திருகோணஸ்வரர் ஆலயத்தின் பிரதம குருவான சிவகுரு ராஜ குருக்கள் கொல்லப்பட்டுள்ளார்.

21.09.2008.

இலங்கையின் திருகோணமலையின் திருகோணஸ்வரர் ஆலயத்தின் பிரதம குருவான சிவகுரு ராஜ குருக்கள், ஞாயிறு மாலை வித்தியாலயம் வீதியில் அடையாளம் தெரியாத ஆட்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, இலங்கையின் வடக்கே வன்னிக்களமுனைப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது அடுத்தடுத்து நான்கு தடவைகள் ஞாயிற்றுக்கிழமையன்று விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நாச்சிக்குடா மற்றும் அக்கராயன்குளம் பகுதிகளில் விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் விடுதலைப் புலிகள் ஒன்றுகூடும் இடம் ஒன்றின் மீதும், அவர்களது தளம் ஒன்றின் மீதும் குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கொக்காவில் பகுதிகளில் தற்போது படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.