தலிபான்களுக்கு இந்தியா நிதியுதவி:பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

taleban203தலிபான்களுக்கு இந்தியா நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்துகிறது என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோனி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பாகிஸ்தானின் குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது. அர்த்தமற்றது என்று அவர் கூறினார்.

“தலிபான் தீவிரவாதிகள் உலக அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்களுக்கு உதவி அளிப்பது என்பது அபத்தமானது” என்றார் அவர்.

டில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாதுகாப்புத் துறை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது செய்தியாளர்களிடம் இவர் பேசினார்.

அப்போது பாகிஸ்தானின் குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி நிருபர்கள் கேள்வி கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தலிபான்களுக்கு இந்தியா நிதியுதவி அளித்து வருவதாகக் கூறினார்.

பாகிஸ்தான் வடமேற்கு மாகாண எல்லையில் உள்ள தலிபான்களுக்கு நிதி உதவி அளித்து அவர்களைப் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தூண்டிவிடுகிறது. பாகிஸ்தானில் எப்போதும் அமைதியற்ற சூழ்நிலை நிலவ வேண்டும் என்பதற்காக இந்தியா இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறது என்று அவர் கூறியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஏற்கனவே மறுத்துவிட்டார். தலிபான்களும் தலிபான் கொள்கைகளும் வேரோடு அறுக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலை என்று எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.