தமிழ்ச் சூழலில் ஜனநாயகம்: மைந்தன்

( இலங்கைத் தமிழ் அரசியற் சூழலின் ஜனநாயகமின்மைக்குத் தமிழ்த் தேசியவாதத்தின் பங்களிப்புப் பற்றிப் பேசப்படுகிறது.)

123 நமது இலங்கையில் மட்டுமன்றிப் பொதுவான தென்னாசியச் சூழலில் சமூகங்கள் எந்தளவிற்கு ஜனநயாகமயத்திற்கு உள்ளாகி இருக்கின்றன என்பது பற்றி சற்று ஆழ்ந்து சிந்திக்கும் போது பல விடயங்கள் தெளிவாகின்றன. ஜனநாயகம் என்றவுடன் ஆபிரகாம் லிங்கன் கூறிய கூற்றையும் பிரித்தானிய கொலனியவாதிகள் திணித்து விட்டுச் சென்ற முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தையும் பலர் இப்போதும் ஓதி ஒப்புவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நிலவுடைமை அமைப்பையும் அதன் கருத்தியற் சிந்தனை நடைமுறைகளையும் தொடர்ந்து பேணிவருவது தான் தென்னாசிய நாடுகளின் பிரதான போக்காக இருந்து வருகிறது. அவற்றின் வழியாகவே பாராளுமன்ற முதலாளித்துவ ஜனநாயகம் பேணிப் பாதுகாக்கப் படுகிறது. மக்களது சிந்தனைகள் நடைமுறைகள் இவ் நிலவுடைமைக் கருத்தியல் அடிப்படையிலேயே அடிமைத்தனமாகப் பின்பற்றப் படுகிறது. வர்க்கம், இனம், சாதியம், பால் ஆகிய நான்கும் நமது சமூக அமைப்புச் சூழலில் மிகவும் இறுக்கமான நிலவுடைமைக் கருத்தியல் தளத்தில் இயங்குவையாகக் காணப் படுகின்றன. குறிப்பாக நமது தமிழ்ச் சூழலில் மேற்படி நான்கு விடயங்களையும் தமிழ்த் தேசியம் பேசும் எவரும் தகர்க்க முன்வரவில்லை.

தமிழ் நாட்டில் பெரியார் என அழைக்கப்பட்ட ஈ.வே.ரா.வினால் சாதிய, பால் ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்தி அவற்றுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்புரை செய்து சீர்திருத்த இயக்கத்தை முன்னெடுக்க முடிந்தது. அவ்வியக்கம் தமிழகத்தில் தாக்கங்களை உருவாக்கி சமூகம் ஒரளவு ஜனநாயகத் தன்மைகளைப் பெற வைத்ததாயினும் அவரது மறைவுக்குப் பின் அதன் வீரியம் குறைந்து மங்கிக் கொண்டது.

Democracy11இந்த நிலையில் ஒரு சிறு பகுதிகூட இலங்கைத் தமிழ்ச் சூழழில் இடம் பெறவில்லை. ஈழத்து காந்தி, தந்தை என மகுடமிடப்பட்டு அழைக்கப்பட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகமோ அவரது ‘மைந்தர்களோ” ‘பேரப்பிள்ளைகளோ” தமிழ்ச் சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதற்கு அன்றும் சரி, இன்றும் சரி தயாரக இல்லை. பாராளுமன்றப் பாதையிலும் ஆயுதம் போராட்டப் பயணத்திலும், நிலவுடைமைக் கருத்தியல் சிந்தனை நடைமுறைகளில் இருந்து வழுவவில்லை. பாராளுமன்றத்திற்கு வேட்பாளர்கள் நியமனம், வெற்றிக்கான வாய்ப்பு ஆகியவை வர்க்கம், சாதியம், பால் நிலை என்பன ஊடாகவே நோக்கப்பட்டு வந்தது. அந்தளவிற்கு மூளையிலும் அதன் சிந்தனையிலும் பழைமைவாதமே ஊறியிருந்து வருகிறது.

உதாரணத்திற்கு, அரசியலில் தமிழ்த் தேசியவாதிகள் பயன்படுத்தும் சொல்லாடல்களை உற்று அவதானித்தால் அவற்றினுள் நிலவுடைமைக் காலத்தின் தொடர்ச்சி படிந்திருப்பதைக் காணலாம். தந்தை, அண்ணன், தம்பி, அன்னை, அம்மா போன்ற குடும்பப் பெயர்களிலும் தளபதி, தனிப்பெரும் தலைவர், உயர்திரு, மதிப்பிற்குரிய போன்றவை மட்டுமன்றி சோழன், கரிகாலன் என்றெல்லாம் அழைத்துக் கொள்வதில் பெருமையும் சுகமும் கண்டவர்கள் தமிழ்த் தேசியவாதிகள். இவ்வாறு அழைக்கப்படுவதில் ஏதோ குடும்ப பாச உணர்வும் பழைய மன்னர் காலப் பெருமை மட்டும் தங்கியிருக்கவில்லை. இச் சொல்லாடல்களுக்குள் இன, வர்க்க, சாதிய, பால் ஆதிக்க சிந்தனைப் போக்குக்களே படிந்திருக்கின்றன.

நடைமுறையில் குடும்பத்திற்கு வெளியே ஐயா, அம்மா, அண்ணன், தம்பி என விளித்து அழைப்பதற்கு சாதிய வரையறைகள் அன்று இறுக்கமாக இருந்து வந்தது. இன்று உயர் வர்க்க அரசியல் தேவை கருதி அவற்றில் நெகிழ்ச்சி காணப்பட்டாலும் படிநிலைச் சாதிய அமைப்புச் சூழல் இருந்து வருகிறது.

45011980களின் நடுக் கூற்றிலே தமிழ்த் தேசியவாத அரங்கில் பத்துக்கு மேற்பட்ட தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் பரவி நின்றன. அவற்றில் எல்லாம் தமிழ் இளைஞர்கள் யுவதிகள் என்ற ஒரே தனி அடையாளத்தின் கீழும் சாதிய அடையாளங்களே முன்னின்றன. அதனால் தான் அன்றைய சூழலில் ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு சாதிகளுக்கு உரியதாகச் சுட்டிக்காட்டப்பட்டு வந்தமையை மறைக்க முடியாது.

அவ்வாறு நோக்கப்பட்டபோது ஒருவர் சுட்டிக்காட்டி எழுப்பிய கேள்வி யாதெனில், இத்தனை இயக்கங்களில் எவற்றில் ஒன்றிலாவது ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞன் தலைமைப் பதவியில் உள்ளானா என்பதேயாகும். ஆனால் அடுத்தடுத்த நிலைகளில் இருந்திருக்கிறார்கள். காரணம் அவர்களது போர்க்குணம் உறுதி, உற்சாகம், திறமைகள் என்பவற்றைப் புறந்தள்ள முடியாத நிலையிலேயேயாகும். அத்தகையவர்கள் கூட இயக்க உள் அரங்கிலே எவ்வாறு சாதியச் சிந்தனைகட்கு முகம் கொடுத்தார்கள் என்பது வேறொரு விடயமாகும்.

இங்கே மற்றொரு விடயத்தையும் நாம் காணுதல் வேண்டும். புலிகள் இயக்கம், ரெலோ இயக்கம் இரண்டும் தோழர் என்ற சொல்லாடலை பயன்படுத்தவில்லை. தலைவர், அண்ணை, தம்பி, ஐயா, அம்மா, தங்கச்சி என்றே அவர்கள் பயன்படுத்தினர். ஏனைய மூன்று நான்கு இயக்கங்கள் தோழர் என்ற சொல்லாடலைத் தம்மிடையே பயன்படுத்தி வந்தன. அவை தோழர் என்ற சொல்லை எந்த அடிப்படையில் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது அவர்களுக்கே புரியாத ஒன்றாகும்.

நிலவுடைமைக் கருத்தியல் சிந்தனை நடைமுறைகளைக் கொண்ட தமிழ்த் தேசியத்தை ஆள்மனம் தொட்டு நுனி நாக்கு வரை வைத்துக் கொண்டு அல்லது அதனைச் சந்தர்ப்பவாதமாக நடைமுறைப்படுத்திக் கொண்டு அர்த்த மிகுதியும் ஆழமான சகத்துவ உணர்வின் வெளிப்பாடாக அமைந்த தோழர் அல்லது தோழர்கள் என்ற சர்வதேசச் சொல்லாடலைப் பயன்படுத்திக் கொண்டமை முரண்நகையானதாகும்.

088தோழர் என்னும் சொல் மாபெரும் பிரஞ்சுப் புரட்சிக்குப் பின்பான காலகட்டத்தில் எழுந்து மகத்தான பாரிஸ் கம்யூன் போராட்டத்தில் இருந்து பிரபல்யம் பெற்று வந்த ஒன்றாகும். மாபெரும் பாட்டாளி வர்க்க ஆசான்களின் காலத்தில் அச்சொல் மேலும் துலக்கம் பெற்று ஒக்ரோபர் சோசலிசப் புரட்சியில் புடம் போடப்பட்டு உணர்வும் உத்வேகமும் கொண்ட சொற்பதமாகியது. தோழர்கள் தோழமை என்பதற்கு சமத்துவம், வர்க்க உணர்வு, அர்ப்பணிப்பு, தியாகம், மாக்சிச வாழ்வியல், கம்யூனிஸ்ட் மனச்சாட்சி, பல பத்துக் காரணங்களலேயே மேற்படி மக்களை மதித்து சேவை செய்தல் நலமின்மை சொத்துடமை சேர்க்காமை போன்ற சொல்லாடல் உலக வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து வந்தது.

அத்தகைய மகத்தான அர்த்தமுடைய தோழர், தோழர்கள் என்ற பதங்களை தோழமை உணர்விற்கும் சமத்துவத்திற்கும் சம்மந்தமற்ற தமிழ்த் தேசியவாத இயக்கங்கள் சில பயன்படுத்தி சிறுமைக்கும் கொச்சைப்படு த்தலுக்கும் சீரழிவுக்கும் உள்ளாக்கிக் கொண்டமை சோகமானதாகும். இன்று ஒருவரை தோழர் என அதன் உண்மையான அர்த்தத்தில் அழைத்தால் அதனை அவதானிக்கும் ஒரு சாமானியர் அழைத்தவை ஏதோ ஒரு தமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று கருதும் அளவிற்கு அப்பதம் பழுதாக்கப்பட்டு விட்டது. அந்த மகத்தான சொற்பதம் கம்யூனிஸ்டுக்களா கட்சிகளிலும் பெரும் புரட்சிகளிலும் போர்க்களங்களில் மட்டுமன்றி தத்தம் தேச நிர்மாணங்களிலும் பயன்படுத்தப் பட்டது. அதற்கு அர்த்தமும் வலிமையும் இருந்து வந்தன.

-84ஆனால் அதே சொற்பதத்தைப் பயன்படுத்தி நமது நாட்டின் சூழலில் கொள்ளை, கொலை, கம்பம், மிரட்டல், சொத்து சேர்ப்பு, பாலியல் வன்புணர்ச்சி போன்ற மக்கள் விரோதச் செயற்பாடுகள் ஆயுத முனைகளில் செய்யப்பட்டன. இன்றும் அவை முடிவிற்கு வந்ததாகவும் கூறமுடியாது.

இவை யாவும் எவற்றின் தொடர்ச்சியும் வெளிப்பாடும் என ஒருவர் சிந்தித்தால் நமது தமிழ்ச் சூழலில் ஜனநாயகப்படுத்தல் இடம்பெறாமை என்றே துணிந்து கூறலாம். மேற்கில் மகத்தான பிரஞ்சுப் புரட்சியும் அதனோடு ஒத்த புரட்சிகளும் நிலவுடைமைக் கருத்தியற் சிந்தனை நடைமுறைகளை உடைத்தெறிந்து சமூக அமைப்பில் பெருமளவிற்கு ஜனநாயகமயப் படுத்தல்களுக்கு வழி சமைத்தன. அதன் பின் சோசலிசப் புரட்சிகள் இடம் பெற்றன. அவை கிழக்கிலும் சில நாடுகளில் நிகழ்ந்தன. ஆனால் தென்னாசிய நாடுகளில் மேற்படி நிலவுடைமைத் தகர்ப்பு இடம் பெறவில்லை என்பது கவனத்திற்கு உரியதாகும்.

எனவே வர்க்கம், இனம், சாதியம், பால் ஆகிய நான்கு ஒடுக்குமுறைத் தளங்களிலும் தமிழ்த் தேசிய இனத்தின் மத்தியில் மட்டுமன்றி ஏனைய தேசிய இனங்கள் மத்தியிலும் ஜனநாயகப் படுத்தவோ அவற்றுக்கான கொள்கை நடைமுறை வழியிலான போராட்டங்களோ முன்னெடுக்கப் படவில்லை. தமிழ்ச் சூழலில் சாதியத்திற்கு எதிரானதும் வர்க்க ரீதியில் தொழிற் சங்கப் போராட்டங்களுமே ஜனநாயகத்திற்கான போராட்டங்களாக மாக்சிச லெனினியவாதிகளால் முன்னெடுக்கப் பட்டன. அதன் தொடர்ச்சி எழுபதுகளில் இருந்து தமிழ்த் தேசியவாதத்தால் பின்தள்ளப் பட்டது.

எனவே, தமிழ்ச் சூழலில் நிலவுடைமை வழிவந்த பழைமைவாதக் கருத்தியற் சிந்தனையும் நடைமுறைகளும் உரிய போராட்டங்களால் தகர்க்கப்படவேண்டும் ஜனநாயகப்படுத்தல் இடம் பெற வேண்டும். இல்லாவிடில் தமிழ் இன விடுதலை வெறும் கனவுகளாகவே வந்து போய்க் கொண்டிருக்கும். அதனை தமிழ் மேட்டுக்குடி உயர் வர்க்கத்தினர் அவ்வப்போது பயன்படுத்திக் கொள்வர்.

மீள் பதிவு:Nov 6, 2009

9 thoughts on “தமிழ்ச் சூழலில் ஜனநாயகம்: மைந்தன்”

 1. மைந்தனின் கட்டுரையில் என்ன சொல்லவருகிரார் என்பதை கண்டுகொள்ள்முடியவில்லை. பெரியாரின் மறைவிக்குப்பின்னும் விரியம் இல்லை எஅன்பதை ஒதுக்க்முடியாது. ஆனால் சாதிய சிந்தனையின் விரியம் உண்டு. மக்கள்ந்த அள்வுக்கு வளர்ந்துவிட்டார்கள். இதை எவராலும் மறக்க் முடியாது.

 2. குரு
  மைந்தன் சொல்ல வருகிறதைக் கண்டுகொள்ளப் பார்ப்பனியமற்ற ஈழத்துச் சாதியச் சூழல் சிறிது விளங்க வேண்டும்.
  தமிழகத்தில் பின்னிடைவு ஏற்பட்டிராவிட்டால் பெரியாரின் வாரிசுகளால் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்கவும் பாரதிய ஜனதாவுக்குத் தமிழகத்தில் ஒரு தளம் உருவாக்கிக் கொடுக்கவும் முடிந்திருக்குமா?
  கருணாநிதி தான் மஞ்சள் துண்டுடன் உலா வருவாரா?

 3. I REMEMBER ON OUR GOOD DAYS ALL SRILANKA KAMPAN SOCIETY ON THEIR VIZHA THEY CALLED CATHOLIC PRIEST I WERE THOUGHT THEY ARE RESPECTING THE CATHOLIC RELIGION BUT LATER I FOUND THOSE PRIEST WERE CALLED WAS LOW CAST CATHOLIC PRIEST AND ANOTHER GUY WHO WAS STUDIED IN VIGNA TUTION CENTRE IN JAFFNA WAS A TIGER AND ONE DAY HE CALLED ME TO HIS CAMP AT THAT TIME WAS INDIAN PEACE KEEPING FORCE THERE WHEN I ENTER BOYS IN THE CAMP LOOKED ME STARANGE AND CALLED MY MATE A ARIYAKULAM MLA I FELT SHAME A BIT AND I LEFT IMMEDIETLY.THAN LATER I ASKED THE GUY WHY ARE THEY DOING THIS TO YOU?IT WAS VERY SAD.

 4. பிரபாகரனை மேட்டுக்குடி சிந்தனையாளர்கள் எவரும் மேல் சாதியாக கருதியதாக நான் நினைக்கவில்லை

  1. ராகவன், பிரபாகரன் மேட்டுக்குடியைச் சார்ந்தவரல்ல ஆனால் அவரது சிந்தனை அவ்வாறானதே.

   1. அப்படியென்றால் அது மனித இயல்பாகின்றது சாதியை இதற்குள் இழுக்கவேண்டிய அவசியமில்லையல்லவா??

 5. அரபு நாடுகளிற்கு சனநாயகத்தை ஏற்றுமதி செய்ய மேற்குலகம் முயல்வது போல் நாம் சனநாயகத்தை மட்டுமல்ல உடுக்கும் உடையின் நாகரீக மாற்றங்கள் முதல் போராட்டத்தைக் கூட வங்கம் பிறந்த கதையையும் வியட்நாம் விடுதலையையும் வாசித்து அதன்வழியே ஒரு இறக்குமதி செய்யப்பட்ட எண்ணங்கள், செயல்பாடுகள்,தோழா் போன்ற வார்த்தைகள் மூலம் ஒரு தனித்துவமற்ற,தனது வாழ்வியல் சமூகம் சாராத ஓா் போராட்டத்தை நடாத்தியதாலேயே மறுபடியும் பழய நிலைக்கே வந்து நிற்கின்றோம்.

  உண்மையான சனநாயகத்தையும் அதன் மேன்மைகளையும் அனுபவிக்க சந்தா்ப்பம் கிட்டிய புலம்பெயா் சமூகமே அதை உணர திராணியற்று சில சந்தா்ப்பங்களில் அதை கேலி செய்வதைக்கூட பார்க்கமுடிகின்றபோது நாட்டில் எப்படி சாத்தியப்படப்போகின்றதோ தெரியவில்லை.

  தமிழா்களின் ஒற்றுமைக்கும் அதன்பால் ஏற்படக்கூடிய விடுதலைக்கும் எதிர்காலத்திற்கும் சாதியம் மிகப்பெரிய தடையாகவே இருந்துவருகின்றதை மறுக்கமுடியாது. அதே நேரத்தில் மீண்டும் மீண்டும் இந்த விடயத்தையே சுற்றிவருவதும் நல்லதல்ல.ராகவன் கூறுவதுபோல் பிரபாகரனை எவ்வாறு அழைத்தார்கள் என்பதை என்காதால் கேட்டிருக்கின்றேன் ஆதலால் கட்டுரையாளரது ஆதங்கம் தேவையற்ற ஒன்று. 

 6. சரி ஐசாக் இனியாவது மேட்டுக்குடி சிந்தனைக்கு ஆப்பு வைப்போம். தங்களிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள். யாழ்பாணத்து மேட்டுக்குடிகளும் அவர்களை மேட்டுக்குடி என அழைத்தவர்களும் கைகுலாவி திரிவதும் தங்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு புலமை பரிசில்கள் எடுத்து லுமும்பா, பீகிங் பல்கலை கழகங்களுக்கு அனுப்புவதிலும் குறியாக இருந்தனர் (பழைய கதை). யாழ் மேட்டுக்குடி சிந்தனை என்பதை உருவாக்குவோரும் இப்போதைய புதிய கதையில் புனிதர்களா? தெரியவில்லை.

 7. நிலவுடைமைக் கருத்தியல் சிந்தனை -முக்கியமானதொரு விடயத்தினை எழுதியிருக்கீறிர்கள். அது குறித்து மெலும் ஆய்வு செய்ய வேண்டியுமிருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டதற்கப்பால்> சமூக நிறுவனங்களில்-மத நிறுவனங்களில் முக்கியமாக குடும்பம் எனும் அமைப்பிலும் இதன் தாக்கத்தினை நன்கு காணமுடிகிறது. விஜய்

Comments are closed.