தேர்தலை நிராகரித்து வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்கிக் கொள்வதே உரிய வழிமுறையாகும்:புதிய ஜனநாயகக் கட்சி

ஜனாதிபதித் தேர்தல் பற்றி புதிய ஜனநாயகக் கட்சியின் மத்திய குழு
நிறைவேற்றிய தீர்மானம் பற்றிய அறிக்கை:

ஊடகங்களுக்கான அறிக்கை 18.12.2009

ndp-300x961எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் மக்கள் வாக்களிக்காது வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்க வேண்டும். அதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சர்வாதிகார ஜனாதிபதி முறைமையை நிராகரித்து ஒழிப்பதற்கான வெகுஜன எதிர்ப்பியக்கத்தை முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் முப்பத்தியொரு வருடமாக இருந்து வரும் தனிநபர் சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிரான தமது வெறுப்புணர்வையும் எதிர்ப்பையும் அனைத்து மக்களும் குறிப்பாகக் தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்கள் வெளிப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை புதிய ஜனநாயகக் கட்சியின் மத்தியகுழு ஏகமனதாக நிறைவேற்றியது.

ஜனாதிபதித் தேர்தலில் கட்சி மேற்கொள்ளவேண்டிய நிலைப்பாடு பற்றி விவாதித்த மத்தியகுழு மேற்படி தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றிக் கொண்டது. இத்தீர்மானம் பற்றி கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

கடந்த 31 வருட நிறைவேற்று அதிகாரம் கொண்;ட ஜனாதிபதி ஆட்சி முறையின் கீழ் இந்த நாடும் மக்களும் பல்வேறு நிலைகளில் பொருளாதார நெருக்கடிகளையும், அரசியல் அடக்குமுறைகளையும், அநீதிகளையும், அழிவுகளையும் துன்ப துயரங்களாக அனுபவித்து வந்துள்ளனர். மூன்று தசாப்தகால பேரினவாத முதலாளித்துவ யுத்தத்திற்கும் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கும் காரணமாக அமைந்தவற்றில் இவ் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது முதலிடம் வகித்து வந்துள்ளது.

யுத்தத்தை ஆரம்பித்து வைத்தவர் மறைந்த முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா. 30 வருடங்களுக்குப் பின்பு தமிழ் மக்களின் இரத்த வெள்ளத்தில் யுத்தத்தை முடித்து வெற்றி விழா கொண்டாடி நிற்பவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. அதேவேளை யுத்த களத்தில் கொடூர யுத்தத்தை முன்னெடுத்து வந்தவர் இராணுவ ஜெனரலான சரத் பொன்சேகா. ஜனாதிபதி ராஜபக்ஷவும் ஜெனரல் பொன்சேகாவும் இணைந்தே இறுதி யுத்தத்தை முன்னெடுத்தனர். இவர்கள் இருவரும் இன்று ஒருவரையொருவர் எதிர்த்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டாலும் இருவருமே இந்நாட்டின் உழைக்கும் மக்களினதும் தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ் மக்களினதும் அடிப்படை அபிலாசைகளை நிறைவேற்றத் தக்கவர்கள் அல்லர். இருவருமே தேசிய இனப்பிரச்சினைக்கு மனப்பூர்வமான தீர்வை வழங்கத் தயார் இல்லாத பேரினவாத நிலைப்பாடு கொண்டவர்களாகவே உள்ளனர். இவர்களில் ஒருவரை நல்லவர் எனத் தேர்ந்தெடுத்து மக்கள் வாக்களிப்பதென்பது அரசியல் விவேகமற்ற செயல் மட்டுமன்றி மக்கள் தமது தலைகளுக்குத் தாமே மீண்டும் மண் அள்ளிப் போடுவதாகவே அமையும்.

இரண்டு பேரினவாதக் கட்சிகளின் சார்பாக நிற்கும் இவ்விரு பிரதான வேட்பாளர்களுக்கும் அடக்கப்பட்டு வரும் தமிழ் முஸ்லிம் மலையக மக்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும் என்ற கேள்வியையே எமது புதிய ஜனநாயகக் கட்சி கேட்கின்றது. அதற்கு அப்பாலான கட்சிகளுக்கு வாக்களிப்பதானது அர்த்தமற்றதொன்று என்பதுடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிரான மக்களின் எதிர்ப்பபைத் திசைதிருப்பவும் மறைமுகமாகப் பிரதான வேட்பாளர்களுக்கு உதவுவதாகவும் அமையக் கூடியதாகும்.
மேலும் அவ்வறிக்கையில் இவ் ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஜக்கிய தேசியக்கட்சி தலைமையிலான இரண்டு பேரினவாத முதலாளித்துவக் கட்சி வேட்பாளர்களுக்கும் எதிராகத் தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளும், இடதுசாரிக் கட்சிகளும் இணைந்து தனியொரு வேட்பாளரை நிறுத்தி 50 வீத வாக்குகள் பெறமுடியாத நிலைமையை ஏற்படுத்தியிருந்தால் இன்றைய ஜனாதிபதி முறைமைக்கு ஒரு அரசியல் யாப்பு நெருக்கடியை உருவாக்கி அதில் மாற்றம் கொண்டுவர நிர்ப்பந்தித்திருக்க முடியும். அத்துடன் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வையும் வெகுஜன பலத்தையும் கட்டியெழுப்பியிருக்க முடிந்திருக்கும். இதனையே எமது கட்சி ஏற்கனவே முன்வைத்து வந்தது.

ஆனால் அதனைக் கவனத்தில் கொள்ளாது பிரதான வேட்பாளர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க முன்னிற்கும் சிறுபான்மை கட்சிகள் தத்தமது பதவிகளுக்கும் ஏதிர்காலப் பாராளுமன்றச் சுயநல அரசியலுக்குமாக மக்களுக்கு மிகப்பெரும் துரோகத்தையே செய்து நிற்கிறார்கள். இது கடந்த காலங்களின் ஆளும் வர்க்க ஆதிக்க அரசியலின் தொடர்ச்சியேயாகும். கடந்த 30 வருட யுத்தத்தில் சுமார் இரண்டரை லட்சத்திற்கு மேலான தமிழ் மக்கள் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரம் கோடி பெறுமதியான சொத்துக்கள் அழிவுற்றுள்ளன. பல இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்ததுடன் இறுதியில் மூன்று லட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அகதிகளாகினர். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பேரழிவுகள், அவலங்களின் துயர நிலைகள் இன்னும் மாறவில்லை. இந்நிலையில் இக்கொடிய யுத்தத்திற்கும் மக்களது அன்றாட வாழ்வுப் பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கும் அழிவுகளை ஏற்படுத்திய பிரதான இரு வேட்பாளர்களுக்கும் மக்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும். அவ்வாறே சிங்கள மக்கள் மத்தியில் சுமார் ஒன்றரை இலட்சம் பேரை ஏற்கனவே பலியெடுத்து இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த ஆட்சிமுறையும் இதே சர்வாதிகார ஜனாதிபதி முறையேயாகும்.

எனவே இந்த ஜனாதிபதி ஆட்சி முறைமையையும் அதன் கொடூரமான அதிகாரங்களையும் பதவிக்கு வரும் எவரும் வெறும் தேர்தல் வாக்குறுதிக்காக மனமுவந்து கைவிட்டு மக்களுக்கு ஜனநாயகத்தை கொண்டு வருவார்கள் என்பது வெறும் பகற்கனவேயாகும். எனவே இவ் ஜனாதிபதித் தேர்தலில் அம்முறைமைக்கும் அதில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுக்கும் எதிரான தமது வெறுப்பையும் எதிர்ப்பையும் மக்கள் காட்டுவதற்கு உள்ள ஒரு சந்தர்ப்பம் இத் தேர்தலை நிராகரித்து வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்கிக் கொள்வதே உரிய வழிமுறையாகும். அதன் மூலம் மக்கள் தமது அரசியல் பலத்தையும் வெகுஜனப் போராட்ட மார்க்கத்தையும் மாற்று அரசியலாக முன்னெடுக்க முடியும் என்பதே எமது கட்சியின் வேண்டுகோளாகும்.

சி.கா. செந்திவேல்
பொதுச் செயலாளர்

4 thoughts on “தேர்தலை நிராகரித்து வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்கிக் கொள்வதே உரிய வழிமுறையாகும்:புதிய ஜனநாயகக் கட்சி”

 1. //மூன்றாவது பொது வேட்பாளர் நிறுத்தப்படுவது அரசியல் அமைப்பை மாற்றுவதற்கு உகந்த வழியாகும்:புதிய ஜனநாயகக்கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் இ. தம்பையா//

  //தேர்தலை நிராகரித்து வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்கிக் கொள்வதே உரிய வழிமுறையாகும்:புதிய ஜனநாயகக் கட்சி // 

  ஏன் இந்த (தடு) மாற்றம் ஐயா?

  சிவாஜிலிங்கம் குதித்ததாலா?
    

 2. ஏன் இரண்டு தோணிகளில் கால்வைப்பு? நீங்களும் கடந்த 30வருடங்களுக்கு மேலாக “மக்கள் மத்தியில்தானே உள்ளீர்கள்; சிவாஜிலிங்கத்தைபோல் சுயேட்டை வேட்பாளாராக நின்றிருக்கலாம்தானே!

 3. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல புதிய ஜனநாயகக் கட்சியை குறை கூறுவதையே தொழிலாகக் கொண்டுள்ள விஸ்வனுக்கு

  //இரண்டு பேரினவாத முதலாளித்துவக் கட்சி வேட்பாளர்களுக்கும் எதிராகத் தமிழ் முஸ்லிம் மலையகக் கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளும் இணைந்து தனியொரு வேட்பாளரை நிறுத்தி 50 வீத வாக்குகள் பெறமுடியாத நிலைமையை ஏற்படுத்தியிருந்தால் இன்றைய ஜனாதிபதி முறைமைக்கு ஒரு அரசியல் யாப்பு நெருக்கடியை உருவாக்கி அதில் மாற்றம் கொண்டுவர நிர்ப்பந்தித்திருக்க முடியும். அத்துடன் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வையும் வெகுஜன பலத்தையும் கட்டியெழுப்பியிருக்க முடிந்திருக்கும். இதனையே எமது கட்சி ஏற்கனவே முன்வைத்து வந்தது.

  ஆனால் அதனைக் கவனத்தில் கொள்ளாது பிரதான வேட்பாளர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க முன்னிற்கும் சிறுபான்மை கட்சிகள் தத்தமது பதவிகளுக்கும் ஏதிர்காலப் பாராளுமன்றச் சுயநல அரசியலுக்குமாக மக்களுக்கு மிகப்பெரும் துரோகத்தையே செய்து நிற்கிறார்கள். இது கடந்த காலங்களின் ஆளும் வர்க்க ஆதிக்க அரசியலின் தொடர்ச்சியேயாகும்.//

  முதலில் செய்திகளை முழுமையாக வாசியுங்கள். பின்பு பின்னூட்டமிடலாம். நீங்கள் முழுமையாக வாசிக்காமல் பின்னூட்டமிட்டிருப்பீர்கள். தோலைக்காட்சிக்கோ> வானொலிக்கோ அழைப்பெடுத்து தன் குரலை அதன் வழியாகக் கேட்க விளையும் அற்ப ஆசையும் உங்களது ஆசையும் ஒன்றுதான். அதாவது எப்பாடுபட்டாவது அவதானிப்பைப் பெறுவது. இது வகை மனநோய்.

  நீங்கள் இந்தப் பின்னூட்டத்தை அறிக்கையை வாசிக்காமல் எழுதவில்லை என நான் நம்புகிறேன். உங்களது நோக்கம் பயனுள்ள பாதையில் பயணிக்கவேண்டிய விவாதத்தைத் திசை திருப்புவதே. இதை முன்னும் பலதடவை நீங்கள் இவ்விணையத்தளத்தில் செய்துள்ளீர்கள். விவாதத்தைத் திசைதிருப்ப சிவாஜிலிங்கத்தை உள்ளே இழுக்கிறீர்கள். இதன் மூலம் புதிய ஜனநாயகக் கட்சி தமிழருக்கான வாக்குகளை சிதைக்க முனைகிறது என்று மறைமுகமாகச் சொல்கிறீர்கள். அதன் மூலம் தமிழ் மக்களின் “துரோகியாக” புதிய ஜனநாயகக் கட்சியை சித்தாpக்கிறீர்கள். தயவுசெய்து விவாதம் பயனுள்ள வழியில் செல்ல அனுமதியுங்கள். மக்களைப் பேச விடுங்கள். கடந்த யாழ் மாநகரசபைத் தேர்தலைப் புறக்கணித்ததன் மூலம் மக்கள் தாம் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதை உணர்த்தியிருக்கிறார்கள்.

 4. தயவு செய்து நான் ஏற்கெனவே வௌ;வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய எனது அபிப்பிராயங்களைத் தேடிப் படித்து விட்டு இணையத்தில் பெயர் வர வேண்டும் என்பதற்காக எழுதுகிறேனா அல்லது நியாயமான கேள்விகளை எழுப்புகிறேனா என்ற முடிவுக்கு வருவது தான் நல்லது. 
  ஆய்விலிருந்து முடிவே தவிர உங்கள் முடிவிலிருந்து ஆய்வல்ல? புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 
  நான் அபிப்பிராயங்கள் எழுதிய சந்தர்ப்பத்திலெல்லாம் எந்த ஒரு தனி நபரைத் தாக்கும் வகையிலோ முறைகேடான வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்தோ எழுதியதில்லை. நியாயமாக வேள்வி எழுப்ப வேண்டும் என்று கருதும் சந்தர்ப்பங்களில் கேள்வியெழுப்பியிருக்கிறேன்.  சிலர் அதற்குப் பதிலளித்திருக்கிறார்கள். பதிலில் ஏற்கக் கூடியவையும் இருந்தன. ஏற்க முடியாதவையும் இருந்தன. வுpவாதம் என்பது எப்போதுமே அவ்வாறு தான் இருக்கும் என நம்புபவன் நான். அது கேள்விகளிலிருந்து இன்னும் பல கேள்விகளை உருவாக்கும். 
  இனியொரு இணையத்தின் ஆசிரியர்களான சபா நாவலனும் யோகன் கண்ணமுத்துவும் கூட பொறுப்புணர்வோடு பதிலளித்திருக்கிறார்கள். அத்தகைய பண்பு தங்களுக்கு ஏன் இல்லை என்று தெரியவில்லை. தங்களுக்கு மட்டுமல்ல தங்களைத் தாங்களே இடதுசாரிகளாகச் சொல்லிக் கொள்ளும் பலருக்கு இல்லை என்பது தான் வெள்ளிடை மலை. 
  மார்க்ஸியத்த்pன் அடிப்படையே கேள்விகளிலிருந்து ஆரம்பிப்பது தான். நம்பிக்கைகளிலிருந்தல்ல. இரயாகரன் மற்றும் உங்களைப் போன்றோருக்கு பைபிளையும் வேதாகமங்களையும் குர் ஆனையும் போல் அது கேள்வி விசாரணையற்ற ஒன்றாகத் தெரியலாம். ஆனால் மார்க்ஸியம் அடிப்படையிலேயே அதற்கு எதிரானது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியுமோ என்னவோ நானறியேன். 
  இரயாகரனும் அவர் தொடர்பாக அவரது கருத்துக்கள் தொடர்பாக யாராவது கேள்வி கேட்டு விட்டால் மார்க்ஸிய விரோதி துரோகி திரிபுவாதி பாஸிஸ்ட் என்று சில சொற்களை வைத்துக் கொண்டு ஒரு புத்தகம் எழுதி விடுவார். 
  அவரைப்போல் புதிய ஜனநாயகக் கட்சியினரோ ஆதரவாளர்களோ இருக்கக் கூடாது என்பது எனது அவா. அந்த வேணவா தவறானால் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். 
  எனது கேள்வி மிகத் தெளிவாகத் தான் இருந்தது. இன்னும் விளக்கினால் பு.ஜ.கட்சியின் தேசிய அமைப்பாளர் தம்பையா பொது வேட்பாளரை நிறுத்தி தேர்தலில் பங்கேற்பது குறித்து பேட்டியளிக்க கட்சி வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்குவது என்ற தீர்மானத்தை அறிவித்திருக்கிறது. 
  டிசம்பர் 12ஆம் திகதி தம்பையாவின் பேச்சு பதிவிடப்பட்டிருக்கிறது. டிசம்பர் 18ஆம் திகதி மத்தியகுழுவின் அறிக்கை வந்திருக்கிறது. 
  இந்த ஆறு நாட்களுக்குள் முடிவு இவ்வாறு மாற காரணம் என்ன என்பது தான். 
  இப்படிக் கேள்வி கேட்பது விவாதத்தை எப்படித் திசை திருப்பும் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த ஆறு நாட்களுள் நடைபெற்ற ஒரேயொரு மாற்றம் சிவாஜிலிங்கம் தேர்தலில் குதித்ததாக அறிவித்திருப்பது தான். அதனால் தான் அந்தக் கேள்வியை இரண்டாவதாக முன்வைத்திருந்தேன். 
  இது எப்படிக் குறை கண்டு பிடிப்பதாகும். இடதுசாரிகள் எப்படி மக்களிலிருந்து அந்நியப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு தங்களைப் போன்றவர்களும் ஒரு காரணம் என்பது இப்போது புரிகிறது. 
  கட்சியில் ஆர்வமேற்பட்டு அதேநேரம் கேள்விகளுடன் வரும் ஒரு ஆதரவாளருக்கு இரயாகரன் போல் தான் தாங்களும் பதிலளிக்கப் போகிறீர்களா? ஆவ்வாறு பதிலளித்துவிட்டு நான் நான் மட்டும் தான் மார்க்ஸியத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன் என்று ஒப்பாரி வைக்கப் போகிறீர்களா?
  எனக்கு இன்னும் சில கேள்விகள் இருக்கின்றன. நான் அக் கேள்விகளை எழுப்பாவிட்டால் அக்கேள்விகள் இல்லையென்று அர்த்தமாகிவிடாதில்லையா?
  சிறுபான்மைக்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்துவதற்குப் பதிலாக பேரினவாதக் கட்சிகளின் பின்னால் இழுபட்டுச் செல்கின்றன என்று குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். நியாயமான குற்றச்சாட்டு. ஓன்றில் யுஎன்.பி அல்லது சுதந்திரக்கட்சி என்பது தான் அவர்களின் அரசியல். அதிலிருந்து அவர்கள் வெளிவராதவரை மக்களை மீள மீள அடிமைத் தளைக்குள் தான் தள்ளி விடும். 
  பொது வேட்பாளர் என்ற அடிப்படைக்கு அவர்கள் வராததற்கு அவர்களுடைய சுயநல அரசியலைத் தவிர வேறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. 
  ஆனால் அதேநேரம் மக்களது அரசியலை முன்னெடுப்பதாகச் சொல்லும் இடதுசாரிகள் கூட ஒரு பொது வேட்பாளரை நிறுத்த முடியவில்லையே இது ஏன்? 
  நவசமசமாஜக்கட்சின் சார்பில் விக்ரமபாகு கருணாரத்ன. ஐக்கிய சோஷலிசக் கட்சியின் சார்பில் சிறிதுங்க ஜயசூரிய, புதிய ஜனநாயகக்கட்சி வாக்குச் சீட்டை செல்லுபடியாக்குவது என்று மூன்று  முனைகளிலல்லவா நிற்கிறார்கள். (கம்யூனிஸ்ட்கட்சியும் லங்கா சமசமாஜிகளும் மகிந்தவை ஆதரிக்குமு; முனை என்பது வேறு விடயம்.) சுயநல அரசியலை மேற்கொள்பவர்கள் தான் ஒரு ஐக்கியத்திற்கு வர முடியாதவர்கள் என்றால் மக்கள் அரசியலை மேற்கொள்பவர்களால் பொது எதிரிக்கெதிராக ஒரு ஐக்கிய முன்னணிக்குவர முடியாததற்கு எது காரணம் என்பதை விளக்குவீர்களா?
  இந்தக் கேள்வி புதிய ஜனநாயகக்கட்சிக்கு மட்டுமல்ல நவசமசமாஜக்கட்சிக்கும், ஐக்கிய சோஷலிஸக்கட்சிக்கும் மற்றும் இடதுசாரிகளுக்கும் ஆனது தான். 
  இதை இடதுசாரிகள் மீதான வசைபாடல் என்று நீங்கள் தொடங்குவீர்களாயின் இரயாகரனின் இடத்திலேயே தங்களையும் வைப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. 
  பிற்குறிப்பு: வலதுசாரிக் கட்சிகளில் நம்பிக்கையிழந்து இடதுசாரிகளின் பக்கம் திரும்புகிற போது மார்க்ஸியத்தின் பேராலும் இடதுசாரியத்தின் பேராலும் இங்கும் அதேஅணுகுமுறை அதேபார்வை தான் எஞ்சி இருப்பது அசூசை தருகிறது. ஏற்கெனவே வலதுசாரியத்தில் பட்ட அனுபவம் இங்கும் நிறையக் கேள்விகளை எழுப்புகிறது. அதுவேயன்றி புதிய ஜனநாயகக் கட்சியில் குறை பிடிப்பது அல்ல எனது நோக்கம். 

Comments are closed.