தலித் மக்கள் நிதி எங்கே : சென்னையில் பேரணி

largeதலித் மக்கள் மேம்பாட்டுக்காக கடந்த 10 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியில், ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு தமிழக அரசு செலவு செய்யவில்லை என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் பி. சம்பத் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தீண்டாமையை கடைபிடிப்போரைத் தண்டிக்கும் வகையில் குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்களை முழுமையாக அமல்படுத்தியிருந்தாலே இந்நேரம் தீண்டாமை முழுமையாக ஒழிக்கப்பட்டிருக்கும். ஆனால் அச்சட்டங்கள் அமல்படுத்தப்படுவதில்லை.
கடந்த பத்தாண்டுகளில் மட்டும் தலித் மக்கள் மேம்பாட்டுக்காக அரசு ஒதுக்கிய நிதியை பல்வேறு துறைகள் பயன்படுத்தாமல் சுமார் ரூ.12 ஆயிரம் கோடியை திருப்பி அனுப்பியுள்ளன.
தலித் மக்களுக்கான சட்டபூர்வமான உரிமையை நிலைநாட்ட வேண்டிய தமிழக அரசு, சட்டம் ஒழுங்கு என்ற பெயரால் தலித் மக்களையே தாக்குகிறது. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் உள்ள தீண்டாமை ஒழிப்புக் குழுக்கள் செயலிழந்து உள்ளன.
தமிழ்நாடு அரசின் இத்தகைய நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். இதனை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை சார்பில் தலித்பழங்குடி மக்களின் உரிமைப் பேரணி இன்று நடந்தது.

தலித் மக்களுக்கான இடஒதுக்கீட்டை 18 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயர்த்த வேண்டும், பாதாளச் சாக்கடைகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தக் கூடாது, வெட்டியான்களைமயான உதவியாளர்கள்என பெயர் மாற்றம் செய்து உள்ளாட்சி ஊழியர்களாக்க வேண்டும்; ஆலயங்களில் தலித்துக்களுக்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெறுகிறது.சென்னை மன்றோ சிலையில் துவங்கி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே பேரணி முடிவடைந்தது.இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், அகில இந்திய விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் கே.வரதராஜன், சிஐடியூ மாநில பொதுச் செயலர் செளந்தரராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில அமைப்பாளர் பி.சம்பத், மலைவாழ் மக்கள் சங்க பொதுச் செயலாளர் சண்முகம், எம்எல்ஏக்கள் பாலபாரதி, மகேந்திரன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்தனர்.

5 thoughts on “தலித் மக்கள் நிதி எங்கே : சென்னையில் பேரணி”

 1. பயனுள்ள பதிவு.

  அடித்தள மக்களை மேலேற்றிவிட்டால்
  பிறகு அவர்கள் செய்து வந்த கீழ்த்தர வேலைகளை யார் செய்வார்கள் என்ற முன் எச்சரிக்கையுடந்தான் இந்த கயமை நாடகங்கள் நடந்தேறி உள்ளன. ஆதிக்க சாதிக்காரர்கள், பணபலம் மற்றம் அதிகார சிபாரிசுகளின் உதவியுடன் பதவிகளை பிடித்துள்ள நிர்வாக திறமையற்ற அதிகாரிகள் இப்படித்தான் செய்வார்கள். இவை அத்தனையும் திட்டமிட்ட சதிகள். இந்திய நாட்டில், அதன் சமுதாய அனைத்து மக்களின் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் இப்படியான அநியாயங்களை செய்யமாட்டார்கள்.

  அடித்தள மக்களின் உரிமைகளுக்கு மனம் சோராமல் தொடர்ந்து குரல் கொடுப்போம், போராடுவோம்.

  நன்றி.

 2. தலித் அமைபுகள் சிந்திக்குமா?
  இமைகள் ப.கோவிந்தராஜ்

 3. அடித்தள மக்களின் உரிமைகளுக்கு மனம் சோராமல் தொடர்ந்து குரல் கொடுப்போம், போராடுவோம்.

 4. இந்தியாவில் எல்லோரும் ஜாதி வெறி பிடித்தவர்கள்தான்.தலித் மக்கள்  தங்கள் உரிமையை கையில் எடுத்தால் தான் இந்தியாவில் வாழ முடியும்

 5. அனைத்து தலித் MLA & MP ஒன்று சேர்தல் வேண்டும்

Comments are closed.