தமிழகத்திலும் கால் பதிக்க நக்ஸல்கள் முயற்சி: ஆந்திர டிஜிபி எச்சரிக்கை.

சாருமஜூம்தாரின் அறிவிப்பை ஏற்று கல்லூரிகளைப் புறக்கணித்து விட்டு கிராமங்களுக்குச் சென்ற நகசல்பாரிகள் தமிழகத்திலும் உண்டு. எண்பதுகளில் பல நூறு இளைஞர்கள் கேரளத்திலும், தமிழகத்திலும் கேள்விக்கிடமின்றி வேட்டையாடப்பட்டனர். நக்சல்பாரிகளின் செல்வாக்கு மிகுந்த வட மாவட்டங்களில் இப்போது நகசல்பாரிகள் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வருகின்றனர். எங்கெல்லாம் மக்கள் பொருளாதார சுரண்டலுக்கும் சாதீய கொடூரங்களுக்கும் உள்ளாகிறார்களோ அங்கெல்லாம் புரட்சிகர இளைஞர்கள் தோன்றுவது இயல்பு. வானத்தில் இருந்து குதித்து வர வேண்டிய அவசியம் நக்சல்பாரிகளுக்கு இல்லை. இந்நிலையில் தமிழகத்தில் நக்சல்கள் ஊடுறுவும் வாய்ப்பு உள்ளதாக ஆந்திர மாநில டிஜிபி ஆர்.ஆர்.கிரீஷ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் மாநில டிஜிபிக்களின் கூட்டம் ஹைதராபாதில் நடைபெற்றுவருகிறது. இதனிடையே, செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த அவர் கூறியதாவதுநாடு முழுவதும் தங்கள் கிளைகளை அமைப்பதற்கு நக்ஸல்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். தமிழகம், கர்நாடகம், கேரளத்திலும் தங்கள் கிளைகளை அமைக்க நக்ஸல்கள் முயற்சிகளைத் துவங்கியுள்ளதற்கு எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. இந்த அபாயம் குறித்து அண்டை மாநிலங்களை ஏன் எச்சரிக்கிறோம் என்றால் அதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க முடியும். தொற்றுநோய் போல நக்ஸலிசம் பரவுவதற்கு முன், அதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக் கூட்டத்தில் கலந்தாலோசிப்போம்.தொடக்க நிலையிலேயே தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். ஆந்திரத்தில் நக்ஸல் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், கர்நாடகத்தில் அண்மையில் நக்ஸலைட்டுகள் சிலர் கைது செய்யப்பட்டனர். தென் மாநிலங்களில் நக்ஸல்கள் கால் பதித்துள்ளதற்கு இது சான்றாகும். கடந்த ஆண்டு நவம்பர், நடப்பாண்டு ஜூன் மாதங்களில் கர்நாடக, ஆந்திர போலீஸôர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாகவே நக்ஸல்கள் சிலர் கர்நாடகத்தில் கைது செய்யப்பட்டனர் என்றார்.