தேர்தல் வன்முறைகளைத் தடுக்க மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையத்தினால் மூன்று மனுக்கள்!

 

 

 எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுக்க மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்ய உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெற்ற வன்முறைகள் மீண்டும் இடம்பெறாத வகையில் தடுக்கும் நோக்கில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடாத்த தேர்தல் ஆணையாளருக்கு உத்தரவு பிறக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

இடம்பெயர் மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி ஏற்கனவே அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 11ம் திகதி நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர் மக்கள் சுதந்திரமான முறையில் வாக்களிப்பதற்கு தேவையான போக்குவரத்து உள்ளிட்ட சகல வசதிகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையாளர் மற்றும் ஏனைய தேர்தல் அதிகாரிகள் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நியாயமான தேர்தலுக்கான உத்தரவாதத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் தமது அமைப்பு இன்னும் சில அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் வன்முறைகள், அரச சொத்து துஸ்பிரயோகம், ஊடகங்களில் சட்டத்திற்கு முரணான பக்கச் சார்பான தேர்தல் பிரச்சாரங்களை தடை செய்தல் போன்றவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.