தமிழர்கள் விவாகரத்தில் இந்தியா எந்த அழுத்தங்களையும் தரவில்லை- ஜி.எல். பெரிஸ்.

பேரினவாத இலங்கை அரசின் அதிபரும் போர்க்குற்றவாளியுமான ராஜபட்சேவின் இந்திய விஜயத்தின் போது இந்தியப் பெருமுதலாளிகளின் வர்த்தக நலன்களைப் பேணும் படியான ஒப்பந்தங்கள் மட்டுமே நிறவேற்றப்பட்டன. ஈழத் தமிழர் மறு குடியேற்றம் தொடர்பாகவோ அரசியல் தீர்வு குறித்தோ எந்த ஒரு பேச்சுவார்த்தையோ கோரிக்கையோ கூட இந்தியத் தரப்பில் வைக்கப்பட வில்லை. சம்பிரதாயமாக கருணாநிதி அனுப்பிய தூதுக்குழுவினர் மட்டுமே ராஜபட்சேவைச் சந்தித்தனர். அந்தச் சந்திப்பைக் கூட திருமாவளவன் புறக்கணித்தார் என்றும் நாம் இனியொருவில் எழுதியிருந்தோம். இந்தியத் தரப்பு எவ்விதமான அரசியல் அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என்பதை இப்போது இலங்கை அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் உறுதிப்படுத்தியிருக்கிறார். ராஜபட்சவின் இந்தியப் பயணம் குறித்து அமைச்சர் ஜி.எல். பெரிஸ் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை கூறியது: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு மிகவும் வலுவாக உள்ளது. ஈழத் தமிழர்கள் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு காண்பது உள்பட எந்த விஷயத்திலும் இந்தியா நெருக்குதல் தரவில்லை. ராஜபட்சவின் 4 நாள் இந்தியப் பயணம் வெற்றிகரமாகவும், இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவதாகவும் அமைந்தது என்றார். தமிழக எம்.பி.க்கள், ராஜபட்சவிடம் பேசியது குறித்த கேள்விக்கு, “”ஈழத்தமிழர்கள் பிரச்னையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் தீர்வு காணும் அரசியல் சாசன சட்டத் திருத்தம் குறித்து அப்போது பேசப்பட்டதுஎன்றார். இலங்கையில் ரயில்வே பணிகள், அனல் மின்நிலையம் அமைப்பது உள்பட பல்வேறு மறுநிர்மாணப் பணிகளுக்காக ரூ.4,700 கோடி வரை கடன் தர இந்தியா சம்மதித்துள்ளது. விமானநிலையம், துறைமுக கட்டுமானப் பணிகளில் உதவவும் இந்தியா முன்வந்துள்ளது என்று பெரிஸ் மேலும் கூறினார்.