தெற்கு ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு

அய்ஜாஜலா ஜோகுல் என்ற இடத்தில் உள்ள எரிமலை கடந்த சனிக்கிழமை வெடித்ததால் மக்கள் பீதியால் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

ஐரோப்பா கண்டத்தின் வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியிலுள்ள ஐஸ்லாந்து மலைகள், எரிமலைகள் மற்றும் பனிக்கட்டி ஆறுகள் நிரம்பிய நாடு.

இவை தவிர கடற்கரையை ஒட்டி விவசாய நிலப் பகுதிகளும் உள்ளன. ஆனால் பெருமளவில் எரிமலைகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் தெற்கு ஐஸ்லாந்து பகுதியின் அய்ஜாஜலா ஜோகுல் என்ற இடத்தில் உள்ள எரிமலை கடந்த சனிக்கிழமை வெடித்தது. ஆரம்பத்தில் புகை மட்டுமே கிளம்பியது.

அதனைத் தொடர்ந்து கடும் இரைச்சலுடன் தீக்குழம்பு வெளி யேறி வெள்ளம்போல் ஓடத்தொடங்கியது. இதற்கிடையே அங்குள்ள பனிக்கட்டி ஆறும் உருகி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பீதியில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். மேலும் எஞ்சியிருந்த மக்களை அந்நாட்டு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றினர்.

சுமார் 1000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன் கடந்த 1820ஆம் ஆண்டில் இங்கு எரிமலை வெடித்ததாகக் கூறப்படுகிறது