தரிசனம் தொலைக்காட்சி தடை: இஸ்ரேல் வெளிநாட்டமைச்சு கடிதம்.

தமிழீழ விடுதலைப்புலிகள்  சார்பான தொலைக்காட்சி சேவையான தரிசனம்   தடை தொடர்பாக இஸ்ரேலிய வெளிவிகார அமைச்சு கடித மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. சற்லிங் என்ற இஸ்ரேலிய செய்மதி நிறுவனத்தூடாக செயற்பட்டுவந்த இந்த சேவையை இஸ்ரேலிய அரசு தடைசெய்துள்ளது தொடர்பாக சற்லிங் இன் பிரதான முகாமையாளரான டேவிட் ஹொக்னருக்கு எழுதியுள்ள கடிதத்தில் புலிகளைப் பயங்கர வாத அமைப்பு எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய வெளி நாட்டமைச்சின் தெற்காசியப் பிரிவின் உதவி முகாமையாளரான யரோன் மேர் கையொப்பமிட்டு எழுதியுள்ள கடித்தில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் புலிகளின் பிரச்சாரச் சாதனமாகவும் பணம் சேர்க்கும் ஊடகமாகவும் செயற்படும் தரிசனம் தொலைக்காட்சி தொடர்பாக  இலங்கை அரசு தமக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலிகள் போன்ற பயங்கர வாத அமைப்புடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய எந்த அமைப்பிற்கும் சேவையை வழங்குவது உரித்தானதல்ல என்று டேவிட் ஹொக்னருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயங்கர வாதத்தையும் வன்முறையையும்  ஆயுதமாகப் பயன்படுத்திப் பிரிவினை கோரும் அமைப்பான தலைமறைவு  இயக்கமான புலிகள் எனத் தகவல் கூறும் இக்கடிதத்தைத் தொடர்ந்து லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் ஐ.பீ.சீ போன்ற புலிகள்  ஆதரவு வானோலி சேவையும் தடைக்குள்ளாகலாம் என உத்தியோக பூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவித்தன.