‘துரோகி’ கட்டமைக்கப்படும் அரசியல் : யதீந்திரா

1

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றது. அது 1990 ஆம் ஆண்டு காலப்பகுதி, மாதம் சரியாக ஞாபகம் இல்லை. விடுதலைப்புலிகளின் இரண்டாம்மட்ட தலைவர் மாத்தையா என அழைக்கப்பட்ட மகேந்திரன் எனது சொந்த ஊரான தம்பலகாமத்திற்கு வருகிறார். மக்கள், தம்பலகாமத்தின் பிரதான வாயில் பகுதியான புதுக்குடியிருப்பிலிருந்து வீடுகள் தோறும் நிறைகுடங்கள் சகிதம் பூக்கள் தூவி அவரை வரவேற்றனர்.

எனது வீட்டு வாயிலில் வைத்து அவருக்கு நான் சந்தனப் பொட்டிட்டது எனக்கு இப்போதும் நன்றாக ஞாபகம் இருக்கின்றது. இந்த சம்பவம் இடம்பெற்ற போது எனக்கு வயது 14. அப்போது தமிழ்த் தேசியம் என்ற சொல்லைக் கூட நான் கேள்வியுற்றிருக்கவில்லை. விடுதலை போராட்டம,; அரசியல் இது பற்றியெல்லாம் எதுவும் தெரிந்திருக்கக் கூடிய சூழலும் எனக்கு கிடைக்கவில்லை.

ஆனால் தமிழ்த் தேசிய அரசியல் குறித்தும் விடுதலைப் போராட்ட வரலாறு குறித்தும் நான் அறிந்து கொள்ள முற்பட்ட பிற்காலத்தில் அன்று சந்தனப் பொட்டிட்ட மாத்தையா எனக்கு துரோகியாகவே அறிமுகம் செய்யப்பட்டார். அன்றைய அரசியல் பதிவுகள் அவரை அவ்வாறுதான் அறிமுகம் செய்தன.

இது குறித்து இப்போது நினைத்துப் பார்க்கும் போது ஒரு வகையில் விசித்திரங்கள் நிறைந்த பாதையில் பயணித்து வந்திருப்பதான உணர்வே கிடைக்கின்றது. அவர் ஏன் துரோகியாகிப் போனார் என்பதற்கான காரணங்களை புலிகளின் மேற்பார்வையில் வெளியிடப்பட்ட நூல்களில் கானலாம். இது பற்றி அடேல் பாலசிங்கம் தனது ‘சுதந்திர வேட்கையிலும்;’ சொல்லியிருக்கின்றார். இது மாத்தையா குறித்து பேச முயலும் ஒரு கட்டுரையல்ல. துரோகி என்ற சொல் எனக்கு முதல் முதலாக பரீட்சயமான சம்பவம் ஒன்றை நினைவு கொள்ளும் நோக்கிலேயே இந்த விடயத்தை எடுத்தாண்டுள்ளேன்.

நான் நினைக்கின்றேன் நமது தமிழ்த் தேசிய அரசியலில் அதிகம் பிரபலமான சொல் ‘துரோகி’ என்பதாகத்தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு விடுதலை என்ற சொல் கூட பரவலடைந்திருக்கவில்லை. ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி மேடைகளில் அமிர்தலிங்கம் போன்றவர்களால் தமது எதிரணியினரை இழிவுபடுத்தும் நோக்கில் கையாளப்பட்ட ‘துரோகி’ பின்னர் ஆயுதவழியில் விடுதலை தேடிப் புறப்பட்ட இயக்கங்களால் தத்தெடுக்கப்பட்டது. இறுதியில் இயக்கவழி அரசியலில், தமது செயற்பாடுகளை விமர்சிப்போர், மாற்று நிலைப்பாடுகளைச் சொல்லுவோர், ஆக்க பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போர் என அனைத்து தரப்பினரையும் இந்தச் சொல் துரத்தியடித்தது.

சில நேரங்களில் அவர்கள் குருதியில் நனைந்து தன்னை நிறுவிக் கொண்டது. இன்று வரை இந்த சொல் மாற்று கருத்துக்களை சொல்வோரை அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அதிகம் விடுதலைப்புலிகள் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் ஏனையோர் அனைவரும் தூய்மையானவர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ள முடியாது. புலிகள் தமக்கு எதிரணியில் இருப்போரை (மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டோர் குறித்து இங்கு நான் குறிப்பிடவில்லை) மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்துவதற்கு எவ்வாறு ‘துரோகி’ என்ற சொல்லை ஒரு உக்தியாகக் கைக்கொண்டு வந்தனரோ அவ்வாறே புலிகளுக்கு எதிரான அணியில் இருந்தோரும் தம்மை விமர்சிப்போரை, நிராகரிப்போரை தூற்றுவதற்கும் பழிவாங்குவதற்கும் அதே ‘துரோகி’ பட்டத்தையே பயன்படுத்திக் கொண்டனர். எங்குமே கருத்து வெளிப்பாட்டுக்கான நாகரிகம் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. இத்தனை அழிவுகளுக்கு பின்னரும் கூட இதில் பெரியளவு முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதே மிகவும் துரதிஸ்டவசமானது.

இதற்கு சிறந்த உதாரணம் எனது இந்தியா குறித்த கட்டுரை தொடர்பில் எனக்கு றோ பட்டம் சூட்டப்பட்டமையாகும். ஒரு கருத்து நிலைப்பாட்டை கருத்தாக எடுத்துக் கொண்டு எதிர்வினையாற்றக் கூடிய சூழல் நம்மத்தியில் இன்னும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவு வளர்ச்சியடையவில்லை. இந்த போக்கில் மட்டும் இடதுசாரி வலதுசாரி என்றெல்லாம் நமக்குள் பேதங்கள் இல்லை. நமக்கு முரண்பாடான கருத்துக்களை கூறுவோரை என்ன வழியைக் கையாண்டாவது உரையாடல் அரங்கிலிருந்து அகற்றிவிட வேண்டுமென்பதே நமது முதன்மை நோக்காக இருக்கின்றது. இது ஒரு எதேச்சாதிகார வழிமுறை இதனை புலிகள் செய்தால் பாசிசம் மற்றவர்கள் செய்தால் புரட்சி என்று அர்த்தம் கற்பிப்பது எவ்வாறு சரியாகும் என்று எனக்கு விளங்கவில்லை.

இதில் பிறிதொரு சுவார்ஷயமான விடயம் இருக்கின்றது. இது ‘துரோகி’ என்று ஒருவரை குறிப்பிடாமலேயே அவரை துரோகியாக்கும் கலை. இந்த கலையை கற்றுக் கொள்ள வேண்டுமாயின் அதனை நமது தமிழ் இடதுசாரிகளிடமிருந்தே (இதிலும் விதிவிலக்குகள் உண்டு) கற்றுக் கொள்ள முடியும்.

முன்னைய ‘துரோகி’ பட்டம் பேராட்ட சூழலில் மாற்று நிலைப்பாடுகளில் இயங்குவோரை இலக்கு வைத்தது ஆனால் நமது இடதுசாரிகளின் அனுகுமுறையோ வித்தியாசமானது. தாம் மார்க்சியம் என்று கருதும் ஒரு நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்துக்களை முன்வைப்போரை தனிமைப்படுத்துவதற்கும், மனச் சோர்விற்கு உள்ளாக்கி ஒரு வகையான உளவியல் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் குரூர எண்ணம் கொண்ட அணுகுமுறை இவர்களுடையது. இங்கு துரோகி என்ற பட்டம் சூட்டலுக்குப் பதிலாக சி.ஜ.ஏ, றோ போன்ற பட்டங்கள் சூட்டப்படும். சொற்களில் மட்டுமே வித்தியாசம்.

2

இன்று ‘துரோகி’ என்பது நமது சூழலில் மிகவும் அருவருப்பூட்டும் ஒரு சொல்லாக மாற்றியிருக்கின்றது. இதனைப் பயன்படுத்தியவர்களையே அது இன்று துரத்துவதுதான் இதிலுள்ள பெரிய சோகம். சமீபத்தில் எனது நன்பர் ஒருவரிடம் இது பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அவர் சொன்னார். ‘துரோகி’ இது ஒரு மலினப்பட்ட சொல். இது பற்றி பேசுவதே ஒரு வகையில் அவமானகரமானது என்றார். இதில் ஒரு வேடிக்கையான விடயம் என்னவென்றால் மே.18 இற்கு முன்னர் எவரெல்லாம் பெரும் மனிதர்களாகவும், வீரர்களாகவும் போற்றப்பட்டார்களோ அவர்கள் எல்லாம் இன்று துரோகிகள் ஆக்கப்பட்டிருப்பதுதான்.

சில வேளை நாளை சரனடைந்து முகாம்களில் வாழும் போராளிகள் பொது மன்னிப்பின் பேரில் வெளியில் வந்தால், பொது மன்னிப்புப் பெற்ற அனைவருமே துரோகி ஆக்கப்பட்டாலும் கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்த இடத்தில்தான் ‘துரோகி’ என்ற சொல் கொண்டு கட்டமைக்கப்படும் அரசியல் ஒரு கேள்வியை உந்தித் தள்ளுகின்றது. யார் யாருக்கு துரோகி? இதனை தீர்மானிப்பது எதிர்நிலைப்பட்ட அரசியலா அல்லது மக்களின் நலனா?

மே18 இற்கு முற்பட்ட புலிகளின் தலைமையிலான தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் ‘துரோகி’ என்பதன் அர்த்தம் மிகவும் எளிமையானது. எவர் புலிகளின் தலைமைக்கு எதிராக செயற்பட எண்ணுகின்றாரோ, எவர் புலிகளின் தலைமைக்கு எதிராக சிந்திக்கின்றாரோ அவர் துரோகி. ஏனெனில் அவர் தலைமைக்கு விசுவாசமற்று இருக்கின்றார் என்ற ஒற்றைப்பார்வையே இங்கு மேலாதிக்க வாதமாக இருந்தது. புலிகளின் காலத்தில் ‘துரோகி’ என்பதன் அரசியல் பரிமாணம் இவ்வாறுதான் அமைந்திருந்தது.

இந்தச் சூழலில் புலிகளை கோட்பாட்டு ரீதியாக விமர்சிப்பதாகக் கூறிக் கொண்டோரும் அந்தச் சொல்லையே பல்வேறு சந்தர்ப்பங்களில் தம்மை நிலைநிறுத்த பயன்படுத்திக் கொண்டனர்.

இன்று நிலைமை மேலும் மோசமடைந்திருக்கின்றது. மே18 இற்கு பிற்பட்ட காலத்தை ‘துரோகிகள்’ வசைபாடும் படலம் என்று சொன்னாலும் அது மிகையில்லை, அந்தளவிற்கு துரோகிகள் மலிந்து விட்டார்கள். முன்னராவது ஒரு அளவு கோல் இருந்தது. புலிகளின் தலைமைக்கு அவர்கள் விசுவாசமற்றவர்கள் ஆகவே அவர்கள் துரோகிகள். ஆனால் இப்போது என்ன அளவு கோல் கொண்டு இந்த ‘துரோகி’ பட்டங்கள் சூட்டப்படுகின்றன. இதனை தீர்மானிப்பது யார்? ஒரு வகையில் கோட்டாம்பாக்க தமிழ் சினிமா பார்ப்பது போன்றிருக்கின்றது எங்கள் ஈழத் தமிழர் தேசிய அரசியல்.

ஒருவர் துரோகியாக்கப்படும் போது அவர் யாருக்கு துரோகியாக இருக்கின்றார் என்பதுதான் முதன்மையான கேள்வியாக இருக்க வேண்டும். அவர் குறிப்பிட்ட ஒரு சிலரின் அரசியலுக்கு அல்லது அவர்களின் விருப்பங்களுக்கு துரோகியாக இருக்கின்றரா அல்லது தனது மக்களுக்கு துரோகியாக இருக்கின்றாரா? எனவே அடுத்தவருக்கு துரோகி பட்டம் சூட்ட விருப்புவோர் இந்த கேள்வியில் நின்று சிந்திப்பது அவசியம். இல்லாவிட்டால் நாளை அனைவரும் துரோகியாக்கப்படலாம். இவ்வாறான வசை புராணங்களில் நேரத்தை விரையம் செய்வோர், இறுதியில் அது உங்களையும் விட்டுவைக்கப் போவதில்லை என்பதை நினைவில் நிறுத்திக் கொள்வது நல்லது.

இன்னொன்றையும் மனங்கொள்வது அவசியம், நேற்று கொண்டாடப்பட்டோர் இன்று துரோகியாகிருப்பது போல் இன்ற தூற்றப்படுவோரை வரலாறு பெரும் மனிதர்களாக, மக்களின் நலனில் நின்று சிந்தித்தவர்களாக பதிவு செய்யலாம். எல்லாமே காலநிர்ணத்திலேயே தங்கியிருக்கின்றது.

கியூபப் தேசிய புரட்சியாளர் ஹெலே மார்த்தி திறமையாளர்கள் பற்றி இவ்வாறு கூறுவார். ‘கையறு நிலையில் உள்ளவர்களுக்கு உதவுவதுதான் திறமையுள்ளவர்களின் கடமையாகும், இதுதான் மனிதர்களை அளவிடும் கருவி’ தமிழர் தேசமெங்கும் கையறு நிலையில் இருக்கும் மக்களுக்கு தோள்கொடுப்பதும், அவர்களது நலன்கள் குறித்து சிந்திப்பதும் துரோகமென்றால், தமிழர் தேசத்தில் துரோகியாக இருப்பது குறித்து நாம் பெருமைப்படலாம்.

”’

20 thoughts on “‘துரோகி’ கட்டமைக்கப்படும் அரசியல் : யதீந்திரா”

 1. புரிகிறது தோழரே,

  பிழைத்துக் கொண்டோரெல்லாம் துரோகிகள். மாட்டிக்கொண்டோரெல்லாம் மாவீரர்கள்,எல்லா இடத்திலும் இப்படித்தான் இருக்கிறது.

 2. ‘துரோகி’ என்ற சொல் மட்டுமல்ல ‘தோழர்’ என்ற சொல்லும் ‘சுயவிமர்சனம்’ என்ற சொல்லும் தான் மலினப் பட்டுள்ளன. ‘கம்யூனிஸ்ட் கட்சி’ என்ற பேர் இலங்கையிலும் இந்தியாவிலும் நாறடிக்கப் பட்டதாலேயே ‘மார்க்சிய லெனினிய’ ‘மாஓவாத’ என்ற மேலதிகச் சொற்கள் தேவைப்படுகின்றன.’மாவீரர்’ கூட எப்போதோ மலினப் பட்டுப் போன சொல். ஏனெனில் புலியல்லா எந்த உண்மையான மாவீரனும் துரோகி என அழைக்கப் பட்டிராவிடில் அதிர்ஷ்டசாலி.
  மிகுதியாக மலினப் படும் போது சொற்கள் நோய்பட்டு இறந்தும் போகலாம்.

  கட்டுரை கூறும் துரோகிகள் பற்றிய கருத்து, துரையப்பா துரோகியாக்கப் பட்ட போதே கூறப்பட்டிருக்கலாம். அது ஏன் பலருக்கும் நினைவுக்கு வருவதில்லை. அதில் வசதியீனங்கள் இருக்கலாம். ஐயர் தனது தொடரிற் பட்டியலிடும் ஒவ்வொரு இயக்கப் படுகொலையின் போதும் அது கேள்விக்குட்படுத்தப் பட்டிருக்கலாம். ஏன் நிகழவில்லை? கட்டுரை ஆசிரியருக்குக் கூட இவ்விடத்தில் விளக்கங் கூறக் கடப்பாடுள்ளது.

  ஒருவரை ‘றோ முகவர்’ என்பதோ ‘சி.ஐ.ஏ. முகவர்’ என்பதோ எப்போதுமே ஆதரங்களுடன் முன்வைக்கப் படுவதில்லை. அதனால் அத்தகைய முகவர்கள் இல்லை என்றாகிவிடாது.
  சிலரின் சிலவாறான நிலைப்பாட்டு மாற்றங்கள் அவ்வாறன ஐயங்களை எழுப்புகின்றன. பேர் கூறி நிந்திக்காமல் ஐயங்களை நிதானமாகா விவாதிக்க முடியும்.
  அவ்வாறு நிகழ, விவாதங்கள் நேர்மையாகவும் நிதானமாகவும் நடப்பது தேவை. எவ்வாறயினும் அமெரிக்க, இந்திய முகவர் நிறுவனங்கள் பல் வேறு மட்டங்களில் இயங்குகின்றன.
  அண்மையிற் கூடக் ‘கருணநிதியின் நிலைமையை விளங்கிக் கொள்ளவேன்டும்’, ‘இந்தியாவை மீறி எதுவும் செய்ய முடியாது’ என்றவாறான கருத்துக்கள் எதிர்பர்த்திராத இடங்களிலிருந்து மிகப் பலவீனமான காரணங்களுடன் வருகிற போது ஐயப்படாமல் இருக்க இயலவில்லை. எனினும் இதுவரை யாரையும் குறிப்பாகச் சொல்லாமல் பொதுப்படப் பேசுகிறேன். எவ்வாறயினும் அவை புறக்கணிக்கத்தக்க விடயங்களல்ல.

  நமக்கு நம்மைப் பாதிக்கும் நிந்தனகள் விளங்குமளவுக்கு நம்முடன் முரண்படுவோர் மீதான நிதனைகள் விளங்குவதிலை. இதை ஓரிரு வாரங்கள் முன்பு ஒருநீண்ட விவாதத்தின் போது கண்டோம்.

 3. கியூபப் தேசிய புரட்சியாளர் ஹெலே (ஹோஸெ?) மார்த்தி திறமையாளர்கள் பற்றி இவ்வாறு கூறுவார். ‘கையறு நிலையில் உள்ளவர்களுக்கு உதவுவதுதான் திறமையுள்ளவர்களின் கடமையாகும். இதுதான் மனிதர்களை அளவிடும் கருவி’

  இதை ஏன் தமிழருக்கு வரையறுக்க வேண்டும்? மார்ட்டியின் சொற்கள் விரிந்த பொருளிற் கூறப்பட்டவை. இவ்வாறான வரையறுப்புக்களாலே தான் தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் உலக அரங்கில் தனிமைப் பட்டுப் போயுள்ளது.

  “கையறு நிலையில் இருக்கும் மக்களுக்கு தோள்கொடுப்பதும், அவர்களது நலன்கள் குறித்து சிந்திப்பதும் துரோகமென்று” யாரும் சொல்லியதாகத் தெரியவில்லை. “கையறு நிலையில் இருக்கும் மக்களுக்குத் தோள்கொடுப்பதும், அவர்களது நலன்கள் குறித்துச் சிந்திப்பதும்” எனச் சொல்லிக் கொண்டு நமக்கு அழிவைத் தந்த பெருவல்லரசுகளிடம் நம்மை மீண்டும் கொண்டு போய்ச் சேர்க்கும் முயற்சிகள் முட்டாள்த்தனமானவையாக் இல்லாவிட்டால் –சொல்லத்தகாத சொல் குறிக்கும்நோக்கமன்றி– என்னவாக இருக்க முடியும்?

  1. கட்டுரையை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து படிக்கவும். நீங்கள் தெளிவடைய வாயப்புண்டு.
   சிலருக்கு அறிவில்லாமல் இருக்கலாம் ஆனால் மூளை இருக்கிறதல்லவா? அதனை பயன்டுத்த முயற்சியுங்கள் – டி.பி.சிவராம் (தராக்கி). இந்த கருத்து எனக்கு மிகவும் பிடித்தமானது. நமது சூழலில் விதண்டாவாதங்களும் பொழுது போக்கு (வசதியாக இருந்து கொண்டு புரட்சி பற்றிப் பேசுவது) வாதங்களும் தலை தூக்கும் போதெல்லாம் சிவராமின் கருத்தையே நான் நினைத்துக் கொள்ளுவதுண்டு. கடந்த முறை இடம்பெற்ற நீண்ட விவாத்தின் போதும் அடிக்கடி இந்த கருத்தையே நினைக்க வேண்டி ஏற்பட்டது. அதுவும் தமது முகங்களைக் கூட காட்டிக் கொள்ள முடியாதவர்கள் புரட்சி பற்றியெல்லாம் விவாதிக்க முற்படும் போது இந்த கருத்தை நினைத்துக் கொள்ளுவது ஒரு வகையில் ஆறுதலாக இருக்கின்றது.

   1. /தாம் மார்க்சியம் என்று கருதும் ஒரு நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்துக்களை முன்வைப்போரை தனிமைப்படுத்துவதற்கும், மனச் சோர்விற்கு உள்ளாக்கி ஒரு வகையான உளவியல் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் குரூர எண்ணம் கொண்ட அணுகுமுறை இவர்களுடையது./

    உங்களுடைய இந்தப்பதிலுடன் நீங்கள் கட்டுரையில் எழுதியிருக்கும் இந்த வாசகத்தைப் பொருத்திப்பாருங்கள்.

    அறிவற்றவர்கள், மூளையைப்பயன்படுத்தாதவர்கள், வரட்டு மார்க்சியர்கள், /வசதியாக இருந்து கொண்டு புரட்சி பற்றிப் பேசுவது/ என்றெல்லாம் சொல்லுவது எந்த வகையில் நீங்கள் சொன்னதில் இருந்து வேறுபடுகிறது?

    நீங்கள் சொல்லும் கருத்துக்கு இங்கே மாற்றுக்கருத்து சொல்லப்பட்டது. போதிய விளக்கத்துடனேயே சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் எகிறிக்குதிக்கிறீர்கள்.

    ஆனால், தந்தை செல்வா காலத்திலிருந்து ஒப்பிக்கப்பட்டுவரும், காலகாலமாகத் தோல்வியைத்தழுவிவரும் “ஏக்காதிபத்தியங்களை ராஜதந்திரத்துடன் பயன்படுத்துதல்” என்ற கருத்தை நீங்கள் மீள மீள “கிளிப்பிள்ளை போல” ஒப்பிக்கும்போது மற்றவர்களுக்கு சந்தேகம் வரக்கூடாதா?

    எனக்கொரு நீதி மற்றவர்களுக்கு இன்னொரு நீதி என்பதிலிருந்துதான் சனனாயக மறுப்பே தொங்குகிறது.

  2. யதீந்திராவை விட (அவருடன் உடபன்படுவோர் தவிர்ந்து) யாருக்கும் அறிவு இல்லை என்பது இப்போதைக்கு எல்லாருக்கும் நன்கு தெரிய வேண்டும்.

   நான் சொல்லிய விடயங்கள் இரண்டு:
   ஒன்று தமிழ் மக்களின் போரட்டம் தனிமைப் பட்டது பற்றியது. ஹோஸெ மார்ட்டியின் சொற்கள் சரியான முறையில் நம்மால் விளங்கிக் கொள்ளப்படுமேயானால் அது தமிழரின் தனிமைப்படுத்தலுக்கு முடிவைக் கொண்டுவரும் என்பதாகும்.
   மற்றது: “கையறு நிலையில் இருக்கும் மக்களுக்குத் தோள்கொடுப்பதும், அவர்களது நலன்கள் குறித்துச் சிந்திப்பதும்” எனச் சொல்லிக் கொண்டு நமக்கு அழிவைத் தந்த பெருவல்லரசுகளிடம் நம்மை மீண்டும் கொண்டு போய்ச் சேர்க்கும் முயற்சிகள் பற்றிநாம் கவனமாக இருக்க வேன்டும் என்பது. (அறிவு மிக்கோர் பலர் மிக முட்டாள்த்தனமான செயல்களைச் செய்துள்ளனர் என்பதே என் சிற்றறிவுக்கு விளங்கிய விடயம்).
   இரண்டிலும் கட்டுரையாளருக்கு மறுப்பிராது என நம்புகிறேன்.

   இது வரை எவரையும்நான் உளவாளி என்றோ முகவர் என்றோ சொன்னதில்லை. யாரையும் துரோகி என்றும் சொன்னதிலை. தனிப்பட யாருடைய அறிவுத்திறனையும் கேள்விக்குட்படுத்தியதுமில்லை.
   எனவே எது எங்கே சுட்டது என்று எனக்குத் தெரியவில்லை.

   புரட்சிவாதிகள் எல்லாரும் எல்லாருக்கும் தங்கள் முகங்களைக் காட்டிக் கொண்டதாகவும் எனக்குத் தெரியவும் மாட்டாது.
   நான் முகமுள்ள/முகமில்லாத புரட்சி வீரனுமல்ல.
   இவ் விவதம் புரட்சி பற்றியதுமல்ல.

 4. தமிழர் தேசமெங்கும் கையறு நிலையில் இருக்கும் மக்களுக்கு தோள்கொடுப்பதும், அவர்களது நலன்கள் குறித்து சிந்திப்பதும் துரோகமென்றால், தமிழர் தேசத்தில் துரோகியாக இருப்பது குறித்து நாம் பெருமைப்படலாம்

 5. முதுகுக்குப் பின்னால் செயற்படுவோரை துரோகி என்பது வீட்டு அரசியலில் இருந்து வேலை அரசியல் வரை இருக்கிறது.மன்னரகள கொன்றூ தளபதிகள் அரசைக் கைப்பற்றீயதை சரித்திரம் சொல்கிறது.தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் விடயத்திலும் ஆழமாய் துரோகம் வேரூன்றீ நின்றதை பிரபாகரன் குடும்மபம் அழிக்கப்பட்டதே சொல்லுகிறது.

  1. தமிழர்களின் அபத்தமான பழக்கவழக்கங்கள் அனைத்தும் வீட்டில் இருந்தே முளைக்கின்றன. எவ்வாறானாலும் துரோகி என்ற வார்த்தைப் பிரயோகம் நமது சமூகத்திற்கு நன்மை தரவில்லை. இதன் மூலம் துரோகிகளை கூட்டி எமது சமூகத்தை எமது சமூகமே வெறுக்கும் நிலைமையை வளர்த்து வருவது தான் நாம் கண்ட மிச்சம்.

   S.G.Ragavan
   Canada

 6. தமிழ் சமூகத்தில் என்ஜினியர் , டொக்ரர் , புறக்ரர் போன்று துரோகி என்பதும் ஒரு தொழில் பெயராக மாறிவருவதாக முன்னர் ஒரு இணையத்தளம் சுட்டியிருந்தது. அது உண்மையாக மாறிவருகிறது.

  1. தொழிற் பெயராக மாறிவருவதாக மட்டுமன்றி அது சிலருக்குத் தொழிலாகவும் இருக்கலாம்.
   காலஞ்சென்ற சீனப் பிரதமர் ஜோ என்லாய் – குருஷ்சேவ் உரையாடல் ஒன்றில் பின்னவர் முன்னவரிடம் “நான் ஒரு விவசாயிக் குடும்பத்தவன் நீர் ஒரு மன்டரின் குடும்பத்தவர் விவசாயிகள் சார்பாகா நீர் என்ன பேச முடியும்?” என்று சவால் விட்ட போது முன்னவர் “தோழரே நாம் இருவரும் முறையே நம் வர்க்கங்களுக்குத் துரோகம் இழைத்தவராவோம்” என்று பதிலளித்தாராம்.
   நாங்கள் எப்போதும் எதற்கோ துரோகம் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.
   கேள்வி ஏதெனின், “எதற்கு?” என்பது தான்.

   1. நான் சொல்ல நினைப்பது துரோகி என்ற தொழிற்பெயரை இனி இழக்காரமாக நினைத்திட வேண்டாம்; துரோகி என்ற சொல்லை ஒரு அந்தஸ்தான சொல்லாக கருதவேண்டும். பிரபாகரன் மாற்று கருதாளர்களுக்கு துரோகி ; புலிகளின் அனுதாபிகளுக்கு இன்று வரை அவர் தியாகி ; இன்னும் சில வருடத்தில் பிரபாகரனும் துரோகி என்பது அனுதாபிகளின் வாயிலிருந்தே வந்தாலும் அதிசயப்பட ஒன்றுமில்லை. ஏனெனில் இப்போது புலிகளின் அனுதாபிகளும் பல கூறுகளாக பிரிந்து துரோகி என்ற தொழிற்பெயரை சூடிக்கொள்ள போட்டிபோடுவதால் துரோகி ஒரு சிறப்பான இடத்தை நோக்கி நகர்கிறது.

  2. proffessor
   நீங்கள் கூறுவதும் ஒரு முக்கியமான பக்கம் தான்.
   சொற்கள் பச்சோந்திகள் போல (அல்லது பாரளுமன்ற அரசியல்வாதிகள் போல) எவ்வாறு ஒரே பேரை வைத்துக்கொண்டு மாறி மாறித் தோற்றங் காட்டுகின்றன!

 7. “தோழரே நாம் இருவரும் முறையே நம் வர்க்கங்களுக்குத் துரோகம் இழைத்தவராவோம்”.தோழர் சூஎன் லாய் சொன்னது மிக சரியே.

  துரோகம் என்பது ஒன்றும் கேட்ட வார்த்தை அல்ல.” சாதி ஒழிய வேண்டும் என்றால் சொந்த சாதிக்கு துரோகம் செய்ய வேண்டும்.” என்றார் ஒரு அறிஞர்.
  அங்கிருந்து துரோகத்தை ஆரம்பித்தால் எல்லாம் சரி வரும்.

 8. தோழர் யோகன் இந்த வர்க்கம் என்பது இங்கிலாந்தில் இருக்கிறது ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்ததா? சாதிகள் கூட இந்தியா மாதிரி இருக்கவில்லை.குறீப்பாக நான் ஒரு பறயன் எங்கட் வீட்டிலும் மாடி இருந்ததே.சீனப் புத்தகங்கள் படிப்பதன் தாக்கம் வர்க்கம் சாதி எனப் பேச வைக்கிறதோ?

 9. செல்வநாயகம் 1957இலை சாதியை ஒழிச்சுப் போட்டார் என்டு சொல்லிப் 19 வரியம் போய், மாடி வீட்டிலை இருந்து கொண்டு தான் எல்லாரும் 1966இல துவங்கி தீண்டமை ஒழிப்பு இயக்கம் நடத்தினவை போல.
  வேறை எங்கையோ மலையகத்தமிழர் சில பேர் முன்னேறினால் எல்லாரும் முன்னேறினதாகிவிடாது எண்டு எழுதினியள்.
  வர்க்கம் இருக்கோ இல்லையோ எண்டு விளங்காவிட்டால் ஒருக்கா இங்கை வந்து பாத்துப் போட்டுப் போங்கோ.

  சீனாவிலை சாதி இல்லை. அப்ப எப்பிடிச் சீனப் புத்தகம் படிச்சுச் சாதியைப் பற்றிக் கதைப்பினை?

 10. தமிழ்மாறன் எங்கே பதிலை காணோம் ?

 11. என்ன பதிலை எதிர்பார்க்கிறீர்கள் யோகன், எல்லாம் இழ்ந்து நிற்கும் தமிழ்ன் தான் வாழ்ந்த மண்ணயே தன் க்கு இல்லை எனும் நிலையில் நிற்கிறான்.சொந்தத் தமிழ்னால் விரட்டப்பட்டு வீதியில் நிறூத்தப்ப்ட்டு அவமானப்ப்டுத்தப்பட்ட வலிகள் உங்களூக்கு உண்டா? நாய்கள் மேய்கின்றன் நான் பிறந்து வளர்ந்த கிராமத்தில்.வெறீச்சோடிப்போய் விட்டது.தமிழ்ர்கள தமிழனே துப்பாகியால் விரட்டினான்.இங்கே வர்க்கப் புரட்சியை விட சாதி வெறீ வெறீகொண்டு நின்றது.நம் வாழ்க்கையை பறீத்து நம்மை வீதியில் நிறூத்தியோர் வர்க்கம் பற்றீப் பேசியோரே.இத்தனை காலம் கடந்தும் இன்னும் எனக்குள் எழும் வலி என் வார்த்தகளூக்குள் வராது.

 12. தமிழ்மாறனுக்குத் தான் சொன்னதே விளங்காது யோகன். எதைச் சொல்லுறியள் எண்டு எப்பிடி விளங்கப் போகுது?

 13. என்ன அன்பு தோழரே (தமிழ்மாறன்) ,பட்டுகொட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்குக்கு விலை சொல்கிறீர்கள்.இது தான் உண்மையிலே கலைஞர் ஸ்டைல்.(திசை திருப்பல்.)
  கலைஞரின் பாணியில் சொன்னால் “நீங்கள் ஒரு மாடி வீட்டு ஏழை “.

Comments are closed.