“தமிழ்,முஸ்லிம் என்ற வேறுபாடு இன்றி ஒரே குரலிலே மாற்றத்துக்கான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்!”

தேர்தல் முடிவுகள் நாட்டில் ஒரு பல்லின சமுதாயம் வாழ்கின்ற நாடு என்பதையும் சிறுபான்மை பெரும்பான்மை மக்களுக்குமிடையில் இருக்கக் கூடிய அரசியல் நிலைப்பாட்டின் வேறுபாட்டையும் எடுத்துக்காட்டியுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலை விட அதிகளவுக்கு தமிழ் பேசும் மக்கள் தமிழ்,முஸ்லிம் என்ற வேறுபாடு இன்றி ஒரே குரலிலே மாற்றத்துக்கான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜே.வி.பி.யினரின் வாக்குவங்கி வெறுமையடைந்ததையே தேர்தல் பெறுபேறுகள் எடுத்துக்காட்டுவதாக அபிப்பிராயம் தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவரை சிறுபான்மையினரே தீர்மானிப்பரென்ற கருத்தை பெரும்பான்மையினர் ஒன்றுபட்டால் பொருட்டல்ல என்பதையும் இத் தேர்தல் வெளிக்காட்டியிருப்பதாக கலாநிதி நா. குமரகுருபரன் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவித்ததாவது;

இத் தேர்தல் கடும் போட்டியாக அமைந்திருந்தாலும் கூட முடிவுகள் கடந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மகிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் உள்ள வாக்கு வித்தியாசத்தைவிட பன்மடங்கு கூடுதலான வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோல்விக்குக் காரணம் ஜே.வி.பி.யின் வாக்கு வங்கி வெறுமையடைந்ததேயாகும்.

இதேவேளை தேர்தலானது சிங்கள மக்கள் மத்தியில் சரத் பொன்சேகா யுத்த வெற்றியின் போது சந்தித்த துன்பங்களை அங்கீகரித்துக் கொண்டதாக அமையவில்லை. எனவே தமிழ் பேசும் மக்கள் தெட்டத் தெளிவாக கடந்த தேர்தலை விடவும் இத் தேர்தலில் அரசுக்கு எதிரான புதிய மாற்றம் தேவையென்ற நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.

அதேவேளை, நகரப் பகுதிக்கு அப்பால் வாழும் சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்ஷ மீதான யுத்த வெற்றியின் நன்றி உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் நகர்ப் புற சிங்கள சமுதாயம் தமது சிந்தனைக்கு ஏற்ப பொருளாதார ரீதியாக ஒரு மாற்றம் தேவையென்பதை வெளிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுபவர், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் புரிந்து கொண்டு அவர்களுடைய உள்ளங்களை வெற்றி கொள்வதற்கான திட்ட நடைமுறை செயற்பாட்டில் இறங்குவாராயின் எதிர்கால இலங்கை அனைத்து இன மக்களுக்கும் சுபிட்சமுடையதாக அமையும்.

சிறுபான்மை மக்கள் தான் ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கின்றார்கள் என இதுவரை நிலவிய கருத்தை தேர்தல் முடிவுகள் மாற்றியுள்ளன. பெரும்பான்மை மக்கள் ஒன்றுபட்டால் வெற்றி என்பது ஒரு பொருட்டல்ல என்கின்ற சிந்தனை உருவாகியிருக்கின்றது.

எது எதுவிதம் அமைந்தாலும் இந்தத் தேர்தலில் வடபுலத்து தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக வாக்களிக்கவில்லை. வவுனியா போன்ற பகுதிகளில் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லையென்பது ஒரு பெரிய காரணம் தான். ஆனால் இவர்கள் வாக்களித்தாலும் கூட 10 இலட்சம் பெரும்பான்மை வாக்கினை ஈடுசெய்ய முடியுமா என்ற கேள்வி எழுகின்றது.தமிழ் மக்களுடைய அபிலாஷைகள் புரிந்து கொள்ளப்பட்டு ஜனாதிபதி இந்த நாட்டின் ஜனாதிபதி தானே என்ற வகையில் அனைத்து இன மக்களதும் அபிலாஷைகளைப் புரிந்து கொண்டு செயற்பட்டால் இன்றி சுபிட்சமாக அமையும்.

One thought on ““தமிழ்,முஸ்லிம் என்ற வேறுபாடு இன்றி ஒரே குரலிலே மாற்றத்துக்கான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்!””

  1. முஸ்லீம்களூம் தமிழர்களூம் மகிந்தாவைநிராகரித்திருக்கிறார்கள். சிறூபான்மையின்ரிடையே எதற்கு வேறூபாட்டை வளர்க்கிறீர்கள்.பெரும்பான்மையினரை சிந்திக்க வைப்பதாய் சரத்தின் பிரச்சாரம் அமையவில்லை மாறாக குழப்பியது,தெளீவற்ர அணூகுமுரை, அரசியல் அனுபவமின்மை இவைதான் காரணம்.சிங்களவரை சரத் சரியாக அணூகவில்லை.

Comments are closed.