் காணாமல் போனபின் இவர் குறித்த எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.தேர்தல் குறித்து பல ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து Committee to Protect Journalists அமைப்பு அறிக்கை விடுத்துள்ளது.