தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தைக் பிரான்சில் கொச்சைப்படுத்திய மாவை

Mavai-Senathirajah06.10.2014 அன்று பிரான்சின் புற நகர்ப்பகுதி ஒன்றில் மாவை சேனாதிராசா (தமிழசுக் கட்சியின் தலைவர்) ஒன்று கூடல் ஒன்றில் உரியாற்றினார். தமிழ்ப்பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் சுய நிர்ணைய உரிமை கேட்கக்கூடாது என்று இலங்கை நீதிமன்றத்தில் எழுத்தில் தெரிவித்த மை காயும் முன்னரே பிரான்சிற்குப் பயணம் செய்த மாவை சேனாதிராசா தோல்வியுற்ற சமூகம் என்ற மாயையைத் தமிழ்ச் சமூகம் உடைத்தெறிந்துள்ளது என்று தனது உரையில் உணர்ச்சி பொங்கத் தெரிவித்தார்.

அதற்கு அவர் கூறிய காரணம் வட மாகாண சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களித்தமையே என்ற அளவிற்கு வேடிக்கையானதாக அமைந்தது. வன்னியில் அழிக்கப்பட்டது மக்களும் புலிகளும் மட்டுமல்ல. தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நியாயமும் சேர்ந்தே குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. அந்தப் புதைகுழியில் மண்ணைப்போட்டு இறுக மூடிவிடும் அருவருப்பான பணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக் கட்சியும் செய்து முடிக்கின்றன.

வடக்கும் கிழக்கும் திட்டமிட்டு இலங்கை பாசிச அரசால் பிளக்கப்பட்டு வடமாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டது. இதனைப் புறக்கணிக்க இயலாமல் பிளவை ஏற்றுக்கொண்ட கூட்டமைப்புன் பதவி வெறி வெற்றியல்ல. கிழக்கில் வாழும் தமிழ் மக்களைப் புறக்கணித்து தாம் வடக்கில் பொறுக்கிக்கொண்ட வாக்குகளை மட்டுமே முன்வைத்து மாவை கூறும் வெற்றி என்பது கிழக்கு மக்களைப் புறக்கணிக்கிறது. வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர்களின் பாரம்பரிய பிரதேசத்தைப் புறக்கணிக்கிறது.

சில நாட்களின் முன்னதாக வடமாகாண முதலமைச்சர் தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சிகளை வன்முறைக் கட்சிகள் என்று விழித்ததை மாவை சேனாதிராசா மீண்டும் பிரான்சில் உறுதிப்படுத்தியுள்ளார்.

முப்பது வருட யுத்ததால் தமிழினம் அழிவின் விழிம்பிற்குச் சென்றுள்ளதாக மாவை கூறியுள்ளார். ஆக, போராட்டம் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழினம் விழிம்பிற்கு சற்று முற்புறமாகவா நின்றிருக்கும்? தமிழ்ப் பேசும் மக்கள் கடந்த நாற்பது வருடங்களாக இனப்படுகொலையிலிருந்து பாதுகாக்கத் தற்காப்பு யுத்தமே நடத்தினார்கள்.

80 களின் ஆரம்பத்தில் மாவையும் அவரது குழுவும் வழிபடும் இந்திய அரசு தலையிட்டு போராட்ட இயக்கங்களிடையே மோதலை உருவாக்கிற்று. புலிகள் ஏனைய இயக்கங்களையும் இயக்கப்போராளிகளையும் அழித்த போது அழிக்கப்பட்ட இயக்கங்களின் தலைமைகள் இந்தியாவிற்குத் தப்பியோட அங்கு இந்திய அரசு அவர்களை தமது அடியாட்களாகப் பயன்படுத்தியது. அழிக்கப்பட்ட இயக்கங்களிலிருந்த இந்தியாவிற்கு எதிரான முற்போக்கு ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களின் குழந்தைகளும் வடக்குக் கிழக்கில் புலிகளால் அழிக்கப்பட்டனர். எதிர்பாராத அழிவிலிருந்து தப்பிய சிலர் வெளி நாடுகளுக்குச் சென்றனர்.

முற்போக்கு ஜனநாயக தேசிய சக்திகள் நீக்கப்பட்ட அடியாள்படை ஒன்றை இந்திய அரசு உருவாக்கிக்கொண்டது. இங்கு வன்முறையாளர்களும் அழிவின் விழிம்பிற்கு அழைத்துச் சென்றவர்களும் மாவை வழிபடும் இந்திய அரசே.

இயக்கங்கள் அழிக்கப்பட்ட போது புலிகளின் உள்ளிருந்த பல தேசியப் பற்றுள்ளவர்கள் வெளியேறினார்கள். அன்டன் பாலசிங்கம் போன்ற பிரித்தானிய அரசின் அடியாட்களின் கட்டுப்பாட்டுக்குள் புலிகள் இயக்கம் முடங்கியது. பின்னர் தனியாவர்த்தனம் பாடிய புலிகள் இயக்கம் இந்திய அரசினதும் மேற்கு ஏகாதிபத்தியங்களதும் ஆதரவோடு போராட்டத்தையும் அரசியலையும் முள்ளிவாய்க்கால் வரை நகர்த்திவந்து அழிந்துபோனது.

இவை போராட்டம் தொடர்பான விமர்சனங்களே தவிர போராட்டத்தின் நியாயம் தொடர்பான மறு விசாரணைகள் அல்ல. தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டம் ஆயுதமேந்திய மக்கள் யுத்தமாக பரிமாணம் பெறுவதற்குரிய அரசியல் திட்டம் முன்வைக்கப்படும் போது மாவையும், விக்கியும் ஏனைய அடிமைகளும் அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்படுவார்கள். அப்போது தமிழ் மக்கள் தோல்யுற்ற சமூகம் என்ற மாயையை உடைத்தெறிவார்கள்.

2 thoughts on “தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தைக் பிரான்சில் கொச்சைப்படுத்திய மாவை”

  1. இலங்கை உயர்நீதிமன்றத்தில் த.தே.கூ பிரிவினை கோருவதில்லை என்றே வாக்குமூலம் அளித்தது. அவ்வாறு செய்யாவிடின் த.தே.கூ தடைசெய்யப்படக்கூடிய சாத்தியக்கூறு காணப்பட்டது. மற்றையது கிழக்கு மகாணத்தினை பிரித்தது த.தே.கூ அன்று. சென்ற கிழக்கு மாகாண தேர்தலின் பின்பு மு.கா உடன் சேர்ந்து தமிழ்பேசும் மக்களின் ஆட்சியினை கிழக்கில் ஏற்படுத்த எவளவோ விட்டுக்கொடுப்பினை செய்தது. இப்போதும் கிழக்கில் பணியாற்றுகிறது. ஆனால் வடக்கினைப்போன்றே கிழக்கிலும் செய்யவேண்டிய பணிகள் உள்ளன. அவற்றினை சுட்டிக்காட்டும் ஆக்கபூர்வமான விமர்சனங்களே தேவை. மாறாக இதுபோன்ற யதார்த்தமற்ற விமர்சனங்கள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி பேரினவாத அரசிற்கே உதவும்.

  2. Ok, what about Lycamobile sponsored ITAK – TNA Mavai’s programme…?
    Here everyone keep silence on this
     Lycamobile news… Why…?

Comments are closed.