தி.மு.க கூட்டணியிலிருந்து இடதுசாரிகள் வெளியேற்றம்?

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை இடதுசாரி கட்சிகள் எதிர்த்து மத்திய அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொண்ட நிலையில், தமிழ் நாட்டில் திமுக  கூட்டணியில்  இடம் பெற்றிருந்த அந்த கட்சிகளின் நிலை  என்ன என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன.
காங்கிரஸ் மற்றும் பிஜேபியுடன் உறவு கொண்டுள்ள கட்சிகளுடன் கூட்டணிக்கு இடமே இல்லை என்று இடதுசாரி கட்சிகள் திட்டவட்டமாக அறிவித்து விட்டன. எனினும் தேசிய அளவில் உள்ள பிரச்சனையை தமிழக அளவில் எழுப்பாமல் மதவாதத்திற்கு எதிரான கூட்டணியை காப்பாற்ற வேண்டும் என்று முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி  வேண்டுகோள் விடுத்தார்.

அந்த வேண்டுகோள் பற்றி தங்களது மாநில குழுவில் விவாதித்து முடி வெடுக்கப்படும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தெரிவித்திருந்தன.

இந்தநிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட மின்துறை அமைச்சரும்,  திமுக பொருளாளரு மான ஆற்காடு வீராசாமி, கம்யூனிஸ்ட் கட்சிகளை மிகக்கடுமையாக விமர்சித்து  பேசினார்.  அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கும் கட்சிகள் வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது இருக்கின்ற இடம் தெரியாமல் போய்விடும் என்று அவர்  பேசினார்.

சீனாவில் தரகர்கள் என்ற பொருள்படும்படியும், மதவாத சக்திகளுடன்  சேர்ந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக வாக்களித்தது,   வெட்கக்கேடான செயல் என்றும்  அவர் மிகக்காட்டமாக இடதுசாரி கட்சிகளை தாக்கி பேசினார்.  ஆற்காடு வீராசாமியின் இந்த கருத்து இடதுசாரி கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  அரசியல் நாகரீகமற்ற பேச்சு இது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன்  கூறியுள்ளார்.

திமுகவுடனான கூட்டணி பற்றி வரும் 25ந் தேதி மாநில குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். வளர்ந்து வரும் கட்சிகளையும், தங்களது கட்சி உன்னிப்பாக கவனித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில்  சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன்,  ஆற்காடு வீராசாமி தெரிவித்த கருத்து அரசியல் பாமரத்தனம் என்று மிகக்கடுமையாக  சாடினார்.

திமுகவுடன் கூட்டணி பற்றி ஓசூரில்  22ந் தேதி நடைபெற உள்ள தலைமை குழு கூட்டத்தில் முடிவெடுக்கப் படும் என்று அவர் தெரிவித்தார்.  ஏற்கனவே காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ள திமுகவுடன் உறவு நீடிக்குமா என்பது பற்றி பரிசீலித்து வந்த இடதுசாரிகட்சிகள், ஆற்காடு வீராசாமியின் இந்த கடுமையான விமர்சனத்தால், கோபமடைந் துள்ளன.  அதன் வெளிப்பாடாக  ஆற்காடு வீராசாமியை விமர்சித்து அக்கட்சியின் தலைவர்கள்  கருத்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சருக்கு மிகவும் நெருக்கமான ஆற்காடு வீராசாமி தெரிவித்த இந்த கருத்து, அவரது சொந்த கருத்தாக இருக்க முடியாது என்றும் முதலமைச்சர் சொல்லியே அவர் இப்படி பேசியிருக்க வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கருதுகின்றன.  எனவே அடுத்த  இரண்டுமூன்று நாட்களில்  திமுக வுடன்  கூட்டணியை முறித்து கொள்வது பற்றி இந்த 2 கட்சி களும் முடிவெடுக் கும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.