தமிழகம்- வருகிற 6-ஆம் திகதி நீதிமன்ற புறக்கணிப்பு.

ஈழத்தில் போர் நிறுத்தம், நீதிமன்றத்தில் தமிழ், சிதம்பரம் கோவிலில் தமிழ் வழிபாடு உள்ளிட்ட பல் போராட்டங்களை வழக்கறிஞர்கள் முன்னெடுத்தனர். ஆனால் கருணாநிதி அவர்கள் மீது கடும் அடக்குமுறைகளை ஏவி வருகிறார். சமீபகாலமாக தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்களை போலீசார் தாக்குவதும் பொய் வழக்குப் போடுவதும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் பரமசிவம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சமீப காலமாக தமிழ்நாட்டில் வக்கீல்களை போலீசார் தாக்குவதும், அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வக்கீல்களிடம் வஞ்சம் தீர்க்கும் வகையில் போலீசார் நடந்துகொள்வதாக நாங்கள் கருதுகிறோம்.உதாரணமாக சேலத்தில் வக்கீல்கள் அய்யப்பமணி, ரவிசங்கர், ராஜா ஆகியோர் மீதும், நாமக்கல் நகரில் வக்கீல் அன்பரசு, திருச்செங்கோட்டில் வக்கீல் எம்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் மீதும் போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர்.தர்மபுரியில் வக்கீல்கள் கோவிந்தராஜன், ரவி மற்றும் திருச்சியில் ஹரீஷ், கோவையில் கலையரசன் ஆகியோர் மீது போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் கோவையில் வக்கீலை தாக்கியதில் அவருடைய வயிற்றில் கடுமையான காயம் ஏற்பட்டு, அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இவை தவிர தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த வக்கீல்கள் வீராசாமி, மாணிக்கம் ஆகியோர் ஒகேனக்கல்லைச் சேர்ந்த ரவுடிகளால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இந்த சம்பவத்தில் புகார் அளித்தும், இதுவரை ரவுடிகளை போலீசார் கைது செய்யவில்லை.தமிழக போலீசாரின் இந்த போக்கை கண்டித்தும் வக்கீல்களை தாக்கிய போலீஸ்காரரையும், ரவுடிகளையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் வருகிற 6-ந் தேதி ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் சுமார் 70 ஆயிரம் வக்கீல்கள் கலந்துகொள்கிறார்கள்.இதன் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு கூடி போராட்டத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். அதன்படி போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றார்.