திபெத் சீனாவிடமிருந்து விடுதலை கேட்கவில்லை; என்னுடைய எண்ணவோட்டங்கள் சீன அரசுக்குத் தெரியும்!:தலாய் லாமா

 

தன்னுடைய தலைமையில் திபெத் சீனாவிடமிருந்து விடுதலை கேட்கவில்லை என்று சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தலாய் லாமா கூறியுள்ளார்.

தைவான் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வருமாறு தைவான் அரசு தலாய்லாமாவுக்கு அழைப்பு விடுத்தது. அதை ஏற்று தைவான் சென்றுள்ள அவர் அளித்த பேட்டியில்,தான் திபெத் விடுதலையை கேட்கவில்லை என்றும், தன்னுடைய எண்ணவோட்டங்கள் சீன அரசுக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார். அரசியல் சச்சரவைத் தவிர்ப்பதற்காக தைவான் ஜனாதிபதியைச் சந்திக்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார். 

 தலாய் லாமாவை தைவானுக்கு வருமாறு அழைத்த தைவான் அரசின் நடவடிக் கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீனா பல பயணங்களையும், பரி மாற்றங்களையும் நிறுத்தி விட்டது என்று தைவான் கட்சி ஒன்றின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஷாங்காய் நகரின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் யாங் சியாவோடு வருகை ரத்தானது உள்ளிட்ட பல பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று ஆளும் தேசியக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சென் சு- ராங் கூறினார். தலாய் லாமா வருகை பற்றி சீனாவின் கருத்தை அறிய ஒரு தூதர் சீனாவுக்கு அனுப்பப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.