திருகோணமலையில் சட்டவிரோதக் குடியேற்றங்கள்!

shampanthnதிருகோணமலை உள்ளிட்ட கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறு பான்மை இனத்திற்குச் சொந்தமான காணிகளையும் ,அரச காணிகளையும் பெரும் பான்மையினர் சட்டவிரோதமான முறையில் அரசிலுள்ள சிலரின் ஒத்துழைப்புடன் கைப்பற்றி வருகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டியது.

இந்தச் சட்டவிரோதக் குடியேற்றம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்றும் இல்லையேல் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு தவிர்க்க முடியாத சில முடிவுகளை எடுக்கவேண்டி வரும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

கிழக்கில் திருகோணமல் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சட்டவிரோதக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. பெரும்பான்மையினர் சிறுபான்மையினரின் காணிகளையும் , அரச காணிகளையும் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றி குடியேறி வருகின்றனர். திருகோணமலை மொறவௌ , வேப்பங்குளம் ,தம்பலகாமம்  பிரதேசங்களுக்கு உட்பட்ட பாலமோட்டை ,  பத்தினிபுரம் , குச்சவெளி பிரதேசபைக்கு உட்பட்ட இறக்கக்கண்டி உள்ளிட்ட பல இடங்களில் இந்தச் சட்டவிரோதக் குடியேற்றம் இடம்பெறுகிறது. மேற்படி இடங்கள் அனைத்தும் சிறுபான்மையினருக்குச் சொந்தமானவை. அவர்களை விரட்டிவிட்டு இவ்வாறு அபகரிக்கப்படுகின்றன. அரசில் உள்ள ஒரு பிரிவினர் இதற்குப் பின்னால் உள்ளனர்.

சம்பூரில் திரும்பி வந்து வாழ முடியவில்லை சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் திரும்பிவந்து வாழ முடியாமல் உள்ளனர். அந்தப் பகுதி அதி உயர் பாதுகாப்பு வலயமாக இருப்பதே இதற்குக் காரணம். இந்த இடங்களில் சிறுபான்மை மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்தனர். பாடசாலைகள் , கோயில்கள் உள்ளிட்ட அதிக கட்டடங்கள் அங்கு இருந்தன. அவை அனைத்தும் இப்போது அழிக்கப்பட்டுவிட்டன. நன்கு திட்டமிடப்பட்ட இந்தச் சட்டவிரோத குடியேற்றம் உடன் நிறுத்தப்படாவிட்டால் ,  சிறுபான்மை இனத்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுவர். இது ஓர் அடிப்படை மனித உரிமை மீறலாகும். சிறுபான்மை இன மக்களைத் தொடர்ந்தும் அங்கிருந்து விரட்ட பெரும்பான்மையினர் முயற்சி செய்கின்றனர். சட்டம் பாரபட்சமாக நடத்தப்படுகின்றது. பெரும்பான்மையினருக்கு சட்டம்  வேறுவிதமாகப் பயன்படுத்தப்படுகிறது.

திருகோணமலை உள்ளிட்ட கிழக்கின்  அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறுபான்மை இனத்திற்குச் சொந்தமான காணிகளையும் , அரச காணிகளையும் பெரும்பான்மையினர் சட்டவிரோதமான முறையில் அரசிலுள்ள சிலரின் ஒத்துழைப்புடன் கைப்பற்றி வருகின்றனர்.  இந்தச் சட்டவிரோதக் குடியேற்றம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும். இல்லையேல் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு தவிர்க்க முடியாத சில முடிவுகளை எடுக்கவேண்டி வரும்.  என்று இரா.சம்பந்தன் தெரிவித்தார்.