தமிழக எம்.பிக்கள் மட்டுமே அழுத்தங்களை வழங்காது உதவிகளை மேலும் அதிகரிக்க வழிவகுத்துள்ளனர்!: இலங்கை அரசு!

laksman-yapa-100_13நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள அகதி மக்களை பார்வையிட இதற்கு முன்னர் வருகை தந்த சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள் பல வகையான அழுத்தங்களை இலங்கைக்குக் கொடுத்தனர். ஆனால் இந்தியாவின் தமிழக எம்.பிக்கள் மட்டுமே எமது நாட்டின் நிலைமையை புரிந்துகொண்டு இலங்கைக்கான உதவிகளை மேலும் அதிகரிக்க வழிவகுத்துள்ளனர் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

அகதி மக்களுக்கு அரசாங்கம் செய்துகொடுத்துள்ள வசதிகள் தொடர்பில் இந்திய எம்.பிக்கள் திருப்தி வெளியிட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழகத்தில் பல்வேறு அழுத்தங்கள் இருந்த நிலையிலும் அவர்கள் மிகவும் உணர்வுபூர்வமாக நடந்துகொண்டுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊடகத்துறை அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது : “இதற்கு முன்னர் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பல பிரமுகர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களைப் பார்வையிட்டனர். மதிப்பீடுகளை மேற்கொண்ட பின்னர் தமது நாடுகளுக்கு சென்று பல்வேறு வகையான கருத்துக்களை வெளியிட்டனர். சிலர் விரைவான மீள்குடியேற்றம் குறித்து அழுத்தங்களை வெளியிட்டனர். மற்றும் சிலர் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர்.

ஆனால் இடம்பெயர்ந்த மக்களின் விவகாரத்தை மிகவும் உணர்வுபூர்வமாக அணுகிய தமிழக எம்.பிக்கள் இலங்கை அரசாங்கம் அகதி மக்களுக்கு செய்து கொடுத்துள்ள வசதிகள் மற்றும் அர்ப்பணிப்பு என்பவற்றை மதிப்பிட்டு திருப்தி வெளியிட்டனர். சிறந்த செய்தியொன்றை சர்வதேச சமூகத்துக்கு விடுத்துள்ளனர். இதுவரை இலங்கை வந்தவர்களிலேயே தமிழக எம்.பிக்கள் சிறப்பான அணுகு முறையை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் எந்த விடயம் குறித்தும் பாரிய அழுத்தத்தை வெளியிடவில்லை. நிலைமையை புரிந்துகொண்டுள்ளனர்.

மாறாக இந்தியாவின் இலங்கைக்கான உதவிகள் அதிகரிக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளனர். இது வரவேற்தக்க விடயமாகும். மடுவில் இருந்து தலை மன்னார் வரையிலான ரயில் பாதை, ஓமந்தை, பளை வரையான ரயில் பாதை மற்றும் துரையப்பா விளையாட்டரங்கு, யாழ்ப்பாணத்தில் கலாசார மத்திய நிலையம் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கு நிதி உதவி வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது. அதற்கான திட்டங்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே இந்திய எம்.பிக்களின் இலங்கை விஜயம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அவர்களுக்கு தமிழகத்தில் பல்வேறு அழுத்தங்கள் காணப்பட்டபோதும் இந்திய எம்.பிக்கள் யதார்த்தமானவர்களாக நடந்து கொண்டுள்ளனர்.

அதேவேளை மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மீள்குடியேற்றம் தொடர்பில் பிரதேச வாரியாக 11 அமைச்சர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார். அவர்கள் பிரதேசவாரியாக மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். வடக்கு அபிவிருத்திக்கான செயலணியின் வேலைத்திட்டங்களை செயற்திறனாக்கும் நோக்கில் இந்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேள்வி: தமிழக எம்.பி. க்கள் இங்கிலாந்தில் இருந்து வரவில்லை என்றும் இந்தியாவிலிருந்தே வந்துள்ளனர் என்றும் மனோகணேசன் எம்.பி. தெரிவித்துள்ளாரே?

பதில்: இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியாவின் தமிழக எம்.பி. க்களுக்கு இல்லாத அக்கறை எவ்வாறு மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இருக்கப்போகின்றது? தமிழகம் தமிழ் மக்கள் தொடர்பில் உணர்வு பூர்வமான அக்கறையுள்ள மாநிலம். தமிழ் மக்களுக்காக போராட்டம் செய்தவர்கள். தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருக்கின்றார். இந்திய எம்.பிக்களிடமிருந்து மனோ கணேசனுக்குத் தேவையான பதில் கிடைக்காமல் இருந்திருக்கலாம்.