தாக்குதல் நடந்ததாகக் கூறும் எந்த இடத்திலும் நான் இல்லை : கசாப்

மும்பையின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட போது மும்பை காவல்துறை அதிகாரிகள் ஹேமந்த் கார்க்கரே, அசோக் காம்தே, விஜய் சலேஸ்கர் ஆகியோரை சுட்டுக் கொன்றது தான் அல்ல என்று அஜ்மல் கசாப் கூறியுள்ளார்.

மும்பைத் தாக்குதல் வழக்கை விசாரித்துவரும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையில், “அவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் நானில்லை, எனவே அவர்களை நான் சுட்டதாகக் கூறும் கேள்விக்கே இடமில்லை” என்று கசாப் கூறியுள்ளார்.

மும்பையின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது தான் காவலில் இருந்ததாகவும், மும்பை சி.எஸ்.டி., காமா மருத்துவமனை அல்லது கிர்கெளன் சவ்பாத்தி என்று காவல் துறையினர் தாக்குதல் நடந்ததாகக் கூறும் எந்த இடத்திலும் தான் இல்லை என்று கூறியுள்ளார்.

தாக்குதல் முடிந்ததும், தன்னை ஒரு ஜீப் வாகனத்தில் வைத்து தாக்குதல் நடந்த இடங்களுக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றதாகக் கூறிய கசாப், “அவர்கள் காவல் துறையினர், குற்றம் சாற்ற அவர்களுக்கு ஒரு ஆள் தேவை, எனவே என் மீது வழக்கு தொடர்ந்தனர்”  என்றார்