திட்டமிடும் தத்துவங்கள் – எச்சரிக்கைக் குறிப்பு : சபா நாவலன்

உலகின் சமச்சீரற்ற சிந்தனை முறை என்பது சமூகத்தில் திட்டமிட்டு உருவமைக்கப்பட்ட சித்தாந்தங்களின் அடிப்படையிலிருந்தே உருவாகின்றது. இவ்வாறன சிந்தனை மாற்றத்தை முன்கூட்டியே திட்டமிடுகின்ற சித்தாந்தங்களை உருவாக்கும் உலக நிறுவனங்களும், ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி அமைப்புக்களும் இராட்சத வலைப்பின்னலாக இயங்குகின்றன. மார்க்சியம் என்ற தத்துவார்த்த, விஞ்ஞான பூர்வமான ஆய்வு முறை முழுமையாக முன்வைக்கப்பட்ட காலம் முதல் மூன்று தளங்களில் அதற்கு எதிரான தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. முதலில் மார்க்சியத்திற்கு எதிரான பகுப்பாய்வு முறைகளை முன்வைத்தல். இரண்டாவதாக மார்சிய அணுமு முறையோடிணைந்த திரிபுகளை முன்வைத்தல். மூன்றாவதாக மார்க்சியத்தைத் தவறாக உரைத்தல்.

பல தடவைகள் சமூகப்பற்றுள்ள சக்திகள் இந்த எதிர்ப்புரட்சிச் சித்தாந்தங்களையும், அதன் சமூகச் செயற்பாடுகளையும் புரிந்துகொள்வதற்கு முன்பாகவே அவை மக்கள் மத்தியில் மிகவும் ஆழமாக விதைக்கப்பட்டுவிடுகின்றன.

மார்க்சியத்தை வரட்டுத்தனமான மதம் போன்று எண்ணுகின்ற பலர், அதன் உள்ளார்ந்த தத்துவார்தப் பகுதிகளை குறைந்தபட்சமேனும் புரிந்துகொள்வதில்லை. இன்றைய சமூகத்தின் புற நிலை யதார்த்தம், வாழ்வியல், சர்வதேச சூழல், திட்டமிட்டு உருவாக்கப்படும் சமச்சீரற்ற சிந்தனை முறை என்ற எதனையும் குறித்து சிந்திக்காதவர்கள், தமது வெற்றுக் கூக்குரல்கள் தான் மார்க்சியம் என விடயமறியாதவர்களை ஏமாற்றுவதும் கூட ஏகபோக அதிகாரங்களுக்கு மறைமுகமாகச் சேவையாற்றுவதாகும்.

1980 களின் இறுதியில் இலங்கையில் ஏறத்தாள ஒரு லட்சம் சிங்கள இளைஞர்கள் மூன்று வருட கால எல்லைக்குள் அரசினால் கோரமாகக் கொலைசெய்யப்பட்டனர். உலகின் எந்த மனித உரிமை அமைப்புக்களும் இந்தக் கொலைகளைப் பதிவுசெய்யவில்லை. எதோ ஒரு வகையில் இடதுசாரியப் புரட்சியாக நோக்கப்பட்ட இக்காலப்பகுதியிலான மக்கள் விடுத்லை முன்னணியின் ஆயுதப்போராட்டம் தெற்காசியாவில் ஏகபோக அதிகாரத்திற்கு எதிரானதாகக் கருதப்பட்டதே இதற்கான அடிப்படை.

அப்போராட்டம் அழிக்கப்பட்ட பின்னர் இன்று வரைக்கும் தன்னார்வ நிறுவனங்களில் இலக்காக இலங்கை இருந்து வந்துள்ளது. தன்னார்வ நிறுவனங்கள் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்திய பிரதானமான தெற்காசிய நாடுகளில் இலங்கையும் ஒன்று.

ஒரு புறத்தில் சர்வாதிகார அரசமைப்பும், மறு புறத்தில் அதற்கெதிரான எதிர்ப்பியக்கங்களை தடுக்கும் முதன்மைச் சக்தியாகச் சித்தாந்தத் தளத்தில் அடையாள அரசியல் முன்வைக்கப்படுகிறது. சமூகச் சிறுபான்மையினரை பொதுவான அரசியல் நோக்கங்களிலிருந்து அன்னியமாக்கி, குறுகிய அரசியலை எதிர்ப்பியக்கங்களாக உருவாக்குவதே இவற்றின் நோக்கம். உடலரசியல், தலித்தியம் போன்ற இன்னோரன்ன குறுகிய அரசியலை பொதுவான அரசியல் நோக்கங்களிலிருந்து பிரிப்பது ஒரு புறத்திலும் மறுபுறத்தில் பன்னாட்டு முதலாளிகளின் மூலதனத்தில் இயங்கும் எதிர்ப்பியக்கங்களை உருவாக்குவதுமே இதன் பின்புலத்திலுள்ள நிகழ்ச்சி நிரல்.

அடையாள அரசியல் என்ற தன்னார்வ நிறுவனங்களின் சமூகச் சித்தாந்தச் செயற்பாடென்பது, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என்பதை சுருக்கமாகப் விவாதித்தல் இங்கு பொருத்தமானதாக அமையும்.

சார்பியல் (Functionalism)

ஏகாதிபத்தியங்கள் தமது குடியேற்ற நாடுகளில் சமூகத்தின் வளர்ச்சியைத் இடை நிறுத்தி தமது ஆதிக்கத்தைக் தகவமைத்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஆய்வு முறை மானுடவியலாக (Anthropology) உருவெடுத்தது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எமிலி டெர்கையிம் என்ற பிரஞ்சு கல்வியியலாலர் கல்விசார் மானுடவியலின் தந்தை எனக் கருதப்பட்டார். சார்பியல் வாதம் என்னும் ததுவத்தை முறையை இவர் அறிமுகப்படுத்தினார். சமூகத்தின் ஒவ்வொரு கூறுகளும் ஒரு சார்பு நிலை உடையது எனக் கருதும் சார்பியல் வாதம் ஒன்று மற்றொன்றை இயக்கும் தன்மை வாய்ந்தது எனக் கருதினார்.

அமைப்பியல் சார்பியல் ( Structural functionalism)

இதன் பின்னதாக இங்கிலாந்தில் கல்விகற்ற போலந்து மானுடவியலாளர் காலப் பகுதியில் உருவான அமைப்பியல் சார்பியல் வாதம் சமூக த்தின் குறித்த அமைப்பியல் கூறுகளிடையேயான சார்பியல் இயக்கம் காணப்படுவதாக வாதிட்டது. சமூக உறவுகளிடையேயான வரைமுறை, பாரம்பரியம், போன்ற இன்னோரன்ன அமைப்புகளிடையேயான சார்பின் அடிப்படையில் சமூகம் இயங்குகிறது என்றனர்.

ஆபிரிக்க நாடுகள், நியூகினியா போன்ற குடியேற்ற நாடுகளில் நாடுகளில் ஆய்வுகளை நிகழ்த்திய இவர்கள் இந்த நாடுகளின் மீதான காலனியாதிக்கத்தின் அதிகாரத்தை நிலைநாட்டும்நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதை இலகுபடுத்தினர்.

அமைப்பியல் (Structuralism)

காலனியாதிக்கம் முடிபிற்கு வந்துகொண்டிருந்த காலமான இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அமைப்பியல் வாதம் என்ற கருத்து லெவி ஸ்ரோஸ் என்ற பிரஞ்சு மானுடவியலாளரால் முன்வைக்கப்பட்டது. சார்பியல்வாதத்துடன் மிக நெருங்கிய தொடர்புடைய அமைப்பியல் வாதம் சமூகம் அல்லது சமூகம் என்ற பொருள் மனித சிந்தனையைத் தீர்மானிக்கின்றது என்ற மார்க்சியக் கருத்தியலுக்கு எதிராக முன்மொழியப்ப்பட்ட முதலாவது நிரல்படுத்தலுக்கு உட்பட்ட தத்துவமாகும். அல்தூசர் போன்ற பல சிந்தனையாளர்களும் இதன் தாக்கத்திற்கு உட்பட்டிருந்தனர். சமூகச்செயற்பாடு மனித கூட்டத்தின் கூட்டு மன உணர்வின் அடிப்படையிலேயே உருவாகின்றது என்ற அடிப்படையை முன்வைக்கின்றனர். அமைப்பியல் அடிப்படையில் சமூக அமைப்பை கருத்துக்களின் விளைவாகவே விபரிக்க முற்படுகிறது.

லெவி ஸ்ரோஸ் இனச் சின்ன அமைப்பு முறையின் அடிப்படையில் இந்தியாவின் சாதி அமைப்பு முறையை ஒப்பு நோக்கவும் முனைகிறார்.

அறுபதுகளின் பின்பகுதியில் உலகெங்கும் புரட்சி அலை உயரே எழுகிறது. ஏகபோக முதலாளித்துவம் துளிர்விட்ட இக்காலப்பகுதியில் புரட்சிச் செயற்பாட்டை முறியடிக்க வேண்டிய தேவை ஏகபோகங்களுக்கு உருவாகிறது. மத்தியதர வர்க்கத்தின் முன்னேறிய அறிவுசார் சமூகம் மார்க்சிய தத்துவத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தது. உலககென்ங்கும் கம்யூனிச சமூகத்தை நோக்கிய போராட்டங்கள் உருவாகின்றன.

பின் அமைப்பியலும் பின் நவீனத்துவமும் ( Post-modernism and Post-structuralism)

பின் காலனியாதிக்கக் காலம் என்பது ஐரோப்பாவில் ஏக போக முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த, சிக்கலான காலகட்டம். நெருக்கடிகு உள்ளாகியிருந்த முதலாளித்துவத்தை மறுபடி நிறுவதற்கான செயல் தந்திரமாக ஒரு புறத்தில் ஏக போக முதலாளித்துவமும், நவ தாராளவாதமும் முன்வைக்கப்பட்டது. நவ தாராளவாதத்தின் உச்ச நிலை வளர்ச்சியே உலக மயமாதலாக விரிவடைந்தது. இக்காலப்ப்குதியில் ஐரோப்பா மற்றும் இலத்தீன் அமரிக்க நாடுகளில் மிகப்பெரும் பிரச்சனையாக அமைந்தது கம்யூனிசப் போராட்டங்களே. சிறு உற்பத்திகள் பெரும் இரட்சத நிறுவனங்களால் உள்வாங்கப்பட்டன. மத்தியதர வர்க்கத்தின் இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டது. நவீனத்துவத்தின் வளர்ச்சி ஏகபோக முதலாளித்துவமாகியிருந்த காலப்பகுதி அது. ஆக, ஏகபோகத்திற்கு எதிரான மத்தியதர வர்க்கத்தின் எழ்ச்சி கட்டுப்படுத்தப்பட முடியாத நிலையை உருவாக்கியிருந்தது.

இவ்வேளையில் மார்க்சியத்திற்கு எதிரான தத்துவங்களை முன்வைப்பதை விடவும் மாட்க்சியத்தின் திரிபுகளை நோக்கி மக்கள் போராட்டங்களையும் சிந்தனை முறையையும் நெறிப்படுத்த வேண்டிய தேவை உருவாகியது. இத்தேவையின் அடிப்ப்டையில் பின் அமைப்பியல் தத்துவம் உருவாகின்றது.

அமைப்பியலைப் போலவே பின் அமைப்பியல் பல வேறுபட்ட மேற்கூறுகள் குறித்துப் பேசுகிறது. இலக்கியம், பண்பாட்டு விமர்சனம்,அரசியல்,சமூகம் என்ற அனைத்துக் கூறுகளையும் ஆராய்கிறது. மானுடவியலாளர்கள் அமைப்பியலின் தர்கீகமற்ற கூறுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்ட வேளையில் பின் அமைப்பியலை உருவாக்குகின்றனர்.இதே வேளை மார்க்சியம் பரந்துபட்ட ஐரோப்பிய புத்திஜீபிகளால் விஞ்ஞான பூர்வமான தத்துவம் என்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் அதற்கு எதிராகவன்றி அதன் திரிபாக ஐரோப்பிய அதிகார வர்க்கத்தால் ஊக்குவிக்கப்படுகிறது.

ஜக் தெரீதா,பூக்கோ,லியோதார்,டிலியூஸ்,கிறிஸ்டீவா போன்ற கல்வியாளர்கள் முன்வைக்கும் பின் அமைபியல் வாதம் பின்நவீனத்துவக் கருத்துக்களோடு தத்துவார்த்த அடிப்படையில் ஒரே நேர்கோட்டி பயணிக்க, மானுடவியல் ஆய்வு முறைகளுக்கு வெளியில் பின் அமைப்பியல் பின்நவீனத்துவமாக அரசியல் சமூக இலக்கிய தளங்களில் செல்வாக்குச் செலுத்த ஆரம்பிக்கிறது. 1968 பரீஸ் மாணவர் புரட்சியைச் சீர்குலைத்ததிலும்,லத்தீன் அமரிக்க நாடுகளில் புரட்சியின் பின்னடைவிற்கும் பின்நவீனத்துவம் பெரும் பங்காற்றியது எனலாம்.

மார்க்சியத் திரிபுகளாக ஐரோப்பாவில் உருவான பின் நவீனத்துவம் கருத்துக்கள் பொதுவாக ஐந்து கூறுகளைக் கொண்டிருந்தன.
1. அடையாள அரசியல்
2. கூட்டு மன உணர்விற்கு எதிர் என்பது.
3. வாழ் நிலை உணர்வைத் தீர்மானிக்கும் என்ற கருத்திற்கு எதிரான நிலை.
4. தத்துவங்கள் உலகு குறித்த உண்மையை அறிவிக்கும் என்ற கருத்தைத் விமர்சித்தல்.
5. எல்லைகளையும் எல்லைகளுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட அதிகாரத்தையும் நிராகரித்தல்.

மார்க்சியத்தின் பொருள்முதல்வாத பார்வையையும் அதன் வழியே சமூகத்தின் இயக்கத்தைப் அறியும் முறையை முற்றாக நிராகரிக்கும் சரிந்து கொண்டிருக்கும் மானுடவியல் ஆய்வுமுறைகளை மார்க்சிய மானுடவியல் என்று மறுபடி தூக்கி நிறுத்த முயல்வது எவ்வாறு கேலிக்கூத்தானதோ அவ்வாறே மார்க்சியப் பின்நவீனத்துவம் என்பது நகைப்புக்கிடமானது.

மானுடவியல் ஆய்வுகள் எவ்வாறு காலனிய அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவதில் எவ்வாறு பிரதான பாத்திரம் வகித்ததோ அவ்வாறே பின்நவீனத்துவ அடையாள அரசியல், குறுங் கதையாடல் போன்ற கருத்தாக்கங்கள் உலகமயமாதல் சூழலின் சுரண்டலைத் தீவிரப்படுத்தவும், புரட்சிக்கான நிலைமைகளை மட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.

அடையாள அரசியல் (Identity politics)

அடையாள அரசியல் என்ற குறுகிய அரசியல் தன்னார்வ நிறுவனங்களின் அரசியலாக இன்று ஏகாதிபத்தியங்களாலும் பாசிச அரசியல் அதிகாரத்தாலும் முன்னெடுக்கப்படுகிறது. வர்க்க அரசியலுக்கு எதிரான மாற்று அரசியலாக முன்னிறுத்தப்படும் அடையாள அரசியலின் கூறுகள் காலனியாதிக்கக் காலப்பகுதியிலேயே, ஆபிரிக்க ஆசிய நாடுகளில் காணப்பட்டாலும்,போலந்து சோவியத் அதிகாரத்தை வீழ்த்துவதற்காக அமரிக்க ஏகாதிபத்தியத்தால் நேரடியாகவே பிரயோகிக்கப்பட்டது.

தம்மைத் தாமே வேறுபட்டதாக அடையாளப்படுத்தும் சிறுபான்மைச் சமூகக் குழுக்களுக்கான அரசியலே அடையாள அரசியல் என வரையறுக்கப்படுகிறது. பின்னர் அந்த அடையாளத்தை வலுப்படுத்தும் வகையிலான அரசியல் முன்வைக்கப்படுகிறது. இறுதியாக அதற்கான மூலதனம் பல்தேசிய நிறுவனங்களின் நன்கொடையில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்களால் பெற்றுக்கொள்ளப்படு அரசியல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பின் – உலகமயமாதல் காலம் என்பது எதிர்பியக்கங்களுக்கான காலமென்பது மட்டுமல்ல அவற்றை எதிர்கொள்ள முளைத்தெழும் அடையள அரசியல் என்ற சித்தாந்தச் செயற்பாட்டிற்கான காலகட்டமுமாகும். இவ்வாறான திட்டமிட்ட தத்துவார்த்த எதிர்ப்புரட்சியைப் புரிந்துகொள்வதும் அவற்றை எதிர்கொள்வதும் சமூகப்பற்றுள்ள அனைவரதும் அவசர பணியாகும்.

——————————————————————————————————————————————————————————————

Eric Hobsbawm, The Age of Extremes: A History of the World, 1914–1991.
Susantha Goonatilake, Recolonisation: Foreign Funded Ngos in Sri Lanka, 1999.
Jean-Marc Moura , L’ Europe littéraire et l’ailleurs1998.
Paul A. Erickson, Liam Donat Murphy, A History of Anthropological Theory, 2008.
Claude Levi-Strauss, The Elementary Structures of Kingship

4 thoughts on “திட்டமிடும் தத்துவங்கள் – எச்சரிக்கைக் குறிப்பு : சபா நாவலன்”

  1. இது குறித்து நீண்ட-விவரமான புரிதல் அவசியம்.அது குறித்து நாவலன் விரிவாக எழுதலாமே?

    1. எழுதப் பட்டதைப் புரிந்து கொன்டால் அதை வைத்து வினாக்களை எழுப்பலாம். அப்போது விரிவான விளக்கங்களும் விவரமான தகவல்களும் வர இயலும்.
      எது குறித்து நாவலன் எழுத வேண்டும் என்று கூட இங்கு தெளிவாகச் சொல்லப் படவில்லை. (வாக்கியத்தின் படி “நீண்ட-விவரமான புரிதல் ” குறித்து எழுத வேண்டும் என்றே தெரிகிறது).

  2. சிறீரங்கன் நல்ல கவிஜராயும், கட்டுரையாளராயும் தெரிகிறார் ஆனால் தனி மனித ஒழுக்கத்திற்கும் சமூக அக்கரைக்கும் சம்பந்தமில்லை என எழுதுகிறீர்கள்.

  3. சொல்ல வரும் விடயம் என்பது மேற்குலக பல்கலைக்கழக பாடத் திட்டம் என்பது ஒரு துரும்பை உங்களுக்கு காட்டும் அல்லது உங்களுக்கு அறிவுறுத்தும். அதில் மூழ்கி அழிழ்ந்து முத்தெடுப்பது போல் ஒரு தீசஸ் (கோட்பாடு – முடிவு ) முன்வைக்கின்ற போது உங்களுக்கு ஒரு பட்டத்தை தரும் அந்த படடடத்தை வாங்கிக் கொண்டு உங்களை நீங்களே பட்டதாரிகளாக அறிவிக்கின்றது. நவீன கல்வியுலயம்.
    இவைகள் வெவ்வேறு கண்ணோட்டங்களாக எல்லோரையும் குழப்பி விடுவதைத் தான் நாவலன் கூறுகின்றார். இதில் நீஙகள் இயற்கையில் கூந்தலுக்கு மணம் இருக்கின்றதா? இல்லையா என்று கூட ஒரு பாடநெறிக்கமைய ஒரு அசைமென்ட்டை எழுதி விட்டு முதுகலை முதுமாணி பட்டத்தை கலாநிதிப் பட்டத்தைப் பெறமுடியும்.

Comments are closed.