தமிழகம் இடைத் தேர்தல் புறக்கணிப்பு இயலாமையா? இல்லாமையா? : காவியா

elவருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதாக இருந்த ஐந்து தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை அதிமுக, மதிமுக, பாமக, ஆகிய கட்சிகள் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றன. மார்க்ஸ்சிஸ்டுகளும்,இந்திய கம்யூனிஸ்டுகளும் கூட இதே முடிவை எடுப்பார்கள் என்றும் தெரிகிறது. போட்டியே இல்லாத சூழலில் ஐந்து தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றதாக அறிவிக்கக் கூடும். அல்லது விஜயகாந்தின் தேமுதிகவோடு போட்டியிட்டு திமுக சுலப வெற்றியை ஈட்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொள்ளும்.

கடந்த நாற்பதாண்டுகளில் திராவிடக் கட்சி என்று அழைக்கப்பட்ட திமுக இன்று சீரழிவின் இறுகிய வடிவத்திற்கு வந்திருக்கிறது. மதவாத பிஜேபி கூட்டணி வைத்து பிஜேபியின் மதவெறிப்போக்கை நியாயப்படுத்தி வந்ததுதான் திமுக. உண்மையில் இந்துத்துவாவின் தென்னிந்திய முகமான ஜெயேந்திரரைக் கைது செய்த ஜெயலலிதாவை விட பிஜேபி தமிழகத்தில் காலூன்ற காரணமாக இருந்தது கருணாநிதிதான் ஏனென்றால் கருணாநிதியின் திராவிட முகம் பிஜேபிக்கு அன்று தேவைப்பட்டது. பின்னர் கூட்டணிகள் மாறி திமுக காங்கிரஸ்சோடு கூட்டணி கொண்டது ஜெயலலிதா பிஜேபியோடு கூட்டணி வைத்தார். ஆனால் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜே பிஜேபியைக் கண்டுகொள்ளவில்லை காரணம். தமிழகத்தில் பிஜேபி செல்வாக்கில்லாத கட்சி, தவிறவும் மாநிலக் கட்சிகளே மத்தியில் ஆளும் கட்சியை தீர்மானிக்கும் சூழலில் வென்ற பிறகு பேசிக் கொள்ளலாம் என்கிற ரீதியில் பிஜேபியை கழட்டி விட்டார். ஜே. ஆனால் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுக்க மாநிலக் கட்சிகளுக்கு ப்லத்த அடி கிடைத்தது. காரணம் நவீன் சாவ்லாவை தேர்தல் கமிஷனராக காங்கிரஸ் கொண்டுவந்ததே காங்கிரஸ் கட்சியின் பலத்தை அதிக்கரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்கிற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது. தமிழகத்திலும் எழுந்தது.

இந்நிலையில்தான் நாடாளுமன்றத் தேர்தலில் அதிர்ச்சிகரமான முறையில் அதிமுக கூட்டணி தமிழகத்தில் தோல்வியைத் தழுவியது. ஈழப் பிரச்சனையை தமிழக மக்கள் நிராகரித்து விட்டதாக காங்கிரஸ் சொன்னது. தேர்தலுக்கு முன்னரோ ஈழப் பிரச்சனை திமுக காங்கிரஸ் கூட்டணியை மண்ணைக் கவ்வ வைக்கும் என்று ஈழ ஆதராவாளர்கள் நம்பினார்கள்.ஆனால் இரண்டுமே நடக்கவில்லை. ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், சேலத்தில் தங்கபாலு ஆகியோர் தோல்வியடைய ஈழப்பிரச்சனை ஒரு காரணமாக அமைந்தது.அது போல சிதமப்ரம் தோல்வியடைந்ததும் ஈழப் பிரச்சனையால்தான்( அதிமுகவின் ராஜகண்ணப்பன் வெற்றியடைந்ததாகச் அறிவித்து விட்டு பின்னர் சிதம்பரம் வென்றதாக அறிவித்தது தேர்தல் கமிஷன்) ஆனால் அதே நேரம் முழுமையான தேர்தல் வெற்றி அலையை ஈழப் பிரச்சனை தோற்று விக்கவில்லை.

தவிறவும் திமுகவினர் களமிரக்கியிருந்த பண முதலைகள், ஈழ ஆதரவாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறை என தேர்தலில் எதிர்க்கட்சிகள் கடும் ஒடுக்குமுறையை எதிர்கொண்டது எல்லாம் உண்மைதான்.

தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, தேர்தல் கமிஷனின் பாராமுகம், கட்சித் தொண்டர்கள் உற்சாகம் இழந்து காணப்படுதல், என பலவாரான விஷயங்களைக் கணக்கில் எடுத்து அதிமுக, பாமக இந்த முடிவை எடுத்திருக்கிறது. புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் தோல்வி, ஈழப் பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறல் என வைகோ, நெடுமாறனுக்கு என்ன செய்வது என்று முடிவு எடுக்க முடியாத நிலையில், திமுகவை தர்மசங்கடப்படுத்த இருக்கும் ஒரே கத்தி தேர்தல் புறக்கணிப்புதான். திமுகவிடம் அதிகாரம், ஊடக பலம், பணபலம், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி என மிருக பலத்தோடு இருக்கிறது. இதை எல்லாம் விட நீதி நேர்மை குறிப்பாக கடமை, கண்ணியம் , கட்டுப்பாடு என்கிற அண்ணாதுறை கண்டுபிடித்துக் கொடுத்த தாரக மந்திரத்தை திமுக கைகழுவி பத்தாண்டுகள் ஆகிவிட்டது.

வாக்குப்பதிவு இயந்திரங்களை நீக்கி விட்டு வாக்குப்பதிவு சீட்டு முறையைக் கொண்டு வரவேண்டும் என்கிற கோரிக்கையை இந்தக் கட்சிகள் இன்று முன்வைக்கின்றன. இந்தியா முழுக்க தேர்தலில் தோல்வியுற்ற கட்சிகள் எல்லாமே இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றன. சமீபத்தில் தொகுதிகளை மறுவரையறை செய்த போதே வருகிற தேர்தலகளில் தான் வெற்றி பெறுகிற மாதிரியான ஒரு வரயறையை செய்து முடித்து விட்டது. கடந்த பத்தாண்டுகளாகவே இந்தப் பணியில் திமுகவினர் கவனமாக இருந்தனர். இது குறித்து பல்வேறு மட்டங்களில் நடந்த கருத்துப் பரிமாறல்களையும் பலரும் கவனிக்கத் தவறுகின்றனர்.

ஒரு காலத்தில் ஆலடிஅருணா, திருச்சி சிவா , வைகோ போன்ற சிறந்த பாராளுமன்றவாதிகளை தமிழகத்திலிருந்து அனுப்பிய திமுக இன்று ஜே.கே.ரித்தீஷ், மு.க. அழகிரி,களை பாராளுமன்றத்திற்கு அனுப்புகிறது. சொக்கத் தங்கம் சோனியாவிடம் சொக்கிக் கிடக்கும் கருணாநிதி அதிமுகவின் இந்த தேர்தல் புறக்கணிப்பு குறித்தெல்லாம் வருத்தமோ வெட்கமோ அடைவார் என்று தெரியவில்லை. அப்படியான வருத்தங்களையோ வெட்கங்களையோ சமீபகாலமாக இவரிடம் பார்க்க முடியவில்லை. டி.கே.எஸ் இளங்கோவன் ஈழப் படுகொலையில் இந்தியாவை கண்டித்துப் பேசியதற்கு அவர் கருணாநிதியால் கண்டிக்கப்பட்டதோடு அது அவரது தனிப்பட்ட கருத்து என்று விளக்கமும் கொடுத்தார் கருணாநிதி. இதுதான் இன்றைய திமுக. திராவிட இயக்கத்தின் சீரழிந்த இறுதி அத்தியாயம் போல் தெரிகிறது.கடந்த நாற்பதாண்டுகளில் தமிழகத்தின் வேறு எந்த முதல்வருக்கும் நேராத அவமானம் இது. ஆனால் இதற்கெல்லாம் கலங்குகிறவரா? கருணாநிதி.

சரி கருணாநிதி இப்படித்தான் ராமதாசும், ஜெயலலிதாவும், வைகோவும் மட்டும் என்ன விதத்தில் இவரிலிருந்து வேறுபடுகிறார்கள்? பணம், அதிகாரதுஷ்பிரயோகம், அடக்குமுறை, மதவாத பிஜேபிக்கு காவடிதூக்குதல், ஈழத் தமிழர்களுக்கு வாக்குறுதிகளை வாரிவழங்கி பின்னர் காலை வாரி விடுவது என கருணாவுக்கும் ஜெவுக்கு எந்த வித்தியாசமும் கிடையாது. இந்த தேர்தல் அமைப்பு இருக்கிற வரை இது ஜெயலலிதாக்களையும், கருணாக்களையும் மட்டுமே உற்பத்தி செய்யும். ஜெ அரசியலில் இருப்பதுதான் கருணாநிதிகளின் வெற்றி. நேரடியாக மக்கள் ன் மோதி விட்டு தங்களின் வர்க்க நலனைப் பேணுவதுதான் இருவரின் அரசியல் தந்திரமும்.

மற்றபடி இந்தத் தேர்தல் புறக்கணிப்பு என்பது களைப்படந்தவர்களுக்கான ஓய்வு நேரமாகவும், இன்னொரு முறை வெற்றி கைகூடி வந்தால் இப்போது திமுக செய்திருப்பதைப் போன்று பத்து மடங்கு ஜனநாயகப் படுகொலகளைச் செய்வதற்கான ஒரு எச்சரிக்கையும்தான் இந்த தேர்தல் புறக்கணிப்பு.

2 thoughts on “தமிழகம் இடைத் தேர்தல் புறக்கணிப்பு இயலாமையா? இல்லாமையா? : காவியா

  1. //இந்தத் தேர்தல் புறக்கணிப்பு என்பது களைப்படந்தவர்களுக்கான ஓய்வு நேரமாகவும், இன்னொரு முறை வெற்றி கைகூடி வந்தால் இப்போது திமுக செய்திருப்பதைப் போன்று பத்து மடங்கு ஜனநாயகப் படுகொலகளைச் செய்வதற்கான ஒரு எச்சரிக்கையும்தான் இந்த தேர்தல் புறக்கணிப்பு.//

    காவியா இதுதான் உண்மை!

  2. we have wright to vote than we have no wrighr,better not to vote.

Comments are closed.