திருகோணமலை கடற்படைத் தளம்மீதான புலிகளின் விமானத் தாக்குதல்; 3000 படையினர் இலக்கு?

30.08.2008.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருகோணமலை கடற்படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடாத்திய விமானத் தாக்குதல், யாழ்ப்பாணத்திற்கு 3000 துருப்பினரை ஏற்றிச் செல்லத் தயாராகவிருந்த ‘ஜெற் லைனரை’ இலக்காகக் கொண்டது என டெய்லி மிறர் ஆங்கிலப் பத்திரிகையின் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜயசிறி தெரிவித்திருக்கிறார்.
ஜெட் லைனர், ஆயிரக்கணக்கான படையினரை ஏற்றிக்கொண்டு மறுநாள் யாழ்ப்பாணத்திற்குப் புறப்பட தயார்நிலையிலிருந்ததாகவும், கடற்படையினரின் பதில்தாக்குதல் தாக்குதல் காரணமாக ஜெட் லைனர் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டதாகவும் டெய்லி மிறர் பாதுகாப்புப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விடுதலைப் புலிகளின் இரண்டு விமானங்கள் கடற்படைத்தளத்தை நோக்கி வருவதனை அன்றிரவு 8.45 மணியளவில் ராடார்கள் மூலம் அறிந்துகொண்ட விமானப் படையினர், இதுகுறித்து கடற்படையினருக்கு அறிவித்ததாகவும், கடற்படையினர் உடனடியாக எதிர்த்தாக்குதல் நடாத்தியதன் காரணமாக புலிகளின் விமானங்கள் வேறு இலக்குகள் மீது குண்டுகளை வீசியதாகவும் டெய்லி மிறர் பாதுகாப்புப் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் படையினரின் தகவலையடுத்து, புலிகளின் விமானங்கள் இலக்குகளை அடையாளம் கண்டுகொள்வதைத் தவிர்க்கும்பொருட்டு, திருகோணமலைப் பிரதேசத்தின் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு, கடற்படைத்தளம் இருளடையச் செய்யப்பட்டதாகவும், வானை நோக்கி கடற்படைத்தளத்திலிருந்தும், கடற்படையின் யுத்தக் கப்பலிலிருந்தும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 9 மணியளவில் புலிகளின் இரு இலகுரக விமானங்களும் கடற்படைத்தளத்தின் அதியுயர் பாதுகாப்புமிக்க தெற்குப் பகுதியை நோக்கி வந்ததாகவும், ஆனால் விமானங்களை நோக்கி மேற்கொள்ளப்பட்ட கடுமையான எதிர்த்தாக்குதலின் காரணமாக அவை சில நிமிடத்திற்குள் 4 குண்டுகளை வீசித் தாக்கிவிட்டு திரும்பிச் சென்றதாகவும் அப்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் 4 கடற்படையினர் உயிரிழந்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும், கடற்படையினர் இதனை மறுத்துள்ளதாகவும் சுனில் ஜயசிறி தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் ஆரம்பம்

இந்தச் சம்பவம் தொடர்பாக விமானப் படையினரும், கடற்படையினரும் தனித்தனியான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் டெய்லி மிறர் பாதுகாப்பு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லா பாதுகாப்பு வலைகளையும் தாண்டி புலிகளின் விமானங்கள் எவ்வாறு திருகோணமலைக்கு வந்தன என்பது தொடர்பாகவும், இதனுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரான புலிகளின் விமானத் தாக்குதல்கள்

கடந்த 2007 மார்ச் 26 ஆம் திகதி விடுதலைப் புலிகள் முதன்முதலாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கருகில் அமைந்திருக்கும், விமானப் படைத்தளத்தின் மீது விமானத் தாக்குதல் நடாத்தியிருந்தனர். இத்தாக்குதலில், இருவர் கொல்லப்பட்டதுடன், 17 பேர் காயமடைந்தனர்.

இதன்பின்னர், 2007 ஏப்ரல் 23 ஆம் திகதி யாழ். பலாலி இராணுவத்தளத்தின் மீது புலிகள் இரண்டாவது விமானத் தாக்குதலை நடாத்தினர். இதில் 6 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுடன், 17 பேர் காயமடைந்தனர்

பின்னர், 2007 ஏப்ரல் 29 ஆம் திகதி, கொலன்னாவ எண்ணெய்க் களஞ்சியம் மீதும், முத்துராஜவெல எரிவாயு தொழிற்சாலை மீதும் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடாத்தின.

இதனைத் தொடர்ந்து, 2007 ஒக்டோபர் 22 ஆம் திகதி அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீது கரும்புலிகளுடன் இணைந்து புலிகளின் விமானப் படையினர் நடாத்திய தாக்குதலில், 14 இராணுவ வீரர்களும், 20 கரும்புலிகளும் கொல்லப்பட்டனர்.

இறுதியாக, 2008 ஏப்ரல் 27 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் விமானங்கள், வெலிஓயா முன்னரங்க பகுதியில் அமைந்துள்ள இராணுவ நிலைகளின் மீது தாக்குதல் நடாத்தின. இதில் ஒரு படைவீரர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

விமானப் படையைக் கொண்டுள்ள முதலாவது இயக்கம் புலிகளல்ல

உலகில் விமானப் படையைக் கொண்டிருக்கும் அரசல்லாத ஒரே அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளே என தகவல்கள் வெளியாகியிருந்தபோதிலும், 1969 ஆம் ஆண்டு நைஜீரியாவில் நடைபெற்ற ‘பயாஃப்ரா’ யுத்தத்தின்போது விமானத் தாக்குதல் ஒன்று நடந்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவீடன் சாகசக்காரரும், விமான ஓட்டுநருமான கார்ல் கஸ்டாப்வொன் ரோசன் என்பவர் நைஜீரியாவிலிருந்து பிரிந்து சென்ற ‘பயாஃப்ரா’ பகுதிக்கு நிவாரண உதவிகளைக் கொண்டுசெல்லும்போது, நைஜீரிய விமானப் படையினர் அதற்கு இடையூறுவிளைவித்துள்ளனர்.

இதனையடுத்து, 1969 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி முதல், தொடர்ச்சியாக சில தினங்களுக்கு பிரெஞ்சு இரகசிய விமான சேவையின் உதவியுடன், கஸ்டாப்வொன் ரோசன் நைஜீரிய விமானப் படையினர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலே உலகில் அரசல்லாத ஒருவரால் முதலில் நடாத்தப்பட்ட விமானத் தாக்குதல் என தற்போது வெளியாகியிருக்கும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

THANK:inllanka.com