திவாலாகும் அமெரிக்கா நிதி நிறுவனங்கள் : செல்லமுத்து குப்புசாமி

சென்னை மேடவாக்கத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏ.டி.எம் இயந்திரம் உள்ளது. சென்ற வாரக் கடைசியில் ஒரு காலைப் பொழுது. ஏ.டி.எம் வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்த காவலாளி எனது இரு சக்கர வண்டி 50 மீட்டர் தூரத்தில் வருவதற்கு முன்பே ‘பணம் இல்லை’ என்பதைக் குறிப்பதற்காக கையை விரித்து வேகமாக ஆட்டினார்.
“ஏங்க ஐ.சி.ஐ.சி.ஐ திவால் ஆயிருச்சோ என்னவோ. சீக்கிரம் பணத்தை எடுத்திரணும்”
என் மனைவிக்கு இது போன்ற அச்சம் கலந்த முன்னெச்சிரிக்கை உணர்வு சில நேரங்களில் தலையெடுக்கும்.

“எதுக்கு கவலைப்படுறே? நம்ம அக்கவுண்டுல முப்பதாயிரம் இருக்கும். கிரெடிட் கார்டுல அம்பதாயிரத்துக்கு செலவு செஞ்சி வெச்சிருக்கோம். திவால் ஆனாலும் நல்லதுதான்” சமாதானம் சொன்னேன்.

என் வீட்டுக்கார அம்மாவின் பொருளாதார அறிவு குறித்து சில சமயங்களில் நான் கலக்கம் அடைவதுண்டு. எனினும் இந்த முறை அவ்வளவு அலட்சியமாக ஒதுக்கி விட முடியவில்லை. இந்தச் சம்பவம் நடப்பதற்கு ஓரிரு நாட்கள் முன்பாக ஐ.சி.ஐ.சி.ஐ திவாலாகி விட்டது என்ற வதந்தியை நம்பி ஒரு சில ஊர்களின் அந்த வங்கியின் ஏ.டி.எம். இயந்திரங்களை பலர் முற்றுகையிட்டதை சன் டி.வி ஒளிபரப்பியது.
இதற்கு ஒரு காரணமும் சொல்லப்பட்டது. சில வருடங்களுக்கு முன்னர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பைனான்ஸ் கம்பெனியில் பணம் போட்டு அதன் பிறகு தலையில் துண்டைப் போட்டவர்களின் நிலைமை வாரப் பத்திரிக்கையில் ஜோக் எழுதி அனுப்புகிறவர்களுக்கு தீனி போட்டதை அறிவோம். அப்படி ஒரு நிலைமை ஐ.சி.ஐ.சி.சி வங்கிக்கும் வந்து விட்டதாக சிலர் சொன்னார்கள். திவாலானது முட்டுச் சந்தில் இயங்கிய துக்கடா ஃபைனான்ஸ் கம்பெனி அல்ல. அது உலக அளவில் மிகப் பெரிய முதலீட்டு வங்கி (investment bank). இந்த முதலீட்டு வங்கிகளுக்கும், ஸ்டேட் பேங்க & ஐ.சி.ஐ.சி.ஐ முதலிய வணிக வங்கிகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதை இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.
உலகப் பொருளாதார வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் நான்காவது மிகப் பெரிய முதலீட்டு வங்கியான லீமன் பிரதர்ஸ் சில நாட்களுக்கு முன்னர் திவாலானது. இந்த லீமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் கடன் பத்திரங்கள் வாயிலாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 350 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருந்தது – அதாவது கடன் கொடுத்து வைத்திருந்தது. பைனான்ஸ் கம்பெனிக்கும் லீமன் பிரதர்ஸ்க்கும் ஒரே வித்தியாசம், பைனான்ஸ் கம்பெனிக்காரனைப் போல லீமன் பிரதர்ஸ் இரவோடு இரவாக பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓடவில்லை என்பதுதான்.

பெண்ணின் கல்யாணத்திற்கு வைத்திருந்த பணத்தை அப்படியே கொண்டு போய் பைனான்ஸ் கம்பெனியில் போட்டவனைப் போல தலையில் முக்காடு போட வேண்டிய நிலை இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய வங்கியான ஐ.சி.ஐ.சி க்கு இல்லை என்பது இன்னொரு வித்தியாசம். தனது இங்கிலாந்துக் கிளை மூலமாக லீமன் பிரதர்ஸ் முதலீட்டை அது மேற்கொண்டிருந்தது என்பதுடன் அந்த முதலீடு அவ்வங்கியின் மொத்தச் சொத்து மதிப்பில் ஒரு சதவீதத்திற்கும் குறைவு; அதன் சந்தை மதிப்பு எழுபதாயிரம் கோடிக்கும் மேல்.

இங்கே பிரச்சினை நம்ம ஊர் ஐ.சி.ஐ.சி.ஐ பற்றியதோ அல்லது திவாலாகிப் போன லீமன் பிரதர்ஸ் பற்றியதோ அல்ல. அதை விடப் பெரியது. அமெரிக்கப் பொருளாதாரம் முடங்கி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதனால் உலகப் பொருளாதார வளர்ச்சி தேங்கி விடும் என்று கவலைப்படுகிறார்கள். அதை உறுதிப்படுத்துவது போல எல்லா நாடுகளிலும் பங்குச் சந்தை குட்டிக் கரணம் அடித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் 21 ஆயிரத்துச் சொச்சத்தில் இருந்து 12 ஆயிரத்துச் சொச்சத்திற்கு வந்து மறுபடியும் பவுன்ஸ் ஆகியுள்ளது.

இங்கே நாம் பங்குச் சந்தை முதலீடு குறித்துப் பேசவில்லை. அது பேராசையும், பயமும், பகுத்தறிவின்மையும், உளவியலும் விநோதமான விகிதத்தில் கலந்த விளையாட்டு. நாம் இங்கே பேசுவது அதை விடப் பெரிய ஒரு விஷயத்தைப் பற்றி. அதாவது உலகப் பொருளாதாரச் சூழல் பற்றி. அதில் பங்குச் சந்தை ஒரு சிறு அங்கம் மட்டுமே.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹென்றி ஃபோர்ட் தொடங்கி வைத்த ஆட்டோமொபைல் புரட்சியும், அதனைத் தொடர்ந்து வந்த இரண்டு உலகப் போர்களும் உலக அரங்கில் அமெரிக்காவை பொருளாதார வல்லரசாக ஆக்கின. அவர்கள் வெறும் போர்த் தளவாடங்களை மட்டும் அனுப்பி இங்கிலாந்தின் தங்கக் கையிருப்பை அப்படியே அபகரித்தவர்கள். அதன் பிறகு அமெரிக்கா மழையில் நனையும் போதெல்லாம் மற்ற தேசங்களுக்கு சளி பிடித்தது. அமெரிக்கா ஜோக் அடித்தால் மற்ற தேசங்கள் சிரித்தன.
சென்ற நூற்றாண்டின் இறுதியில் டாட் காம் புரட்சி ஒன்றை அமெரிக்கா சந்தித்தது. சும்மானாச்சும் “குண்டக்கமண்டக்க.காம்” என்று பெயர் வைத்து ஒரு கம்பெனி ஆரம்பித்தால் போதும். ஒரே நள்ளிரவில் கோடீஸ்வரன் ஆகி விடலாம். அந்தக் கம்பெனி ஒரு டாலர் இலாபம் சம்பாதிப்பதற்குள் அதை பங்குச் சந்தையில் பட்டியலிட்டு மில்லியன் அல்லது பில்லியன் சுருட்டி விடலாம்.

தொழிலதிபர்கள், ஊழியர்கள் என்றில்லாமல் அந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கிய பல பேரை Y2K குமிழ் செல்வந்தர் ஆக்கியது. பலூனை ஊதிக்கொண்டே சென்றால் என்ன நடக்கும் … the inevitable … குமிழ் உடைந்தது. வேலை இழப்பு, நட்டம், பொருளாதாரத் தேக்கம், ரியல் எஸ்டேட் சரிவு ஆகியவை உருவாயின. சாஃப்ட்வேர் எஞ்சினியர் என்று சொல்லி அமெரிக்காவிற்குச் சென்று ஏகப்பட்ட கடனில் கோடிக் கணக்கில் வீடு வாங்கிய சிலர் தமது காரை கமுக்கமாக விமான நிலையத்தில் நிறுத்தி விட்டு, கூடவே அமெரிக்காவிற்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு இந்தியாவிற்கு விமானம் ஏறிய கதைகள் பிரபலம்.

டாட் காம் குமிழ் உடைவைத் தொடர்ந்து 2001-2002 இல் ஏற்பட்ட பின்னடைவு அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களை சிந்திக்க மட்டுமல்லாமல் செயல்படவும் வைத்தது. வட்டியை வெகுவாகக் குறைத்தார்கள். வழக்கமாகவே அமெரிக்கர்களுக்கு சேமிக்கும் வழக்கம் என்பது கிடையாது. சேமிப்பதை விட செலவு செய்வதே அவர்களது கொள்கை. கையில் உள்ளதை மட்டும் செலவு செய்தால் பரவாயில்லை. கடன் வாங்கிச் செலவு செய்வார்கள். கார், வீடு எல்லாமே கடனில். அதுவும் ஆயுட்கால கடன்.

அப்படிப்பட்ட பாரம்பரியம் படைத்தவர்களுக்கு குறைவான வட்டியில் பணத்தைத் தூக்கிக் கொடுத்தால் என்ன ஆகும்? புதிது புதிதாக பொருட்களை வாங்கி நுகரத் தொடங்கினார்கள். அதனால் அந்தப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படத் துவங்கின. A முதல் Z வரை என்னவானாலும் சொல்லுங்கள், தயாரித்து அனுப்புகிறோம் என்று சீனா காசு பார்த்தது. எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
சுலபமாக கடன் கிடைக்கும் துணிச்சலில் அமெரிக்கர்கள் வீடு வாங்கினர். இன்னொரு வங்கி, “அந்தக் கடனை எங்களிடம் மாற்றிக் கொள்ளுங்கள். நாங்கள் அதை விடக் குறைவான வட்டிக்கு கடன் தருகிறோம்” என்று refinance செய்தது. அந்தக் கடனை எங்களிடம் மாற்றிக் கொள்ளுங்கள் என்றது இன்னொரு வங்கி. வீடுகளுக்கு கிராக்கி பெருகியது. விலையும் கூடியது. அப்போதும் கடன்கள் தாராளமாகக் கிடைத்தன.
வங்கிகள் பணத்தை வைத்துக்கொண்டு செய்வதறியாமல் தவித்தன. இன்னொரு பக்கம் வீட்டு விலை அதிகரிப்பதை உணர்ந்த ரியஸ் எஸ்டேட் நிறுவனங்கள் புதிய குடியிருப்புகளைக் கட்டிக் குவித்தன. குடியிருக்க வீடு என்பதோடு அதன் மதிப்பு ஏறிக்கொண்டே போகிறது என்ற கணக்கில் வாய்ப்பைத் தவற விட விரும்பாத பலருக்கும் கடன்கள் வழங்கப்பட்டன. இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான சங்கதி வருகிறது.

கடன் கொடுத்தால் திரும்ப வருமா வராதா என்று ஆராய்ந்து கடன் கொடுப்பதே வங்கிகளுக்கு வழக்கம். நிலையான வேலை, வருமானம் இருக்கிறதா அல்லது பரம்பரைச் சொத்து உள்ளதா என்றும் ஆராய்வார்கள். அதன் பிறகே கடன் சாங்சன் ஆகும். எப்படியும் கொடுத்த காசு வட்டியோடு திரும்ப வந்து விடும் என்று நம்பலாம். ஏனென்றால் கடன் வாங்கியவர்கள் நிலையான வருமானம் உடையவர்கள். இவர்களுக்குக் கொடுக்கும் கடனுக்கு ஒரு வட்டி விகிதம். இதை prime lending rate என்கிறார்கள்.

இவர்களுக்குக் கொடுத்தது போகவும் வங்கிகளிடம் ஏராளமான பணம் புழங்கியது. தகுதி உடையவர்களுக்கு மட்டுமல்லாமல் நிலையான வருமானம், நம்பகம் இல்லாத நபர்களுக்கும் கடன் தரலாம் என்று விதி முறையைத் தளர்த்திக் கொண்டன. இதை sub-prime கடன் என்று குறிப்பிடுகிறார்கள். Prime வட்டியை விட sub-prime வட்டி கூடுதல், ஏனென்றால் அதில் கூடுதல் ரிஸ்க். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு sub-prime மக்களுக்காக வீட்டுக் கடன் கொடுப்பதற்கு நிறைய நிதி நிறுவனங்கள் முன் வந்தன.

சுலபப் பணம் என்றால் கூடவே விலைவாசி ஏற்றம், பணவீக்கம் உள்ளிட்ட வேறு பிரச்சினைகள் எழத்தான் செய்கின்றன. அதனைத் தொடர்ந்து வட்டி வீதம் அதிகரித்தது. அரை விழுக்காடு வட்டி ஏறினாலும் கூடப் போதுமே, ஏற்கனவே விலை ஏற்றத்தினால் மற்ற செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் subprime மக்களின் வீட்டுக் கடன் தவணை கூடியது. அவர்களால் தவணை கட்ட முடியாத நிலை படிப்படியாகத் தோன்றியது.
சென்ற ஆண்டு மத்தியில் பூதாகாரமாக வெடித்த subprime பிரச்சினை இதுதான். கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் வீடுகளை ஜப்தி செய்து ஏலத்தில் விற்றன. இன்னொரு பக்கம் ரியல் எஸ்டேட் கம்பெனிகள் புதிய வீடுகளை உருவாக்குவதை நிறுத்தவில்லை. ஆனால் வாங்குவோர் குறைவாக இருந்தனர். ஏலத்தில் விட்டாலும் வாங்குவதற்கு ஆளில்லை. இதனால் வீட்டு விலைகள் குறைந்தன. கடன் கொடுத்த நிறுவனங்கள் நட்டத்தைச் சுவைத்தன.

2006 ஜனவரியில் வீட்டு விலைகள் சராசரியாக 3 சதவீதம் குறைந்தன. அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆக்கிரமிக்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 39 சதவீதம் கூடியது. அதே நேரம் புது வீடு வாங்குவோர் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்தது. வரவிருந்த மிகப் பெரிய சுனாமியின் தொடக்க அலைகள் இவை. இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அமெரிக்காவில் 2007 மார்ச் மாதம் மட்டும் 25 subprime கடன் கொடுத்த வங்கிகள் அல்லது வங்கிகளின் கிளைகள் திவால், நட்டம், ஏலம் என்று வெவ்வேறு பிரச்சினை இருப்பதை வெளிப்படுத்தின. அந்த நாட்டின் மிகப் பெரிய subprime நிறுவனமான New Century Financial தனது பங்கு விலை 84 சதவீதம் சரிந்த பிறகு திவால் என்று அறிவித்தது.
பூதாகாரமாக உருவெடுத்துள்ள இந்த சிக்கலுக்கு முழுப் பொறுப்பு நிதி நிறுவங்கள் மட்டுமே ஆகும். பிச்சை போடுவதற்கே பாத்திரமறிந்து போட வேண்டும் என்போம் நாம். அப்படி இருக்கையில் தராதரம் அறியாமல் கடன் தருவது அழகல்ல. 2006 ஆம் வருடம் கடன் பெற்றவர்களில் 39 சதவீதம் பேர் தங்களது உண்மையான வருமானத்தை உயர்த்திச் சொல்லி அதிகக் கடன் பெற்றிருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது.

பிரச்சினை subprime என்ற அளவோடு நிற்கவில்லை. அமெரிக்காவில் விற்கப்படாமல் 42 இலட்சம் வீடுகள் ஈயாடின. விலைகள் சரிவது நிற்கவில்லை. நல்ல வருமானம் ஈட்டுகிற prime லோன் வாங்கியவர்களையும் அது கடிக்கத் தொடங்கியது. அவர்கள் வாங்கிய போது இருந்த விலையைக் காட்டிலும் இப்போது வீட்டின் மதிப்பு சரிந்து விட்டது. ஐம்பது இலட்சத்திற்கு கடன் வாங்கியிருக்கிறீர்கள். பத்து இலட்சம் கடன் திருப்பிச் செலுத்தியாகி விட்டது. இன்னும் நாற்பது இலட்சம் மீதமுள்ளது. அதையும் கட்ட வேண்டும் என்றுதான் நினைப்பீர்கள். ஆனால் எந்த வீட்டிற்காக கடன் கட்டுகிறீர்களோ அந்த வீடு வெறும் முப்பது இலட்சத்திற்குத்தான் விலை போகிறது என்றால் கடனைக் கட்டுவீர்களா? யோசிக்க மாட்டீர்கள்?

விளைவு? Prime வீட்டுச் சந்தையிலும் கடன் ஏய்ப்புகள், ஜப்திகள், ஏலங்கள் இத்தியாதி இத்தியாதி. கடன் கட்டவில்லை என்றால் நம்ம ஊரைப் போல குண்டர்களை அனுப்பியெல்லாம் அங்கே மிரட்ட முடியாது. வங்கிகளின் வராக் கடன் ஏறிக்கொண்டே போனது.
இதற்கிடையை குப்பையை அழகாக பார்சல் பண்ணி விற்கிற வேலையை நிதி நிறுவனங்கள் செய்து கொண்டிருந்தன. Subprime சந்தையில் வராக் கடன்களைச் சேர்த்து வைத்திருந்த நிதி நிறுவனம் அந்தக் கடன்களை ஒரு பெரிய வங்கிக்கு, “இந்தா பாரப்பா. நான் குடுத்த கடன். என்னால திருப்பி வாங்க முடியல. இதெல்லாம் நீ வெச்சுக்கோ. கடங்காரன் கிட்ட வசூல் பண்ணிக்க. எனக்கு ஒரு தொகையைக் குடுத்து கழட்டி விட்று” என்று ஒட்டு மொத்தமாக விலை பேசி விற்று விட வேண்டியது. அந்த வங்கி அந்தக் குப்பையை இன்னும் கொஞ்சம் ஜிகினா காகிதம் ஒட்டி பிரிதொரு வங்கிக்கு விற்க வேண்டியது.
இப்படியே கை மாற்றிக் கொண்டு போனாலும் ஒருவரிடமாவது பொட்டலம் கிழிந்து குப்பை வெளிப்பட்டுத்தானே தீரும்! லீமன் பிரதர்ஸ் அந்த ‘மியூசிக் சேர்’ விளையாட்டில் மாட்டிக் கொண்ட ஒரு சூழ்நிலைக் கைதி. இத்தனைக்கும் அது போன வருடம்தான் அந்த நிறுவனம் தன்னுடைய பிரத்யேக subprime பிரிவை இழுத்து மூடி 1,200 பேரை வீட்டுக்கு அனுப்பியிருந்தது.

ஆறு மாதத்திற்கு முன்னர் Bear Stearns என்ற அமெரிக்காவின் மிகப் பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்று திவாலாகும் விளிம்பில் நின்றது. JP மார்கன் சேஸ் வங்கி அதை அடி மாட்டு விலைக்கு வாங்கிக் காப்பாற்றியது. கொஞ்ச நாளைக்கு முன்புதான் Fannie Mae, Freddie Mac ஆகிய நிறுவனங்களை அமெரிக்க அரசே தன் வசம் எடுத்துக்கொள்வதாக அறிவித்தது. அதற்குள் சுமார் 60 பில்லியன் டாலர் (1 பில்லியன் = ரூ 4,500 கோடி) வராக் கடன்களில் சிக்கிய லீமன் பிரதர்ஸ் திவால் நோட்டீஸ் கொடுத்து விட்டது.
அந்த வரிசையில் தயாராக நின்று கொண்டிருந்தது அமெரிக்காவின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமாகிய American International Group. அதை தன் வசம் எடுத்து காப்பாற்றுவதாக அறிவித்து அமெரிக்க அரசு நிலைமையின் தீவிரத்தைத் தணித்தது.
திவாலாகும் நிறுவனங்கள் இதோடு நின்று விடாது என்று கணிக்கிறார்கள். அந்த நிலைக்கு ஏதாவது நிறுவனம் தள்ளப்பட்டால் அதைக் காப்பாற்றுவதற்காக சிறப்பு நிதிக் குவியம் ஒன்றை நிறுவவும் அமெரிக்காவின் மத்திய வங்கி ஃபெடரல் ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் வழங்குவதைப் பற்றிப் பேசுகிறார்கள். அதற்கு 700 முதல் 900 பில்லியன் டாலர் வரை நிதி ஒதுக்குவார்களாம்.

அதெல்லாம் அமெரிக்க மக்களின் வரிப்பணம். அங்கே பணியாற்றும் நம்ம ஊர் சாஃப்ட்வேர் ஆசாமிகளின் வரிப் பணமும் கூட.
1930 இல் அமெரிக்கப் பொருளாதாரம் சந்தித்த அளவுக்கு மிகப் பெரிய நிதி நெருக்கடியாக சில பேர் தற்போதைய நிலவரத்தை ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். எனினும் அது போல நிகழ்வதற்கான சாத்தியம் குறைவு என்றே தோன்றுகிறது. அப்போது அமெரிக்க அரசு திவாலான நிறுவனங்களைத் தன்னத்தே எடுத்துக் கொள்ளவில்லை. 1930 களில் மொத்தம் ஒன்பதாயிரம் வங்கிகள் இழுத்து மூடப்பட்டனவாம். 1933 சமயத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 25 சதவீதம், இப்போது வெறும் ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது.
முதலாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை உலகின் மிகப் பெரிய பொருளாதாரப் பிராந்தியமாகவும், ஆங்கிலேயர் காலூன்றும் வரை சீனாவுக்கு அடுத்த படியாக இரண்டாவது பொருளாதார வல்லரசாகவும் விளங்கிய இந்தியா மூன்றாம் உலக நாடுகள் பட்டியலில் சேர்ந்தது என்பது உண்மை என்றால் இப்போது பொருளாதார வல்லரசாக இருக்கும் அமெரிக்கா பின்னோக்கிப் போனால் அதில் வியப்பொன்றும் இல்லை.
After all அமெரிக்க மண்ணில் கொலம்பஸ் கால் வைத்து இன்னும் 500 ஆண்டுகள் கூட ஆகவில்லை. எனவே அமெரிக்கா நலிந்தால் கூட பரவாயில்லை என்று ஆழ்மனம் சொல்கிறது. ஆனால் அப்படியெல்லாம் நடந்து விடாது. இன்னும் சில வருடங்களுக்கு உலகப் பொருளாதாரத்தைச் செலுத்துகிற எஞ்சினாக அமெரிக்கா திகழும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

பின் குறிப்பு: பதினொன்றாம் அத்தியாயம் என்பது திவாலாகும் அமெரிக்க நிறுவனங்கள் தாக்கல் செய்ய வேண்டிய chapter 11 ஆவணம்.

Thanks:‘uyirosai’ weekly by uyirmmai magazine.

3 thoughts on “திவாலாகும் அமெரிக்கா நிதி நிறுவனங்கள் : செல்லமுத்து குப்புசாமி”

 1. dear editor-
  please mention that this article is from ‘uyirosai’ weekly by uyirmmai magazine
  it woukd be an appreciasable practice
  anpudn
  yamuna rajendran

 2. தகவல்கள் பல அங்கு நடந்த உண்மையான நிலவரத்தை கூறவில்லை.
  “….அதாவது உலகப் பொருளாதாரச் சூழல் பற்றி. அதில் பங்குச் சந்தை ஒரு சிறு அங்கம் மட்டுமே.”- இன்றைய தேசிய/உலக பொருளாதாரங்களை தலைமை தாங்குவது, வழிநடத்துவது பங்குச்சந்தை தான்.
  பிரச்சினைக்கு நுகர்வோராகிய மக்களை குற்றம் சாட்டுவது போல தெரிகின்றது. அங்கு நடந்தது ஒரு சூதாட்டம்(இத்தனை பேர் வீடு வாங்கினால், எவ்வளவு பணம் வட்டியோடு கிடைக்கும் என்ற ஊகத்தை வைத்து பங்குச்சந்தையில் சூதாடினார்கள்) என்ற உண்மையை கட்டுரை நாசூக்காக மறைக்கின்றது. மேலும் இந்தக்கட்டுரையின் இறுதிப்பகுதியில் இந்தியா பற்றி கூறப்படுவது உண்மைக்கு மாறானவை. ஆங்கிலேயர் வந்த பின்னர் தான் இந்தியா என்ற ஒற்றைப் பொருளாதார அலகைக் கொண்ட(அதுவும் ஆங்கிலேயர் உருவாக்கியது தான்) நாடு உருவானது.
  http://kalaiy.blogspot.com/2008/09/blog-post_30.html

Comments are closed.