தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 15 ] : T.சௌந்தர்

பழங்காலத்து தமிழ் ராகங்கள் உயிர்த்துடிப்புடன் வாழ்கிற மரபாக [ Living Tradition ] பல்வகைப்பாடல் வடிவங்களூடாக நிலைபெற்றுள்ளன. கூத்து இசையிலும் ,நாடக இசையிலும் பின்னர் சினிமா இசையிலும் இடையறாது பயன்பட்டு மக்கள் சிந்தையில் உணர்வுகளின் ஊற்றிடமாகவும் விளங்குகின்றன.

இந்திய இசையின் ஆதாரமாக விளங்கும் ராகங்களின் உயிர் துடிப்புக்களை கதைகளின் நினைவுச் சிற்ப்பங்களாக நவீன கலையான சினிமாவும் பயன்படுத்தி வந்திருக்கிறது.

தொன்ம இசையின் நீட்சி என்பது சமூகத் தேவைக்கேற்ப வளர்ச்சி கண்டு நிலைபெற்றுள்ளன.காலத்திற்க்குக் காலம் ராகங்களின் பெயர்கள் மாறினாலும் இசை வேர்களின் ஊற்றிடத்திலிருந்து இறங்கும் இனிய இசையின் தொடர்ச்சி மக்களின் கலைத் தாகத்தால் நிலைபெற்றுள்ளன.இந்தத் தாகமே மக்களின் வாழ்வைச் சுவையாக்கியுள்ளன.

இனிமையும் ,கம்பீரமும் , இரக்கமும் ,பரவசமுமிக்க ராகங்களில் ஒன்றே ஹிந்தோளம்.எந்த வகையான மக்களையும் வசீகரிக்ககூடிய மனோகரமான ராகம் என்றால் மிகையில்லை என்றே சொல்லலாம்.

இன்று ஹிந்தோளம் என்றழைக்கப்படும் இந்த ராகத்தை பழந்தமிழகத்தில் இந்தளம் என்றழைத்தனர்.சமயக் குரவர்கள் காலத்தில் இந்த ராகத்தில் தேவாரங்கள் பாடப்பட்டுள்ளன.

பன்னிரு திருமுறைகளில் திருநாவுக்கரசர் பாடிய நான்காம் திருமுறையில் வரும்

இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம்
இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண்
இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழு
இரண்டுகொ லாமவ ரெய்தின தாமே.

என்ற பாடல் இந்தளம என்ற பண்ணில் அமைந்தது.தேவாரங்களைப் பாடக்கூடிய பண்களில் முக்கியமானது இந்தளம் என்பதை சிரமமில்லாமல் கண்டு கொள்ளலாம்.

” பித்தா பிறைசூடி பெருமாளே அருளாளா ” என்று தொடங்கும் சுந்தரர் தேவாரமும் இந்தளம் பண்ணில் அமைந்தது என்றும் , நெய்தல் பாணி, கானல் பாணி [ பாணி என்பதற்கு இனிய பாடல், அய்ந்து சுர ஒளடவ ராகம் என்று பொருள்)] என்பது இந்தோளத்திற்கான பழைய பெயர்கள் என்கிறார் இசையறிஞர் நா.மம்மது.

சிலப்பதிகாரத்தில் இளங்கோ பாடியதையே இதற்க்கு ஆதாரமாக அவர் தருகிறார்.
……..
” ஊடினீர் எல்லாம் உருஇலான் தன்ஆணை
கூடுமின் என்று குயில்சாற்ற – நீடிய
வேனற்பா ணிக்கலந்தாள் மென்பூந் திருமுகத்தைக்
கானற்பா ணிக்குஅலந்தாய் காண். – [சிலப்பதிகாரம் – 8. வேனில் காதை

பணடைய நிலப்பிரிவில் இது நெய்தல் நிலத்திற்குரிய பண ஆகும்.

கிரக பேதத்தால் புதிய ராகங்களை உணடாக்கக் கூடிய ” மூர்ச்ச்சனாராகம் ” மோகனராகத்தின் ரிசபத்தை காந்தாரமாக வைத்துக் கொண்டால் மத்தியமாவதி ராகமும் , அவ்வாறே காந்தாரம் ஹிந்தோளத்தையும் கொடுக்கும் என்கிறார் இசையறிஞர் பி.சாம்பமூர்த்தி.[ கர்னாடக சங்கீத புஸ்தகம் . பாகம் மூன்று ]

ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் இந்த ராகத்தை மால் கௌன்ஸ் [ Malkauns ] என்று அழைக்கின்றனர்.இந்த ராகத்திற்கு மிக நெருக்கமானதாகக் கருதப்படும் சந்திரகவுன்ஸ் [ Chandrakauns ] என்கிற ராகம் ஒரே ஒரு சுரத்தால் மாறுபாடு அடைகிறது.
இசைக்கலைஞர் B R .Deodhar [ 1901 – 1990 ] என்பவரால் இந்த ராகம் கண்டுபிடிக்கப்பட்டது என்ற கருத்து நிலவுகின்றது..அவர் ஹிந்தோள ராகத்தில் வரும் சிறிய ” நி ” க்கு பதிலாக பெரிய ” நி ” பயன்படுத்தினார் என்பர்.

ஹிந்தோளம் : ஸ க ம1 த1 நி2 ஸ
ஸ நி2 த1 ம1 க ஸ

மால் கௌன்ஸ்: ஸ க ம1 த1 நி2 ஸ
ஸ நி2 த1 ம1 க ஸ

சந்திரகவுன்ஸ்: ஸ க ம1 த1 நி3 ஸ
ஸ நி3 த1 ம1 க2 ஸ

கல்யாணவசந்தம் என்ற ராகமும் ஹிந்தோளத்திற்க்கு நெருக்கமானதென்பர்.

கல்யாணவசந்தம் :ஸ க2 ம1 த1 நி3 ஸ
ஸ நி3 த1 ப ம1 க2 ரி 2 ஸ

கர்னாடக இசையில் இந்த ராகம் அதிகமாகப் பயன் படுத்தப்படுகிறது.பரவலான மக்கள் மத்தியில் அதிகம் செல்வாக்கு பெற்றிருப்பது அதற்க்கான முக்கிய காரணம் எனலாம்.கர்னாடக இசையில் அதிகம் பிரபலமான சில கீர்த்தனைகள்.:

சாம்ச வரகமணா – தியாகராஜர்
மனசுலோனி மர்ம தெலுசு – தியாகராஜர்
நீர சாட்சி காமாட்சி – முத்துசுவாமி தீட்சிதர்
நம்பிக்கேட்டவர் எவர் ஐய்யா – பாபநாசம் சிவன்
ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே – அருணாசலக்கவிராயர்
பத்மனாபப் பாகி – சதாசிவபிரமேந்திரர்

thaoorமரபு ராகங்களை தனது இசை நாடகங்களிலும் , பாடல்களிலும் பிணைத்து மெருகேற்றிய மஹாகவி தாகூர் ஹிந்தோள ராகத்தையும் பயன் படுத்தி மேன்மைப்படுத்தினார்.

01 Annadh Dhaara Bochichhe Pole – Ravindranath Tagore
02 Swarge Tomay Niye Jaabe – Ravindranath Tagore

என்ற இரண்டு பாடல்கள் ஹிந்தோளராகத்தில் அமைக்கப்பட்டன.

உலகு தழுவிய இசையில் ஒலிக்கும் ஐந்து சுரங்களைக் கொண்ட ராகங்களில் ஒன்றான இந்த ராகம் தென் கிழக்கு ஆசியாவிலும் ,கிழக்கு ஆபிரிக்க நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ள ராகமாகும்.

குறிப்பாக சீன நாட்டில் தேசிய ராகமாக கருத்தப்படும் மோகன ராகம் போல இந்த ராகமும் அதிகமாக ஒலிக்கின்ற ராகமாகவும் விளங்குகிறது.சீன நாட்டுப்புற இசையிலும் வலுவாகவும் இயல்பாகவும் ஒலிக்கின்ற ராகம் இது.

சீனாவும் இந்தியாவைப் போலவே தொன்மைமிக்க இசை மரபு கொண்ட நாடாகும்.இரு நாடுகளின் பணடைய தொடர்பு , கலாச்சாரப் பரிவர்த்தனை இசையிலும் செல்வாக்கு செலுத்தும் வாய்ப்புக்களை வழங்கியிருக்கும் என்பதை வரலாற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

சீன மக்கள் இசையில் இன்று வரை மாறாமல் இருக்கின்ற ராகங்கள் ஐந்திசைப்பண்கள் என்று அறியப்படுகின்றன.அவை யப்பான் , கொரியா , கம்போடியா , கிரேக்கம் , இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் வழக்கத்தில் உள்ளன என இசை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Mao-Zedong1920 களில் சீனாவின் நாட்டுப்புற இசையை பின் தள்ளி மேற்கத்தேய இசையை முன்னிறுத்திய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ” புதுமை ” என்ற பெயரில் மேலைத்தேய இசையை திட்டமிட்டு வளர்த்து கொண்டிருந்தது.அதற்காக உயர் / மத்தியதரவர்க்க சீன இசைக்கலைஞர்கள மேற்கு நாடுகளில் பயிற்றுவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர்.

ஆயினும் பாட்டாளிவர்க்கத்தின் ஈடு இணையற்ற தலைவர் மாஒவின் தலைமையில் இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த சீன கிராமங்களில் நாட்டுப்புற இசைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு , அமைக்கப்பட்ட புரட்சிப்பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்றன.

சீனப்புரட்சியின் வெற்றியோடு சீன மக்கள் இசை வெற்றி நடை போட்டது.” புதுமை ” என்கிற அடிவருடி இசை சியாங்கை செக்குடன் [Chiang Kai-shek ] தைவானுக்கு தலைதெறிக்க ஓடியது.

முதன்மையும் , தொன்மையும் மிக்க ராகங்களில் விவசாயிகளும் தொழிலாளிகளும் தங்கள் புரட்சியையும், தங்கள் தலைவர்களையும் போற்றி புகழ்ந்து பாடினர்.இனிமை பொங்கும் ஹிந்தோள ராகத்தில் தலைவர் மாஒ வை வாழ்த்திப் பாடும் பாடல் ஒன்று நம்மையும் மகிழ்விக்கும்.

இவ்விதம் உலகெல்லாம் மயங்கும் இந்த ராகத்தை சினிமா இசையமைப்பாளர்கள் விட்டு வைப்பார்களா?ஆழ்ந்து நுணுகி அதில் தோய்ந்து அவற்றில் தங்கள் கற்பனையை மிதக்க விட்ட சினிமா இசையமைப்பாளர்களின் கைவண்ணங்களை கண்டு இன்றும் வியக்கின்றோம்.செவ்வியல் மரபிலும் , வாய்மொழி மரபிலும் உந்தப்பட்ட அவர்கள் ஆளுமை பாங்கு மட்டுமல்ல, நம்மையும் அந்த பேருணர்ச்சியில் திளைக்க வைத்த , வாக்குகளுக்கு எட்டாத அழகுகளில் கலக்க வைத்த மேதகு ஞானத்தை என்னவென்பது!!

01 ராஜ சேகரா என் மேல் – அனார்க்கலி 1955 – கண்டசாலா + ஜிக்கி – இசை : ஆதிநாராயணராவ்

நாட்டிய சிங்காரி அனார்க்கலி சோக வாழ்வை சித்தரிக்கும் படத்தில் நெஞ்சை அள்ளும் விதத்தில் இசையமைக்கப்பட்ட ஹிந்தோள ராகப் பாடல்.எப்படிப்பட்ட சங்கதிகளை எல்லாம் போட்டு நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இசையமைக்கப்பட்ட பாடல்.இந்த ராகத்தில் துணிந்து ஒரு காதல் பாடலாக இசை தந்த இசைமேதை ஆதிநாராயணராவ் என்றென்றும் நினைவு கொள்ளப்படுவார். மெல்லிசை தழுவிய ராகம்
சார்ந்த பாடல்களை இனிமை பொங்க தந்தவர் என்ற ரீதியில் அவர் ஒரு முன்னோடி என்று துணிந்து சொல்லலாம்.

ஹிந்தோளம் என்றதும் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது ஆதிநாராயணராவ் அவர்களின் பாடல்களே. இந்த பாடலில்

” மனதில் உருவம் காணுதே
மமதை பார்வை மூடுதே
மதுவின் மலரைப் பாரடா
மௌனம் ஆகுமா ”
என்ற வரிகளையும் ஜிக்கியும்

” காதலாலே ஏங்குதே
கவர்ந்த கண்கள் தேடுதே

என்ற வர்களைத் தொடர்ந்து கண்டசாலா பாடும் ஆலாபனை நம் உயிர் நிலையங்களில் ஹிந்தோள ராகத்தின் மின்சாரத்தைப் பாய்ச்சி பரவசப்படுத்தும்.நெஞ்சில் நிறைந்த பாடல்கள் வரிசையில் அமரத்துவம் பெற்ற பாடல் இது.

02 அழைக்காதே சபைதனிலே – மணாளனே மங்கையின் பாக்கியம் 1955 – பி.சுசீலா – இசை : ஆதிநாராயணராவ்

ராகங்களின் நுண்ணலகுகளின் ஒலித் துடிப்புக்களில் உணர்வுகளுக்கு முன்னுரிமை தந்து எழுச்சி தருகின்ற பாடல்களால் ரசிகர்களின் நெஞ்சங்களை ஊட்ருவிச் செல்கின்ற பாடல்களால் நம்மை மகழ்வித்த இசைமேதை ஆதிநாராயணராவ் அவர்களின் இன்னுமொரு பாடல்.ஆரம்பகாலங்களில் சுசீலா பாடிய இனிமைமிக்க பாடல். ஹிந்தோள ராகத்தின் சிறப்புக்கு எடுத்துக்காட்டான பாடல்.

03 யோகமதே எழிலாம் – விப்ரநாராயணா 1955 – ஏ.எம்.ராஜா – இசை : எஸ்.ராஜேஸ்வரராவ்

Saluri Rajeswara Rao Bhaava Geetaaluஇசைமேதை எஸ்.ராஜேஸ்வரராவ் இசையமைத்த ஹிந்தோள ராகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்த இனிமையான பாடல்.இனிமையாகப் பாடும் ஏ.எம்.ராஜா சுவை குன்றாமல் பாடிய பாடல். இலங்கை வானொலியில் கேட்டு ஆனந்த்தித்த மறக்க முடியாத பாடல்.

04 கண்களும் கவி பாடுதே – அடுத்த வீட்டுப் பெண் 1960 – சீர்காழி + திருச்சி லோகநாதன் – இசை : ஆதிநாராயணராவ்
அசாத்திய திறமைமிக்க பாடகர்கர்களான சீர்காழி கோவிந்தராஜனையும் , திருச்சி லோகநாதனையும் மிக சிறப்பாக நகைச்சுவைப்பாடலை வைத்தவர் ஆதிநாராயணராவ்.அற்ப்புதமான சங்கதிகளைக் கொண்ட பாடலை இவர்கள் இருவரும் ஈடு இணையில்லாமல் பாடி அசத்திய பாடல்.
நவரசங்களை வலுவான ராக பீடத்தில் ஏற்றி இசை ரசிகர்களைக் குதூகலிக்க வைத்த பாடல்.

05 ஜெகம் புகழும் புண்ணிய கதை – லவகுசா 1965 – பி.லீலா + பி.சுசீலா – இசை : கண்டசாலா + கே.வீ.மகாதேவன்

கண்டசாலா ,கே.வீ.மகாதேவன் என இரண்டு இசையமைப்பாளர்கள் இசையமைத்த படம் லவகுசா.இந்த பாடலின் ஆரம்பம் மட்டும் அழகான ஹிந்தோளத்தில் அமைக்கப்பட்டு பின் ராக மாலிகையாக அமைக்கப்பட்ட பாடல்.

06 மழை கொடுக்கும் கொடையும் – கர்ணன் 1964 – சீர்காழி கோவிந்தராஜன் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நான்கு பாடகர்கள் இணைந்து பாடிய அபூரவமான பாடல். எண்சாண் உடம்பில் சிரசே பிரதானம் போல , ஒரு பாடலின் பல்லவியே அந்தப் பாடலின் அடையாளம் என்பதற்கிணங்க அருமையான பல்லவியைக் கொண்டு அமைக்கப்பட்ட சிறப்பான பாடல்.சுருதி சுத்தமாகவும், சிறந்த உச்சரிப்பும் மிக்க சீர்காழி கோவிந்தராஜன் மனதைநெகிழ வைக்கும் விதத்தில் பாடிய பாடல்.

விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மெல்லிசை யுகத்தில் ஊற்றெடுத்த பாடலமுதம்.ராக பிரயோகங்களில் அமரத்துவம் மிக்க உணர்வை,ஆளுமையை காட்டிய மன ஆற்றல் வியக்கத்தக்கது.

07 மனமே முருகனின் மயில் வாகனம் – மோட்டார் சுந்தரம்பிள்ளை 1965 -ராதா ஜெயலட்சுமி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிது என்பது போல சிறிய பாடல் என்றாலும் ஹிந்தோள ராகத்தின் செறிவான கதிர் கற்றைகளை வீசி அடித்த பாடல்.பொருத்தமான பாடகி பாடியதால் , பாடல் சிறப்புற்று விளங்குகிறது.

08 சீருலாவும் இன்ப நாதம் – வடிவுக்கு வளைகாப்பு 1963 -சௌந்தரராஜன் + பி.சுசீலா – இசை : கே.வீ மகாதேவன்
ராக இசையின் செம்மைகளை சிறப்பாக கையாள்வதில் திரை இசைத்திலகம் மகாதேவன் ஒரு நிபுணர்.மெல்லிசையிலும் அவர் காட்டிய ஆளுமை சிரஞ்சீவித்துவமுடையவை.மகாதேவன் செதுக்கிய மெல்லிசைப் பொற்சிலைகளில் ஒன்று.

09 பச்சை மாமலை போல் மேனி – திருமால் பெருமை 1966 -சௌந்தரராஜன் – இசை : கே.வீ மகாதேவன்

தொடராக வெளிவந்த பக்திப்படங்களில் ராகங்கள் சார்ந்த மெல்லிசை தழுவிய அற்ப்புதமான பாடல்கள் கே.வீ மகாதேவன் இசையில் வெளிவந்தன.ஹிந்தோள ராகத்தில் மகாதேவனின் இனிமையான பாடல்.

10 வேண்டிய மாம் பழத்தை – கந்தன் கருணை 1966 -சீர்காழி கோவிந்தராஜன் – இசை : கே.வீ மகாதேவன்
அறுபடை வீடு கொண்ட திருமுருகா என்ற பாடலில் இடையே வரும் பகுதியில் அருமையான பகுதி இந்தப் பாடல்.இந்தப் பாடலின் உச்சமே இந்தப் பகுதிதான்.

11 ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே – பத்து மாத பந்தம் 1970 -பி.பானுமதி – இசை : சங்கர் கணேஷ்

அருணாசலக்கவிராயர் எழுதிய பாடலை பானுமதி தனக்கே உரிய மிடுக்குடன் அழகாகப் பாடிய பாடல்.கேட்கும் போது ஹிந்தோளம் குதூகலிக்க வைக்கும்.சினிமாவில் வந்து புகழ் பெற்றது.

12 அபிமன்யு போர்க்களத்தில் மாண்டு விட்டான் – மகாதேவி 1957 -பகவதி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

visvanathanramamoorthiமெல்லிசைமன்னர்களின் உருக்கமான பாடல்.சிறைக் காட்சியில் பாண்டவர் கதையையும் , தனது கதையையும் இணைத்து பாடப்படுகின்ற இரக்கமிக்க பாடல்.படத்தின் சூழ் நிலையும் சாவித்திரியின் அற்ப்புதமான நடிப்பும் உருகாதவர்களையும் உருக வைக்கும்.மெல்லிசை மன்னர்களின் ஹிந்தோள இசை அந்த உன்னதத்திற்கு மகுடம் சேர்த்திருக்கும்.

சிறைக்காட்சியில் ஒலிக்கும் இந்தப் பாடல் ” சிங்காரப்புன்னகை கண்ணாரக் கண்டாலே ” என்ற பாடலின் சோக வடிவத்தின் நடுவே வருகின்ற பாடல்.

13 மாலைப்பொழுதின் மயக்கத்திலே – பாக்கிய லட்சுமி 1961 -பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
மெல்லிசைமன்னர்கள் அமைத்த ஒப்புயர்வற்ற பாடல்.கேட்கும் தருணங்களில் எல்லாம் நெஞ்சத்தை நீறாக்கி மனதை உருக்குலைக்கும் பாடல்.எப்படிப்பட்ட இசை ! எப்படி பாடப்பட்ட பாடல் என்று வியப்புத் தாழாது என்னை வதைக்கின்ற பாடல்.இவ்வளவு சோகம் இருக்க முடியுமா என்று எத்தனையோ விதமாக நான் கற்பனை செய்து பார்த்த பாடல்.என் பால்ய வயதில் என்னை அதிகம் பாதித்த பாடல்.அந்தப்பாடலில்

செனாய் என்ற வாத்தியத்தை மிக மிக அற்ப்புதமாக மெல்லிசைமன்னர் பயன்படுத்தினார்கள்.அந்த வாத்தியத்தை வாசித்த கலைஞருக்கு எத்தனயோ தேசிய விருதுகளை கொடுக்கலாம்.

இந்த பாடலைக் கேட்டு முப்பது வருடங்களுக்குப் பின்னர் தான் அந்த பாடல் பெற்ற படத்தை பார்க்க நேர்ந்தது.
அந்த பாடல் தந்த ஆழ்ந்த ஆன்ம இன்பத்தை காட்சி தரவில்லை.அது பாடலுக்கும் காட்சி அமைப்புக்கும் இடையே நடக்கும் நீண்ட போராட்டம்.அதில் காட்சி தான் காலம் முழுவதும் தோல்வி அடைகிறது.
இந்த பாடலை சந்திரகவுன்ஸ் ராகம் என்று சொல்லப்படுகின்ற ஹிந்தோள ராகத்திற்கு மிக , மிக நெருக்கமான ராகத்தில் அமைந்ததென்பர்.

14 இயற்க்கை என்னும் இளைய கன்னி – படம்: சாந்திநிலையம் 1969 – எ.பி.பாலசுப்ரமணியம் + பி.சுசீலா – இசை: மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

முதல் ஆரம்பிக்கும் ஹம்மிங்கிலேயே பாடலின் எழிலை காட்டி விடுகின்றார் இசைமேதை விஸ்வநாதன்.மெல்லிசைக்கு மெல்லிசைமன்னர் தந்த எழில் மிகு இனிய பாடல்.
என்றென்றும் சலிக்காத பாடல்.

15 உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் – அவளுக்கேன்றோர் மனம் – பாடியவர் : எஸ்.ஜானகி – இசை : மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

நாதப்புனலில் எம்மை மூழ்கடித்து நம் நெஞ்சங்களை கண்ணீரால் நீராட்டி குதூத்துகலிக்க வைக்கின்ற விஸ்வநாதம்.உள்ளம் பரவசம் அடைய வைக்கும் பாடல்.ராகங்களில் உணர்ச்சிகளை அள்ளி அள்ளி வீசிய மெல்லிசைமன்னரின் சாகச ராகக் கொப்பளிப்பு.சிகரங்களைத் தொட்ட பாடல்.இதை பற்றி எழுத வார்த்தைகள் கிடையாது. எத்தன தரம் கேட்டாலும் சலிக்காத பாடல்.

வழமை போலவே புதுமையை இயல்பூக்கமாக கொண்டியங்கும் இசைஞானி இளையராஜா மரபில் நின்று ராகங்களில் உள்ளுறைகளில் பதுங்கியிருக்கும் அழகுகளை விரித்து , தனது இனிய விந்தை இசையில் பூட்டி , சுதந்திர உணர்ச்சியுடன் பல்வகைப் பாடல்களாக தந்து தமிழ் சினிமா இசையை யாரும் எட்டாத சிகரத்தில் வைத்தார்.

எத்தனை பாடல்கள் எத்தனை வித வித வண்ணங்கள்!தமிழ் ராகங்களின் இனிமையை விண்டுரைக்க முடியாத பல் வகை இசைகளை ஒன்றிணைத்து இசையை நாம் சுவாசிக்கும் உயிர் மூச்சுக் காற்றாக்கிய பெருமை அவருடையது.

அதுமட்டுமல்ல அவற்றை தமிழ் பண்பாட்டு விழுமியங்களுடன் அடையாளம் கண்டு பேச வைத்த பெருமையும் அவரது இசையைச் சாரும்.

இளையராஜா அமைத்த ஹிந்தோள ராகபாடல்கள்:

01 பாட வந்ததோர் கானம் – இளமைக் காலங்கள் – கே.ஜே.யேசுதாஸ் + பி.சுசீலா இசை: இளையராஜா
ஒரு ராகத்தில் எத்தனை எத்தனை பாடல்களை அமைத்து அவை ஒவ்வொன்றிலும் உச்சங்களை எட்டி கலையின் சிகரங்களை தொட்ட கற்பனையின் வளமிக்க பாடல்.

02 ராகவனே ரமணா ரகு நாதா – இளமைக் காலங்கள் – பி.சுசீலா இசை: இளையராஜா
இசை என்றால் இனிமை என்பதற்கு எடுத்துக்காட்டான பாடல்களில் ஒன்று.

03 பொத்தி வச்ச மல்லிகை மொட்டு – மண் வாசனை – எஸ்.பி.பால சுப்பிரமணியம் + எஸ்.ஜானகி இசை: இளையராஜா
மரபும் நவீனமும் இயல்பாய் ஒன்றிணைந்து ரசானுபாவத்தில் எந்த சிரமும் தராமல் இசையே ஒரு கவிதைத் தன்மை நிரம்பியனவாய் அமைப்பதும் அதே வேளை இசையை விஸ்தரித்து புது புது திசைகளில் இழுத்துச் சென்று இன்பம் மூட்டி , தமிழ் சினிமாவை தனது இசையால் சிகரத்தில் நிறுத்திய இசைஞானியின் உன்னதமான பாடல்.
வாத்திய இசையில் அவர் காட்டிய அசாத்திய கைவண்ணங்கள் எண்ணும் பொழுதில் எல்லாம் ஆச்சரியமூட்டுபவை. எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்கள் சொல்வது போல அர்ச்சுனன் அம்புக்கு நிகரானவை.

04 நான் தேடும் செவ்வந்தி பூ இது – தர்ம பத்தினி – இளையராஜா + எஸ்.ஜானகி இசை: இளையராஜா
அருமையான ஹம்மிங் உடன் ஆரம்பமாகும் எழுச்சி தருகின்ற பாடல்.இன்று கேட்டாலும் புதுமை குன்றாமல் ஒலிக்கின்ற பாடல்.

05 நானாக நானில்லை தாயே – தூங்காதே தம்பி தூங்காதே – எஸ்.பி.பால சுப்பிரமணியம் + இளையராஜா இசை: இளையராஜா

படைப்புத் திறனிலும் ராகங்ககளைப் பயன்படுத்தும் உத்தியம்சங்களிலும் , உணர்வலைகளைக் கிளர்த்தும் பாடல்களை தந்து ராகங்களின் சிறப்புக்களை காட்டி இசை ரசிகர்களை நல்ல ரசனையில் தோய்த்தெடுத்தது இசைஞானி இசையின் கவர்ச்சியாகும்.

06 கண்ணா உன்னை தேடுகிறேன் வா – உனக்காகவே வாழ்கிறேன் – எஸ்.பி.பால சுப்பிரமணியம் + எஸ்.ஜானகி இசை: இளையராஜா

இதயத்தை வருடுகின்ற பாடல்களை ராகங்களில் தோய்த்து இன்ப துன்ப ஏக்கங்களை உணர்வு நிலைகளுக்குப் பொருத்தமாக இயல்புடன் பிணைத்து தருவதில் புது பரிமாணங்களை எட்டிய இசைஞானி. இனிய கற்பனை.

07 ஒ ..ஜனனி என் ஜனனி – புதியராகம் – மனோ இசை: இளையராஜா
இசை ரசிகர்களுக்கு அதிக சிந்தனைகளை உயிர்த்தளிப்புள்ள பாடல்களால் தூண்டி பல்லாயிரக்கணக்கான மக்களை லயிக்க வைத்த பாடல்.

08 ஸ்ரீ தேவி என் வாழ்வில் – இளமைக்கோலம் – கே.ஜே.யேசுதாஸ் + எஸ்.பி.சைலஜா இசை: இளையராஜா
Semi – Classical வகைப்பாடல்க்ளையும் தனது முன்னோடிகளைப் போல இசையமைக்கமுடியும் என்பதை நிரூபித்த இசைஞானியின் யேசுதாஸ் பாடல். வேறு யாரவது இந்த பாடலை இவ்விதம் பாட முடியுமா என்று எண்ண வைக்கும் பாடல்.இதிலும் தனது இடையிசை கைவரிசையை சம்பிரதாயம் கெடாமல் புதுமையாவும் இனிமையாகவும் தந்த பாடல்.இசையின் உபாசகர்களாக எம்மை நிலை கொள்ளவைத்த பாடல்.

09 அழகுமலர் ஆட அபிநயங்கள் கூட – வைதேகி காத்திருந்தாள் 1985 – பாடியவர்: எஸ்.ஜானகி – இசை இளையராஜா

உள்ளக் கொந்தளிப்பு மடை திறந்த வெள்ளம் போல் கொப்பளிக்கும் இசை வெள்ளம். விரகதாபத்தின் உச்சமும் , உக்கிரமும் சேர்ந்து நம் இதயங்களை பிழிந்தெடுக்கும் பாடல்.
” கோரிக்கையற்று கிடக்குதண்ணே வேரிற் பழுத்த பலா ” என்று புரட்சிக்கவிஞர் உள்ளம் நொந்து எழுதியதை உணர்த்தும் ஆவேசமும் கனிவும் குழையும் நெகிழ்வும் தருகின்ற நெஞ்சங்களை நீராக்கும் இசை கொண்ட பாடல்.இந்த ராகத்தில் எட்டப்பட்ட உச்சமான பாடல்.
எப்படிபட்ட இசை ! எப்படி பாடப்பட்ட பாடல் ! எழுதித் தொலைக்க வார்த்தை இல்லை ! மெல்லிசைமன்னர்களின் ” மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் “பாடல் ஒரு உக்கிரம் என்றால் இது அதி உக்கிரம்.! எத்தன தரம் கேட்டாலும் சலிக்காத பாடல்.இசை,,, இசை …இசை …!

10 என் வீட்டு ஜன்னல் எட்டி – ராமன் அப்துல்லா – அருண்மொழி + பவதாரணி இசை: இளையராஜா

11 ஓம் நமச்சி வாயா – சலங்கை ஒலி – எஸ்.ஜானகி இசை: இளையராஜா

12 உன்னால் முடியும் தம்பி தம்பி – உன்னால் முடியும் தம்பி – எஸ்.பி.பால சுப்பிரமணியம் இசை: இளையராஜா

13 தரிசனம் கிடைக்காதா – அலைகள் ஓய்வதில்லை – இளையராஜா + எஸ்.ஜானகி

பிற இசையமைப்பாளர்களின் ஹிந்தோள ராகப்பாடல்கள்:

01 உன்னை நினைத்தே நான் எனை மறப்பது – நினைத்தேன் வந்தாய் – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + சித்ரா – இசை: தேவா

02 மல்லிகையே மல்லிகையே – நினைத்தேன் வந்தாய் – அனுராத ஸ்ரீராம் + சித்ரா – இசை: தேவா

மேலே உள்ள இரண்டு பாடல்களும் [ உன்னை நினைத்தே , மல்லிகையே ] தேவா இசையில் வெளி வந்த புகழ்பெற்ற ஹிந்தோள ராகப்பாடல்கள்.இளையராஜாவின் சாயலில் அமைக்கப்பட்ட மிக மிக இனிமையான பாடல்கள்.

03 மார்கழி பூவே மார்கழி பூவே – மே மாதம் – இசை ஏ.ஆர்.ரகுமான்
எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய “கௌசல்யா சுப்ரய” சுப்ரபாத இசையுடன் ஆரம்பிக்கும் பாடல்.வெட்டி ஓட்டும் முறையை Programming தொழில்நுட்பத்தில் அலங்காரம் காட்டும் ரகுமானின் இனிமை தரும் ஹிந்தோள ராகப் பாடல்.பாடலின் பின் வரும் ஹம்மிங் பகுதியை தவிர்த்திருக்கலாமோ என்று எண்ண வைத்த பாடல்.அதுமட்டுமல்ல வேறு யாரவது பாடியிருந்தால் நன்றாக இருந்துக்குமோ என்று எண்ண வைத்த
பாடல்.

என்னைக் கவர்ந்த , மிகவும் பிடித்த ராகங்களில் ஒன்று ஹிந்தோளம்.பொதுவாக எமது பாடசாலைகளில் [ யாழ்ப்பாணத்தில் ] ஆசிரியர்கள் பாடி பாடம் நடத்துவது இல்லை என்றே சொல்லலாம்.இசையுடன் கூடிய பாடல்கள் மாணவர்கள் மனதில் இலகுவில் பதிந்து விடக் கூடியன.

குமாஸ்த்தாக்களை உருவாக்கும் நடைமுறையில் உள்ள கல்வி முறைக்கு மாற்றாக பரிந்துரைக்கும் கல்விமுறையில் இசைக்கு முக்கிய இடம் தரப்பட வேண்டும் என்பதை பல அறிஞர்களும் , கல்வியாளர்களும் உலகெங்கும் பரிந்துரைத்து வருகிறார்கள்.

எனது பால்யப் பருவத்தில் எங்கள் வகுப்பறையில் பாடம் நடாத்தும் போது பாடப் புத்தகங்களில் உள்ள கவிதைகளை, பாடல்களைப் பாடியும் , தேவையான இடங்களில் அழகான விளக்கப்படங்களை கரும்பலகையில் வரைந்தும் , மாணவர்களின் உள்ளங்கொள்ளுமாறு வகுப்பறையை தங்கள் வசம் வைத்திருந்த இரு ஆசிரியர்கள் கிடைத்தார்கள்.

அவர்களிடம் ஓரிரு வருடங்களே பாடம் படிக்க கிடைத்தது.அந்த சொற்ப காலத்தில் அவர்கள் நடாத்திய பாட வகுப்புக்கள் நான் என்றென்றும் மறக்க முடியாத வகையில் எனது மனதில் பசுமையாக பதிந்து விட்டவை அவை.

அந்தப் பாடசாலை யாழ்ப்பாணத்திலுள்ள உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி ஆகும்.

uamஅந்த ஆசிரியர்களில் ஒருவர் பலகலைகளிலும் திறமைவாய்ந்த ஆசிரியர்.அவர் ஆங்கிலம் கற்ப்பிப்பதில் மிகவும் புகழ் பெற்றவர்.அவரிடம் படித்த மாணவர்கள் பலரும் இன்று புலம் பெயர் நாடுகளிலும் அவர் புகழை பேசுவார்கள்.அவர் நகைச் சுவையிலும் மாமன்னர்.நையாண்டியிலும் சிறந்தவர்.தேவையான போது மிக எளிமையான கோடுகளால் அற்ப்புதமான உருவங்களை வரைந்து பாடங்களை மனதில் நிறுத்துவார்.

என்னுள் ஓவிய ஆர்வத்தை தூண்டியதில் அவர் பங்கு அதிகம்.அவர் ஆங்கில பாடத்தை மிக சிறப்பாக நாடாத்திய தலை சிறந்த ஆசிரியர்.

அவரது பெயர் எம்பெருமான்.அவர் ஒரு ஓவியர் , பாடகர் , வாத்தியகலைஞர் , நடனம் ஆடக்கூடியவர் என பன்முக ஆற்றல் கொண்டவர்.அவற்றை எல்லாம் விட தலை சிறந்த ஆசிரியர்.

அந்த ஒருசில வருடங்களில் எனக்கு பாடம் எடுத்த மற்ற ஆசிரியர் எனது தந்தையார்.அவரது பெயர் க.தங்கவடிவேல்.

ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் தனது மகனை பறிகொடுத்த ஒரு இளம் தாய் ஒருத்தி மகனது உயிரை மீட்டுத் தரும்படி கருணைமிகுந்த புத்தபெருமானிடம் வேண்டுவதாய் அமைந்த பாடல். கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை எழுதியது அந்தப்பாடல்.

” ஆறாகக் கண்ணீர் வடித்து நின்றாள் – கையில்
ஆண் மகவோன்றையும் ஏந்தி நின்றாள்
தீராத துன்பங்கள் தீர்த்து வைக்கும் – ஞானத்
தேசிகன் சேவடி போற்றி நின்றாள்.”

என்ற உருக்கமான அந்தப்பாடலை நெஞ்சை தொடும் வண்ணம் ஹிந்தோள ராகத்தில் மெட்டமைத்து பாடினார்.வகுப்பறை நிசப்தமாக மாறியது.அவர் பாடிக்கொண்டிருக்கும் போதே என் சக மாணவ சிறுவன் அடக்க முடியாமல் விம்மி , விம்மி அழத் தொடங்கி விட்டான்.அழுத சிறுவன் உருவமும் ,அவனது பெயரும் என் மனதில் பசுமையாக உள்ளது.அவன் எனது அயல் ஊரான வல்வெட்டியைச் சேர்ந்த டாக்டர் முத்துச்சாமியின் பேரன் பாலகிருஷ்ணன்.அவர் இப்போது எங்கிருக்கின்றார என்பது தெரியவில்லை.

எனது தந்தையாருக்கு அவனை தேற்றுவது பெரும்பாடாய் போனது.அந்த சம்பவம் இன்றும் என் மனதை விட்டகலவில்லை.

பின்னாளில் வெளிவந்த திரைப்படத்தில் , இளையராஜா இசையமைத்த மணிப்பூர் மாமியார் [ 1978 ] திரைப்படத்தில் ” ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே ” என்ற பாடலில் எனது தந்தையார் பாடி காட்டிய பாடலின் சாயல் இருந்தது என்னை ஆச்சர்யபடுத்தியது.

இன்னுமொரு பாடல்.
” அழகிய கிராமம் ” என்ற தலைப்பை கொண்டது.

காலைக் கதிரவன் தான்
கண் விழிக்கும் முன் எழுந்து
வேலைக்கு செல்லுவதும்
விரும்பி உழைப்பதும்

என்று ஆரம்பிக்கும் பாடலையும் சிந்துபைரவி ராகத்தில் எனது தந்தையார் பாடிய போதும் ஹிந்தோள ராகம் தந்த விசும்பலை கேட்க நேர்ந்தது.

இவ்விதம் பல கவிதைகள் எங்கள் வகுப்பில் பாடப்பட்டன.நல உணர்வுள்ள ஆசிரியர்களின் இதய வழியாக எழுத்தில் உயிரற்றுக் கிடந்த சொற்கள் எங்கள் மன கதவுகள் வழியே புகுந்து எழுச்சியூட்டின.

நான் மேலே குறிப்பிட்ட புத்தரிடம் வேண்டப்பட்ட பாடலின் சாயலில் பின்னாளில் இளையராஜா இசையமைத்த பாடலான ” ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே ” அமைந்திருந்தது ஆச்சரியம் தந்தது.

அரும்பெரும் இன்பத்தை அள்ளித் தரும் இன்பக்கருவூலமாகத் திகழும் ராகங்களில் தொன்மையானதும் , தனித் தன்மைம்மிக்கதும் ஹிந்தோள ராகத்தில் புதைந்து கிடக்கும் அழகுகளை சினிமா இசையமைப்பாளர்கள் அள்ளி அள்ளித் தந்திருக்கின்றார்கள்.

தமிழ் பக்திப்பாடல்களில் T.M.சௌந்தரராஜன் பாடிய “கற்பனை என்றாலும் கற்ச் சிலை என்றாலும் ” என்ற பாடலும் அருமையான ஹிந்தோள ராகத்தில் அமைந்ததே.

தமிழ் மட்டுமல்ல பிற மொழிகளிலும் மனத்தைக் கொள்ளை கொள்ளும் , ஆன்மாவை நிறைக்கும் மெட்டுக்களை உருவாக்கி தந்து சென்றிருக்கின்றார்கள்.

மலையாளப்பாடல்கள் சில:

01 ராக சாகரமே பிரிய கான சாகரமே – படாமல் சத்தியவான் சாவித்திரி 1977 – பாடியவர் :கே.ஜே .யேசுதாஸ் – இசை: ஜி.தேவராஜன்

02 ஆ ராத்த்ரி மாஞ்சு போயி – படம் :பஞ்சாகினி 1985 – பாடியவர் : சித்ரா – இசை: பாம்பே ரவி

03 ஆழித் திரை சொல்லும் ஆதித்ய மந்த்ரம் – பாடியவர்: கே.ஜே .யேசுதாஸ்

04 குளிர் மதி வதனே குருவிந்த ரஜனெ – படம்: – பாடியவர்:கே.ஜே .யேசுதாஸ்

தெலுங்குப் பாடல்கள்:

01 Kalanaina nee valape – Santhinivasam – singer 😛 .Leela
02 kondalalo lo – singer :k j yesudaas
03 Samaja Vara gamana – Film Sangarabaranaaam 1980 – SPB + S Janaki – Music KVMahadevan

செவ்வியல் இசையில் பிரபலமான தியாகய்யரின் புகழ் பெற்ற பாடல் இது. படத்தில் செவ்வியல் இசையில் ஆரம்பித்து மிக , மிக இனிமையாக மெல்லிசையாகி மனதை நெகிழ வைக்கும் விதமாக இசையமைத்த இசைமேதை கே.வீ.மகாதேவனின் அற்ப்புதமான இசை விருந்து.
இந்த பாடலால் செவ்வியல் இசையில் பயன்பட்ட இந்தப் பாடல் பல கோடி மக்களின் வாய்களால் முனுமுனுக்கப்படடது.வார்த்தையால் வர்ணிக்க முடியாத இனிமை மிக்க பாடல்.

ஹிந்திப் பாடல்கள் :

01 Adha hai chandrama – film :Navrang 1959 – Singers: Mahendrakapoor + asha bosely music: C.Ramachandra
02 Man Tarapat Hari Darshanko – film: Baiju Bawra 1952 – Singer Mohamd Rafi – Music Nausad
03 Savan ki raat kari – Film :meharaban 1959 _ singer Asha boseley – music: Ravi

[ தொடரும்..]

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 14 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 13 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 13 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 12 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 11 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 10 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 9 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 8 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 7 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 6 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 5 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 4 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 3 ] : T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 2 ] – T.சௌந்தர்
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 1 ] – T.சௌந்தர்

11 thoughts on “தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 15 ] : T.சௌந்தர்”

 1. பாட்டாளிவர்க்கத்தின் ஈடு இணையற்ற தலைவர் மாஒவின்… joke , It was he caused the death of millions of chinese, through his great leap forward, and cultural revolution… How could a killer machine be a leader of workers

 2. மிக அருமையாக எழுதப்பட்ட கட்டுரை.

 3. இளையராஜாவுக்காக எழுதப்பட்டது என்பது வெளிப்படையாக தெரிகிறது.  விசுவநாதன்- ராமமூர்த்தி இசையில் வந்த மாலைப் பொழுதின் மயக்கத்திலே பாடலைவிட இளையராஜாவின் அழகு மலர் ஆட அதி உக்கிரமாம்! அடக் கடவுளே! என்ன ரசனையோ! மெல்லிசை மன்னர்களின் பாடல்களின் அழகை ராஜாவின் இசை என்றைக்கும் அடையமுடியாது என்பதே பெரும்பாலர்களின் கருத்து.சவுந்தருக்கு பிடித்ததே சிறந்தது என்று அவர் நினைக்கிறார். இதில் மாவோ ஒரு பாட்டாளி மக்களின் தலைவனாம்! வரலாறு தெரியாமல் பேசாதீர்கள். ஸ்டாலின் போன்று மாவோ தன் இன மக்களையே அழித்த சீனாவின் பண்பாட்டை கம்யுனிசம் கொண்டு ஒடுக்கியவன். 

 4. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு 
  இல்லாமை இல்லாத நிலை வேண்டும் 
  வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை – நீங்கி
  வரவேண்டும் திரு நாட்டில் பொதுவுடைமை 

  பால் என அழுவோர்க்கு பால் தருவோம் – பசுங் 
  கூழ் என குடிப்போர்க்கு சோறிடுவோம் 
  தாயகம் காப்போரின் தாழ் பணிவோம் – எதுவும் 
  தனக்கென நினைப்போரை சிறையிடுவோம் 

  என்று கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்ளாத எண்ணற்ற கவிஞர்களையும், கலைஞர்களையும்  ” சோசலிசம் ” பேச வைத்ததென்பது ஸ்டாலின் , மாஒ போன்ற தங்கள் வாழ்நாளை ஏழை எளிய மக்களின் விடிவுக்காகப் பாடு பட்ட தலைவர்களின்  சாதனை ஆகும்.

  கம்யூனிச எதிரிகளும்  ” கம்யூனிசம் , சோசலிசம் ”  பேசி தான் தங்களை நல்லவர்களாக காட்டும் நிலையை 
  வளர்க்க வேண்டிய நிலையை உருவாக்கியவர்கள் அவர்கள்.

  1. There is no doubt you are good at writing about music though I don’t have to agree with everything you say. Praising those two criminals who have committed the worst possible genocides on earth and destroyed the cultural heritage of millions of people is beyond belief. If not for them we will have more languages and cultures in this world now adding more color to our lives. 

 5. Well said Mr. Sutharsan, I welcome your comment.

  சவுந்தருக்கு ராகங்களின் மீது இருக்கும் நுட்பமான அறிவு வரலாற்றில் இல்லை என்பது தெளிவாகிறது. ஸ்டாலின் மற்றும் மாவோ இருவரும் கம்யுனிசத்தை உலகில் கொண்டுவந்ததாக கதைக்கிறார். அடேயப்பா! என்ன ஒரு சரித்திரப் புரட்டு! கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரின் புத்தியில் உதித்த சமூக சமநிலை லெனின் மூலம், ருஷ்யாவிற்குள் ஒரு புதிய ஆட்சி மாற்றமாக பிறந்தது. லெனினின் திடீர் மறைவுக்குப் பின் அடுத்து தலைவராக வந்திருக்க வேண்டிய டிராஸ்ட்கி என்ற நல்ல மனிதனை சூழ்ச்சி செய்து கொலை செய்துவிட்டு அதிகாரத்தைப் பிடித்தவன் ஸ்டாலின். இதை வரலாறு தெரிந்தவர்கள் நன்கு அறிவார்கள். மாவோ ஒரு இன படுகொளையாளன். சீனாவின் பண்டைய பாரம்பரியத்தை cultural revolution என்ற சிகப்புத் திரை போர்த்தி அழித்தவன். தன் மக்களையே கொன்றவர்களில் (ஹிட்லர் கூட இதைச் செய்யவில்லை)நமக்கு சமீப காலத்தில் வாழ்ந்தவர்கள் இந்த இரண்டு கொடுங்கோலர்கள். இவர்களால் சமூக நீதி உலகிற்கு கிடைத்ததாம்! இசையைப் பற்றி எழுதுங்கள். நன்றாக இருக்கிறது. அதிலும் ஒர வஞ்சனை சற்று தூக்கலாக இருக்கிறது. இளையராஜா என்றால் ஒரு தனி மதிப்பீடு.மற்றவர்களை ஒப்புக்கு பாராட்டுதல் என்ற உங்களின் இசை விமர்சனம் வர வர இன்னொரு ராஜா ரசிகரின் பதிவைப் போலவே இருக்கிறது.

 6. அருமையான ஆக்கம் சௌந்தர்.” பொத்தி வச்ச மல்லிகை மொட்டு சூப்பர் ஹிந்தோளம் எனபதை அறிந்து மகிழ்ச்சி.ராஜா தாஜா தான்.
  ஸ்டாலினையும் , மாவோவையும் விட ஹிட்லர் நல்லவர் என்று இங்கே காரிகனின் தம்பி மதனகோபாலன் உங்களுக்கு வகுப்பு எடுப்பது போல் தெரிகிறது.

  மதனக்பொஆல் அண்ணே இனிஒருவில் வந்துள்ள அருந்ததி ராயின் கட்டுரையை படித்து வரலாற்று அறிவை வளர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

 7. தங்கள் கட்டுரைகள் அபாரமான கட்டுரைகள்.

 8. சௌந்தர் அவர்களுக்கு ..
  மீண்டும் என் பாராட்டும் என் வாழ்த்தும் ..தங்களின் இசைத்தொடரை
  தொடர்ந்து வாசித்து வருபவர்களில் நானும் ஒருவன் .ஒரு விசயத்தை
  உள் வாங்கியிருப்பவர்கள் அல்லது ஒரு இரசனையை கொண்டிருப்பவர்கள்
  அவை சார்ந்திருக்கும் நபர்களையும் நண்பர்களையும் அடைந்திருப்பது
  இயல்பானது .அவ்வாறே ..தங்கள் தொடர் அவ்வப்போது எனது கடந்தகால
  வசந்தங்களை ,எனக்கு வாய்த்த நட்புகளை மீண்டும் மீண்டும் மீட்டிப்பார்க்க
  வைக்கிறது .நினைவை மீட்டிக்கொண்டு அதில் லயித்திருப்பது அலாதியானது .
  அதன் சுகானுபவமே தனி.அவ்வாறான ஒரு தருணத்தை தங்கள் தொடர்கள்
  அவ்வப்போது ஏற்படுத்திக்கொள்வதில் ஒருவித நிறைவு எனக்கு .இதற்காக
  மீண்டும் ஒருமுறை, திரு. சௌந்தர் அவர்களுக்கு நன்றி சொல்லலாம்.
  மூழ்கிக்கொள்பவனால்தான் முத்தெடுக்கமுடியுமோ ..? அத்தகுதியை பெற்றுள்ளீர்கள்
  நீங்கள் .எவ்வளவு நேர மெனக்கேடு, எவ்வளவு தேடல் ,எவ்வளவு நுனித்து நோக்கல்
  இவ்வாறு அக்குவேறு ஆணிவேறாக பிரித்துப் போட, தங்களை விட்டால் வேறு
  ஆளில்லை என்பதை. அடித்துச்சொல்வேன் !உள்ளதை உள்ளபடி சொல்லும் தங்கள்
  தொடர்கள் பலராலும் படிக்கப்படலாம் என்பதில் ஐயத்துக்கு இடமில்லை .இருப்பினும்
  ஓரிரு வரிகளாவது அவரவர் கருத்தை சொல்ல ஏன் தயக்கம் இவர்களுக்கு ???
  தனிப்பட்ட முறையில் தங்களுடன் ஏதாவது பகிர்ந்து கொள்கிறார்களா எனக்கு
  தெரியாது ..என்னைப் பொருத்தவரைக்கும் வெறும் பார்வைக்கு உட்படுத்த வேண்டியவை
  அல்ல தங்கள் படைப்புகள் ..தரிசனம் கொள்ளப்பட வேண்டியவை ..மீண்டும் என்றும்
  என் நினைவில் குடிகொண்டுள்ள பெரும் ஆசிரியர்களான திரு எம்பெருமான் ,திரு தங்கவடிவேல்
  தங்கள் தொடரில் வந்து போனமைக்கு என் நன்றிகள் பல ..மேலும் எழுதுங்கள்
  வாழ்த்துக்கள்

 9. Excellent write up Sounder!!……keep up the god work. ஸ்ரீ தேவி என் வாழ்வில் – இளமைக்கோலம் – கே.ஜே.யேசுதாஸ்……An outstanding song in “Hindolam” by our Raja. :)))

 10. …An outstanding song in “Hindolam” by our Raja. And Outstanding singing by the great KJYesudas.

Comments are closed.