தமிழக மக்கள் சந்தோசமாக உள்ளனர்-கருணாநிதி சொல்கிறார்.

கோவையில் மக்கள் விரோத ஜெயலலிதா இன்னொரு மக்கள் விரோதியான கருணாநிதிக்கு எதிராக பல லட்சம் மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி முடித்தார் செம்மொழி மாநாட்டு நடத்திய கோவையில் போராட்டத்தை ஒரு மாநாடு போல நடத்திய ஜெயலலிதா மீது ஏகக் கடுப்பான கருணா. அதிரடியாக ஜெயலலிதாவை திட்டுகிறேன் பேர்வழி என்று அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில், வேளாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, உயர்கல்வித் துறை என அனைத்துத் துறைகளுக்கும் அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டுக்குப் பிறகு, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை ஆகிய இடங்களில் நான்கு புதிய அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்கழகங்களும், 14 இடங்களில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், 11 மாவட்டங்களில் புதிய அரசு பொறியியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகியன மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழக மக்கள் வசதி வாய்ப்புகளைப் பெற்று நலமாகவும் வளமாகவும் உள்ளனர். என்னுடைய குடும்பத்தினர் கர்நாடகத்தில் தொழில் செய்வதால்தான், அந்த மாநில அரசை வலியுறுத்தி காவிரி தண்ணீரைப் பெற முயற்சிக்கவில்லை என்று ஜெயலலிதா குற்றம்சாட்டியிருக்கிறார். என்னுடைய குடும்பத்தினர் கர்நாடகத்திலே தொழில் நடத்துவதற்கும்,அந்த மாநில அரசிடம் தண்ணீர் கேட்பதற்கும் என்ன தொடர்பு? விவசாயப் பொருள் உற்பத்தி திமுக ஆட்சியில் குறையவில்லை. ஜெயலலிதா ஆட்சியில் தான் குறைந்தது. அதிமுக ஆட்சியில் 2006-07-ம் ஆண்டில் உணவு உற்பத்தி 86 லட்சத்து 17 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்தது. கடந்த ஆண்டில் 95 லட்சத்து 60 ஆயிரம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. உற்பத்தியைப் பெருக்குவதற்குத் தேவையான உரம் தமிழக விவசாயிகளுக்கு முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தை விட, அதிகமாகவே வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் முக்கிய இடுபொருளான உரங்கள் தாராளமாக விநியோகம் செய்யப்பட்டு தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தியை மேம்படுத்துவதில் தமிழக அரசு கவனம் செலுத்தியுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.