தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதற்காக முன்நின்று பேசி வருகின்றனர்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, அரியேந்திரன், சிறிதரன் ஆகியோர் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஜெர்மனி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினர். வேறும் ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றுப் பயணம் செய்து பேசி வருகின்றனர். இவர்களுடன் சுடர்ஒளிப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வித்தியாதரனும் பேசி வருகிறார். இவர்கள் அனைவரும் தமிழ் மக்கள் பட்ட துயரங்கள் அழிவுகள் இழப்புகள் பற்றி மனம் உருகப் பேசி வருகிறார்கள். வடக்கு கிழக்கு மக்கள் குறிப்பாக வன்னி மக்கள் பட்ட பேரவலங்களை எல்லாம் புள்ளி விபரங்களுடன் எடுத்துக் காட்டி வருகிறார்கள். சிறை இருப்போர் காணாமல் போனோர் பற்றியும் சுட்டிக் காட்டியுள்ளனர். பொத்தம் பொதுவாகவும் உணர்ச்சி தரும் வகையிலான தமிழ் உணர்வுடனும் கூடிய அவர்களுக்கே உரிய மொழியில் பேசியவற்றைத் தமிழ் ஊடகங்களில் காண முடிந்தது.

இவ்வாறெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் பேசிய கூட்டமைப்பினர் விடுத்த வேண்டுகோள் யாதெனில் தங்களைத் தமிழ் மக்கள் மத்தியில் மீள் கட்டமைப்புச் செய்ய புலம் பெயர்ந்தோர் உதவ வேண்டும் என்பதாகும். அவர்களது பேச்சின் தொனி தாமே தமிழர்களின் ஏகப் பிரதிநிகளாக அரசியல் அரங்கில் நிலைத்து நீடிக்க வேண்டும் என்பதேயாகும்.

தங்களை விட்டால் தமிழர்களுக்கு எதிர்காலமே இல்லை என்பது போல அறைகூவல் விடுத்திருக்கிறார்கள். குறிப்பாக இளைஞர் கட்டமைப்பு தமது தலைமையில் உருவாக்கப்பட வேண்டும் என வித்தியாதரன் வேண்டுகோள் விடுத்தார். அதுவும் தமிழர் கூட்டமைப்புடன் இணைந்து அதனைச் செய்ய வேண்டும் என்று கோரியதுடன் தான் அரசியலில் தீவிர பங்காற்றவே தனது பத்திரிகை ஆசிரியர் தொழிலைக் கைவிட்டதாகவும் கூறியுள்ளார். அவர் இன்றைய பாராளுமன்ற அரசியலில் ஈடுபடுவது அதிக கஷ்டம் நிறைந்த ஒன்றல்ல. ஏனெனில் அவரின் மைத்துனரான சரவணபவன் கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர். ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய புள்ளியாக இருந்து வந்த சரவணபவன் (உதயன், சுடர்ஒளிப் பத்திரிகையின் சொந்தக்காரர்). தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்ந்து வெற்றி பெற்றார். அந்த வழியில் வித்தியாதரனும் மாகாண சபைத் தேர்தலிலோ அன்றி அடுத்த பாராளுமன்றத்திலோ வெற்றி பெறுவது பெரும் பிரச்சினை அல்ல. அதனாலேயே தமிழ்க் கூட்டமைப்பைக் கிராம மட்டத்தில் பலப்படுத்த வேண்டியும் இளைஞர் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் எனக் கோரி நிற்கிறார்.

இன்று தமிழ் மக்கள் அரசியல் விரக்தியில் ஆழ்ந்து போய் உள்ளனர். அதனாலேயே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பதினைந்து சத வீத வாக்குகளைப் பெற்றே பதின்நான்கு உறுப்பினர்களைப் பெற்றனர். இது போதாதென்ற வகையில் தாமே மீண்டும் ஏகப் பிரதிநிதிகளாக வேண்டி நிற்கிறார்கள்.

கடந்த முப்பத்திமூன்று வருடங்களாக இதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெவ்வேறு பெயர்களில் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கி எதனைச் சாதித்தனர்? முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களில் நாற்பதினாயிரம் பேரைப் பேரினவாத இராணுவ ஒடுக்குமுறை பலிகொண்டதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்கு எத்தகையது? அங்கு தமிழ் மக்களுக்குக் கொள்ளி வைக்க நீங்களும் காரணம் அல்லவா? நெஞ்சில் கைவைத்து இல்லை எனக் கூறுவீர்களா? உங்களது விசுவாசத்துக்குரிய இந்திய ஆளும் வர்க்கம் எமது மக்களைக் கொன்று குவிக்க பின்னால் நின்று யுத்தத்தை நடாத்தவில்லையா? ஒட்டுமொத்த முப்பத்திமூன்று வருடங்களில் தமிழீழக் கோரிக்கையால் இரண்டரை லட்சம் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப் பட்டமைக்கு இதுவரை என்ன பதில் கூறினீர்கள்? எந்தவித வெட்கமும் ரோசமும் இன்றியே யுத்தம் முடிந்த கையோடு வந்த ஜனாதிபதித் தேர்தலில் யுத்தத்தை நடாத்திய ராணுவத் தளபதிக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்பீர்கள். அதன் மூலம் மகிந்தவின் வெற்றிக்கு எதிர்மறை உதவி செய்வீர்கள். அதன் பின் உங்கள் ஆதிக்க அரசியலை முன்னெடுக்க பாராளுமன்றத் தேர்தலில் நின்றீர்கள்.

இன்று இணக்க அரசியல் செய்ய முடியாமலும் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்க இயலாமலும் ஒருவகைப் பம்மாத்து அரசியல் நடாத்த வாய் வீச்சு நடாத்தி வருவது தான் உங்களது பரிதாபத்திற்கு உரிய நிலையாக உள்ளது.

நீங்கள் தமிழ் மக்கள் மத்தியில் எதைக் கேட்கிறீர்கள்?

உங்களது அரசியல் வேலைத் திட்டம் யாது? அதற்கான கொள்கை என்ன?

இந்தியா அமெரிக்கா பற்றிய நிலைப்பாடு பழையது தானா?

நாட்டையும் மக்களையும் குறிப்பாக இப்போது வடக்கு கிழக்கையும் விழுங்கி வரும் உலகமயமாதலின் கீழான தாராள பொருளாதாரக் கொள்கையைப் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?

சிங்கள மக்கள் பற்றிய பார்வையில் மாற்றம் உண்டா?

சாதியம் பற்றியும், பெண் ஒடுக்குமுறை பற்றியும் உங்களது பார்வையும், கொள்கையும் யாவை?

தொழிலாளர்கள் விவசாயிகளின் நலன்கள் பற்றி திட்டவட்டமாகக் கூறாது பொத்தம் பொதுவாகத் தமிழர், தமிழ் இனம் என்று கூறும் இன உணர்ச்சிதான் கொள்கையா?

இளைஞர் கட்டமைப்பு என்பதன் நோக்கம் என்ன?

முன்பு தமிழர் இளைஞர் பேரவையில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் முடிந்த இளைஞர் கட்டமைப்பு மீண்டும் தேவையா?

இவற்றுக்குப் பதில் கூறாது கடந்த காலத்தைச் சுய விமர்சனம் செய்யாது பட்டறிவால் தவறான கொள்கைகளை நிராகரிக்காது எவ்வாறு உங்களால் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்க முடியும்?

புதிய கொள்கைகளைக் கொண்ட வேலைத்திட்டம் எதாவது உண்டா?

பிற்போக்குத் தமிழ்த் தேசியத்தை பழைமைவாதத்தின் ஊடாக முன்னெடுக்க நிற்கிறீர்களா அல்லது குறுந்தேசியவாதக் கொள்கையுடைய முறைகளை நிராகரித்து முற்போக்குத் தழிழ்த் தேசியத்தை முன்னெடுக்க முன்நிற்கிறீர்களா?

இவற்றுக்கு நேர்மையான பதில் முன் வைக்காது, தமிழர்கள் களத்திலும் புலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டும் எனக் கோருவது எதற்காக? உங்களது மேட்டுக்குடி ஆதிக்க அரசியலைப் பாராளுமன்ற வழிகளில் முன்னெடுக்கவே அன்றி வேறு எதற்காகவும் இல்லை என்பதே உண்மை. இவற்றைத் தமிழ் மக்கள், குறிப்பாக இளந் தலைமுறையினர், உணர்ந்து கொள்வதும் புதிய மார்க்கம் தேடுவதும் அவசியமாகும்.

புதிய பூமி (செப்டெம்பர்-ஒக்டோபர் 2010)

16 thoughts on “தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதற்காக முன்நின்று பேசி வருகின்றனர்?”

 1. போட்டுக் குடுக்கிற வேலையை இவர் இன்னும் விடேல்ல,புலிகள் இருக்கேக்க அவைய சோழ மகராசராக்கி போய்ச் சேரப்பண்ணூனதே இவையப் போன்றோரே.ஏதோ வெட்டி விழுத்துறவர் மாதிரி பேசத் தொடங்கீற்றீனம்.சம்பந்தர் அய்யாவையும்,மாவையையும் துப்பாக்கி தூக்கச் சொல்லுறாரே இவர்?தேர்தல்ல சீட் கிடைக்கேல்ல எண்ட கோபம் இன்னும் போகேல்ல போல கிடக்கு அதுதான் புள்ளீ விபரங்கள்?போக்கத்தவர் போகும் இடமெல்லாம் புகைந்து திரியுறார்.நண்பர்களே இவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புங்கள்.

 2. இப்படியே யாரையும் நாம் ஏற்றுக்கொள்ளாமலே குறைகளை மட்டும் கண்டுகொண்டிருந்தால் என்னதான் முடிவு?  போராட்டம் தொடங்கியவேளை வசதிபடைத்தவா்களுடய குடும்பத்து பிள்ளைகளெல்லாம் தத்துவங்களை பேசிவிட்டு இந்தியாவிற்கும் வெளிநாடுகளிற்கும் படிப்பதற்காக அவா்களது குடும்பங்களால் அனுப்பிவைக்கப்பட்டார்கள் இறுதியில் ஏழைகளின் தலையிலேயே போராட்டம் கட்டியடிக்கப்பட்டது அதே போல இன்று வெளிநாடுகளில் உருவான புதிய பணக்காரா்கள் தமது சுய இலாபங்களுக்காக பத்திரிகைகளையும் இணையத்தளங்களையும் உருவாக்கி தமிழா் வாழ்வில் அக்கறை கொண்டவா்கள் போல வேசங்கள் போடுவதும் ஆனால் தங்கள் வியாபாரங்களிலேயே மூச்சாக இருப்பதும் நாம் நடைமுறையில் காண்கின்ற உண்மை.

  புலிகள் முப்படைகளை வைத்திருந்தும் முடியாமல் போனதை தமிழா் கூட்டமைப்பு அடையவில்லை என்று கருதுவது எவ்வளவு முட்டாள்தனம் முதலில் அரசியல்கட்சிகளை அரசியல்கட்சிகளாகவே இயக்கங்கள் இருக்கவிட்டிருந்தால் சில வேளை ஏதாவது பலன் கிடைத்திருக்கும்,தமிழா் கூட்டமைப்பை மற்றயவா்கள் புலிகளின் வால்கள் என்கிறார்கள் இதோ நீங்கள் இந்தியாவின் வால் என்கிறீா்கள் இது எந்தவகையில் நியாயமாகப்படுகிறது.  முள்ளிவாய்க்கால் முடிவிற்கு பல நாடுகளும் இந்தியாவும் காரணமாக இருக்கலாம் அதற்கு மேலாக புலிகளின் முட்டாள்தனமே காரணம் என்பதை ஏன் மறக்கிறீா்கள் பல எதிரிகளை தம் இனத்திற்குள்ளேயே உருவாக்கியதுமல்லாமல் கருணா போன்றவா்களையும் தம்முள்ளே கொண்டிருந்ததும்  ராயீவ் காந்தி போன்றோரை கொலை செய்தது யாவும் அந்த முடிவிற்கு காரணம்,எப்படியோ முடிந்தவைகளை இட்டு காலத்தை வீணாக்க நான் விரும்பவில்லை இப்போது தமிழருக்கு இருக்கின்ற ஒரேயொரு துரும்பு இந்தக்கூட்டமைப்பு, ஏற்று நடப்பது யாவருக்கும் நல்லது என்று எண்ணுகிறேன்.

  1. அன்பரே
   கூட்டணியை ஆதரிக்கும் நீங்கள் கருணா போன்ரோரை என்று மறைமுகமாக சாடுகிறீர்களே, அங்கே உங்கள் ஒருதலைப்பட்சமான கீழ்த்தரமாண எண்ணம் புலப்படுகிறது. இது போன்ற கீழ்த்தனமான கருத்துக்கொண்டவர்கள் உள்ளவரை தமிழினத்துக்கு எவருமே உதவமுடியாது. கருணாவின் பக்கம் உள்ள நல்ல விடயங்களை ஏற்று ஒற்றுமைக்கு வழிசெய்யும்வரை தமிழர்களை எந்த உலக நாடுகளும் மனிதனாக மதிக்காது. மிருகங்களாகவே கணிக்கும். கூட்டணியினர் கோமாளிக் கூத்தர்கள். அவர்களை ஆதரிக்கிறீர்கள். ஆனால் தமிழினத்தின் தளபதியாக இருந்த கருணாவை இகழ்கிறீர்கள். புலிகளின் வீரம் பிரபாகரணில்த் தங்கியிருக்கவில்லை. கருணாவின் மதிநுட்பத்திலேயே தங்கியிருங்தது. தமிழர்களின் உண்மையான தலைவர்களைத் தமிழினம் சரியாக அடையாளம் காணும் வரை யார் என்ன முயன்றும் எந்த விமோசனமும் கிடைக்கப்போவதில்லை. முதலில்த் தலைகீழாக நடப்பதைத்த் தவிர்த்து காலால் நடக்கப் பழகுங்கள். பின்னர் அரசியல்ற்றிப் பேசுங்கள். தமிழினத்தைக் கேலிக்குரியவர்களாக்காதீர்கள். நன்றி.

 3. புத்தம் புதுப் பூமி வேண்டும் நீத்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பொழிய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும்…….ஜயா.. புதியபூமிக்காறரே..உங்களுக்கு தமிழ்கூட்டமைப்பு வேண்டாம் , இன்னும் சில பேருக்கு நாடுகடந்த அமைப்பு வேண்டாம், தமிழரை ஏய்ச்சுப்பிழைக்கும் கூட்டத்துக்கு புலிகள் வேண்டாம். இப்படி ஆள் ஆளுக்கு வேண்டாம் , வேண்டாம் எண்டால், தமிழ் மக்களின் பிரச்சனையை யார் தான் தீர்க்க்கிறதோ…கடவுளும் அவதாரம் எடுக்கிற மாதுரித்தெரியவில்லை. ஆனால் இதுக்கு நான் ஒரு சூப்பர் திட்டம் வைச்சு இருக்கேன் பாருங்கோ. எல்லா ஈழத்தமிழனும் சிங்களவராய் மாறி விட்டால்:D….புத்தம் சரணம் கச்சாமி > யுத்தம் சரணம் கச்சாமி < தமிழரைக் காப்பாய் அப்புகாமி

  1. அன்பரே, முதலில் ஒழிந்திருந்து கல் எறியும் உங்களைப் போன்ரோரைக் களை எடுத்தால் தானே தமிழீழம் மலரும். சொந்தப் பெயர் சொல்லி நிமிர்ந்து நின்று கதைக்கத் திராணிணியற்ற உங்களுக்கெல்லாம் ஏன் ஐயா அரசியல்????!!!!!

   1. 🙂 ம் இவெர் பெரிய அரிச்சந்திரனின் வாரிசு. பேசுவது எல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லையாம். இவ்வளவு பெரிய ஜோக்கியம் பேசுற நீர் , உமது வீட்டு விலாசம், தொலைபேசி எண், அப்படியே உமது அடையாள அட்டை இலக்கம் எல்லாம் போட்டு எழுத வேண்டியதுதானே. வந்துட்டார் விளக்கம் கேட்டுக் கொண்டு. இங்கை என்ன பரிட்சை தானே நடக்குது, எழுத முதல் சொந்தப் பேர் போட்டு எழுத. முதலில் என்ன எழுதுகிறார்கள் எண்டு பாரும். அதுக்குப் பதில் எழுதும்.( காலம் பொன்னானது,நேரத்தை வீணாக்காதீர்கள்)

 4. அய்யாமாரே புதியபூமி கேக்கிற நியாயமான கேள்விகளை கூட்டமைப்பினரைநோக்கி கேளுங்கள். அவர்களை நெறிப்படுத்துகள். மீண்டும் ஒரு முள்ளிவாங்க்கால் உங்களுக்கு விளையாட்டாக இருக்கலாம். அங்குள்ளவா;கள் தாங்கமாட்டார்கள்.

  1. பனிகையும்,குளீருக்கையும் சேர்த்த காசை அனுப்பினால் செம்மறீயாட்டுக் கூட்டம் அதை செலவளீச்சு முடிச்சுப் போட்டு, அம்மாச்சுக்கு ஊசி போடக் காசு எண்டு வந்து கோல் எடுக்குது இதில் ஓசிக் காசில் வந்திருக்கிற முன்னாள் சுடரொளீ குழல் புட்டுக் கதை கதைக்குது நாங்கள் என்ன செய்யிறது.

   1. சரியாகச் சொன்னீர்கள், ஆனாலும் அவர்களைக் கெடுத்தது புலம் பெயர் தமிழர்கள் தானே??!! சம்பளம் கொடுப்பது மாதிரி மாதாமாதம் பணம் அனுப்பி அவர்களைக் கெடுத்தது இங்குள்ள பாசக் கொளுந்துகள்தானே!! முதலில் அவர்களைத் திருத்துங்கள் அங்குள்ளவர்கள் தானாகத் திருந்தவார்கள்!

 5. ஒருவரிடமும் தீர்வு இல்லை என்பதே உண்மை .( புதிய ஜனநாஜ்யக கட்சி உட்பட. ) தெளிவும் இல்லை.

  1. இல்லை என்று ஒரு விடயமே இல்லை. எல்லாவற்றிகும் ஒரு தீர்வு உண்டு. அதை நாங்கள் அணுகும் முறைதான் தவறாய் இருக்கிறது. எங்கள் தவறை நங்கள் எப்போது ஏற்றுக்கொள்ளும் மனோ பக்கவம் எமக்கு ஏற்படுகிறதோ! அப்பொழுது தீர்வு தானாக நம்மை நெருங்கிவரும். ஆனாலும் தமிழனுக்கு அது முடியாதே!

 6. ஐயா பார்த்திபராசா,
  நீா் ஏதோ பாரதிதாசன் நினைப்பில் எழுதுகிறீா்போல் தெரிகிறது.
  20 வருடங்களுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்து இயக்கங்களை அளித்து கொலைகளைப்புரிந்து ஆதரவாளா்களால் அம்மான் என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஒருவா்,20 வருடங்களாக வன்னிப்புலிகளுடன் சோ்ந்து தமிழ் மக்களை நம்பவைத்துவிட்டு திடீரென்று பிரிந்து சென்று பிரதேசவாதத்தை உருவாக்கி நம்பியிருந்த மக்களை தலை குனியவைத்ததும் வன்னிப்புலிகளின் வால்கள் அம்மான் என்று எவ்வளவு அன்பாக அழைத்தார்களோ அதே வாயால் துரோகி என்று கதறியதையும் நாங்கள் மடையா்கள் பார்த்தும் கேட்டும் எதுவுமே செய்யமுடியாமல் முளித்தோம்.

  உமக்கு அவா் தெய்வப்பிறவியாக இருக்கலாம் எனக்கு அவா் யாருமே அல்ல மறைமுகமாக தாக்குகிறேனா சிரிப்பு வருகிறது எனக்கு பிரபாகரனும் கருணாவும் ஒன்றுதான்.

  1. வன்னிப் புலி , வன்னிப் புலி என்று வாய்க்கு வாய் கத்துறீர், நீர் என்ன யாழ்ப்பாணப்புலியோ, இல்லை மட்டக்களப்புப் புலியோ.புலிகள் என்ன வன்னிக்கு மட்டும் சொந்தக்காறரோ. தலைவரும் சரி, புலிகளும் சரி பிரதேசவாதம் பாத்ததும் இல்லை, அதை ஊக்குவித்ததும் இல்லை. கிழக்குமாகாணத்தை கைவிட்டால் , தலைவருக்கு வடக்கு மாகாண முதல் அமைச்சர் பதவியைத் தருகிறோம் என்று எவ்வளவு ஆசையை இலங்கை அரசும் , இந்திய அரசும் காட்டிப்பார்த்தவை. தலைவர் பணம் , பட்டம் , பதவி , சுகத்துக்கு ஆசைப்பட்டு இருந்த்தால், கருணா என்ன , டக்கிளஸ் என்ன, அதை விட உயர்ந்த பதவியில் இன்றும் இருந்திருப்பார். தமிழ் மண்ணை, தாய் மொழியை , தன் இனத்தை, தனது தேசத்தைநேசிக்கும் வரைதான் அவெர்கள் எமக்கு அம்மான். என்று இவை எல்லாவற்றுக்கும் துரோகம் செய்துவிட்டு வெளியேறுகிறார்களோ, அதன்பிறகு அவெர்கள் துரோகிதான். எனக்கும் தமிழ் மக்களுக்கும் மகிந்தவும், கோத்தபாயவும், கருணாவும் , டக்கிளசும்……. நீரும் எல்லாமே ஒன்றுதான்.

   1. vanniyan,

    உம்மை நினைக்க பரிதாபமாக இருக்கிறது.

 7. “புதியபூமிக்காரர்” போல சிலர் முன்னமே சொன்னதைக் கேளாமல் குருட்டுத்தனமாகப் பலவேறு இயக்கங்களையும் கூத்தணிகளையும் நம்பித்தானே இன்றைக்கு இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்.

  யாரையும் யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லையே! கேள்விகள் கேட்பது கூடப் பிழையா?
  கேட்கப் படுகிற கேள்விகளைத் தட்டிக் கழிக்கிற காரியத்தைத்தானே இன்றுவரை எல்லாத் தமிழ்த் தேசியத் தலைமைகளும் ஒழுங்காகக் கவனித்து வந்திருக்கின்றன.

  பொறுப்பை ஏற்றவர்கள் பதில் சொல்லட்டுமே? சிலர் ஏன் அதற்குத் தடை போடுகிறீர்கள்? அவர்களிடம் பதில் இல்லை என்பது தெரிய வந்துவிடும் என்ற பயமா?

Comments are closed.