திசநாயகத்திற்கு சிறைத் தண்டனை – சென்னையில் கண்டனக் கூட்டம்.

tissanayagamamஇலங்கை, சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக நாடு. வெளியில் இருந்து வேறு யாரும் மூக்கை நுழைக்கக் கூடாத அளவுக்கு இறையாண்மை இருப்பதாக வாதாடும் நாடு. இவை கேள்விக்கு உள்ளானதைவிட நம் கண் முன் நிற்கும் கேள்வி வேறு ஒன்று.

இந்த நூற்றாண்டில் மனித உயிர்களை மலிவானதாக்கி, மனித உரிமைகளை அரிதாக்கிவிட்ட “பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ” என்று சொல்லப்படும் ஒன்றை நடத்தி முடித்திருக்கின்றது இலங்கை. ஆனால், இங்கு தான் ஆப்கான், இராக்கில் நடந்ததை விட ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறை உச்சத்திற்கு போய் விட்டது.

சர்வதேச ஊடகங்களுக்கு சுதந்திரமாக செயல்பட அனுமதி இல்லை. உள்நாட்டு ஊடகங்கள் ஊமையாக இருக்க வேண்டும். மீறினால் மரணம் வரை போகக் கூடிய அளவுக்கு ஊடகத்தின் மீதான ஒடுக்குமுறை.

இந்த சூழலில் தான், தன் துறைக்கு இருக்க வேண்டிய நேர்மையுடன், சமரசமின்றி இலங்கையின் “அரசியல் மற்றும் இராணுவ சூழலை” வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக அக்டோபர் 2000ல் பிபிசி ரிப்போட்டர் திரு. நிர்மலாராஜன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சண்டே லீடர் ஆசிரியர் திரு. லசந்தா விக்ரமதுங்கே அடையாளம் தெரியாத நபரால் ஜனவரி 2009ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கை அரசின் போர் முறைகளை வன்மையாக விமர்சித்து எழுதியவர் இவர்.

மே 2009ல் இங்கிலாந்தைச் சேர்ந்த சானல் 4 தொலைக்காட்சியின் மூன்று செய்தி சேகரிப்பாளர்கள் கைது செய்யப்பட்டு பின் நாடு கடத்தப்பட்டார்கள்.

2006ல் தொடங்கி இன்று வரை 18 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டார்கள்; 35 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக் நாட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார்கள். ஆனால், கொல்லப்பட்டவர்கள் குறித்து விசாரணைக் கூட நேர்மையாக நடத்தப்படவில்லை.

இந்நிலையில் தான், திஸ்ஸநாயகம் என்ற மூத்த பத்திரிக்கையாளருக்கு தீவிரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசர கால சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகால சிறை தண்டனை வழங்கி உள்ளது இலங்கை நீதிமன்றம். வடகிழக்கு ஹெரால்டு மாத இதழில் 2006ல் எழுதிய இரண்டு கட்டுரைகளுக்காகத் தான் இவர் இந்த விலையைக் கொடுத்துள்ளார். அதே சமயத்தில் இவருடைய துணிச்சலான மற்றும் நேர்மையான ஊடகப் பணிக்காக இவருக்கு இரண்டு சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இப்போது நமக்கு எழும் கேள்விகள் இரண்டு.

1. ஜனநாயகத்தின் அங்கமான ஊடகத்தை இப்படி அறுத்து எறிவது ஜனநாயகமா இல்லை அரச பயங்கரவாதமா?

2. இவ்வளவு ஒடுக்குமுறைகள் இருக்கும் போதும், நம்மைப் போல் யதார்தவாதிகளாக இல்லாமல் லசந்தா, திஸ்ஸநாயகம் போன்றவர்கள் ஏன் உண்மையின் பக்கம் நின்றார்கள்?

லசந்தா, தான் அரசால் கொல்லப்பட இருப்பதை உணர்ந்த நிலையில் எழுதிய இறுதிக் கட்டுரை இந்தக் கேள்விகளுக்கான விடைகளைச் சொல்கின்றது.

”உண்மையில் ஜனநாயகத்தின் அங்கங்களை அடி பணிய வைப்பதற்கு இந்த அரசு கொலை செய்வதையே தன் கொள்கையாகக் கொண்டு உள்ளது. இன்று நாங்கள்(பத்திரிக்கையாளர்கள்). நாளை நீதிபதிகளும் தப்பிக்கப் போவதில்லை. எந்த அளவிற்கு இரு பிரிவினருக்கும் சமூகப் பொறுப்பு உள்ளதோ அதே அளவிற்கு இங்கு அரசின் அச்சுறுத்தலும் அவர்களுக்கு உள்ளது.

பின், நாங்கள் ஏன் இதை செய்ய வேண்டும்? நானும் ஒரு சராசரி கணவன். மூன்று அழகான குழந்தைகளுக்கு தந்தை. பத்திரிக்கை மற்றும் சட்டத் துறையில் நான் முன்னேற எனக்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன. இந்நிலையில், ”என்னை இந்த அபாயத்திற்கு உட்படுத்துவதில் எதாவது பலன் உண்டா?” எனில், பலரின் பதில் ‘இல்லை’ என்பது தான். பத்திரிக்கைத் துறையை கைவிடுதல், அரசியலுக்குள் பிரவேசித்தல், என் விருப்பம் போல் எனக்கு மந்திரிப் பதவி, நாட்டைவிட்டு வெளியேறுதல் என்று எனக்கு எண்ணற்ற வாய்ப்புகள் இருந்த வண்ணமே உள்ளன.

ஆனால் தொழில், புகழ், பாதுகாப்பு இவை எல்லாவற்றுக்கும் மேலானது மனசாட்சியின் குரல் தான்.”

லசந்தா, திஸ்ஸநாயகம் போன்றவர்கள் உண்மைக்காகவும், தங்கள் மனசாட்சிக்காகவும் விலை கொடுக்கும் போதே, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள நம்மைப் போன்றவர்களுக்கும் அறை கூவல் விடுத்தே போகின்றனர்.

நம் காதுகளில் நுழைந்து, இதயத்தைத் துளைக்கிறதா அந்த குரல்?

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, உலக பத்திரிக்கை சுதந்திர நாள் (மே 3, 2009) செய்தியில் :

“பத்திரிக்கை சுதந்திரத்தின் மறுக்கவியலாத முக்கியத்துவத்தை உலகம் ஏற்றுக்கொண்டிருந்தாலும் பத்திரிகையாளர்கள் உயிருக்கு அடிக்கடி ஆபத்து ஏற்படுகிறது. உலகப் பத்திரிகை சுதந்திர நாள் முதலாவதாக 16 வருடங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டதிலிருந்து இதுவரை 692 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் மூன்றில் ஒரு பகுதியினர் தான் போர் முனையில் செய்தி சேகரிப்பது போன்ற ஆபத்தான பணிச்சூழலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லோருமே தங்கள் சொந்த நாடுகளிலேயே பணியின் போது கொலையுண்டவர்கள் தான். இன்னும் பல நூற்றுக்கணக்கானோர் உண்மைக்கான தேடலுடன் சமூகத்திற்கு செய்தி சொல்லும் பணிகளைச் செய்ததற்காக தங்கள் நாடுகளிலேயே சிறைப்பட்டவர்கள். இந்த துயரம் தரும் போக்கிற்கு ஆகச்சிறந்த உதாரணம் இலங்கையின் ஜே.எஸ்.திஸ்ஸநாயகம் போன்றவர்கள்.”

ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளும் கண்டனக் கூட்டமும், கருத்துப் பகிர்வும்.

கண்டன உரை:

· ஏ.எஸ்.பன்னீர் செல்வம்,

· தேவசகாயம், ஐ.ஏ.எஸ்

· லெனின்,

· பீர் முகமது,

· வெங்கட்ரமணன்,

· கவிதா முரளீதரன்,

· மோகன், தலைவர், சென்னை பத்திரிக்கையாளர் சங்கம்

· ராஜேஷ் சுந்தரம், இணை ஆசிரியர், ஹெட்லைன்ஸ் டுடே

· அருள் எழிலன்,

· வினோஜ் குமார்.

மற்றும் பலர்

.

இடம்: தெய்வநாயகம் பள்ளி, வெங்கட்நாரயணா சாலை, தி நகர், சென்னை.(திருப்பதி தேவஸ்தானம் அருகில்). நாள்: செப் 12, சனிக்கிழமை.
நேரம்: காலை 10:30 மணி முதல் 1:30 மணி வரை

One thought on “திசநாயகத்திற்கு சிறைத் தண்டனை – சென்னையில் கண்டனக் கூட்டம்.”

  1. Sri Lanka is ruled under Emergency Law and Draconian Prevention of Terrorism Act which gives wide powers to the Brutal Armed forces to arrest and put them in prison for an indefenite time. They are very tactful and capable of planting false evidence and framing false charges against anyone who does not agree with them. The Armed forces are charged several times for obtaining
    confession by force and beating. There is no democracy in Sri Lanka. It is DEMONCRACY. IN SRI LANKA. Now the demons and devils are ruling the country.

Comments are closed.