தம்மைப் பேச அழைக்குமாறு அரசிடம் கோரும் கூட்டமைப்ப்பு

வடபகுதியில் இடம்பெற்றுவரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக அரசு அழைப்பு விடுக்கும் பட்சத்தில் பேச்சு நடத்துவதற்குத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இது விடயம் தொடர்பாகப் பேச்சுகளை நடத்துவதற்கு எதிர்வரும் வாரமளவில் அரச தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்படும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வடபகுதி மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டிருந்தது.

எனினும், நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் 65ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி சென்றதன் காரணமாக இந்தச் சந்திப்பு இடம்பெறவில்லை.

ஜனாதிபதி தற்போது நாடு திரும்பியுள்ளதால் பேச்சுக்கு அழைப்பு விடுப்பார் என மாவை சேனாதிராஜா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.